கழிப்பறைகள்

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

சுப்ரபாரதிமணியன்


கழிப்பறை 1:
” இந்தக் கக்கூஸ’லேயே குடியிருக்கலாம் போல இருக்கு “என்றாள் மாதவி. கழிப்பறையின் பளபளப்பு அவளின் முகத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. பிரகாசத்தை கழிப்பறையின் உட்சுவர்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. ஒரு வகை பளபளப்பு இப்போதுதான் பளிங்குக் கற்களை பதித்துவிட்டு நகர்ந்து விட்டிருப்பதுபோல தோன்றச் செய்தது. ஓடோனில் டப்பாவின் சிறுதுளை வழியே ஒருவகை வாசம் பரவிக் கொண்டிருந்தது. வெவ்வேறு நிறங்களாலான குத்திட்டு நிற்கும் மயிற்கற்றைகள்போல கழிப்பறைய் சுத்தம் செய்யும் பிரஷ் இருந்தது. அதன் கைப்பிடி பருத்தும் அதன் முனையில் தொங்கிக் கொண்டிருந்த கயிறு பல வர்ணக் கலவையாயும் இருந்தது.

“இங்க இருக்கறதுனா இருந்திருக்கலாமே” என்றான் அவன். வியர்வையில் ஈரமாகியிருந்த பனியனை சுருட்டி எறிந்தான். அது டிரஸ்ஸ’ங் டேபிளின் மேல் விழுந்து சின்ன பவுடர் டப்பாவொன்றை அங்கிருந்து நழுவி விழச் செய்தது. இளம் சிவப்பில் அழுத்தமில்லாதபடி இருந்த பூக்கள் கொண்ட சட்டையைப் போட்டுக் கொண்டான். சரிந்தபடியே கட்டிலில் படுத்தான். மூக்கு விடைத்துச் சுருங்கியது. கண்களை மூட ஆரம்பித்தான்.

“நான் இருக்கறதும் இது மாதிரி ஒத்தை ரூம்தா. இதுக்கு ஆகற ஒருநாள் வாடகை என்னோட ஒத்தை ரூமுக்கு மாசவாடகை. அப்புறம் எப்பிடி இருக்கறது.”
“இருக்கற வரைக்கும் இருந்துக்க வேண்டியதுதா..”
“இன்னிக்கு ராத்திரி வரைக்குமோ நாளைக்கு காலைல் வரைக்குமோன்னு வேண்ணா இருக்கலாம்.”
“இருந்துட்டுப்போ.. இல்லீன்னா இப்பவே போறதுன்னாலும் சொல்லு. பாக்கெட்ல இருந்து காசெ எடுத்துத் தர்றேன் போயிடு..
“அவ்வளவுதானா பசப்பெல்லாம். ஒரு தரத்துக்கே போதுமுன்னு ஆயிருச்சா..”
அவன் கண்களை மூடியிருந்தான். சவாசனத்தின் கிடப்பதுபோல கிடந்தான். கழிப்பறையை மீண்டும் பார்த்தாள்.
மின்விளக்கு அணைக்கப்பட்ட பின் கழிப்பறை இயல்பான பிரகாசத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பதாய் தோன்றியது. கழிப்பறையிலிருந்து திமிறிக் கொண்டு வெளிச்சம் வெளியேறிக் கொண்டிருந்தது. வர்ணம் பூசப்பட்டு வைக்கப்பட்ட இட்லி பாத்திரம் போல மலம் கழிக்கும் குழி இருந்தது. உட்கார்ந்தபடியே மலம் கழிக்கலாம். வயதானவர்களுக்கு சௌகரியமானது. தனக்காவுக்கு அடிக்கடி கால்மூட்டில் வீக்கம் வந்துவிடும். ஏதாவது எண்ணெய்யெயைக் காய்ச்சி பூசிக் கொள்வாள். எண்ணெய் பூசிக் கொள்கிற நாட்களில் மட்டும் உடுத்திக் கொள்ளவென்று அழுக்கான ஒருவித வாசம் வீசும் சேலைகளை வைத்திருப்பாள். சேலை எண்ணெயின் பூச்சால் மினுங்கும். அந்தச் சேலைகளை துவைப்பதற்கென்று வெகு பிரயத்தனம் எடுத்துக் கொள்வாள். கல்லில் தான் துவைப்பாள். “இந்த எண்ணெய் போகமாட்டீங்குதே.. என்ன சோப்பு போட்டாலும் போக மாட்டேங்குதே.. பொன்வண்டு சோப்பு பிரமாதம்ன்னு சொல்வாங்களே அதுவெல்லாம் போட்டுப் பார்த்தாச்சு. கொஞ்சமும் மசிய மாட்டீங்குதே.. என்ன கருமமோ..” என்ரு சலித்துக் கொள்வாள். “இந்த தேவிடியாக் கீரைன்னு இண்ணு ஊர் முழுக்கக் கெடக்குமே..
இப்ப என் கண்ணுக்கு தட்டுப்பட மாட்டேங்குது. அதுல பத்து நாளைக்கு கீரை மசியல் பண்ணி சாப்புட்டா இந்த மூட்டு வலி போகும். என்ன தேவிடியாக் கீரையோ…”

மலங்குழி பீங்கனின் மேலிருந்த முடியைத் திறந்து சாத்தி வைத்துக் கொண்டாள். வெளியில் இருந்த நிறத்தை மங்கலாக்கியதுபோல அதன் உள்நிறம் இருந்தது. வெளுப்பு நிறத்திலான துளிகள் ஏகமாய் ஒட்டியிருந்தது. இதைச் சுத்தம் செய்வதற்கு வெளுப்பு நிறத்திலான ஏதாவது திரவம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என நினைத்தாள். தொலைக்காட்சி விளம்பரத்தில் ஹார்பிக் அவளுக்குப் பிடித்திருந்தது. இப்படி மலக்குழியெல்லாம் விஸ்தாரமாகக் காட்டுவார்களா என்ன. அழுக்கானதையும் காட்டுகிறார்கள். அருவருப்பாக இருக்கிறது. ஹார்பிக் திரவம் ஊற்றிக் கழுவியபின் அழகாகிவிடுகிறது. எவ்வளவு சுத்தமாயிருச்சு என்ற சிரிக்கும் பெண்ணின் மூக்கு சுருங்கி விரிகிறது. ஈறு தெரிகிற அளவு அவள். அழகென்று எதுவும் இல்லாத சாதாரணப் பெண். அந்தப் பெண்ணெல்லாம் தொலைக் காட்சியில் வந்து விட்டாள்.தனக்கொரு வ’ய்ப்பு அதுபோல் கிடைக்காதா. அந்தப் பெண்ணுக்கு தொலைக்காட்சியில் தோன்ற வாய்ப்புக் கிடைத்ததனால்தான் அப்படி சிரிக்கிறாளா, அல்லது ஹார்பிக் உண்மையில் வெளுக்கச் செய்திருக்குமா. மாதவிக்கு ஆச்சர்யமாகவே இருந்திருக்கிறது.

மலங்குழியும், குளிக்கும் அறையுமாகச் சேர்ந்திருந்தது.இது அவளுக்குப் பிடிப்பதில்லை. மலக்குழி குளிக்கும்போது மனதில் இருந்து தளர்ந்து போகாது. மலக்குழியை உபயோகிக்கும்போது குளிக்கும் பகுதியின் அழுக்கும், மூலையும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். குளிக்கும்போது மலக்குழி வாயைத் திறந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும். இந்த மலக்குழி பாவாயில்லை.மூடி போட்டபடி ஒரு அடி உயரத்திற்கு நிற்கிறது, ஆனால் பட்டனை அழுத்தினால் தண்­ர் போகவில்லை. சர்சர்ரென்று ஏதோ இழுபடுகிற சத்தம்தான் கேட்டது. காற்று எங்கோ அலைக்கழிந்து கொண்டிருப்பது போல பட்டது. மலத்துணுக்குகள் வேறு கட்டி கட்டியாய் மிதந்து கொண்டிருந்தன. வாளியில் தண்­ர் பிடித்துதான் ஊற்ற வேண்டியிருந்தது. ஊற்ற மலத்துணுக்குகள் மேலெழும்பி வந்து அருவருப்பு ஊட்டியது. கதுவுபக்கம் பார்த்துக் கொண்டே தண்­ரை ஊற்றினாள். சௌகரியமான மலக்குழி என்ற எண்ணம் மனதிலிருந்து தப்பிப் போய்க் கொண்டிருந்தது.

கண்ணாடித் தடுப்புகளின் வழியே பார்வையை ஓடவிட்டாள். கத்தடித்து நிற்க வைத்தது போல பேருந்துகள் நின்றிருந்தன. பேருந்து நிலையத்தின் அருகாமையில் அவன் அறை எடுத்தது மாதவிக்குப் பிடிக்கவில்லை. இரண்டு அடி இடைவெளியை நடந்து கொண்டே அந்த விடுதியின் முகப்பிற்கு வந்து விட்டிருந்தாள். அந்த விடுதியின் இடதுபுறத்தில் இருந்த உணவகம் ஆறுதல் தருவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். “உள்ள போயி காபி சாப்புட்டு பேசலாம்” அவனின் பதட்டம் தணிந்திருந்தது.. முகம் கழுவிக் கொண்டு வந்தவன் பெருமூச்சுவிட்டான். “காபி சாப்புடலாமே…”

“லாட்ஜில் ரூம் போடணும். உம் பேரு மல்லிகா. எம் பேரு சரவணன். பேரை ஞாபகம் வச்சுக்க மல்லிகா. எஸ்.மல்லிகா. இப்பிடித்தா லாட்ஜ் டிரிஸ்டர்ல எந்ட்ரி போடணும்.”
“மல்லிகாங்கறது உனக்கு புடுச்ச பேரா..”
“அப்படியில்ல. டக்குன்னு மனசிலெ வந்தது…”:
“ஒவ்வொரு தரமும் வர்றப்போ இந்தப் பேர்லதா பதிவு பண்ணிவியா..”
“ஒவ்வொருதரமுன்னு யாரு வர்றாங்க. என்னமோ அபூர்வமா.”
“செக்கிங்ன்னு ஏதாச்சுச் வந்தா அற்றஸ் என்ன சொல்றது. எழுதிக் குடுத்திரு. பர்சிலே வச்சிக்கிறேன். என்ன ஊருன்னு பதிவு பண்ணப்போறே..”
“பொள்ளாச்சின்னு..”
“செரி பொள்ளாச்சின்னு சொல்லிர்லாம். இங்கிருந்து பொள்ளாச்சிக்கு எவ்வளவு சார்ஜ்?”
“லாட்ஜ்ல இருக்கறவன் வாயைக் கிண்டறதுக்காக ஏதாச்சும் கேப்பான். செரியா பதில் சொல்லாட்டி சந்தேகம் வந்திரும்லே அதுதா..”
அறை பதிவு செய்யும்போது “பம்பாய் கக்கூஸ் உள்ள ரூமா குடுங்க” என்று கேட்டிருந்தான். “சிரமந்தா. பாத்துதா சொல்லணும்.”
“இல்லை பம்பாய் கக்கூஸ்ன்னா கொஞ்ச சவுகரியமா இருக்கும்ன்னு நெனச்சேன். எதுவாயிருந்தாலும் செரிதா.”
மாதவி கட்டிலின் ஓரத்தில் வந்து உட்கார்ந்தாள். கட்டிலின் இன்னொரு பகுதி உயர்ந்து தாழ்ந்து நின்றது. அவன் கண்களின் மேல் கைகளை இறுக மூடியிருப்பது போல் உடம்பைக் கிடத்தியிருந்தான். தானும் இது போல் உடம்பைக் கிடத்திக் கொள்ளலாமா என்று நினைத்தாள்.

கழிப்பறை: 2
ரெட்டைக் கோம்பை வீதியில் இந்த ஒத்தை வீடுகளிலிருந்து எப்போது தப்பிக்கப் போகிறோம் என்பது மாதவிக்கு பெரிய கேள்வியாக இருந்தது. வேறு எங்காவது ஒற்றை வீடு கிடைத்துவிடும். அதற்காக அலைய வேண்டியிருக்கும். பதினைந்து ஒற்றை வீடுகளுக்கு ஒரு குளியலறையும் ஒரு கழிப்பறையும் மட்டுமே இருந்தன. கழிப்பறை பதினைந்து ஒற்றை அறைகளுக்கு தாக்குப் பிடிக்காத மாதிரி ஆட்கள் உள்ளே செல்வதற்காக வரிசையைக் கொண்டிருக்கும். வரிசையில் நிற்பதற்குப் பயப்பட்டு மாதவி தவிர்த்து விடுவாள். பல சமயங்களில் மலக்குழி நிரம்பி வழிந்து சங்கடப்படுத்திவிடும். அப்போதெல்லாம் கழிப்பறையை யாராவது பூட்டிவிடுகிறார்கள். பதினைந்து ஒற்றை வீடுகளின் உரிமையாளர் நகரின் வேறு பகுதியில் இருக்கிறார். எனவே மலக்குழி நிரம்பி வழிகிற நேரங்களில் திடீரென ஏதாவது முடிவெடுக்க யாராவது இருக்கத்தான் செய்கிறார்கள். அதுமாதிரி சமயங்களில் பூட்டொன்று கழிவறையில் தொங்கும். குளியலறையில்தான் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். சிறு குழந்தைகள் இவ்வகையான அவசர நேரத்தில் குளியலறையைப் பயன்படுத்தி விடுவர். களேபரமாகி விடும். சம்பந்தப்பட்டவர்கள் குளியலறையை சுத்தம் செய்யாத வரைக்கும் கூக்குரல் இருந்து கொண்டே இருக்கும்.

கழிவறையில் பூட்டுப் போடப்பட்டிருப்பது கண்ணில் பட்டது. செவ்வகக் கதவின் ஓரத்தில் கறுத்த மச்சம் போல் பழைய பூட்டொன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஒற்றை ஆள் புகுவதற்கென்று உருவாக்கப்பட்டது போல சிறுத்திருந்தது. குளியலறை கூட அப்படித்தான். ஒற்றை ஆள் நின்ற உடம்பைச் சுற்றிக் கொள்வதற்கான நெருக்கடியான இடம் போலிருக்கும். இன்றைக்கு வெளியில் போவதைத் தவிர வேறு வழியில்லை. லேசான இருட்டு எதிரில் வருபவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி ஆக்கிவிட்டது. வேறு வழியில்லாமல் முள்புதர்கள் அடர்ந்த பகுதியைத்தான் இன்றைக்குப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பது ஞாபகம் வந்தது.
கழிப்பறையின் முன் இரண்டு மூன்று பேர் நடமாட ஆரம்பித்தாலோ கழிப்பறை பூட்டப்பட்டிருந்தாலோ முட்புதர் பகுதிக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும். ஒற்றை வீடுகளின் அணிவகுப்பிற்கு பின் இரண்டு நிமிட நடையில் முட்புதர்கள் இருந்தன. நகரின் ஒதுக்குப் புறத்து காலியிடங்களெல்லாம் கட்டிடங்களாகிக் கொண்டிருந்தன. இந்தப் பகுதி மட்டும் வெற்றிடமாக முட்புதர்களால் அடர்ந்திருந்தது. அந்த இடத்துக்காரர் மைசூரில் இருக்கிறாராம். வசதியானவர் என்பதால் இந்த இடத்தை விற்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லையாம். அந்த இடம் மலங் கழிக்கவென்றாகிவிட்டது.
விடியற்காலை நேரத்தில் அப்பகுதியில் நடமாடுபவர்கள் கொஞ்சம் அதிகம் இருப்பார்கள். இருட்டின பின்பு டார்ச் லைட்டுடன் வந்து ஒதுங்கும் ஆண்களும் இருந்தார்கள். பெண்கள் ஆண்களோடு வருவதும் பின் அவரவர்களுக்கென்று இருக்கும் புதர்ப்பகுதிக்குப் போவதும் சகஜம். “புதருக்குத் தனியாப் போகாதே” என்று கணவன்மார்கள் அக்கறையுடன் மனைவிமார்களுக்கு அறிவுரை சொல்வது வழக்கம்.இருட்டு, புதர்பகுதி பல சிக்கல்களை அவ்வப்போது உருவாக்கும். எவனோ புதர் மறவுல உக்காந்து பாக்கறான், செயின் அத்துட்டுப் போயிட்டான், உரசரது கிள்ளறதுன்னு வர்ற சில பேர் இருக்காங்க.. என்ற செய்திகள் அவ்வப்போது வருவதுண்டு.
மாதவிக்கு இதுமாதிரி செய்திகளைப் பரப்பிவிட்டு வேடிக்கை பார்க்கலாமா என்று தோன்றியதுண்டு. ‘எவனோ கையைப் புடுச்சு இழுத்தான். வர்றவளெ முத்தம் குடுத்துட்டு ஓடிட்டான்” என்றபடி. இதையெல்லாம் தான் சொன்னால் நம்புவார்களா என்பதை நினைக்கிற போது மாதவிக்கு சிரிப்பு வரும்.

புதர்களுக்குச் செல்லும்போது கால்களை ஜாக்கிரதையாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கால்களில் மலம் அப்பிக் கொள்ளும். மலம் இல்லாத ஒன்றரை சதுர அடி பரப்பைத் தேடிக் கண்டுபிடித்து உட்கார வேண்டும். உட்கார இடம் தேடும்போது மட்டும் கண்களைத் தாழ்த்த வேண்டும். அதற்கப்புறம் கண்களைத் தாழ்த்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளாதபடி நடந்து கொள்ளவேண்டும். தனக்காவுக்கு இது மாதிரி இடங்களை மலம் கழிக்க உபயோகப்படுத்தும் போது துடைத்துக் கொள்ள கல்லைத் தேடுவாள். கல் கிடைக்காத போது எல்லாம் நாறுது என்றபடி புலம்பிக்கொண்டே இருப்பாள். வெளிநாட்டுக்காரர்கள் துடைத்தெறியவென்று காகிதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பதை தனக்காவிடம் சொல்லியிருந்தாள். பேப்பரை வெச்சு தொடச்சிட்டதற்கப்புறம் கையைக் கழுவிக்கவாங்களா இல்லையா என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்பாள். புதர் பக்கம் வந்து போகிறபோது யாரும் தன்னை தொட்டு விடக்கூடாது. உடம்பு அதிர்கிற மாதிரி உலுக்கிக் கொள்வாள். பதறிப் போய்விடுவாள்.

நகரின் ஒதுக்குப்புறத்தில் திடீரென முளைத்த குடியிருப்புப் பகுதி என்பதால் பொது கழிப்பிடம் எதிவும் அமையவில்லை என்பதை தனக்கா ஒருதரம் சொல்லியிருந்தாள். ஒற்றை அறை வீட்டில்தான் தனக்கா குடும்பத்தோடு இருக்கிறாள். பாத்ரூம் லெற்றீன் உள்ள வூட்டுக்குவாடகை போறது, அப்பறம் அது மாதிரி வூடு கட்டறதுங்கறதுதா எங்கனவு என்பாள் அவள்.
டில்லி முட்களின் ஆக்கிரமிப்பு பெரிய அரண் போல்தான் இருந்தது. உடம்பை வளைத்து உள்ளே புகுந்தாள் மாதவி. இருட்டினுள் கண்களை ஊடுருவ வைப்பது வெகுசிரமமாக இருந்தது. கால்களில் மலம் அப்பிக் கொள்ளக்கூடாது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மெல்ல ஊடுருவி உள்ளே நுழைந்தபோது டில்லி முள் ஒன்றின் பிசிறு இடுப்புப் பகுதியைக் கீறியது. உடம்பு திடுக்கிட்டு உதறுவதாக இருந்தது. முள் கிழித்து காயம் ஏதாவது ஆகியிருக்குமா என்பதைப் பார்ப்பதற்க்காய் வலது கையினை இடுப்பில் வைத்தாள். பிசுபிசுவன்றிருந்தது. ரத்தக்கசிவா என்ற பயத்தில் உடம்ப் ஒரு நிமிடம் நடுங்கி நின்றது. வியர்வையாக இருக்கும் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள முயன்றாள்.

கழிப்பறை 3:
நேற்றைக்கு நடமாடும் பொதுக்கழிப்பறையொன்று மந்திரியொருவர் திறந்து வைத்திருந்தார் என்பதை தனக்காதான் மாதவியிடம் சொன்னாள்.

“வீதிவீதியா வந்து நிக்குமாமா. நாம போயிக்காலாம்..”
“நமக்கு வர்ற நேரத்திலதானே ஒண்ணுக்கும் ரெண்டுகும்ன்னு போக முடியும். அது வற்ற நேரத்தில் நமக்கு வருமா.”
“வர வெச்சுக்க வேண்டியதுதானே. பழகிக்கணும்..”
“காசு கேப்பாங்களா..”
“கவர்மெண்டது போல இருக்கு. கவர்மெண்டதுன்னா காசு கேக்க மாட்டாங்க.”
“லஞ்சம்ன்னு கேப்பாங்க.”
“எது கேட்டாலும் குடுத்தர வேண்டியதுதா..”
” ஒவ்வொரு வீதிக்கும் ஒவ்வொரு நேரத்துக்குப் போகும்போல. நம்ம ஏரியாவுக்கு எப்ப வரும்ன்னு தெரியலே. அறிவிப்பாங்களாம்.”

தெற்கு முக்கில் நடமாடும் கழிப்பறை நிறுவப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். தெற்கு முக்கில்தான் அரசியல் கூட்டங்கள் பெரும்பாலும் நடக்கும். வெகு விஸ்தாரணமாக இருக்கும். வெகு விஸ்தாரண இடத்திற்குத்தானே மந்திரிகள் வருவார்கள் என்று சொல்லிக் கொண்டாள் மாதவி.
வேலைக்குப் போவதற்குத் தோதுவான நேரத்தில் வந்து போகுமா என்று தெரியவில்லை. இந்த வாரத்தில் மூன்று நாட்கள் இப்படியாகிவிட்டன. வேலையில்லாத நாள் என்றால் வயிற்றில் வைத்துஅடைத்துக் கொண்டிருக்கலாம். வேலைக்குப் போகும் நாளென்றால் வயிற்றைச் சுத்தம் செய்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். பஞ்சுத் துகள்கள் காலி வயிற்றை நிரப்பி விடும்.
தெற்கு முக்கின் நடுவீதியில் நீளமாக லாரியொன்றை நிறுத்தி இருப்பதுபோல இருந்தது. நீல வண்ணத்தை அடித்து உடம்பு உப்பிப்போன யானை போலவும் இருந்தது. அதன் நீல வர்ண மினுமினுப்பு சுற்றிலும் இருப்பவற்றை மங்கலாக்கியிருந்தது.
அவசர கதியில் வந்து போகிறவர்கள் ஒரு நிமிடம் நடமாடும் கழிப்பறையை பார்வை பார்த்து போய்க் கொண்டிருந்தார்கள். செல்லாண்டியம்மன் தேரின் ஒரு பகுதி தெற்கு முக்கின் இன்னொரு மூலையில் இருந்தது. தேர் நிற்கும் இடத்திற்கு இணையாக கழிப்பறையை நிறுத்தியிருப்பதற்கு யாராவது சங்கடப்பட்டிருப்பார்களா. ஒரு நாளைக்குத்தானே என்று விட்டிருப்பார்கள். அதுவும் மந்திரி வந்து போகும் சமாச்சாரம். யாரும் கேள்வி கேட்டு மூச்சு விட்டிருக்க மாட்டார்கள்.
நாலைந்து ஆட்டோக்களின் பரபரப்பான நகரலில் மாதவி வீதியின் மறுபுறம் நிற்க வேண்டியதாகி விட்டது. ரொம்ப நேரமாய் ஒருவர் நின்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகப்பட்டது. அவரின் கசங்கிய சட்டையின் முதுகுப்பகுதி பளிச்சென்று கண்ணில்பட்டது. அவளின் வயிற்றில் கோளாறெல்லாம் முதுகுப்பகுதி சட்டையில் வந்துவிட்டிருந்தது போலிருந்தது. மாதவி கசங்கிய சட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த மனிதனின் முகம் இது போல் கசங்கித்தான் போயிருக்குமா என நினைத்தாள் மாதவி.
வயிறு கனத்துக் கொண்டிருந்தது. அறையின் கழிப்பறை வரிசை அவளை இவ்வளவு தூரம் துரத்தியிருந்தது. ஏதோ நடமாடும் கழிப்பறை திறந்து ஆளில்லாமல் கிடப்பது மாதிரியான
எண்ணத்துடன் விரைசலாக வந்திருந்ந்தாள். நடமாடும் கழிப்பறையின் மறைவில் கூட சென்று உபாதையைத் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் இந்தப் பகல் நேரத்தில் அதையெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் தோன்றியது. நடமாடும் கழிப்பறை இப்படியே ஒரே இடத்தில் நின்றிருந்தால் அதை தான் இப்படி நினைப்பது போல யாராவது மறைவிடமாகப் பயன்படுத்தத்தான் செய்வர் என்ற நினைப்பு வந்தது அவளுக்கு.

லாரியொன்றை நிறுத்தி வைத்து அதற்குச் சாய்வான கூரை போட்ட மாதிரி இருந்தது. திடீரென்று வீசிய காற்றில் படபடத்து மண் அதன் மேல் விழுகையில் படபடவென்ற சப்தம் கிளம்பியது. வாலையாட்டிய படி வந்த நாயொன்று குத்துக் காலிட்டு உட்கார்ந்து நடமாடும் கழிப்பறையைப் பார்த்தது. காதுகளை வேகமாக அசைத்தபடி பிறகு ஓட ஆரம்பித்தது.

நடமாடும் கழிப்பறையில் மூன்று அறைகள் தென்பட்டன. நன்ன்கு சக்கரங்களும் தரையில் தொடாமல் சற்றே எம்பியபடி நின்றிருந்தன. அதற்கு நான்கு பக்கங்களிலும் இரும்பு முட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தன.

“இதில நாம் உக்கார்ராதல்லா எங்க போகும்?” மாதவியைப் பார்த்தபடி சுருங்கின சட்டை போட்டிருந்தவன் கேட்டான். அவன் முகம் பளிச்சென்றிருந்தது. நன்கு தூங்கி எழுந்து வந்தவன் போலிருந்தான். முப்பது வயதுகூட இருக்காது. இவ்வளவு சாவகாசமாய் நிற்பது ஆச்சர்யமளிப்பது போல பார்த்தான்.

” ஆமா எங்க போகும் ஆவியாருமா.. குழாய் ஒண்ணு மேல போகுதே..
“ஆவியாவெல்லா போகாது. அப்பப்போ வழிச்சு ஏதாச்சும் பெரிய பீப்பாய்ல அடச்சு கொண்டு போறதத் தவிர வேற ஒண்ணும் வழியில்ல.
“காசு குடுக்கணும்லே…”
“காசி இல்லாம நடக்குமா..”

வயிற்றைப் பிடித்துக் கொள்வது போல நின்றாள் மாதவி. இன்னும் கொஞ்ச நேரம் நின்றால் வலி அதிகமாகும். மாதவிடாய் வலியாக இருக்குமோ. நாட்களை எண்ணிப் பார்த்துக் கொண்டாள். இன்னும் இருபதைத் தாண்டவில்லை. மலக்கழிவு வயிறில் சேர்ந்து அலைக்கழிக்கும் வலிதான்.
“உனக்கு வயித்த வலி ஒண்ணும் இல்லியா..”
“நான் வேடிக்கை பாக்கத வந்தேன். ஒவ்வொரு வீதிக்கும் இது எப்ப வரும்ன்னு தெரிஞ்சிக்கலாமுன்னு வந்தேன். போர்டெல்லாம் ஒண்ணும் காணம்.”
“பொறவு போடுவாங்களோ என்னமோ”
“பாம்பே கக்கூஸ்தானா. இல்லெ கீழே உக்கார்ற மாதிரியா?”
“அதுவும் இருக்கும். இதுவும் இருக்கும். தனித்தனியா இருக்கும் போல..”
“தேர் ஒண்ணு நெலைக்கு வந்த மாதிரி இருக்குது.”
“சத்தம் போட்டுச் சொல்லிராதே. சிக்கலாயிரும். மலம் கழிக்கிற வேனும், தேரும் ஒண்ணா சண்டைக்கு பெரிய கோஷ்டியே ஒண்ணு நிக்கும்.”

வயிற்றுவலி கால்களிலிருந்து ஊடுருவி மெல்ல உடம்பு முழுக்க நிறைப்பதாக இருந்தது. உடம்பு ஒரு கணம் நிலைகுலைந்து திரும்பவும் சகஜநிலைக்கு வந்தது போலிருந்தது. உடம்பின் மயிர்க்கால்கள் குத்திட்டு ஓய்ந்தன. உடம்பைத் தளர்த்தி எங்காவது கிடத்திவிட வேண்டும் போலிருந்தது மாதவிக்கு. வயிற்றிலிருந்த மலத்தை வெளியேற்றி விடுவதைத் தவிர வேறு உபாயம் இல்லை. எங்காவது உடனடி மறைப்புத் தேட வேண்டும் போலிருந்தது. நடமாடும் கழிப்பறையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கழிப்பறையின் அடுத்த பக்கம் போய் நின்றாள். எழுத்துக்கள் பூச்சியாய் நெள்ந்து கொண்டிருப்பது போல் பட்டது. வயிற்றுள் வலியை உண்டாக்குபவை இதுமாதிரி சின்னப்பூச்சிகளாகத்தான் இருக்க வேண்டும். கண்களை மறைத்த ஒருவகை நீர் எழுத்துக்களை தெளிவற்றதாக்கிக் கொண்டிருந்தது. இரண்டு லிட்டர் தண்­ர் மட்டும்தான் உபயோகிக்க வேண்டும். நெடுநேரமோ அல்லது பல நாட்களோ ஒரே இடத்தில் நிற்க வைப்பதாக இருந்தால் டயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு இரும்புத் தூண்களைப் பயன்படுத்துங்கள். விளக்கங்களுக்கு படத்தைப் பார்க்கவும். உள்ளே துணிகள், கழிவுகளை கழிப்பறைக்குள் போடாதீர்கள். உங்கள் உடம்பை லகுவாக்க இது உதவும். திறந்த வெளிகளை மலம் கழிக்கப் பயன்படுத்தாதீர்கள். நோய்களைப் பரப்பும். இவ்வகை வாசகங்கள் நிறைந்திருந்தன. இவையெல்லாம் வயிற்றில் இருப்பதை கழித்து விட்டி சாவகாசமாகப் படிக்க வேண்டியவை என்ற நினைப்பு வந்தது மாதவிக்கு.

வயிற்றுவலி மெல்ல உடம்பு முழுக்க நிறைப்பதுமாதிரி இருந்தது. வலியால் கால்கள் தளர்ந்துவிடும் போலிருந்தது. புதுக் கழிப்பறை பயன்படுத்துவதில் எந்த அசூசையும் இருக்காது. உள்ளே நுழைந்து பார்த்ததும் அதன் சுத்தமும் புது வாசனையும் இங்கயே குடியிருக்கலாம் போல இருக்கு என்று யாரிடமாவது சொல்ல விருப்பம் வந்தது மனதில் அவளுக்கு. கசங்கிய சட்டைக்காரன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

சிறுகதை: சுப்ரபாரதிமணியன்
======================================================================அனுப்பியவர்: issundarakannan7@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்