கலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘)

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

பாவண்ணன்


ஒரு தொன்மம் எப்படி உருவாகிறது என்றும் அத்தொன்மத்தை வரலாறு என்று எடுத்துக் கொள்ளலாமா என்றும் கேட்டார் நண்பர். நான் அவருடைய குடும்ப வரலாற்றில் எவ்வளவு தொலைவு பின்னோக்கிச் செல்ல முடியும் என்று வினவினேன். தன் தாத்தா காலத்தைத் தாண்டித் தன்னால் செல்ல இயலாது என்றும் ஒருவேளை தன் தந்தையோ தாயோ மேலும் இரு தாத்தாமார்கள் காலம் வரை செல்ல முடியும் என்று சொன்னார். தாத்தாமார்கள் நம் குடும்பத்தின் ஆதிவேர்கள். நம் சொந்த ஆதிவேரைத் தொட்டுச் செல்லும் நம் பயணம் மிகக்குறைவான தொலைவுக்கு உட்பட்டதாகவே இருப்பது விந்தைதான். அதில் தவறெதுவும் இல்லை. நம் நினைவில் உறைந்திருக்கும் தொலைவு அவ்வளவுதான்.

ஏதோ ஒரு குடும்பத்தில் ஏதோ ஒரு முப்பாட்டனுடைய வாழ்க்கை ஏதோ ஒரு காரணத்துக்காக மக்கள் மனத்தில் உறைந்து விடுகிறது. தலைமுறை தலைமுறையாக ஒரு சமூகத்தில் உள்ள மக்களின் மனத்தில் நீங்காத இடம் பெற்று விடுகிறது. அப்பாத்திரத்தைப் பற்றிப் பல புனைவுகளும் பாடல்களும் மக்களிடையே எழுகின்றன. மறக்கவியலாத பாத்திரங்கள் சமூகத்தின் ஆழ்மனத்தில் அழுத்தமாக இடம்பெற்றுவிடுகிறது. சமூகத்துக்காக வாழ்வையோ வசதிகளையோ உயிரையோ தியாகம் செய்தவர்களை வாழும் சமூகம் தொன்மப் பாத்திரங்களாக்கி வளரும் சமூகத்துக்கு அறிமுகம் செய்தபடி இருக்கிறது.

ஒரு தொன்மப் பாத்திரத்தின் மீது அதீதம் படிந்திருக்கலாம். புனைவு கலந்திருக்கலாம். அவையல்ல முக்கியம். காலத்தைத் தாண்டிப் பறந்து கொண்டிருக்க முளைத்த சிறகுகள் அவை. அடிப்படையில் அவர்களுடைய தியாகமும் அர்ப்பணிப்பும் மிகமுக்கியமானவை. எல்லாத் தொன்மக் கதைகளிலும் நம் கவனம் குவிய வேண்டிய புள்ளி அந்த மையக்கரு மட்டுமே.

சிறிய எடுத்துக்காட்டாக கடந்த தலைமுறையைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். கதையைச் சொன்னேன். பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவது என்றாலும் ஆயிரம்முறை யோசிக்கிற தலைமுறையில் இருப்பவர்கள் நாம். இந்நிலையில் சம்பாதித்ததில் பெரும்பகுதியை ஆதரவற்றவர்களுக்கு உதவுவதில் செலவிட்டு மகிழ்ந்த அவருடைய உதார குணத்தால் அவரைச் சுற்றி எழுந்த புனைவுகளை யோசித்துப் பார்க்குமாறு சொன்னேன். நம்மிடையே வாழ்ந்து மறைந்த மனிதர் அவர். இன்று அவரைச் சுற்றிப் பின்னப்பட்ட புனைவுகள் காலப்போக்கில் கூடவோ குறையவோ செய்யலாம். ஆனால் அள்ளிக்கொடுத்தவர் என்கிற குணத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அத்தொன்மம் சமூகமனத்தில் உறைந்திருக்கும். தொன்மத்தை வரலாறாக எடுத்துக் கொள்ள இயலாது. அது வரலாற்றின் ஒரு துளி. அவ்வளவுதான்.

‘தொன்மத்தை நம்புவது மூட நம்பிக்கையாகாதா ? ‘ என்று சற்றே தயக்கத்துடன் கேட்டார் நண்பர். ‘அது அவரவர்கள் மனவார்ப்பைப் பொறுத்தது ‘ என்று சொல்லி விட்டு நிறுத்திக்கொண்டேன். தொன்மக்கதைகள் அறிவால் உரசிப் பார்க்கத் தக்கதல்ல. இதயத்தால் உணரத் தக்கவை.

நம்பலாமா கூடாதா என்கிற கேள்வி பலரிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றது. அவர்களை எந்தப் பதிலாலும் அமைதிப்படுத்தி விட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட தருணங்களில் அவர்களுக்கு எப்போதும் ஒரு கதையைச் சொல்லி வந்திருக்கிறேன். அது ஒரு பஞ்சாப் கதை. குருநானக் தொடர்பானது. கர்த்தார்சிங் துக்கல் என்னும் எழுத்தாளரின் கதை. இக்கதையில் ஒரு தாய் கதை கேட்கும் தன் குழந்தைகளுக்கு குருநானக் தொடர்பான அத்தொன்மக்கதையைச் சொல்கிறார். உண்மையிலேயே அது பெரும் விந்தைச்செயல்.

குருநானக்கும் மர்தானாவும் அப்தால் மலையில் பயணம் செய்கிறார்கள். மர்தானாவுக்கு கடும் நாவறட்சி ஏற்படுகிறது. காட்டைத் தாண்டி பக்கத்திலிருக்கும் கிராமத்துக்குச் சென்று விட்டால் பருகத் தண்ணீர் கிடைக்கும் என்று அமைதிப்படுத்தி மர்தானாவை அழைத்துச் செல்கிறார் நானக்பாபா. மர்தானாவால் தாகத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சிறிது நேரம் தியானத்தில் ஆழந்த குருநானக் அந்த மலையில் உச்சியில் ஒரு குடிசை இருப்பதாகவும் அங்கே துறவியொருவர் இருப்பதாகவும் அவருடைய கிணற்றில் மட்டுமே நீர் இருப்பதாகவும் சொல்கிறார். கடுமையான தாகத்தால் தவித்த மர்தானா உடனே அந்த இடத்துக்கு ஓடுகிறான். நானக் சொன்னபடியே அங்கே துறவியொருவர் இருந்ததைக் கண்டு அவன் திருப்தியுற்றான். அவரை வணங்கித் தண்ணீர் வேண்டினான். துறவி கிணற்றின் பக்கம் ஜாடை காட்டினார். பிறகு ஏதோ ஒரு நினைவு உந்த ‘நீ எங்கிருந்து வருகிறாய் ? ‘ என்று கேட்கிறார். உடனே அவன் தான் நானக் பாபாவின் தோழன் என்றும் இருவரும் சேர்ந்து மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த போது நாவறட்சி தாளாமல் தவித்ததைக் கண்டு நானக்பாபாவே அந்த இடத்துக்குச் செலுத்தியதாகவும் சொல்கிறான். நானக் பாபாவின் பெயரைக் கேட்டதும் துறவிக்குப் பெருத்த கோபம் வந்துவிடுகிறது. உடனே மர்தானாவை அந்த இடத்திலிருந்து வெளியேற்றி விடுகிறார்.

களைத்துப் போய் திரும்பி வந்து முறையிடும் மர்தானாவிடம் மீண்டும் அந்தத் துறவியிடமே சென்று வணக்கத்துடன் வேண்டிக் கேட்டுக் கொள்ளுமாறு சொல்கிறார். மனத்துக்குள் பொங்கிப் பொருமிக்கொண்டு மறுபடியும் துறவியிடம் செல்கிறான் மர்தானா. ஒரு நாத்திகனுடைய தோழனுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று துறவி கண்டிப்பாக மறுத்து வெளியேற்றி விடுகிறார். களைத்துத் திரும்பும் தோழனை இன்னொரு முறையும் துறவியிடம் சென்று முயற்சி செய்யுமாறு அனுப்புகிறார் நானக் பாபா. துறவியோ கேலியும் குத்தலுமாகப் பேசித் திருப்பி அனுப்பி விடுகிறார்.

சோர்வோடு திரும்பி வரும் மர்தானாவுக்கு ஆறுதல் சொல்லும் நானக் அருகில் உள்ள கல்லைத் துாக்கும்படி சொல்கிறார். மர்தானா வெகு பிரயாசையோடு கல்லைத் துாக்குகிறான். கீழே இருந்து நீர் புனலாக ஓடுகிறது. இதெ நேரத்தில் மலைஉச்சியில் துறவிக்கு நீர் தேவைப்படுகிறது. கிணற்றுக்குச் சென்று பார்க்கும் போது ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. மலைக்குக் கீழே தண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தோடுவதையும் நானக்பாபாவும் மர்தானாவும் கருவேல மரத்தடியில் அமர்ந்திருப்பதையும் பார்க்கிறார் கிழவர். கோபம் தலைக்கேற ஒரு பாறையைப் பலம் கொண்ட மட்டும் உருட்டிக் கீழே தள்ளி விடுகிறார். மலையிலிருந்து உருண்டு வந்த கல் தம் தலைக்கு நேரே வரும்போது குரு நானக் கையை நீட்டித் தம் உள்ளங்கையினால் அதைத் தடுத்து விடுகிறார். கதை அத்துடன் முடிந்து விடுகிறது. அதுவரை கதையைக் கேட்டுக் கொண்டிருந்த குழந்தை ‘கையால் பாறையை நிறுத்த முடியுமா ? ‘ என்று கேட்டு கதையை நம்ப மறுக்கிறது.

சில நாட்களுக்குப் பிறகு அக்குடும்பம் ஏதோ ஒரு விசேஷத்தை ஒட்டி பக்கத்தில் இருந்த ஊருக்குச் செல்கிறது. அங்கே அம்மாவின் தோழி தன் கதையைச் சொல்கிறார். சுதந்தரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் கைது செய்யப்பட்ட வீரர்களை ஏற்றிக் கொண்டு ஒரு நகரத்தின் சிறைச்சாலையை நோக்கிச் செல்கிறது ஒரு புகைவண்டி. கைதிகளுக்கோ கடும்பசியும் தாகமும். ஆனால் வண்டியை எங்குமே நிறுத்தக் கூடாது என்பது அரசு உத்தரவு. மக்கள் கோபத்தினால் கொதித்து எழுகிறார்கள். நானக் பாபாவல் மர்தானாவின் தாகம் தணிக்கப்பட்ட புனித இடத்தின் வழியாகச் செல்லும் கைதிகள் பசியோடும் தாகத்தோடும் செல்லக் கூடாது என்பதால் வண்டியை நிறுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டருக்கு மனுக்கொடுக்கிறார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை. உடனே அந்த வண்டியை எப்பாடுபட்டாவது நிறுத்தியே தீருவது என்று முடிவெடுக்கிறார்கள் ஊர்மக்கள். உடனே அவள் கணவர் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து விடுகிறார். அவரைத் தொடர்ந்து பல தொண்டர்களும் படுத்து விடுகிறார்கள். சுதந்தரத் தியாகிகளுக்குப் புசிக்க உணவு தந்தே தீருவது என்பதில் அவர்கள் காட்டிய உறுதி மகத்தானது. ஓடிவந்த ரயில் ஒருசிலர் மீது ஏறித் துண்டுதுண்டாக்கினாலும் நின்று விடுகிறது. கதை கேட்கிற பிள்ளைகளின் கண்கள் குளமாகின்றன. அதே சமயத்தில் சாத்தியமில்லாத செயல்கூட மனப்பூர்வமான அர்ப்பணிப்பு உணர்வாலும் தியாகத்தாலும் சாத்தியமாகும் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு தொன்மக்கதையும் சமகால வரலாற்றுச் சம்பவமும் அருகருகே இணைத்து வைக்கப் படுவதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மையத்தை நோக்கி வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. எல்லாத் தொன்மக் கதைகளிலும் நம் கவனம் குவிய வேண்டிய புள்ளி அந்த மையக்கரு மட்டுமே.

*

பஞ்சாபிச் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்ட மூத்த படைப்பாளிகளுள் ஒருவர் கர்த்தார்சிங் துக்கல். கவிஞராகவும் விமர்சகராகவும் செயல்பட்டவரெனினும் மிகச்சிறந்த சிறுகதையாசிரியராகவே மக்களின் மனத்தில் பதிந்திருப்பவர். ‘விந்தைச் செயல் ‘ பஞ்சாபி மொழியின் மிகச்சிறந்த கதைகள் சிலவற்றில் ஒன்றாகும். பஞ்சாபிப் புராணத்தையும் வரலாற்றுச் சம்பவத்தையும் கச்சிதமாக இணைத்துக்காட்டி மனமொப்பும்படி செய்திருக்கிறார். டாக்டர் ஹர்பஜன்சிங் என்பவரால் தொகுக்கப்பட்டு ரா.வீழிநாதன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்டு வழியாக 1973 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பஞ்சாபிக் கதைகள் ‘ என்னும் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்