சு.கோவிந்தசாமி
அன்புடையீர்
இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இடங்கள் உண்மையானவையா என்ற ஐயத்தினைத் தற்காலிகாமாக ஒதுக்கி வைத்து விட்டு நான் கூறியவற்றைப்படிக்குமாறு வேண்டுகிறேன்.
கம்பர் கூறிய மருத்துமலை (ஸஞ்ஜீவி பர்வதம்) எங்கே இருந்தது
கம்பராமாயணத்தில் இந்திரசித்தனோடு (இந்திரஜித்) செய்த போரில் பிரமன் கணையால் (பிரஹ்மாஸ்திரம்) தாக்குண்டு இலக்குவன் இறந்தது கண்டு இராமன் துன்பத்துயில் கொள்கிறான் என்றுள்ளது. வான்மீகத்தில் இராம இலக்குவர் இருவரும் மூர்ச்சையுற்றார் என்று தான் உள்ளது. கையில் கொள்ளி ஒன்று ஏந்திக்கொண்டு தேடிய விபீஷணன் யானைப் பிணக்குவியலின் மேல் மயங்கிக் கிடக்கும் அனுமனைக் குளிர்ந்த நீர் தெளித்து உயிர்ப்பித்துச் சாம்பனிடம் (ஜாம்பவான்) கூட்டிக்கொண்டு சென்றான். சாம்பன் நீ இமைப்பின் முன் சென்று மருந்து கொணர்க என்று அனுமனிடம் கூறி மருத்து மலைக்குச்செல்லும் வழியினைக் கீழ் வருமாறு கூறினான்.
வான்மீகத்தில் கூறப்பட்டுள்ள வழி : கடலைத்தண்டி வெகு தூரம் சென்றால் இமயமலையை அடையலாம். அதற்கடுத்து ரிஷபம் என்ற பெயருடைய ஹேமகூடம் (பொற்கூடம்) உள்ளது. அதனையடுத்துக் கைலாஸம் என்ற சிகரம் உள்ளது. இவையிரண்டிற்கும் இடையில் பலவிதமான மூலிகைகளைக்கொண்ட ஸஞீவி பர்வதம் உள்ளது. ஒருவருக்குப் புதிய இடத்திற்குச் செல்லும் வழியினக் கூறும் பொழுது திசையையும் தூரத்தையும் கூறவேண்டாமா? அனுமானுக்கு எல்லாமே தெரியும் என்று சாம்பன் கூறாமல் விட்டானா?
கம்பர் கூறிய வழி : இந்தக் கடலைக் கடந்து 9000 யோசனைகள் சென்றால் இமயமென்னும் குலவரை உள்ளது; அதன் பெருமை (அகலம்) 2000 யோசனைகள்; கடலின் அகலம் 100 யோசனைகள் என்று சம்பாதிப் படலத்தில் கூறப்பட்டுள்ளது. இமயமலையைக் கடப்பதற்கான தூரம் 11100 யோசனைகள் என்றாகிறது.அது “பின் தவிறப் போனால் முன்புள யோசனையெல்லாம் முற்றினை பொற்கூடம் (ஹேமகூடம்) சென்றுறுதி” என்றுளது. ஹேமகூடத்திலிருந்து 9000 யோசனை தொலைவில் நிடதம்என்னும் செம்மலை உள்ளது. “இம்மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் செம்மலைக்கும் உளவாய அத்தனை யோசனை கடந்தால் சென்று காண்டி எம்மலைக்கும் பெரிதாய வட மலையை”. “அம்மலையின் அகலம் எண்ணின் முப்பத்தீராயிரம் யோசனையின் முற்றும்”.”மேருவைக் கடந்து அப்பால் ஒன்பதினாயிரம் உள யோசனை விட்டால் நேர் அணுகும் நீலகிரி; தான் இரண்டாயிரம் யோசனையின் நிற்கும். ‘அந்நீலகிரிக்கு அப்பால் நாலாயிரம் யோசனைத் தொலைவில் கரிய மருத்துமலையைக் காண்பாய்’.ஒரு யோஜனை என்றால் எவ்வளவு தூரம் என்று ஒருமித்த கருத்து இல்லை.
கம்பர் எந்த அடிப்படையில்இவற்றைக்கூறினார் என்று தேடிய பொழுது லிங்க புராணத்தில் கீழ்க்கண்ட விவரம் கிடைத்தது. ஜம்புத்வீபத்தின் (நாவலந்தீவு) நடுவில் மேரு உள்ளது. அதன் தெற்கே உள்ள நாடுகளும் மலைகளும் முறையே கீழ் வருமாறு: இளரிவ்ருத வர்ஷம் (நாடு), நிஷதம் (மலை), ஹரி வர்ஷம், ஹேமகூடம் (மலை), ஹிமாசலம், பாரதவர்ஷம். அதன் வடக்கே உள்ள மலைகளும் நாடுகளூம் இவை; நீலகிரி, ஹிரம்யக வர்ஷம், ஸ்வேத பர்வதம் (வெள்ளைமலை),ஹிரண்மயவர்ஷம், ஸ்ரிங்கபர்வதம், உத்தரகுரு (நாடு). அந்தணர்கள் எந்த சடங்கும் செய்யும் போது முதலில் கூறும் ஸங்கல்பத்தில் இடத்தையும் காலத்தையும் கூறுவர். இதில் இடத்தைப்பற்றி கூறுவது : ஜம்புத்வீபே பாரத வர்ஷே. பரதக்கண்டே மேரோஹோ தக்ஷ¢ணே பார்ஸ்வே என்று வரும். கம்பர் கூறியவை இவ்விரண்டினோடும் ஒத்துள்ளது. ஆனால் இமயமலைக்கு வடக்கே ஆர்க்டிக் கடல் வரை எந்த மலையும் இல்லையே. தவிற, இங்கே கூறப்பட்ட நாடுகளுன் மலைகளும் எவை என்று திட்டவ்ட்டமாகக் கூறமுடியுமா. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பில் “கம்பர் கூறும் இவ்வழி கற்பனை வழியாகவே காணப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. லிங்கபுராணத்தில் கூறப்பட்டுள்ளவையும் கற்பனையானவையென்றே கொள்ளவேண்டியுள்ளது.
கீழ்க்கண்ட மூன்று பாடல்களைப் படித்த பொழுது எனக்கு முதலில் குழப்பம் ஏற்பட்டது. பாடல்களும் உரைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது பாடலுக்கு நான்கு உரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பா:1 அத்தடம் கிரியை நீங்கி அத்தலை அடைந்த வள்ளல்
உத்தர குருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி
செற்றிய இருள் இன்று ஆக்கி விளங்கிய செயலை நோக்கி
வித்தகன், ‘விடிந்தது’ என்னா ‘முடிந்தது என் வேகம்’ என்றான்
பொ: அந்த அகன்ற மலையைக் கடந்து மறு பக்கம் சென்றடைந்த அநுமன் (வள்ளல்) உத்தர குருவை அடைந்தான். சூரியன் தன் கதிர்களைச் செலுத்தி, செறிந்த இருளை நீக்கி விளங்கிய செய்கையைக் கண்டு ‘விடிந்தது, நான் வந்த வேகம் பயனற்றுப் போயிற்று’ என்றான்.
பா:2 ஆதியான் உணரா முன்னம் அரு மருந்து உதவி அல்லின் பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச்
சோதியான் உதயம் செய்தான் உற்றதோ துணிதல் ஆற்றேன்
ஏதுயான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான்
பொ: மூலவனான இராமன் உணர்வதற்கு முன் அரிய மருந்தினைக் கொடுத்து நள்ளிரவிற்கு முன் அவன் அடைந்த துன்பத்தை அகற்ற எண்ணினேன். சூரியன் உதித்தான். நடந்ததைத் தடுக்க முடியாது. நான் என்ன செய்வேன் என்று இணை இல்லாத அநுமன் வருத்தப் பட்டான்.
பா:3 கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான், கதிரின்செல்வன் மேல் திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு மாற்றினன்; வட பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் சாற்றினர் என்னத்துன்பம் தவிர்த்தனன் தவத்தின் மிக்கோன்.
பொ:1 தவங்களில் சிறந்தவனும் காற்றும் திசைகளும் பின் தங்குமாறு கடுமையான வேகத்தில் செல்லும் அநுமன் சூரியன் மேற்குத் திசையில் எழ மாட்டானே! இன்னும் விடியவில்லை, மேரு தன் வடபுறத்தே மாற்றித் தோன்றச் செய்வான் என்று சாத்திரம் படித்த அறிஞர்கள் கூறியுள்ளனர் என்று எண்ணி மனக்கவலையை மறந்தான்.
பொ: 2 மேரு மலைக்குத் தெற்கில் கீழ்த்திசையில் உதயமாகும் சூரியன் அவ்வியல்பை மாற்றி அதன் வட திசையில் மேல் திசையில் உதயமாவான் என்பது புராணக் கொள்கை.
பொ:3 தவத்தில் மிக்கவனும் திசை நோக்கிச் செல்லும் காற்றும் சுருங்குமாறு மிக வேகமாகச் செல்லக் கூடியவனுமான அநுமன் பின்னர் ஒருவாறு ஆய்ந்து சூரியன் மேற்குத் திசையில் உதிப்பவன் அல்ல; இப்போது உதிப்பதுவும் அன்று; மேரு மலையின் வட புறத்தில் இருப்பவர்களுக்கு இவ்வாறு திசை மயக்கம் என்பதை மறைகள் வல்லவர்கள் உணர்ந்துள்ளதை எண்ணி மனம் தெளிந்தான்.
பொ:4 காற்றின் வேகம் குறையுமாறும் திசையின் தொலைவு சுருங்குமாறும் செல்லுகின்ற விரைவினை உடையவனும் தவத்தின் மிக்கவனும் ஆகிய அநுமன், ‘கதிரினைச் செல்வமாக உடைய சூரியன் மேற்குத் திசையிலே எழுகின்ற இயல்புடையவன் அல்லன்; போழ்து விடிந்ததோ அன்று; மேருவின் வடபாகத்தே தன் கதியை மாற்றிக் கொண்டவனாய் மேற்கே தோன்றுவான் என்பது வேதம் வல்ல சான்றவர்கள் சொன்னார்கள்’ என்று நினந்து துன்பம் தணிந்தான்.
மேலே கூறப்பட்டுள்ள நான்கு உரைகளும் ஒத்திருக்கின்றன. ஆனால் வெறும் வார்த்தைக்ளுக்கான பொருள்கள் (literal meanings) மாத்திரம் கொடுத்து விட்டு, கம்பர் கூறிய புதிரை ஆராய்ந்து விளக்கம் அளிக்கப்படவில்லை. பின் வரும் கேள்விகளுக்கு (அநுமன் தானே விடையையுணர்ந்து கொண்டானாயினும்) உரையாசிரியர்கள் விளக்கம் கொடுக்கவில்லை.
மேலே கூறப்பட்டுள்ள நான்கு உரைகளும் ஒத்திருக்கின்றன. ஆனால் உரையாசிரியர்கள் வெறும் வார்த்தைக்ளுக்கான பொருள்கள் (literal meanings) மாத்திரம் கொடுத்து விட்டு, கம்பர் கூறிய புதிரை ஆராய்ந்து விளக்கம் அளிக்கவில்லை. பின் வரும் கேள்விகளுக்கு (அநுமன் தானே விடையையுணர்ந்து கொண்டானாயினும்) உரையாசிரியர்கள் விளக்கம் கொடுக்கவில்லை.
இரவுப்பொழுது இலங்கையை விட்டுப் புறப்பட்ட அநுமன் எப்பொழுது/எங்கே சூரியன் உதிப்பதைப் பார்த்தான்?
2 மேரு எங்கே இருந்தது/இருக்கின்றது?
3 சோதியான் உதயம் செய்தான் என்றொரு பாட்டில் கூறி விட்டு அடுத்த பாடலில் விடிந்ததும் அன்று என்று கூறக்காரணம் என்ன? கவிச்சக்ககரவர்த்திக்கும் சகலகலாவல்லவனானஅனுமனுக்கும் குழப்பமா?
4 மேரு எங்கே இருந்திருந்தால் அதன் வடபுறம் திசைகள் மாறித் தோன்றும்?
5 எந்த சாத்திரங்களில் இது கூறப்பட்டுள்ளது?
6 வால்மீகி கூறாத ஒரு நிகழ்ச்சியைக்கம்பர் புனைந்துரைத்து படிப்பவர்களுக்கு, இரு பாடல்கள் படிக்கும் நேரத்திற்குள் மனச்சஞ்சலம் (suspence) விளைவிக்கக்காரணம் என்ன?
இவற்றைப் பல நாட்கள் சிந்தித்தபின் எனக்கு வானவியல் (Astronomy), மற்றும் பூகோளவியல் (Geography) அடிப்படையில்ஒரு புதுமையான விளக்கம் தோன்றியது. Archimedis போல் குளியல் தொட்டியில் இருந்து குதித்து Eureka என்று கத்திக்கொண்டு நான் ஓடவில்லை. ஆனாலும் என் கருத்துக்களை மற்ற அன்பர்களின் கருத்துக்களைக் கேட்ட பின் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
வணக்கம்
சு.கோவிந்தசாமி
கோயம்புத்தூர்
- இசைக்க மறந்த கலைஞன் : யுவன் சந்திரசேகர் நாவல் “கானல் நதி”
- உறவு
- அவசரமான அறிவித்தல்
- வகாபிய விஞ்ஞான நாக்கு
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -6
- “படிப்பதும் எழுதுவதும் – ஒரு சுய விவரிப்பு”
- கம்பர் கூறிய மருத்து மலை (சஞ்ஜீவி பர்வதம்) எங்கே இருந்தது?
- கடித இலக்கியம் -43
- பண்பாட்டை அணுகும் புதிய பார்வை – தொ.பரமசிவன் எழுதிய “தெய்வம் என்பதோர்…..” (கட்டுரைத்தொகுதி அறிமுகம்)
- யூமா வாசுகி முதல் சு.சமுத்திரம் வரை – (கேட்டீர்கள், சொல்கிறேன்)
- பச்சை சிவப்பு தக்காளி சோளம் சூப்
- இலை போட்டாச்சு ! -13 – இனிப்பு உருண்டைகள்
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962) அணு, அணுக்கரு & பரமாணுக்கள் (2)
- ஜோஸப் குமரப்பா, சுவாமி விவேகானந்தர், சாணி அடுப்பு
- நீ
- மடியில் நெருப்பு – 23
- போரில்லா உலகுக்காய்ப் போரிடும் கவிஞர்கள்
- பெரியபுராணம்-121 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- கவிதைகள்
- காதல் நாற்பது (7) தனித்த வாழ்வு வேண்டாம் !
- தொலைக்காட்சித் தொடர்கள் தொலைத்த பிரச்சினைகள்
- சமகால அரபு மார்க்சியர்கள் ஒரு எழுத்தியல் வரைபடம்
- காவிரி நதியும் கருணாநிதி சதியும்
- இணையம்: பலவீனமான வலை
- “ஜெனரலி” ஸ்பீக்கிங்!
- இஸ்ரேல்-லெபனான்-கே எஸ் சிவகுமரன்
- மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும்- 2 (contd)
- நீர்வலை (9)
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:3)