கரடி ரூம்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

பத்ரிநாத்


அகத்தியர்குளம் என்பதுதான் அகத்திகுளம் என்று மருவி இறுதியில் ஆத்திக்குளம் என்று மாறியிருக்க வேண்டும். இப்போது அங்குதான் குடும்பத்துடன் சென்றுகொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். நான் அங்கிருந்து புலம் பெயர்ந்து.. அதாவது நான் எட்டாம் வகுப்பு வரை அங்கு படித்தேன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் பதினான்கு வயதுவரை உள்ள பருவம் மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.. அந்த வயதுவரை மனதில் படரும் படிமங்கள் சம்பவங்கள் இயல்பாகவே மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. அதனால்தான் ஆத்திக்குளத்தின் மீது அலாதியான சினேக உணர்வு. பழைய நண்பனைப் பார்த்ததைப் போல.. வேலை நிமித்தம் சிங்கப்பூர், யூ.கே அமெரிக்கா என்று பல நாடுகள் நான் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இப்போது ஆத்திக்குளம் செல்லும்போது ஏன் இந்தக் குறுகுறுப்பு ஏற்படுகிறது.. ?

‘ ‘ஓங்க ஊர் இது மாதிரி இருக்குமாப்பா.. ‘ ‘, என்று கேட்டான் என் ஐந்து வயது மகள், சுற்றிலும் வயல்கள் சூழ நடுநாயகமாகத் தெரியும் சில குடிசைகளைக் காட்டி..

‘ ‘சேச்சே.. இது குக்கிராமம்..எங்கவூர் அதக் காட்டிலும் பெரிசு.. ‘ ‘,

‘ ‘பெருங்களத்துீர் மாதிரி இருக்குமாப்பா.. ‘ ‘, துருதுருவென்று விழிகளை உருட்டியபடி..

‘ ‘ம்ம்..இருக்கும்.. ‘ ‘,

மீண்டும் ஏதோ கேட்க எத்தனித்தான்.. மனைவி குறுக்கிட்டாள், ‘ ‘சும்மா தொணதொணக்காத.. ‘ ‘, என்றவுடன் அவன் முகம் சுருங்கியது..

‘ ‘சேச்சே.. நீ கேளுடா.. ‘ ‘, என்றேன்.

‘ ‘நீ படிச்ச ஸ்கூலை எனக்குக் காமிப்பா.. ‘ ‘, கண்களில் மின்னும் அதே ஒளியுடன்..

‘ ‘ஆமா.. அது பெரிய டூரிங் ஸ்பாட்டு.. ‘ ‘, என்றாள் அவள்..

‘ ‘நீ வேணும்னா எங்கவூர் கோவிலுக்கு வேண்டுதல்னு வரலாம்.. நா வர்றதுக்குக்குக் காரணமே எங்க ஸ்கூல், பழைய ஃபிரண்ட்ஸ் இவங்களப் பாக்கத்தான்.. ‘ ‘,

‘ ‘அப்படி யாரு பழைய நண்பர்கள் இருக்காங்க.. ‘ ‘,

‘ ‘தெரியல.. ‘ ‘, என்று பெருமூச்செறிந்ிதேன்.. உண்மைதான்.. ஏதோ இரண்டொரு நண்பர்கள் இருக்கலாம்..பல நண்பர்கள் என்னைப் போலவே வேலைக்காகவே பல இடங்களுக்குப் பிரிந்து பறந்து சென்று விட்டோம்.. நகரமயமாதலுக்கு எங்கள் கிராமமும் ஒர் உதாரணம் .. என்னுடைய நண்பர்களில் ஆத்திக்குளத்தார் இரண்டாவது பையன் வாசு மிகமிக முக்கியமானவன்.. ஆத்திக்குளத்தார் என்று அழைக்கப்படும், ஆத்திக்குளம் சாம்பசிவம் எங்கள் பள்ளியின் ஆசிரியர் மற்றும் உதவிப் பொறுப்பாளர்.

தலைமையாசிரியர்- தாளாளர் எப்போதாவதுதான் எங்கள் பள்ளியில் இருப்பார்.. ஆத்திக்குளத்தார்தான் பள்ளியின் முழுப்பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.. ஆரம்பப் பள்ளிதான் என்றாலும் இப்போதுள்ள தனியார்ப் பள்ளிகளக்கு நிகரான கல்வித்தரம். ஆத்திக்குளத்தார் தலைமையில் எப்போதும் கட்டுப்பாடு அதிகம்.. ஆனால் அது ஒர் உறுத்தல் இல்லாத கட்டுப்பாடு.. ஆரம்பத்தில் ஆத்திக்குளத்தாரைக் கண்டாலே எனக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தது.. ஆனால் எனக்குத் தெரிந்தவரை அவர் எந்தக் குழந்தையையும் அடித்துப் பார்த்த நினைவில்லை.. கடிதோச்சி மெல்ல எறிவதை ஒரு கைவந்த கலையாகக் கொண்டிருந்தார்.. அடுத்த செக்ஷன் ஆசிரியர் ஒருவர் இருந்தார்.. அவருக்கு பையன்களை அச்சுறுத்துவதையே தொழிலாகக் கொண்டிருப்பார்.. அவர் அடிக்கடி கூறுவார் , ‘ ‘ டேய்.. அவன அந்தக் கரடி ரூம்ல போட்டுப் பூட்டுடா.. ‘ ‘, என்பார். நாங்கள் அனைவரும் அதைக் கேட்டு அரண்டு போவோம்..

அந்த மனிதர் அப்படிக்கூறக் காரணம் இருந்தது..இரண்டாம் வகுப்பு இருந்த அறையையொட்டிய ஒரு சிறிய இருட்டறை இருக்கும்..அதைக் காட்டித்தான் அந்த ஆசிரியர் அப்படிக் கூறிக் கொண்டிருந்தார்.. ஒருநாள் நாங்கள் ஆத்திக்குளத்தாரிடம் சென்று அவர் அப்படிக்கூறி அச்சுறுத்துத்துவதாகக் புகார் தெரிவித்தோம்.. சக ஆசிரியருக்காக ஆத்திக்குளத்தார் பரிந்து கூறவில்லை.. மாறாக அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தார்.. ‘ ‘ வளர்ற பசங்கக்கிட்ட அப்படிச் சொல்லி பயமுறுத்தாதிங்க.. நாமளே அப்படிச் செய்யறது மொறயில்லை.. ‘ ‘, என்றார். அந்த ஆசிரியர் முகத்தில் ஈயாடவில்லை.. அதிலிருந்து அவர் அப்படிக்கூறி அச்சுறுத்துவதைக் கைவிட்டுவிட்டாலும், எனக்கு என்னவோ அந்த அறை மீது ஒரு பயம் எப்போதும் இருக்கும்.. வளர்ந்த பையனாக ஆன பிறகும் அந்த அறைக்குச் செல்ல பயந்தேன்.. நண்பன் வாசுதான் சொல்லுவான், ‘ ‘டேய்.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லடா.. அந்த ஆளு பொய் சொல்றாரு.. ‘ ‘, என்பான். இருந்தாலும் அவன் தைரியம் எனக்குக் கிடையாது.. கொம்புளதற்கே ஐந்து என்று இருக்கும் சமயத்தில்.. இதற்கு எத்தனையோ.. விலகியே நிற்பேன்..

வாசுகைப் பொறத்தவரை அவன் என்னுடைய ஞானகுரு. எனக்குக் கேரம் விளையாடக் கற்றுக் கொடுத்தது, பள்ளியின் எதிரில் மணிபர்சு வாய்க் கிழவி விற்கும் சுவையான அவித்த சக்கிரவள்ளிக் கிழங்கின் ருசியைச் சொல்லிக் கொடுத்தது, இரவுக் காட்சி ?ிந்தித் திரைப்படம் என்று – அந்த வயதில் என்னை மிரட்சியுற வைத்த காரியங்கள் அவை. வாசுவும் அவன் அண்ணனும் சிகரெட் பைத்தியங்கள். ஏழாம் வகுப்புப் படிக்கும் போதே சிகரெட் புரட்சி செய்தவன் வாசு. அண்ணன் பழைய கடைத்தெருவிலும், தம்பி வாசு புது பஸ் ஸ்டாண்டிலும் அக்னி வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.. நான் பலமுறைகள் வாசுவை எச்சரித்திருக்கிறேன்.. தாயில்லாப் பிள்ளைகள் என்று ஆத்திக்குளத்தார்ி செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டார் என்று ஊர்மக்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஆத்திக்குளத்தாரின் வீடு கிராமத்தின் எல்லையின் கடைசியில் இருந்தது. முன்பு அவர்ி கிராமத்தின் பிரதான தெருவான மேற்குக் குளக்கரைத் தெருவில் வசித்து வந்தார். மனைவி இறந்ததும், இந்த ஒதுக்குப்புரமான இடத்திற்கு வந்துவிட்டதாக வாசு கூறினான்.

இரண்டுபுரத்திலும் பச்சை வயல்கள் சூழ, நீண்டு வளர்ந்த கருப்புப் பாம்பைப் போல உள்ள பிரதான சாலையை விட்டுப் பிரிந்து செல்லும் மண் பாதை.. அதைத் தாண்டி வந்தால் சிறு வாய்க்கால்.. அதைத் தாண்ட ஒரு மரப்பாலம்.. அதையொட்டிச் செல்லும் ஒத்தையடிப்பாதை.. அதில் சென்றால், சுற்றிலும் மரஙக்ள் சூழ இருக்கும், ஆத்திக்குளத்தாரின் வீடு.. அழகான ஆஸ்ரமம் மாதிரி.. அவருக்குச் சுற்றிலும் வயல்கள், தோட்டங்கள் இருப்பதால், அதைப் பராமரிக்க வேண்டி இங்கு வந்து விட்டாதாகக் கூறினான், வாசு.. பக்கத்தில் அரசலாறு ஓடுகிறது.. என்னவொரு கோடையாக இருந்தாலும் என் வயதொத்த பையன்கள் லூட்டியடிக்க தேவையான தண்ணீீ ஒடிக் கொண்டிருக்கும்.. அருமையான நாட்கள்..

கும்பகோணம் வந்தவுடன் பேருந்து பிடித்து ஆத்திக்குளம் வந்துவிட்டோம்.. கோவிலுக்குச் சென்ற பின்பு நான் நேராக சன்னதித் தெருவில் இருக்கும் என் பள்ளிக்குச் சென்றேன்.. நம்பவேமுடியவில்லை.. இதுவா என் பள்ளி.. முழுவதும் புதிய கட்டிடமாக மாறிப் போயிருந்தது.. எல்லாம் புதிதுதான்.. ஆசிரியர்கள், மாணவாகளைப் போல.. ஏன் பாடங்களும்தான்.. பழைய ஆசிரியர்களைப் பற்றி விசாரித்தேன்.. இராசேந்திரன் பக்கத்து ஊருக்கு மாற்றலாகிவிட்டார்.. தருமராஜன் ஓய்வு பெற்று தஞ்கை சென்றுவிட்டார்.. இப்படி.. ஆத்திக்குளத்தாரும் ஓய்வு பெற்று இதே ஊரில்தான் இருக்கிறாராம்..

ஆனால் மீண்டும் பழைய இடமான மேற்குக் குளக்கரைத் தெருவிற்கு வந்துவிட்டராம்.. அவரிடம் முகவரியை வாங்கிக் கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றேன்.. அவரையும் பார்த்த மாதிரி இருக்கும், வாசுவைப் பார்த்த மாதிரியும் இருக்கும்..

மேற்குக் குளக்கரையில் இருந்த ஆத்திக்குளத்தாரின் வீடும் சற்று பெரிதாக இருந்தது.. பெரிய திண்ணை..ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. காத்திருக்கலாமா அல்லது சென்று விடலாமா என்று நாங்கள் தயங்கிக் கொண்டிருக்கும் போது, ஒருவர் அங்கு வந்தார்.. எங்களை கேள்விக் குறியுடன் நோக்கினார்..

‘சார்.. நாங்க சென்னையிலிருந்து வர்றோம்.. ஆத்திக்குளம் சாம்பசிவம் சாரைப் பார்க்க வந்தோம்.. இது அவர் வீடுதானே.. ‘. என்று தயங்கியபடி கேட்டேன்..

‘இது என் வீடு.. சாரு இங்கதான் தங்கியிருக்கார்.. திண்ணையில வுக்காருங்க.. வந்துடுவார்.. ‘, என்று கூறிவிட்டு வீட்டைத் திறந்து உள்ளே சென்றார்.. சிறிது நேரத்திற்குப் பின் மறுபடியும் வீட்டை பூட்டி விட்டு எங்கோ கிளம்ப ஆயத்தமானார்..எங்களைப் பார்த்து, ‘ உக்காருங்க.. வந்துடுவார்.. ‘ என்றபடி புன்னகைத்தார்.

எனக்குப் பெரும் குழப்பமாகயிருந்தது.. ‘ சார் எங்கப் போயிருக்கார்.. அவர் பையன் வாசுன்னு.. இ..இது.. சார் வீடு தான.. ‘. இழுத்தேன்..

‘இல்ல சார்.. இது என் வீடு.. நானு இங்கதான் அவர தங்க வச்சுருக்கேன்.. ‘, என்றவரைப் புரியாமல் பார்த்தேன்..

என் முகத்தின் குழப்ப ரேகையைக் கண்ட அவர் விளக்கினார்.. ‘அவரு ரெண்டு பசங்கள்ல பெரியவன் ரமேஷ் வடக்க பிசிினஸ் பண்றேன் பேர்வழின்னு பாதி சொத்த அழிச்சிட்டு எங்கயோ போய்விட்டான்.. இரண்டாவது பையன் வாசு, வெளி நாடு போகணும்னு சொல்லி மீதி சொத்த அழிச்சிட்டு இப்போ அமெரிக்காவிலோ எங்கயோ இருக்கான்..போனவங்க ரெண்டு பேரும் திரும்பியே பாக்கல..இவரு அந்தப் பசங்களுக்காக எகப்பட்டக் கடன வாங்கி வட்டியும் கட்டமுடியாம முதலும் கட்டமுடியாம சொத்த வித்து நட்டாத்தில தவிச்சாரு..சாப்பாடுக்கே கஷ்டம்.. நம்மவூர் வாத்தியார் ஆச்சேன்னு இங்க என்னோட தங்கிக்கச் சொன்னேன்.. நம்மவூட்டுல சாப்பிட சங்கடப்பட்டுட்டு, நெதம் திருக்குளத்துக்குப் போயி, எதாச்சும் பிராமணார்த்தம் கெடக்கிதான்னு பாத்துட்டு வருவாரு.. இதோ.. இங்கதான் தங்கியிருக்காரு.. ‘, என்று திண்ணையின் கடைக்கோடியில் இருந்த ஒரு தடுப்புச் சுவரைக் காட்டினார்..

விக்கித்து நின்றேன்..

அந்தத் தடுப்புச் சுவர் அருகே சென்று பார்த்தேன்.. நான்குக்கு ஐந்து என்றிருந்த எந்த ஜன்னலுமில்லாத டஞ்சன் இருட்டறை.. அருகே ஒரு டிரங்குப் பெட்டியும், பாத்திரமும் தட்டுப்பட்டது..

‘அப்பா.. நீ சொல்லுவியே.. அந்தக் கரடி ரூம்.. இதுதானா.. ‘, பயந்தபடியே மகன் கேட்டான்..

‘சேச்சே.. இதவிட அது பெருசா இருக்கும்டா.. ‘, என்றேன்.

திண்ணையில் பத்ரிநாத்தின் கதைகள்.

விடாது கருப்பு

ஸ்தலபுராணம்

சில நேரங்களில்.. சில குழந்தைகள்..

நாகம்

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்