கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ – முதல் ஓசை- கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

மாதங்கி


ஓசைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இருளிலும் தொடரும் அதன் பயணம். வெளிச்சமின்மை அதன் பயணத்திற்குத் தடையல்ல. வெளியுலக வெப்பம் ஓசையின் வேகத்தை கூட்டும். கவிதையும் ஓசையைப் போன்றதே. இருள் இதற்குத் தடையல்ல. ஓசையைப்போல் கவிதையும் வெளியுலக நிகழ்வுகள் அதன் பயணத்தையும், அதன் வேகத்தையும் அதன் தாக்கத்தையும் கூட்டும். இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பான்மையான கவிதைகள் ஓசை நயம் மிக்க பாடல்கள். மரபுக்கவிதைகள். தரைக்குமேலே போய்விட்ட வாழ்க்கையில் தரைக்கு அடியில் துடிக்கும் வேர்களை இனங்கண்டு அவற்றின் வியர்வையைப் போற்றும் வேர்கள் என்ற கவிதை சந்தத்தோடு அமைந்த பாடல். இது போல் சந்தத்தோடு அமைந்த பாடல்கள்,( வாசக் கறிவேப்பிலையே, இரட்டை நாக்கு, காவடி சிந்து ஒயில்கும்மி ,) நிறைந்துள்ளன; எங்கள் கவி வாழியவே – குறவஞ்சிப்பாட்டு, ஒளிர்வாய் வேண்டும் விடுதலை வேண்டா விடுதலை பெரும்பான்மையானவை இசையோடு பாடக்கூடியவை. நெருப்பு சுடும் என்பதை அறிவோம். நெருப்பே வணங்கியது என்பதையும் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். நெருப்பே அழுகிறது என்ற கவிதையைப் படிக்கையில் A poem begins with a lump in the throat- என்ற கவிஞர் ராபர்ட் ப்ராஸ்டின் வரிகள் மின்னலாய் வந்துபோகிறது. இந்த உணர்வு எமனுக்கே அதிர்ச்சி என்ற கவிதையிலும் புலப்படுகிறது.

மரபுக் கவிதையில் பொட்டில் அடித்தாற்போல் சொல்லுவது வெண்பா என்றால், மனம் விரும்பும் சொல்வீச்சுக்களை நிறைவாய் பயன்படுத்திக்கொள்ள விருத்தம் மிக பொருத்தமானதொரு களம். (அந்தக்காலம், குறிஞ்சிப்பூவாய், மனிதா, கீர்த்திகள் பரவவேண்டும், தன்மானக்கோட்டை) இறைவன் ஒரு முறை பூவுலகுக்கு வந்தார். ஒரு பிரும்மாண்டமான தராசை மக்களுக்குக் காட்டுகிறார். அது போன்ற ஒரு தராசை அந்த மக்கள் அதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அவ்வளவு பெரிய தராசு அது! அந்தத் தராசின் இடது பக்கத்துத் தட்டில் கண்ணில் தென்பட்ட அத்தனைப் பொருள்களும் வைக்கப்படுகின்றன. மரங்கள், விலங்கினங்கள், எல்லோரிடமும் உள்ள பொன், வெள்ளி, ரத்தினங்கள், பணம், மற்ற விலையுயர்ந்த பொருள்கள் வைக்கப்படுகின்றன. இந்தக் காட்சியைப் பார்க்கும் மக்கள் அனைவரும் வியப்படைகிறார்கள். உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் ஒரு பக்கத் தட்டில் வைத்தாகிவிட்டது ; அவ்வளவையும் ஈடுகட்டும் அளவுக்கு அடுத்தப் பக்கத்துத் தட்டில் எதை வைக்க முடியும்? எல்லோரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இறைவன் சுற்றும்முற்றும் பார்த்தார். அங்கு அவர் பக்கத்தில் இருந்த ஒரு சின்னக் குழந்தையை எடுத்து வலது பக்கத் தட்டில் வைத்தார். அவ்வளவுதான். தட்டு சமமாகிவிட்டதா? இல்லை ! வலது பக்கத்துத் தட்டு கீழே போகத்துவங்கியது. , இடது பக்கத்துத் தட்டு மிக மிக மேலே சென்று ஆடிக்கொண்டிருந்தது. அதில் இருந்த பொருள்கள் எல்லாம் விழுந்துவிடும் அளவிற்கு ஆடியது. இந்தக் கதை நமக்குச் சொல்லும் செய்தி என்ன? இந்த உலகத்தில் மிகவும் உயர்ந்தது, விலைமதிப்பற்றது, குழந்தை உள்ளம் தான். ஒருவன் தன் ஆன்மாவுக்குக் கேடு விளைவித்து உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொள்வதால் அவனுக்கு வரும் பயன் என்ன? ஒருவன் தன் ஆன்மாவுக்கு ஈடாக எதைக் கொடுக்க முடியும்? ஆசிரியப்பாவில் உதித்த மாயமகுடம் ஆக்கிரபமிப்பின் முகமூடியைக் கிழிக்கிறது. இன்றைக்கு நாம் படும் கவலைகளுக்கெல்லாம் காரணம் என்ன? மனிதனின் மதிப்பை மனிதன் இன்னும் முழுவதும் புரிந்து கொள்ளவில்லை. குழந்தை உள்ளம் இருந்தால் மனிதன் தன் ஆன்மாவுக்கு கேடு விளைவிக்குமாறு நடந்து கொள்ள மாட்டான். மனிதன் மனிதாக வாழ வேண்டும் என்பதிலிருந்து மேலே உயர்ந்து தெய்வமாக மனித வாழ வேண்டும் என்று தெய்வமாக வாழ வேண்டும் என்ற கவிதையில் அதற்குரிய நெறிகளையும் கவிஞர் கூறுகிறார்.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்ற கவிதைகள், சிங்கை வந்த பிறகு எழுதப்பட்டவை. சார்ஸ், சிங்கை பல்கலையின் வீடு. மனித வாழ்க்கையில் கவிதை எல்லா இடங்களிலும் ஒளிந்திருக்கிறது. அதை அடையாளம் கண்டு தேடி எடுத்துத் தருபவனே கவிஞன். மனதின் உணர்வுகள் நல்ல சிந்தனையைத் தேட நல்ல சிந்தனை தகுந்த வார்த்தைகளைத் தேடி கொடுத்துவிடும். அதுவே கவிதை. கவிதையை நேசித்த எனக்குக் கவிதையில் எந்தக் கட்சியும் எதிர்க்கட்சியாகவும் எதிரிக் கட்சியாகவும் தெரிந்ததில்லை; கவிதையின் எல்லாக் கட்சியிலும் நான் உறுப்பினனாக இருந்து வருகிறேன் என்று கவிஞர் தம் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது வெறும் வாய் வார்த்தை இல்லை. இந்த முதல் ஓசை மரபுக்கவிதைத் தொகுப்புடன் வெளிவந்திருக்கும் பூமகனும் உயிர்க்குடையுமே (புதுக்கவிதைத் தொகுப்புக்கள்) அதற்கு சான்று. இதுவே இவர் பயணத்தின் பலம்.
இதற்கு முன் வெளிவந்த கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் நூல்கள்:
வியர்வைத் தாவரங்கள்
இரவின் நரை
வீரமும் ஈரமும் – வரலாற்று நாடகம்
பதிவதி ஒரு காதல் – நாடகம்
விலங்குப் பண்ணை நாடகம்
( முதல் ஓசை கலைச்செல்வி இளங்கோ பதிப்பகம் பிச்சினிக்காடு )
(Kavignar Pichinikkaadu Elango pichinikkaduelango@yahoo.com )


madhunaga@yahoo.com.

Series Navigation

மாதங்கி

மாதங்கி