களம் ஒண்ணு கதை பத்து – 9 இருள் மணக்கும் நிழல்

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

ம.காமுத்துரை


“எவனாச்சும் லவ்வர கூட்டிட்டு வீட்டுக்குப் போவானா… கொஞ்சம் கூட கூறுஇல்லாம பண்ணிட்டியேடா…”
பெருமாள்கோயில் வெளித்திண்ணையில் உட்கார்ந்து தொங்கவிட்ட கால்களை ஆட்டியபடி பேசினான் மகேந்திரன்.
கோயில்சுவரில் சாய்ந்தபடி நிலைத்த பார்வையாய் நிலம் பார்த்தபடி சிலையாய் உட்கார்ந்திருந்தான் மாரிச்சாமி.
நல்ல இருட்டு. நேரம் பத்துமணியைத் தாண்டி இருக்கும். கோயிலை ஒட்டி இருந்த வயல்வெளியில் சீமைப்புல் பாவி இருந்தார்கள். ஊரின் கடைகோடிப் பகுதியாதலால், ஊர்ச் சாக்கடை பூராமும் இறங்கி வயலில் பாய்ந்தது. நிலம் கருத்துப் போய்க் கிடந்தாலும் மகசூல் கொழித்தது. புல், அறுக்க அறுக்க மூணாம் நாளே சீண்டிய பாம்பாய் தலை உயர்த்தி வளர்ந்தது. புல்லின் தெற்கு குண்டலில் தென்னை மரங்கள் பேயாய் வானுயர்ந்து நின்றன. ஆகாசத்திலும் வெளிச்சமில்லை. ஜமுக்கி ஒட்டவைத்த பூனம்சேலையாய் மினுத்துக் கிடந்தது வானம்.
கோயிலைச்சுற்றியும் தென்னைமரங்கள் தான். கோயில் வாசலுக்கும், கொடிமர தூபிக்கும் இடைப்பட்ட பகுதி மட்டும் சாணிதெளித்து தண்தரையாய்க் கிடந்தது. கொடிமரத் திண்டு அகலமாய்க் கட்டியிருந்தபடியால் அதன்மீது யாரோ படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அனேகமாக ஊர்ச்சத்தம் அடங்கிவிட்டிருந்தது. ஒன்றிரண்டு பேர் வாயில் பீடிக்கங்கோடு கோயிலைத் தாண்டிய இருட்டில் – பாதையின் மருங்கில் மலங்கழிக்க வந்து போயினர்.
கோயில் உச்சியில் எரிந்த குண்டுபல்பைச் சுற்றி கொசுக்களின் கும்மாளம். போகிறபோக்கில் மாரிச்சாமியையும், மகேந்திரனையும் அவ்வப்போது தீண்டிவிட்டுச் சென்றன. கொசுத் தொல்லைக்காகவே வேஷ்டியை கணுக்கால்வரை இறக்கிவிட்டு இருந்தான் மகேந்திரன். கைகளிலும் முகத்திலும் வந்துநின்றதைத் தவிர்க்க முடியவில்லை. விரட்டித்தான் ஆக வேண்டி இருந்தது. மாரிச்சாமிக்கு அது ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை. அவனது கவனம் உடம்பிலிருந்து விலகி எங்கெங்கோ சுற்றிச்சுற்றி அலைந்து கொண்டிருந்தது.
“போலீஸ் ஸ்டேசனுக்கு போயிருந்தாக்கூட சரியாயிருந்துருக்கும். அவங்களே கூப்பிட்டு வச்சுப் பேசி சேத்து விட்டுப்பாங்க… இந்நேரம் பஸ்ட் நைட்டுல ஜாம் ஜாம்னு இருந்துக்கிட்டிருப்ப… லூஸ்தனமா அந்தப்பிள்ளய வீட்லயே விட்டுட்டியேடா… அசிங்கமில்லியா…”
மாரிச்சாமிக்கு தனது இயலாமையை வருகிற போகிறவனெல்லாம் இடித்து இடித்துக் காண்பிப்பது ரெம்பவும் இம்சையாய் இருந்தது. லவ் பண்ணும் போது ஆளாளுக்கு அய்டியாக் கொடுத்தவன்கள், தாலிகட்டிச் சேரும் நாளில் ஆளுக்கொரு வேலை என கம்பிநீட்டி விட்டான்கள். நம்பி வந்த பிள்ளையை நாளைக்கு வா என சொல்ல முடியாமல், திட்டப்படி தாலிகட்ட… அடுத்தகட்ட ஆலோசனை பிடிபடாமல் அங்குமிங்கும் அலைந்து கடைசியில் தன் வீட்டிற்கே போவதென முடிவு செய்தான். ஆனபடி ஆகட்டும் முட்டிமோதி பார்க்க வேண்டியதுதான், பொழுது இருட்டிக்கொண்டு வருகிறது. வெளியூர் போவதற்கோ, லாட்ஜ் எடுத்து தங்குவதற்கோ தோதான நண்பர்கள் கைவசம் இல்லை. ஓட்டையனும் போசும், பாவம். காலையிலிருந்து நாயாய் அலைகிறார்கள். அதற்கு மேலே அவர்களால் எதும் செய்யமுடியாது. ஆனால், அம்மா இம்புட்டு ஆடும் என நினைக்கவில்லை. அப்பா அரிவாளைத் தூக்கிக் கொண்டு வருகிறார். அதுக்கு தோதுவாய் அம்மா, “உள்ள நொழஞ்ச நிமுசத்துல நாண்டுகிட்டு செத்துப் போவேன்” – என்று ஒப்பாரியைத் துவக்கிவிட்டது. உடன்வந்த போசும், ஓட்டையனும் ஓடியவழி தெரியவில்லை. அதன்பிறகு தான் அந்தப்பிள்ளையை சமாதானம் செய்து “நைட் மட்டும் ஓவ் வீட்ல இரு… காலம்பற எதாச்சும் அய்டியா பண்ணி வெளியேறிடுவம்…’ – என்று அந்தப்பிள்ளையின் வீட்டுக்கு அனுப்பிவிட்டான். ரெம்ப கஷ்டமாய்த்தான் இருந்தது. அந்தப்பிள்ளை என்ன நினைச்சுக்குமோ… அவுகவீட்டில் பிரச்சனை இல்லாமல் இருந்தால் நல்லது. தாலியை ஜாக்கட்டுக்குள் மறைத்துக்கொள்ளச் சொல்லி இருந்தான். இப்ப, அவசரப்பட்டிருக்கக் கூடாது என்று தெளிவாகியது.
“லவ் பண்ணுனவெயெல்லாம் எவனாச்சும். தாலிகட்டி உள்ளூர்ல இருந்திருக்கானா… ஒனக்குத் தெரியாதா… நிய்யே எத்தனபேர அனுப்பிச்சு விட்ருக்க… தனக்குன்னு வாரப்ப புத்தி தடுமாறிடுச்சாக்கும்” தொடர்ந்து மகேந்திரன் திட்டியபடி இருந்தான்.
“புடுங்கி மாதிரி பேசாதடா… பூராப்பயலும் புடுங்கப் போயிருந்தீகளாக்கும்… காலைலருந்து எவனும் எங்கள அடிச்சுப் போட்டாக்கூட கேக்க நாதியில்லாம அலஞ்சு கெடக்கம்… வாங்கடி ஒங்களுக்கும் ஒரு நா வராமயா போகும்… வரும்… அப்ப…நாம் பேசிக்கிறேன்…” – உட்கார்ந்திருந்த கல் பலகையை ஓங்கிக் குத்தினான் மாரிச்சாமி. உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.
“லேய்… நா நேத்தே சொல்லிட்டே எனக்குத் தோது இல்லடா… ரெண்டுநாள் கழிச்சு வச்சுக்கலாம்னு… சின்னப்பயக பேச்சக் கேட்டு நீதானடா துடிச்ச…”
“இப்ப என்னா சொன்னேன்… செஞ்சதெல்லா தப்பு இல்ல மாரி… அந்தப்பிள்ளையைக் கூட்டிக்கிட்டு எங்கிட்டாச்சும் வெளியூர் போயிருக்க வேண்டிதானன்னு சொல்றேன்…” மறுபடி பேசி தன்னிலைவிளக்க பாடுபட்டான் மகேந்திரன்.
“எங்க போறது..?”
“இது கேள்வியா… எத்தன பேர அனுப்பிச்சு விட்ருக்க நீ கேக்கலாமா…”
“அப்ப இருந்த நெலம வேறடா… நா கரையில இருந்தே… கையப்பிடிச்சு கூப்பிட்டுப் போனே… இப்ப செகதீல கெடக்கே…”
மகேந்திரனுக்கு அவனது பேச்சு ரெம்பவும் பாவமாய்த்தான் இருந்தது. அவன் சொல்வது உண்மைதான். ஏகப்பட்ட காதல் ஜோடிகளை டக்டக்கென ரெடிபண்ணி, தோதுவான இடங்களுக்கு அனுப்பி வைத்து கொஞ்ச காலம் கழித்து, ஊரில் பிரச்சனைகள் சரியான பிறகு அவனேபோய் அழைத்துவந்து வீட்டில் சேர்த்து விட்டிருக்கிறான். இப்போது அவனுக்கென வந்த போது கை கொடுக்க யாருமில்லாமல் போய் விட்டது. யானைக்கும் அடிசறுக்கும்னு இதத்தான் சொல்லி இருப்பாங்களோ…
“வெளியூர் போறது கூட வேணாம்… லாட்ஜ் எடுத்து தங்குறம்னு வையி… காசூ… அவெவென் நாந்தர்ரே நீதர்ரேன்னு சொன்னவெம் பூராம் சாமன கையில பிடிச்சுகிட்டு நின்னுகிட்டீக… நா இளிச்சவாயனாயிட்டேன்… ம்…? பொறுங்கடி… ஒரொர்த்தனையும் நடுரோட்ல போட்டு வெட்டல… நா ஆம்பள இல்ல…” – மாரிச்சாமியின் உண்மையான கோபம் இப்போது வெளிப்பட்டது.
எப்பவுமே மாரிச்சாமி யாரிடமும் காசுக்காக கைகட்டி நிற்பது வழக்கமில்லை. தனது கையிலிருந்துதான் செலவழிப்பான். அதில் கணக்கு வழக்கும் பார்ப்பது கிடையாது. கையில் என்ன இருக்கிறதோ அதற்கான செலவை அவனே பார்த்துக் கொள்வான். காசுங்கறது கைமாறிப் போறதுக்குத்தான். பத்திரப்படுத்துனா அதுப்பேரு பணமில்ல என்று தத்துவமெல்லாம் சொல்லுவான். அதற்கேற்றாற் போல பணமும் அவனுக்கு வாய்க்கும். எந்த வேலையும் தெரியாதென கைவிரிக்க மாட்டான். பெயிண்டிங்கா… சமையலா, கிளீனிங்கா… தோட்டம் துரவு பாடுகளா, லோடு மாற்றணுமா… இப்போது ட்ரைவிங் கற்றுக் கொண்டு இருக்கிறான். ஒரு வாரத்தில் அதையும் ஆரம்பிப்பான்.
ஒரே வேலையில் நிலைத்துநின்று செய்யாதது அவனது பலகீனம். ஊரில் பேச்சுவாங்குவதற்கு தோதுவாகப் போனது. ‘பலவற்றப்பய…’ வீட்டிலும் சொல்லித் தவித்து விட்டார்கள். எந்தக் கடையில் சேர்த்துவிட்டாலும் ஒருமாத சம்பளம் கூட முழுசாய் வாங்கி வந்ததில்லை. வெறுத்துப் போய் கைகழுவி விட்டார்கள். ஒரு இடத்தில் கைகட்டி என்னால் நிற்க முடியாது என்பான். தான் நினைச்சதைச் செய்து வாழ்வதே சரியான வாழ்க்கை. அப்பாவுக்காக – அம்மாவுக்காக வாழ்றதெல்லாம் வேசம், அது நம்மால முடியாது.
அது இங்கே தான் – முக்கியமான இடத்தில், இன்னிக்கு – முறித்து விட்டது. தன்னிஷ்டப்படி தாலிகட்டினான். தாலிகட்டின கையோடு யாரையும் நம்பாமல் தனியாக வீடெடுத்து தங்கி இருக்க வேண்டும். அது ரெம்ப பிரச்சனையாகும். தேவையில்லாமல் வம்புகட்ட வேண்டி இருக்கும். கொறஞ்சது ஊரவிட்டாச்சும் வெளியூர் போயிருக்கணும். அதுக்காக பணத்தை முன்கூட்டியே சேகரிக்காமல் பிரண்ஸ்களை நம்பியது தப்பாகிப் போனது.
“சொன்னமாதிரி செய்ய முடிலப்பா தப்புத்தே… ஆனா நீ ஒங்கவீட்டுக்குப் போனதுக்குப் பதிலா, நாம பேசுனபடி வெளியூர் போயிருந்தேன்னு வையி… இன்னிக்கில்லாட்டி நாளக்கி காசோட வந்து நிக்க மாட்டமா…” – மகேந்திரன் குரல்தாழ பேசினான்.
“ம்… அசலூர்ல போயி அன்னக்காவடியா நில்லுடா மகனேங்கற…”
“சொல்றதுக்கெல்லா எகனமொகனயா பேசுனா என்னா சொல்றது…?”
“நீங்க ஒண்ணும் சொல்ல வேணமாம்… எஞ்சோலிக்கு மத்தவங்கள நம்புனது மகா மடத்தனம்… எம்புத்திக்கு நானே செருப்படி குடுக்கணும்…” – மகேந்திரனைப் பார்க்கப் பிடிக்காதவன் போல மறுபுறம் திரும்பிஉட்கார்ந்து கொண்டான் மாரிச்சாமி. பனியனுக்குள் கைவிட்டு சிகரட் பாக்கட் எடுத்து ஒரு சிகரட்டை மட்டும் உருவி, மீதியை பனியனுக்குள்ளேயே பதுக்கிக் கொண்டான். சட்டைப்பையில் பேண்ட் பாக்கட்டில் பணம் உட்பட எதையுமே வைத்துக் கொள்வதில்லை. வேஷ்டி கட்டினாலும், பேண்ட் மாட்டினாலும் கட்டாயமாய் உள் பனியன் போடாமலிருக்க மாட்டான். பனியனை ‘இன்’ செய்து இறுக்கமாய் வைத்திருக்கையில், வயிற்றிலும், இடுப்பு பகுதியிலும்தான் பணமோ, பண்டமோ பத்திரப் படுத்தப்பட்டிருக்கும். தீப்பெட்டி சேப்பில் இருக்காது. வெறும் காகிதங்கள், சில்லரைக்காசு மட்டுமே மேல் சேப்பில் இருக்கக்கூடும்.
அந்தப்பிள்ளைய பாக்காமலே இருந்திருக்கலாமென ஒரொரு சமயத்தில் தோன்றும். பாத்தது தப்பில்ல. ரெம்ப பேச்சுக் குடுத்துட்டம். ஜாலியா சைட் அடிச்சிட்டுப் போகாம பிரண்ஸ்கள்கிட்ட, “சாச்சுக் காமிக்கிறேன்னு” – சவால் விட்டது தன்னைச் சாச்சிடுச்சு…
பாவம் அது, வெகுளியான கழுத… எதச் சொன்னாலும் அப்பிடியான்னு ஆச்சரியமா பாக்கும் – கேக்கும். அதுக்காகவே புதுசுபுதுசா ஆச்சர்யத்த தேடித் தேடி சொல்ல வேண்டி இருந்துச்சு. தூங்குறப்ப எதாச்சும் ஒண்ணு தோணும். அத அப்பவே அந்தபிள்ள கிட்ட சொல்லணும் போல மனசு பறக்கும். காலம்பற வரைக்கும் ஒறக்கம் தொலஞ்சிரும். விடிஞ்சும் விடியாம அந்தக் கழுதயத் தேடி அலஞ்சி காலும், தலையும் கிறுகிறுத்துப் போகும். ஒரு நாளைக்கி ஏழெட்டுத் தரம் சீவி, பவுடர் போட்டு திரிஞ்சதுல… அம்பட்டன் கடைல இப்ப எவனும் பவுடர் டப்பா வெளிய வச்சிக்கிறதில்ல நம்மளமாதிரி ரெம்பப்பேர் திரிவாங்கெ போல…
“சல்லிக்கட்டு விடுறப்ப கோயில்மாட்டோட திமில புடுச்சு தொங்கிகிட்டே வர்றீங்களே… அந்த திமிலு என்னா அம்புட்டு ஸ்ட்ராங்காவா நிக்கிம் வழுக்கீறாது…?”
சம்பந்தமில்லாமல் எதோ ஒருநாள் கேள்வி கேட்டாள். யார் அப்படி கோயில்மாட்டுத் திமிலைப் பிடித்தபடி மாட்டை அணைந்தான் என தெரியவில்லை. ஒருவேளை டி.வி.யில் பார்த்திருக்கலாம். ஆனாலும் தான் கதாநாயகனாக இது நல்ல சந்தர்ப்பமில்லையா…
“வழுகாது… ஏன்னா அணையிறப்ப திமில மட்டும் பிடிக்க மாட்டம்ல… கழுத்து, கொம்பு எதாச்சும் எணச்சுப் பிடிப்பம்…” என்றவன், “திமிலு உச்சில பாத்திருக்கியா…? கரேல்னு இருக்கும் பிடிக்கிறப்ப கடிச்சு வச்சுருவம்… கடிச்சு கடிச்சு காய்ப்பேறிப் போச்சு…”
“கடிப்பீகளா… ஓடும் போதா… ஹா…” – அன்றைக்கு கண்களும் வாயோடு சேர்ந்து பிளந்தன. பார்க்க ரெம்ப அழகாய் இருந்தது. நல்லவேள… இப்ப ஒருதரம் கடிச்சுக் காமி எனக் கேட்கவில்லை.
பாவம் அந்தப்பிள்ளை வீட்டில் என்ன நடக்குதோ… அப்படி யோசிக்கும் போதுதான் உட்காரப் பிடிக்கவில்லை. ஓரெட்டு போய் பார்த்துவந்து விடுவமா… விருட்டென உடம்பு துள்ளி எழ எத்தனிக்கையில் மனசு அமைதிப்படுத்தியது.
சொந்த வீட்லயே அடிக்காத கொறயா அவமானப்படுத்தி அனுப்பிச்சு விட்டாங்கெ… அங்க தலநீட்டி… அங்கயும் அசிங்கப்பட்டா… அங்கனயே குத்திக்கிட்டு சாகறதா… எங்கியும் தடம்பாத்து கால வக்கெணும். கூட இருக்கவன வேவு பாத்து வாடான்னு பத்திவிட்டா…
யோசனை நன்றாய் இருந்தது. மறுபடி திரும்பி மகேந்திரன் பக்கம் உட்கார்ந்தான். அவனும் ஒரு பீடியை பத்த வைத்திருந்தான். கொசுத்தொல்லை ஜாஸ்தியாய் இருந்தது. இரவுச் சுவர்க்கோழிகளின் சத்தமும், சாக்கடைக்குள் கிடந்த தவளைகளின் ஆன்மக் குரலொலியும் காதை அடைத்தன. லேசாய் வீசிய காற்றில் வயலின் புதிய குளுமை உடம்பை சிலிர்க்கச் செய்தது.
“என்னாடா பங்காளி இப்படி கோச்சுக்கறே… சத்தியமா… எங்கம்மாணை, உன்னய வேறமாதிரி நெனைக்கலடா… காசு சேக்க லேட்டாயிடுச்சு அம்புட்டுத்தே… பிரன்ஸ் எல்லாம் ஒனக்கு பயந்துகிட்டு வராம இருக்காங்கெ… வந்தா அடிப்ப…”
“அடிக்கறதா… கொல்லுவேன்டீ… கொல்லுவேன். என்னிய விட்றா… பொம்பளப்பிள்ள… அதுவீடல என்னா நடக்குதோ தெரியலியே…” – தவித்தான்.
“பொம்பளப்பிள்ளதான… கமுக்கா வச்சுக்கிடும் ஒன்னிய மாதிரி ஆடுனாத்தே பெரச்சன…”
இருந்தாலும் மாரிச்சாமிக்கு மனசு ஆறவில்லை.
“இந்தாடா… ஆயிரத்திநூறு இருக்கு… அவசரத்துக்கு இதுதே சேந்திச்சு… காலம்பற கௌம்பீடுங்க… மேக்கொண்டு போன் பண்ணு… ஏற்பாடு பண்றம்…” – மகேந்திரன், மாரிச்சாமியின் கை தடவி பணத்தைக் கொடுத்தான்.
“இந்த எழவு சாயங்காலமே குடுத்திருந்தா இம்புட்டுத் தும்பமில்லயேடா…”
“விடு… இதும் ஒரு நல்லதுக்குத்தே…” என்றபோது விர்ரென இவர்களை நோக்கி போலீஸ் ஜீப் ஒன்று இரட்டை ஒளி வீச்சோடு வந்து கோயிலின் கொடிக் கம்பத்தருகே நின்று ஹெட்லைட் அணைத்தது.
“அவிங்கள கூப்புடுயா…”
பணத்தை சடாரென பனியனுக்குள் போட்டுக் கொண்டு இரண்டுபேரும் திண்ணையிலிருந்து எழுந்து நின்றனர்.
ஜீப்புக்குள்ளிருந்து ஏட்டையா இருவர் வந்து அழைத்தார்…
“சார்…” ஜீப்பின் முன்இருக்கையில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டரின் முன்னால் பவ்யமாய் நின்றனர்.
“இங்கென்னடா செய்றீங்க…”
“சும்மா பேசிட்டுருந்தம் சார்…”
“சும்மா பேசிட்டு இருந்தீகளா… மணி என்னா…?”
இரண்டு பேரிடமும் கடிகாரம் இல்லை…
“சும்மாதான் சார்…”
“ஏண்டா… ஊரே செத்துக் கெடக்கு ஒங்களுக்கு என்னாடா சும்மா… எவளையும் வரச் சொல்லீர்க்கீகளா…”
“இல்லீங்சார்…”
“கோயில்ல எறங்க பிளான் பண்ணீர்ப்பாங்க சார்…” பக்கத்தில் நின்ற ஏட்டு, எடுத்துக்கொடுத்தார்.
“அய்யய்யோ…” மகேந்திரன் அலறினான்.
இன்ஸ்பெக்டர் மௌனமாய் இருவரையும் பார்த்து விட்டு இறங்கினார்… இரண்டு பேருக்கும் வயிறு கலங்கியது…
“வீடு எங்கடா…” – இன்ஸ்பெக்டர்.
“இங்கதான் சார்… தெக்கு தெருவு…”
“நா வடக்குத் தெருவு சார்…”
“என்னாடா தெக்குத் தெருவு… வடக்குத் தெருவு…” கையை ஓங்கினார். ஏட்டையா மகேந்திரனின் காலில் லத்தியால் முட்டி உடைத்தார். “ஒறக்கம் வல்ல சார்…” – மகேந்திரன் என்ன பேசுகிறோமென அறியாமலே சொன்னான்.
“ஜீப்ல… ஏறுங்க… ஒறக்கம் வார எடமா எறக்கி விடுறம்…” – இன்ஸ்பெக்டர் சொன்னது ஏட்டையா இரண்டு பேரும் “ஏர்றா… ஏர்றா” என தள்ள ஆரம்பித்தனர்.
“இல்ல சார்… இல்ல சார்…” – என்று இருவரும் கை கூப்ப…
“ராஸ்கல்… மறுபடி வீதில பாத்தே… லாக்கப்புத்தே… ஓடுங்கடா… ஒறக்கம் வரலியாம்…” – இரண்டு பேருக்கும் தலா ஒரு அறை தந்துவிட்டு ஜீப் பின்னோக்கி நகர்ந்து மறுபடி ரோந்து போனது.
“நல்ல வேள… ரூவாயப் புடுங்காமப் போனாங்க…” பள்ளிவாசல் தெரு வழியாக இருவரும் நடந்து, கீரைக்கல் பஜார் வந்தடைந்தனர். தினசரி காய்கறி மார்க்கட் பகுதி அது ஜாமத்திலும் ஓரிரு கடைகள் உள்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வியாபாரம் இல்லாவிட்டாலும் காய்பிரிப்பு, புடைப்பு வேலைகள் குறைந்த சத்தத்தில் நடந்து கொண்டிருந்தன.
“இப்பென்னா செய்ய…” மகேந்திரன் கேட்டான். இன்னமும் குரல் நடுக்கம் மீந்திருந்தது.
“ரூவா பத்தாது… அத விடு இப்ப… நீ போயி அந்தப்பிள்ள வீட்ட நோட்டம் பாத்துட்டு மட்டும் வந்துடு. ஒரு வேள அந்தப் பிள்ளையப் பார்த்தா… கூப்பிட்டுக்கூட வந்திடு. இப்பிடியே தேனிக்குப் போயி இருக்க பஸ்சுல ஏறிடுவம்” – மாரிச்சாமி குரலை மிருதுவாக்கிக் சொன்னான்.
இருவரும் ஒரு ஆட்டுக்கறி கடையின் வெட்டுக்கட்டையில் வசதியாய் உட்கார்ந்து கொண்டார்கள்.
மகேந்திரன் உடனடியாய் மறுத்தான்.
“என்னிய ஸ்டேசனுக்கு அனுப்பிச்சிரணும்னு ஒரேமுடிவுல இருக்கபோல… நாய் சுத்துன மாதிரி ஜீப்புல இந்த சுத்து சுத்துறாங்க… இன்னொர்க்கா தெரு கடந்து போயி மாட்டணுங்றியா… காலம்பற பாத்துக்கலாம்…”
“யே… விடியமுன்ன கௌம்பணும்டா…”
“ஒண்ணும் பிரச்சனயில்ல… அஞ்சுமணிக்கி நா அந்தப் பிள்ளையோட வந்திர்ரே… சரியா…”
“எங்கிட்டோ சமாளி… நா. வீட்ல போயி ஆஜராகணும்… கரெக்டா சொன்னபடி வருவேன்…” அப்பவே வீட்டிற்குக் கிளம்ப தயாரானான்.
“வீட்டுக்கா… லேய்… நீ பாட்டுக்கு ஒறங்கிட்டீன்னா…” முதல் முதலாய் பயம் காட்டினான் மாரிச்சாமி.
“அலாரம் வச்சிருவண்டா… நீ மட்டும் தயாரா இரு…”
“ஆமாடா மாப்ள… நா எங்கயும் போகல… இதே கறிக்கடைலதே இருப்பே… அஞ்சுமணி – கூடுனா அஞ்சர… இங்க வரச்சொல்லீரு… முன்னும் பின்னுமா நடந்து நாங்க கௌம்பீர்றம்… மறந்துடாத…”
ஆறரைக்கு மேல் ஆகியும் மகேந்திரன் வரவில்லை. பொழுது ‘பொல்’லென விடிந்து, ஊர் முழித்து, பஜார் இயங்க ஆரம்பித்து விட்டது. அஞ்சரைக்கே கறிக்கடையில் ஆட்டுக்குட்டி ஒன்றைக் கிடத்தி கழுத்தறுத்து ரத்தம் பிடித்து விற்பனை துவங்கிவிட்டது.
மாரிச்சாமி பஜாரையே பதினைந்து தரம் சுற்றிவந்து விட்டான். பால்காரன் முதற்கொண்டு, பன் ரொட்டிக்காரன் வரை வீதியில் இறங்கி விட்டார்கள்.
மகேந்திரன் வரக் காணேம்.
நேரடியாய் தானே அந்தப் பிள்ளையின் வீட்டுக்குச் சென்றுவிடலாமா என யோசித்தான். அதற்கு முன்னால் இந்த நாய்களை (மகேந்திரன் உள்ளிட்ட பிரன்ஸ்) குத்திச் சாய்த்து விட்டால் நல்லது எனத் தோன்றியது.
முடிவாக மகேந்திரனின் வீட்டுக்குப் போய்ப் பார்ப்பது, இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பானானால் உறக்கத்திலேயே குரவளையில் மிதித்துக் கொன்றுவிட வேண்டும் என்ற முடிவோடு, கீரைக்கல் பஜாரை விட்டு விலகியபோது…
மகேந்திரனும், ஓட்டையனும், போசுமாய் நால்வர் வேகுவேகென வந்தனர்.
அந்தப் பிள்ளையைக் காணம்… வேறுபாதையில் வரச்சொல்லி விட்டான்களா… இம்புட்டு பகலில் பஸ் ஏறினால்… சரியா… எப்படி…?
யோசனை பலவாய் ஓடிக் கொண்டிருக்கையில் ஓட்டையன் முதலில் வந்து மாரிச்சாமியின் கைப்பிடித்தான்…
“மாப்ள… என்னா பெரச்சனன்னு தெரில… அந்தப் பிள்ள மருந்தக்கலக்கி குடிச்சிருச்சாம்… வீட்ல… ஒரே கும்மர்ச்சமா இருக்கு…”
பதட்டமும் நடுக்கமுமாய்ச் சொல்ல மற்ற மூவரும் சாட்சியாய் நின்றனர்.
(வெளியாகவிருக்கிற ம.காமுத்துரையின் ‘முள்மழை‘ சிறுகதைத் தொகுதியிலிருந்து)
________________
makamuthurai@gmail.com

Series Navigation

ம.காமுத்துரை

ம.காமுத்துரை