கற்பனையின் தளம் அரவிந்தனின் குழிவண்டுகளின் அரண்மனை

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

பாவண்ணன்


இயற்கைக்காட்சிகளையும் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுகிற சம்பவங்களையும் அ•றிணைப்பொருட்களையும் உயிரினங்களையும் ஒரு குழந்தையின் பார்வையோடும் மனத்தோடும் பார்த்தால் என்ன தோன்றுமோ, அவற்றை கவிதைகளாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் அரவிந்தன். அதற்குத் தேவையான கற்பனை அவருக்கு அழகாக வாய்த்திருக்கிறது. கற்பனைவளம் மிகுந்த விவரிப்பை ஒரு சொல்முறையாக பல கவிதைகளில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறார் அரவிந்தன். ஒரு குழந்தையின் பார்வையில்மட்டுமே வண்டுகள் துளைத்த குழிகள் அரண்மனைகளாகக் காட்சியளிக்கும். தரையில் படர்ந்த சிறுநீர்த்திட்டு குளமாகவும் நதியாகவும் தோற்றமளிக்கும். அப்படிப்பட்ட கவிதைகளைக் கொண்டதாகமட்டுமே இத்தொகுப்பை உருவாக்கி இருக்கலாம். அரவிந்தன் அப்படிச் செய்யவில்லை. பிற்பகுதியில் வேறு விதமாக எழுதிப் பார்க்கப்பட்ட கவிதைகளையும் இணைத்திருக்கிறார். வாசிக்கும் போக்கில் இது சற்றே தடங்கலை ஏற்படுத்துகிறது.

“கோடில்லாத நோட்டின் கோணல் எழுத்துகள்” இந்தத் தொகுதியின் நல்ல கவிதைகளில் ஒன்று. நாலுவரி நோட்டும் இரண்டுவரி நோட்டும் வெள்ளைத்தாள் நோட்டும் தன்முன்னால் எழுத உட்கார்ந்திருக்கும் பிள்ளைகளிடம் உரையாடும் சொற்களே இக்கவிதையின் பாடுபொருள். எழுதுவதை நாலுசக்கரவண்டி ஓட்டும் பயிற்சியாகவும் இரு கோடுகளிடையே புவஈர்ப்பு விசைக்குப் பொருத்தமாக மெதுவாக நடைபயின்று கடக்கும் பயிற்சியாகவும் மண்ணை உழுதெழுதும் மண்புழுக்களின் பயணமாகவும் சொல்லி அழைக்கிறது நோட்டுகளின் குரல்களில் ஒலிக்கும் தாய்மை மறக்கமுடியாத ஒன்று. குழந்தைமைக்கே உரிய குறும்புவிளையாட்டோடு தொடங்குகிற நிழல்மின்சாரம் கவிதை ஆழ்ந்த துக்கத்தில் முற்றுப்பெறுகிறது. தரையில் நீண்டிருக்கிற நாலுமின்கம்பிகளின் நிழல்களைக் கண்டு உற்சாகம் கொள்கிறான் மிதிவண்டி ஓட்டிவந்த ஒரு சிறுவன். நிழல்கோடுகளின் இடைப்பட்ட வெயிலை நிழலின் மதிலாக நினைத்து அதன்மேல் சக்கரத்தை ஒடித்து ஒடித்து வளைந்து வண்டியை மிதித்துக்கொண்டு செல்கிறான். எதிர்பாராத நொடியில் பின்னால் வந்த மகிழுந்து அவன்மீது மோதிச் சாய்த்துவிட்டுச் சென்றுவிடுகிறது. அப்படிச் சொல்வது அதுவரை சிறுவன் கடைபிடித்துவந்த கற்பனையின் ஓட்டத்துக்குப் பொருத்தமாக அமையாது என்பதால், அவனுக்கு நேர்ந்த மரணத்தை அவன் கற்பனைக்கு உகந்ததாக மாற்றியெழுதுகிறார் கவிஞர். நிழல்கம்பிகளில் பாய்ந்த மின்சாரத் தாக்குதலால் விளைந்ததென. ஒன்று மரணத்துக்கு முன்பாக சிறுவன் மனத்திலிருந்த கற்பனை. இன்னொன்று மரணத்துக்குப் பிறகு கவிஞர் இட்டு நிரப்புகிற கற்பனை.

“பூசணித்தாதி” மனம் முறுவலிக்க படிக்கத்தக்க நல்ல கவிதை. மழைவிட்ட நேரம். காட்டுப்பகுதியின் ஓரமாக ஒரு சிறுவன் நடந்துபோகிறான். பச்சை மிளார்களிடையே ஒரு பூசணிக்கொடி படர்ந்திருப்பதைப் பார்க்கிறான். அதன் கொடிகளிடையே காய்த்திருக்கும் பூசணியை கண்விரிய ஆச்சரியத்தோடு பார்க்கிறான். ஒரு குழந்தையை ஈன்றெடுக்க உதவுகிற தாதியைப்போல, கொடியின் பிடியிலிருந்து மெல்லமெல்ல கவனத்தோடு பூசணியை விடுவித்துப் பிரித்தெடுக்கிறான். பிசுபிசுப்பான காயை மார்போடு சேர்த்தணைத்துக்கொள்கிற போது ஈரத்தலையை மார்போடு வாரியெடுத்து அணைத்துக்கொள்கிற தாதியாக நிற்கிறான். பிறகு மெதுவாக வீட்டுக்கு வந்து ஒரு குழந்தையை நீட்டுவதுபோல பூசணிக்காயை தன் தாயிடம் நீட்டுகிறான். அதுவரை தாதியாக இருந்தவன், ஒரே கணத்தில் ஒரு தந்தையாக நிற்கிறான். வேடிக்கையாக நடக்கிற ஒரு சிறுவன் ஒரு கணத்தில் தாதியாகவும் மறுகணத்தில் ஒரு தந்தையாகவும் உருத்தோற்றம் காட்டி மறைகிற தருணம் கவிதையில் மிக வசீகரமான முறையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

அழகான கற்பனைநயம் பொருந்திய கவிதை “மரம் ஈனும் குழந்தை”. ஒரு மரத்தடியின் நிழற்காட்சியை கற்பனைக்கண்ணாடியின் வழியாகப் பார்க்கும்போது தெரியும் தோற்றத்தை வசீகரத்துடன் சித்தரிக்கிறது கவிதை. வெயிலோடு கலந்து மரம் ஈன்ற குழந்தையாகக் கிடக்கிறது நிழல். மிதிபட்டு அழுகிற குழந்தையைத் தூக்கி இப்படியும் அப்படியுமாக அசைத்துத் தாலாட்டுகிறது காற்று. ஒன்றிணைந்து ஒளிரும் கற்பனை கவிதைக்கு அளிக்கும் இயற்கையான அழகு மொழிக்கு வலிமை சேர்க்கிறது.

இப்படி குழந்தைமையின் கண்களால் கற்பனைநயம் சுடரும் கவிதைகளால் வாசகமனம் தயாரிக்கப்பட்ட நிலையில் ஸ்தனங்கள், புணர் போன்ற கவிதைகளைப் எதிர்கொள்வது ஒரு தடையாக இருக்கிறது. இக்கவிதைகளிலும் கற்பனை இல்லாமில்லை. ஆனால் குழந்தைமையின் இடத்தில் காமம் வீற்றிருக்கிறது. அரவிந்தன் இந்தக் கவிதைகளை அடுத்த தொகுப்புக்கு ஒதுக்கிவைத்திருக்கலாம்.

( குழிவண்டுகளின் அரண்மனை . கவிதைகள். அரவிந்தன், அருந்தகை, இ-220, 12வது தெரு, பெரியார் நகர். சென்னை-82. விலை. ரூ 40)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்