கவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு!

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

லதா ராமகிருஷ்ணன்


2007ம் ஆண்டைய விளக்கு விருதுக்கு கவிஞர் வைதீஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தைக் கேள்விப்பட்டவர் களில் பெரும்பாலோர் இத்தகைய அங்கீகாரம் அவருக்குப் பல காலம் முன்பாகவே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை மறவாமல் குறிப்பிட்டார்கள். 1960 இலிருந்து தொடர்ந்து நவீன கவிதை உலகில் மெய்யான ஆர்வத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மூத்த கவிஞரை உரிய விதத்தில் விளக்கு அமைப்பு மரியாதை செய்ய முன்வந்தது குறித்து நவீன கவிதை, இலக்கிய ஆர்வலர்கள் பலர் தங்களுடைய மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

கடந்த 4.1.09 அன்று வைதீஸ்வரனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா தக்கர் பாபா வித்யாலயாவில் இனிதே நடந்தேறியது. எழுத்தாளர்கள் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சா.கந்தசாமி, தேனுகா, ரவி சுப்ரமணியன், கி.ஆ.சச்சிதாநந்தன், தேவகோட்டை வா.மூர்த்தி, நா.முத்துசாமி, புதிய தலைமுறைக் கவிஞர்கள் என தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கவிஞர் ஞானக்கூத்தன் அசோகமித்திரன், எழுத்தாளர் தேனுகா, கி.ஆ.சச்சிதானந்தன், கவிஞர்.கோ.கண்ணன், திலீப்குமார், நான், இன்னும் ஓரிருவர் திரு.வைதீஸ்வரனின் கவிதையுலகம் குறித்த மனப்பதிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். தமிழின் மூத்த எழுத்தாளரும் திரு. வைதீஸ்வரனின் நீண்ட நாள் நண்பருமாகிய அசோகமித்திரன் விளக்கு விருது ரூ.40,000ற்கான காசோலையைத் கவிஞர் வைதீஸ்வரனிடம் தர விருது பெறும் கவிஞரின் படைப்பாக்கங்கள், எழுத்துப் பணிகள், ஓவியம், இசை, நாடகம் முதலிய பல்வேறு துறைகளில் வைதீஸ்வரன் ஆற்றியிருக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு முதலியவை குறித்து எடுத்துரைக்கும் விளக்கு விருது சான்றிதழ் வாசகங்களை வெளி ரங்கராஜன் அவையோர் முன் வாசித்தார். கவிஞர் வைதீஸ்வரனுடைய படைப்புலகம் குறித்து திரு.கோவை ஞானி, எழுத்தாளர் பாவண்ணன் எழுதியனுப்பியிருந்த கட்டுரைகள் அவையில் வாசித்துக் காண்பிக்கப்பட்டன.

விழாவில் வைதீஸ்வரன் கவிதைகள் குறித்து ஓரிரண்டு வார்த்தைகள் பேச தனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட கவிஞர் கோ.கண்ணன் (தன் பார்வையின்மையையும் மீறி சமகால இலக்கியப் பரிச்சயத்தை வளர்த்துக் கொண்டு வருபவர், இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருப்பவர்) ‘தோள் தட்டி தோழமையோடு பேசும் பண்புடையவை வைதீஸ்வரனுடைய கவிதைகள் என்றும், சித்தர் பாடல், சைவசித்தாந்த மரபு எல்லாவற்றையும் ஒரு சில வரிகளில் அவருடைய கவிதைகள் சொல்லி சென்று விடுகின்றன என்றும் குறிப்பிட்டார். ‘அலையே சமுத்திரமில்லை, அலையின்றி சமுத்திரமில்லை’ என்ற வைதீஸ்வரனுடைய இரண்டு கவிதை வரிகளைத் தான் தன்னுடைய மாணாக்கர்களுக்கு ஆட்டோகிரா•ப் வாசகமாக எப்பொழுதும் தான் தருவதாகக் குறிப்பிட்டவர் அந்த வாசகங்களின் ஆழத்தை அனுபவித்துப் பேசினார்.

தனது ஏற்புரையில் கவிஞர். வைதீஸ்வரன் பேசியவற்றின் சாரம் பின்வருமாறு:

“’எப்படி கவிதை எழுதினேன் என்று கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது. எப்படிப்பட்ட எதிர்வினைகள் வரும், எந்த அளவுக்கு காட்டமாக, காத்திரமாக வரும் என்பதொன்றும் எனக்குத் தெரியாமல், அவை குறித்த சிந்தனையேதுமின்றித் தான் ‘கிணற்றில் விழுந்த நிலவு’ என்ற எனது கவிதையை எழுதினேன்.

“கவிதை என்ற ஒரேயொரு – எதேச்சையாக மேற்கொண்ட செயலால் இத்தனை உறவுகள் எனக்கு ஏற்பட்டன. சிறுவனாக இருந்த போது எனக்குக் பரிசாகக் கிடைத்த அழ.வள்ளியப்பா புத்தகம், பாரதியார் பாடல்கள் முதலியவை எனக்கு பெரிய உத்வேகத்தை அளித்தன.

“பரிசு பெறுவதில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இளம் வயதில் வாங்குவது மிகுந்த மன எழுச்சியை வரவாக்கும். நாற்பது, ஐம்பது வயதில் வாங்குவது மேலும் எழுதுவதற்கு நம்மைத் தூண்டுவதாக அமையும். எழுபதைக் கடந்த இந்த வயதில் விருது கிடைத்தால் ‘ இன்னும் ஏன் எழுதுகிறாய் என்று கேட்கிறார்களோ என்று கூட நினைக்கத் தோன்றும்!’ என்றாலும், ஏன் விளக்கு பரிசு வாங்கினாய் என்று என்னை யாரும் எள்ள மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த விருதுக்கு ஒரு நேரிய மதிப்பு இருக்கிறது.

“உதய நிழல் வெளிவந்ததற்குக் காரணம் எல்லோரும் ந்னைப்பதுபோல் திரு. சி.சு. செல்லப்பா இல்லை. அவர் அதை வெளியிட முற்படவில்லை. அசோகமித்திரன் தான் அது வெளிவரக் காரணமாக இருந்தார். அசோகமித்திரனுக்கு 21 வயது இருக்கும்போதிலிருந்தே எனக்கு அவர் பழக்கம். அந்த நாட்களில் ந.முத்துசாமி காலையிலேயே வந்து என் கவிதையைப் பாராட்டி விட்டுச் செல்வார். அத்தகைய அன்புக்குரிய மனிதர்களை இங்கே பார்ப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது.

“இலக்கியத்திற்கு அடிப்படையா வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் வேட்கை, அலசல், தேடல் இருக்க வேண்டும்.இலக்கியவாதியாக இருப்பதன் பலன் இந்தத் தேடல் தான். அது அவனுடைய அதிர்ஷ்டம். ஒரு துல்லியப் பார்வை அவனுக்கு வாய்த்திருக்கிறது. அது அவனுக்குக் கிடைத்த ஒரு வரம்.

விளக்கு விருது பெற்ற கவிஞர்.வைதீஸ்வரனுடைய கவிதைகள் அவற்றின் வளமான படிமங்கள், உருவகங்கள், நாட்டு நடப்புகள் குறித்த துல்லிய, கவித்துவம் குறையாத பதிவு, தத்துவச் சரடு, வரியிடை வரிகள் என பல அம்சங்களிலும் சிறந்து விளங்குபவை. குழந்தகளுக்கென ப்ருஹத்வனி என்ற அமைப்போடு சேர்ந்து பல குழந்தைப் பாடல்கள் இயற்றியுள்ளார். தமிழின் அனைத்து இலக்கிய இதழ்களிலும் இவருடைய கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.உதய நிழல், நகரச் சுவர்கள், வைதீஸ்வரன் கவிதைகள், கால்-மனிதன் என இவருடைய கவிதைகள் பல தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. ‘தி •ராக்ரென்ஸ் ஆ•ப் ரெயின்’ என்ற தலைப்பில் இவருடைய தேர்ந்தெடுத்த கவிதைகள் சில ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. மியூஸ் இண்டியா’ என்ற குறிப்பிடத்தக்க இணைய தள இதழிலும் இவருடைய கவிதைகள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம் பெற்றுள்ளன. சசிறந்த ச்¢றுகதையாசிரியரும் கூட(‘கால் முளைத்த மனம்’ என்பது இவருடைய சிறுகதைத் தொகுதியின் தலைப்பு). இவருடைய தாய்மாமன் திரு. எஸ்.வி.சகஸ்ரநாமம் என்பது குறிப்பிடத்தக்கது). நவீன நாடகங்களிலும் வைதீஸ்வரன் பங்கேற்றிருக்கிறார். அவருடைய ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட வேண்டியது முக்கியம். இந்தியன் ஏர்லைன்ஸில் •ப்ளைட் மானேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கவிஞர். வைதீஸ்வரனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்டது மிகவும் பொருத்தமானது என்று இலக்கிய ஆர்வலர்கள் ஒருமித்தளவில் கருத்துரைத்தது நிறைவாக இருந்தது. தொடர்ந்து இந்த விளக்கு விருது வழங்குதல் தொடர்பான பணியை சீரிய முறையில் நடத்தி வரும் வெளி ரங்கராஜனுடைய உத்வேகத்தைப் பலரும் பாராட்டினார்கள். தகுதியிருந்தும் உரிய அளவு கவனத்தைப் பெறாத படைப்பாளிகளை மதித்துப் போற்றும் விதமாக அளிக்கப்படும் இந்த விளக்கு விருது வழங்கும் விழா இன்னும் பெரிய அளவில் நடந்தேறினால் நன்றாக இருக்கும் என்ற கருத்து சிலருக்கு இருப்பது புலப்பட்டது. ஆனால், விளக்கு விருது தகுதிவாய்ந்த படைப்பாளிக்குக் கிடைத்திருக்கிறது என்று கருதும், நிறைவடையும் இலக்கியவாதிகள், இலக்கிய அமைப்புகள் விளக்கு விருது பெற்ற படைப்பாளிக்கு பாராட்டு விழா என்று பெரிய அளவில் நடத்த எந்தத் தடையுமில்லையே!


Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்