கள்ளர் சரித்திரம்

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

என்னார்


வணக்கம் நண்பர்களே,

சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்கு முன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்து பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் 12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் ஈங்குரைக்க விளைகிறேன்.

கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால நமக்களுக்கு அக்காலத்து தெரியாத பல விடங்களை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.

நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கனகசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.

எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதியவர்கள் தம்முடைய ‘ தென்பாண்டிச் சிங்கம் ‘ எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணை கொண்டார்.

கள்ளர் சரித்திரம்

http://www.ennar.blogspot.com

rethinavelu.n@gmail.com

Series Navigation

என்னார்

என்னார்

கள்ளர் சரித்திரம்

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார்


நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள கள்ளர் சரித்திரம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

தமிழரது நாடு தமிழ்நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும் கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகின்றது. தென்னம நாடு, உரத்தநாடு, பாப்பாநாடு, பைங்காநாடு போன்று என பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாய் கள்ளர் நாடு இருந்தது.

கள்ளர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பர். அவர்களுக்கு அம்பலகாரர் அல்லது நாட்டாண்மைக் காரர் என்பது சிறப்புப் பெயராகும். சில இடங்களில் காரியக்காரர் என்றும் சொல்வதுண்டு. ஊரிலுல்லோர் எல்லாவிதமான வழக்குகளையும் அம்பலகாரரிடம் தெரிவித்துக் கொள்ள அவர் வழக்குகளின் உண்மையைக் கண்டறிந்து ஒருபுறமும் கோணாது நடுவு நிலையாகத் தீர்ப்புச் செய்து விடுவர். வழக்காளிகலும் தீர்ப்பிற்குக் கட்டுபட்டு நடப்பர். அம்பலகாரர் என்னும் உரிமையைப் பணம் முதலிய எக்காரணத்தாலும் ஒருவர் திடாரென அடைந்து விடுவதில்லை. அது பரம்பரையாக வந்து கொண்டிருப்பதொன்றாம். ஒருக்கால் அம்பலகாரர்க்குச் சந்ததியில்லாது போய்விடின், அவரைச்சார்ந்த தகுதியுடைய வேறு யாரையாவது ஊரார் தேர்ந்தெடுத்துக் கொள்வர். அம்பலகாரர் பொருள் குன்றி எவ்வளவு எளியராய்ப் போய்விடினும் அவரது உரிமைக்குப் பழுது வருவதில்லை. சில சமயங்களில் பெண்டிரும்கூட அவ்வுரிமையை வகித்து நடத்துவராவர்.

நாம் இங்கே சொல்லியனவெல்லாம் உலகத்தில் பல வகுப்பினர் இப்பொழுது மேற்கொண்டு சய்வனவே. ஒன்றும் புதிதன்று. செய்வதற்கு அருமையானதுமன்று. ஒவ்வொரு வகுப்பினரும் தங்கள் முன்னேற்றத்திற்கு எவ்வளவு பாடுபட்டு வருகின்றனர் ? ஆந்திர நாட்டில் ரெட்டி வகுப்பினரும், மைசூர் நாட்டில் வொக்கலிகர் என்ற வகுப்பினரும் மிக உழைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் நாடார் என்னும் சான்றார் வகுப்பினரைக் குறிப்பிடலாகும். இவர்கள் செய்து வரும் காரியங்கள் மிக வியக்கற்பாலனவாகும். இனி கள்ளர்கள் ஏனையெல்லா வகுப்பினரோடும் அன்பும், ஒற்றுமையும் உடையராய்க் கலந்து வாழ்தல் வேண்டும். சில வகுப்பினர் சில பழக்கங்களினாலே தம்முடன் உணவு முதலியவற்றில் கலந்து கொள்ள முடியாதவராயிருப்பர். அத்தகைய இடங்களில் தாமும் தம் வகுப்பின் பெருமைக்குக் குறைவுண்டாகாதவாறு நடந்துகொள்ளல் வேண்டும். பொதுவில் உலகிலுள்ள மக்களெல்லாம் தமக்குச் சமமானவரென்றும் நண்பரென்றும் போற்றியொழுகுதல் வேண்டும்.

இனி, இவர்களோடு ஓரினமாக எண்ணப்படுகின்ற மற்றை வகுப்பினரைக் குறித்தும் இங்கே சிறிது கூறுதல் பொருத்தமாகும் என நினைக்கின்றோம்.

கள்ளர்களைப் போன்றே மறவர் என்போரும் தமிழ்நாட்டில் ஓர் பெருங்குழுவினராவர். இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இவ்வகுப்பினரென்பதை யறிவோர் இவ்வகுப்பானது தொன்றுதொட்டு எவ்வளவு மேன்மை வாய்ந்துளதென்பதை உணரக்கூடும். சேதுபதிகளைப் போன்று தமிழை வளர்த்தோரும், புலவர்களை ஆதரித்தோரும், வள்ளன்மை சிறந்து விளங்கினோரும் எண்ணிறந்த அளங்க ளியற்றினோரும் உலகத்தில் யாவருளர் ? அன்றியும் இராமேச்சுரும் சென்று இறைவனை வழிபட்டு வருவோர் யாவரே யெனினும் அவர்கள் சேதுபதிகளையும் தரிசித்து வருவது தொன்றுதொட்ட வழக்கமாயிருப்பது அன்னோரது ஒப்பற்ற மாட்சியைப் புலப்படுத்துவதாகும். இராமநாதபுரத்தரசர் போன்றே செல்வத்திலும் பெருமையிலும் சிறந்த சிவகங்கை மன்னரும் இவ்வகுப்பினராவர். இவர்களேயன்றி பாலவனத்தம், பாலையம்பட்டி, சிங்கம்பட்டி, கடம்பூர், ஊற்றுமலை, சேற்றூர், சொக்கம்பட்டி, ஊர்க்காடு, கொல்லக்கொண்டான் முதலிய பல சமீன்றார்கள் இவ்வகுப்பினராக வுள்ளனர்.

அகம்படியரென்போரும் ஓர் பெருங்குழுவினரான தமிழ் மக்களாவர். இவர்களும் தொன்று தொட்டு உயர்ந்த நிலையில் இருந்து வந்திருக்கின்றனர். இவ்வகுப்பினரில் பெருநிலமும், பெருஞ்செல்வமும் வாய்ந்தோர் அளவற்றவர்கள் இப்பொழுதும் இருக்கின்றனர்.

இம்மூன்று வகுப்பினரும் அஞ்சாமை, வீரம், ஈகை முதலிய குணங்களில் ஒரு பெற்றியே சிறந்து விளங்குவோராவர். மற்றும் பல தன்மைகளில் அவர்கள் ஒப்புமையுடைரா யிருக்கின்றனர். இம்மூன்று வகுப்பும் ஒவ்வொரு காலத்தில் கல்யாணம் முதலியவற்றாலும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன. இராமநாதபுரத்தரசர்க்குச் செம்பிநாடன் என்ற பட்டமும், சேற்றூர் ஜமீன்றார்க்குச் சோழகர் என்ற பட்டமும், கொல்லங்கொண்டான் ஜமீன்றார்க்கு வாண்டையார் என்ற பட்டமும் இருத்தலாலும் சேற்றூர் ஜமீன்றார் விக்கிரம சோழன் மரபினர் என்றும், கொல்லங்கொண்டான் ஜமீன்றார் தஞ்சைப் பக்கத்திலிருந்து வந்தவர் என்றும் கூறப்படுதல் முதலியவற்றாலும் இவர்களும் ஆதியில் கள்ளர் வகுப்பினரே யாவர் என்று சிலர் கருதுகின்றனர். இவர்கள் எல்லோரும் ஒரே வகுப்பினர் என்ற உணர்ச்சி இப்பொழுதுஇம் இருந்து வருகிறது. இவ்வுணர்ச்சிக்கு அறிகுறியாகச் சிற்சில இடங்களில் சங்கங்களும் ஏற்படுத்தியிருக்கின்றனர்.

இஇவர்கள் தமிழ்மொழியைப் போற்றிப் புரந்துவந்திருக்கின்றனர். மதுரையிலும் கரந்தையிலும் உள்ள தமிழ்ச்சங்கங்கள் இவர்களால் நிறுவப்பெற்றும் புரக்கப் பெற்றும் வருவதிலிருந்து இப்பொழுதும் இவர்கள் தமிழ் மொழிக்கு ஆதரவாகவிருப்பது புலனாம். எனினும் இவர்கள் தம் தாய்மொழியைப் புரப்பதில் இன்னம் மிகுதியான ஊக்கமெடுத்துக்கொள்ளக் கடமைப்பாடுடையவர் என்பதனைக் குறிப்பிட விரும்புகின்றோம். இனி, தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு வகுப்பினரும் தாம் இப்பொழுது பல பிரிவினராக இருப்பினும் தாமெல்லாம் தமிழ்த்தாயின் மக்களாகிய ஒரே யினத்தவரென்னும் உண்மையுணர்ந்து யாவரும் அன்பும் ஒற்றுமை யுணர்ச்சியும் உடையவராக எவரையும் சிறியரென்று இகழாதிருப்பராக, தம் பண்டைப் பெருமையை நினைவு கூர்ந்து, மீட்டும் அப்பெருமையை நிலைநிறுத்துதற் பொருட்டு ஒற்றுமையுடனும் ஊக்கத்துடனும் உழைப்பாராக, கருணையங் கடலாகிய இறைவன் இவர்கட்கு எல்லா அறிவாற்றலையும் தந்து இந்நாட்டினைப் பாதுகாப்பானாக, எங்கும் அவன் புகழே மிகுதல் வேண்டும். மன்னுயிரெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும்.

***

Series Navigation

நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார்

நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார்