கழுதையின் காம்போதி !

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

கோவி. கண்ணன்


அழகுக்கழகு சேர்த்த தமிழ் ழ ‘கரம், என்
தமிழ் பெயருக்குள் சேர்ந்தது எனக்கு பெருமை தான் !
அழகிற் கிலக்கணமாய் ஒரு கொள்ளை அழகு என் குட்டிக் கழுதை !

வீட்டை கெடுத்து குட்டி சுவராக்கி விட்டு,
வீணர் தம் பழியை என் மேல் சுமக்க வைக்க வந்த,
வீன் பழிதான் ‘கழுதை கெட்டால் குட்டி சுவர் ‘ !

உப்பிட்ட என்னை உள்ள வரை நினைக்கா விடினும், தப்பாக எனக்கு
உப்பில்லாமல் கூறப்பட்ட பழிமொழியை, என் அழுக்கு மூட்டைக்கு
அழுக்காய் சேர்த்து மேலும் நான் சுமக்கிறேன்!

வெடி கட்டும் பொடியர்களுக்கு விளையாட்டு பிள்ளை நான்
பயந்து பாய்ந்தோடும் போது பாருங்கள் என்னை,
பந்தய குதிரையும் என்னை வீட வேகம் குறைவுதான் !

மல்லாந்து படுத்து நான் நான்கு கால்களை
உதைத்து உதைத்து கொள்வது, என்
உற்சாகத்தில் வெளிப்படும் அழகான வொகுளித்தனம் !

ஏழு சுவரங்களுக்குள் எந்த ராகமும் அடங்குமென்றால்
என் கனைக்கும் குரலும் ஏழு சுவரத்தில் அடங்கிய
ஒரு காம்போதி ராகம் தான் !

கழுதை மாதிரி கத்தியும் காது கொடுத்து கேட்கவில்லை, என்ற
ஆதங்கம் உங்களுக் கிருந்தால், என் போல் இனி
காகிதம் தின்று விட்டு கத்துங்கள், கேட்பார்கள் !

கோவி. கண்ணன்
சிங்கப்பூர்

Series Navigation

கோவி.கண்ணன்

கோவி.கண்ணன்