கற்கள்

This entry is part [part not set] of 8 in the series 20000221_Issue

விழி . பா. இதய வேந்தன்


அவள் காய்ந்த விறகுக் குச்சி போல இருந்தாள். தடுக்கி விழுந்தால் விழுந்து நொறுங்கி விடுவது போலத் தோற்றம். மேனி வறண்டு போயிருந்தது. செதில் செதில்களாய்ச் சுருக்கம். குட்டையான மயிரை வாரி சுருட்டியிருந்தாள். அவள் செய்யும் வேலையில் படு நிதானம் தெரிந்தது. தனது உடல் இயலாமையையும் வெளிப்படுத்த முடியாமல் அவள் முக்கி முனகி செய்து கொண்டிருந்தாள்.

வாத்தியார் கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு கட்டிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். கட்டிடம் மேலே ஒட்டும் அளவிற்கு வளர்ந்து விட்டது. ஏராளமான பணத்தை கற்களும் சிமெண்டும் தின்று முடித்தது போக கூலி வேறு ஆளை விழுங்கிவிடும் அளவிற்கு ஆகி விட்டது.

வாத்தியாருக்கு ஏன் இந்தக் காரியத்தில் அவசரப் பட்டு இறங்கினோம் என்ற எரிச்சல் வந்து விட்டது. சதா கடைக்கால் போடும் போதிலிருந்தே பிரசினை. கல்லு வாங்கணும், மண்ணு வாங்கணும், ஜல்லி வாங்கணும், வண்டிப் புடிக்கணும், சிமெண்ட் வாங்கணும், ஆளப் புடிக்கணும், இப்படி ஒரு பக்கம்.

மறு பக்கம் அரசாங்க லோனப் பாக்கணும், வீட்டப் பாக்கணும், கடன் வாங்கணும் இப்படித் தான் அலைச்சல். பள்ளிக்கூடம் போனோம் பாடம் நடத்தினோம், மனைவி மக்களைப் பார்த்தோம் என்ற நிலை மாறி, ஒரே அல்லல் மயமாய் ஆகிப் போனது. படுக்கும் போதும் எழும் போதும் நினைவுகள் மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தன.

அவர் கையில் சிறு பையை சுமந்த படி கட்டிடத்தைச் சுற்றி வந்தார். கட்டிடம் கோடிட்ட நோட்டு போல வரி வரியாய் வரி பிசகாமல் இருந்தது. இடையிடையே கழிகள் கூட்டலும் கழித்தலுமாய் நீட்டிக் கொண்டிருந்தன.

‘தேம்மா, நானும் தான் பாக்குறேன், முடியலைன்னா ஏன் வேலைக்கு வர்ற ‘

‘எங்க சாமி வொடம்பு முடியல ‘

‘ஒடம்பு முடிலைன்னா ஏன் வரணும்றேன் ‘

‘வேலைக்குப் போனாதான் சாமி சோறு ‘

அவள் தலை குனிந்து நின்றாள்.

‘நானும் பாக்கறேன்; காலைலேர்ந்து ஊத்துன ஊத்துன இன்னும் செவுரு நனைஞ்ச பாடில்ல. ‘

‘இல்லீங்க கட்டடத்த சுத்தி இப்ப மூணாம்மொற ஊத்துறேன் ‘

‘ஆமாம் நான் பாக்கல போலிருக்கு ‘

‘இல்ல சாமி ‘

‘என்ன இல்ல சாமி, நொள்ல சாமி, நான் இங்க இருக்கிற வரையில தான், இப்படி நவுந்தா ஒக்காந்திட வேண்டியது தான் ‘

இல்ல சாமி, இந்த சுண்ணாம்புப் பாறையில கைபம்பு போட்டிருக்கீங்களே, தண்ணி அடிச்சா எகிருது, கை ஒதறது, நெஞ்சு விறிஞ்சு போவுது ‘

‘நான் வாயவயித்த கட்டி கட்டிடம் கட்டுறேன், என் வயிறு எரியுதே. இந்த வேதாந்தம்லாம் வாணாம். நீநாலைலேர்ந்து வராத, நின்னுக்கோ ‘

‘சாமி அப்படி சொல்லாதீங்க, நாளைக்கு வொடம்பு சரியாயிடும், நல்லா தண்ணி செமப்பன், மண்ணு செமப்பன், ஜல்லி செமப்பன், எது வேணா செய்யிறேன். ‘

‘சுத்தப் படாது, நான் மேஸ்திரி கிட்ட சொல்றேன். ‘

‘இங்க வா மேஸ்திரி ‘

அவன் உருண்டு திரண்டு நடையைத்துரிதப் படுத்தியபடி நெருங்கினான்.

‘என்னா சார் கூப்டிங்களா ? ‘

‘ஆமாம், நானும் ரெணடு நாளா பாக்குறேன். இந்தக் கெழவி மசமசன்னு வேல செய்யிது; நிறுத்திட்டு வேற ஆள கூப்டா ‘

‘சார் அவுங்க நல்லாதான் செய்வாங்க. ஏதோ முடியல போலிருக்கு, வயசாவுதில்ல. ‘

‘அதுவா முக்கியம், எனக்கு வேல ஆவவாணாம், காலைலேர்ந்து தண்ணி ஊத்தி கட்டிடமே நனையில. அப்புறம் மண்ணே வாரி கட்டிடத்துக்குள்ள கொட்ட சொன்னேன். ரவ கூட தொடல, இப்படியிருந்தா எப்பிடி. ‘

மேஸ்திரி குனிந்து கண்களை உருட்டினான். கிழவி பக்கம் திரும்பினான். அவள் ஒடுங்கி குறுகி நின்றிருந்தாள். முகத்தில் ஏராளமான சுருக்கமும் கேள்விக்குறிகளும் தென்பட்டது. கருணைகலந்த பார்வையோடு நிமிர்ந்தாள்.

‘சாமி நாளைக்கு சீக்கிரமே வந்து வாரி கொட்டிடறேன் சாமி. ‘

‘என்னத்த நானும் ரெண்டு நாளா சொல்றன். தண்ணி ஊத்தியே கச நிக்காம வாங்கிட்டுப் போறா. ‘

‘சார் கோச்சுக்காதீங்க சார். நான் சின்ன வயசிலேர்ந்து பாக்குறேன். கட்டிட வேல தான் செய்யிறாங்க. நல்லா கல்லு செமப்பாங்க. கீழே இருந்து கல்ல மேல விட்டு கடாசினா கல்லு கடஹ்ம்பமாகும் சார். இவுங்க பாத்து வளர்ந்தவன் நான். வைரம் பாய்ஞ்ச வொடம்பு. சம்பாதிச்சு ஒரே பையனை கட்டிக் கொடுத்தாங்க. அவன் பொண்டாட்டி பேச்சு கேட்டு போனதோட போச்சு. கவனிப்பில்லை. அது அப்படியே நிராதரவா இடிஞ்சு ஒக்காந்திருச்சு. இல்லேன்னா வேலைல என்னையே தூக்கி சாப்டிடும் சார். ‘

‘நல்லா வெளக்கம் சொன்ன போ, நான் எவ்ளோ லோல்பட்டு லொங்கழிஞ்சு கெடக்கறேன்னு உனுக்குத் தெரியுமா; ஓடியாடி பணம் பொரட்டுனா கைய்யில ஒரு நிம்சம் தங்க மட்டேங்குஹ்உ, கறஞ்சு போவுது. ‘

‘சார் நீங்க பரவாயில்ல, பணம் கறஞ்சாலும் வெல வாசி ஏத்தத்துல இப்பவே எல்லாம் சொத்தாயிடுது; எங்கள சொல்லுங்க; கூலி வாங்குனா தான் எல்லாம். ‘

‘ஆமாம் இந்த சொத்து சேக்கதான் இந்த பாடு. ச்சே எங்க போனாலும் ஏமாத்து வேல தான். சரி இந்தா ரூபா. நாளைக்கு சொன்னமாதிரி வந்து காலைலேயே மண்ண வாரி கொட்டு; அப்புறம் தண்ணி அடிக்கலாம்.. ‘

அவள் இருபது ரூபாயை உள்ளங்கையில் அழுத்திப் பிடித்த படி நகர்ந்தாள். மேஸ்திரி மறு நாள் வேலை பற்றிப் பேசி விட்டுக் கிளம்பினான்.

அடுத்த நாள் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தார்கள்.

‘என்ன மேஸ்திரி ‘சாலா மோட்டு ‘ ஆளு எல்லாம் வந்தாச்சு; நீ வேற பெரிசா வக்காலத்து வாங்கினியே இப்ப பாத்தியா ‘

‘சார் அதுக்கு காய்ச்சல் அதிகமாப் போயிடுச்சு. வரகுல்ல பாத்தன். காண்ணு நெலச்சிருக்கு. எனக்கு ஒண்ணூம் புரியல. அக்கம் பக்கத்து ஆளு பாத்து சொல்லிட்டு வந்தேன். டவுனுக்குப் போய்ய் டாக்டரு கிட்ட காட்டிட்டுஒரு மணி நேரத்தில வந்துடறேன் சார். ‘

‘காரியம் கெட்டுச்சு, என்னா இன்னிக்கு ஒட்டு வேலன்னு சொல்லி ஆளு வந்து நிக்குது. நோட்ட கை நீட்டி வாங்கிட்டு கிண்டல் பண்ரியா மேஸ்திரி. வேலயப் பாரு. அது இல்லன்னா வேற ஆளப் பாத்துக்குவம் ‘

வாத்தியார் உறுதியாய்ச் சொன்னார்.

‘சார், அவுங்க ஆதரவில்லாதவங்க. கொஞ்ச இருங்க நான் என்னேரமாயிருந்தாலும் வந்து முடிச்சிடறேன். ‘

‘மேஸ்திரி மேலே பாரு இருட்டுது. மழ வந்து கெடுத்திடப் போவுது., வேலயப் பாருங்க. ‘

அவன் என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

‘அங்க ஊர்ல கெழவியப் பாத்துக்குவாங்க. கவலப் படாதீங்க. ‘

மேஸ்திரி நிதானமாய் திரும்பி கட்டிடத்தின் அருகில் சென்று வேட்டியை மடித்துக் கட்டினான்.

‘டேய் யார்டாவன் வொலக்க மாதிரி நிக்குறியே.. ஜல்லிய கலச்சுவுடேன். ‘

(சனவரி 96)

Thinnai 2000 February 21

திண்ணை

Series Navigationஜெயமோகன் கவிதைகள் >>

விழி. பா. இதயவேந்தன்.

விழி. பா. இதயவேந்தன்.