முனைவர் ஆ. தசரதன்
“வில்லுப்பாட்டு” எனும் இலக்கிய வடிவம் கி.பி. 1575க்குப் பின்தான் முதன் முதலில் தமிழில் கிடைக்கிறது. பிற்காலச் சோழர்களின் படை எழுச்சியையும், அப்படையில் பிரதானப் பணியாற்றிய வலங்கைச் சான்றோர் எழுநூற்றுவர் மகா சேனையின் தோற்றம், போர் மற்றும் சமூக – வரலாற்றையும் விளக்கும் வலங்கை மாலை என்னும் நூல்தான் முதலாவதாகக் கிடைக்கும் வில்லுப்பாட்டு ஆகும். அதனை மானவீர வளநாட்டுச் சுந்தரம் என்பவர் பாடியுள்ளார். அவர் ஏனாதி ஆனந்தன் என்பவரைத் தன் குருவாக வணங்குகிறார். இதே ஆனந்தனை அகத்தீசுவரம் ஆறுமுகம் என்பவரும் குருவாக ஏற்று, கி.பி. 1606-இல் வலங்கை நூல் எனும் வெங்கலராசன் கதை என்ற வில்லுப்பாட்டைப் பாடியுள்ளார். கி.பி. 1575 முதல் 1675 வரை வாழ்ந்த அருதனக்குட்டி என்பவர் கி.பி. 1615, 1617, 1620, 1623 ஆகிய ஆண்டுகளில் முறையே சீவக சிந்தாமணி அம்மானை, செண்பகநாச்சியார் கதை, அந்தரமுடையார் கதை, பெருமாள் சுவாமி கதை எனும் வில்லுப்பாட்டு இலக்கியங்களைப் பாடியுள்ளார். இவரும் ஆனந்தனையே தம் குருவாகப் போற்றுகின்றார். வலங்கை மாகாளி அம்மன் கதையைப் பாடிய வள்ளியூர் கடபன் நகர் இராமன் என்பவரும் ஆனந்தனையே தம் அண்ணாவியாகப் போற்றுகின்றார்.
அருதனக்குட்டி பாடிய மற்றொரு வில்லுப்பாட்டு கபாலகார சுவாமி கதை என்பது. இதுவும் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாடப்பெற்றிருக்க வேண்டும். முன்னோடி வில்லுப் பாட்டாளிகள் அனைவருமே தங்களை மானவீர வளநாட்டினர் எனக் கூறிக் கொள்கின்றனர். தமிழ் வில்லுப்பாட்டு முன்னோடிகளான ஏனாதி ஆனந்தன், சுந்தரம், ஆறுமுகம், அருதனக் குட்டி, இராமன் ஆகியோர் வலங்கைச் சான்றோர் குலத்தினர் என்பதும், அவர்கள் மானாட்டினர் என்பதும், அவர்களே தமிழ் வில்லுப்பாட்டுகளின் முன்னோடிகள் என்பதும் மானாடு என்ற மானவீர வளநாடே வில்லுப்பாட்டின் பிறப்பிடம் என்பதும் அறியக் கிடக்கின்றன. அவர்கள் பாடிய முன்னோடி வில்லுப் பாட்டுகளில் வரலாற்றுச் செய்இதிகள் பொதிந்துள்ளன. இவற்றுள் அருதனக்குட்டியார் பாடிய கபாலகார சுவாமி கதை எனும் வில்லுப்பாட்டில், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மேலைக் கடற்கரையில் கோழிக் கோட்டு அரசர்கள் சார்பில் கடற் சேனாதிபதிகளாகப் பணிபுரிந்த குட்டி ஆலி, கு¨சாலி மரக் காயர்கள் பற்றிய வரலாற்றுச் செய்இதிகள் காணப்படுகின்றன.
அருதனக்குட்டியார் வரலாறு
அருதக்குட்டி என்றே இவர்பெயர் காணப்படுகிறது. இவர் சேணாட்டில் பிறந்து சிறுவனாக இருந்தபோது மானாட்டுத் தாங்கையூர்க்கு வந்ததாக அவரே பாடி கி.பி. 1617-இல் அரங் கேற்றிய செண்பக நாச்சியார் கதைப்பாடல் கூறுகின்றது. இவர் தன்னை மானவீர வளநாடன் எனப் பெருமாள் சுவாமி கதையில் கூறிக் கொள்கிறார்.
மருவளரும் மானபுகழ் வீர வளநாடன்
மாயவனார் தன்கதைக்கு அனுசரணை செய்தோன்
திருவளரும் புயரூபன் அமுர்த மொழிப்பாகன்
செந்தாமரைப் பதி சிறந்து வளர்செல்வன்
அருள்வளரும் குருபாதம் மறவாத பாகன்
அருதக்குட்டி யிக்கதையைச் சொன்னேன்
பொருளுரைகள் கற்றநல்ல புலவோர்கள் முன்னே
புன்சொல்தனை இன்சொல்லாகப் பாடஅருள் செய்வீர்
என்கிறார். அருதனக்குட்டியார் மானவீர வளநாட்டுச் செந்தாமரைப் பதியில் இருந்தவர் என்பது அவர் பாடிய சீவகசிந்தாமணி அம்மானையிலிருந்தும் தெரிகின்றது.
செந்தமிழ்சேர் பூவுலகில் தென் தமிழ்நாட்டில்
மண்டலத்தில் மான வீரவளநாடதனில்
தண்டாமரை மாது தானுறையும் தாமரையூர்
அண்டர் சிவதொண்டர் அருள்தவறாத அருதக்குட்டி
மானாட்டுத் தாங்கையூரும் செந்தாமரைப் பதி எனும் செம்மறிக் குளமும் அடுத்தடுத்து உள்ளன. அருதனக்குட்டியார் வில்லிசைத் துவக்கப் பாடல்கள், பிள்ளையார் வட்டம், சிதம்பரர் அந்தாதி, வண்ணார மாடன் கதை, பகடை சுவாமி கதை போன்ற வேறு சில வில்லுப்பாட்டு இலக்கியங்களையும் புனைந்துள்ளார் என அறியமுடிகின்றது. கி.பி. 1600 முதல் கி.பி. 1650க்கு மேலாக வில்லிசையில் பல பாட்டுகளைப் பாடியும், பக்கத்திலுள்ள பல ஊர்த் தெய்வக் கோயில்களில் உறையும் தெய்வங்களின் வரலாற்றைப் புனைந்து பாடியும், பல சீடர்களை உருவாக்கியும் நூறு ஆண்டுகள் வாழ்ந்த அருதனக் குட்டியார் தென்தமிழ் நாட்டு வரலாற்றில் முக்கியமான முன்னோடி வில்லிசைப் பாட்டாளியும் வரலாற்று ஆசிரியருமாவார்.
அருதனக்குட்டியார் பாட்டுகளில் வரலாற்றுச் செய்திகள்
வில்லுப்பாட்டாளிகள் ஊர் ஊராகச் சென்று தம் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தும் இயல்புள்ளவர்கள். அதனால் அவர்களுக்குத் தெரிந்த ஊர்கள் எல்லாம் வில்லுப்பாட்டில் பதிவாகியிருக்கும். அதற்கொப்ப அருதனக்குட்டியாரும், சோழநாட்டுத் திருவரங்கம் முதல் சேரநாட்டுத் திருவனந்தபுரம் வரை உள்ள சைவ-வைணவத் தலங்களைத் தம் நூலான பெருமாள் சுவாமி கதையில் குறிப்பிட்டுள்ளார். பாண்டிநாட்டுத் திருஆவினன்குடி எனும் பழநி முதல் தென்பாண்டிநாட்டுத் தாங்கையூர் வரை உள்ள ஊர்களைத் தம் நூலான செண்பக நாச்சியார் கதைப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். சோழநாட்டுச் சிதம்பரம் தொடர்பான செஇதிகளைத் தம் சிதம்பரர் அந்தாதி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைப் போன்றே பாண்டிநாட்டுக் கீழக்கரை முதல் சேரநாட்டுத் திருவனந்தபுரம் வரை உள்ள கடற்கரை ஊர்களைக் கபாலகார சுவாமி கதைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இக்கடற்கரை ஊர்கள் கி.பி. 16ஆம், 17ஆம் நூற்றாண்டு வரலாற்றில் இடம்பெற்றவை.
தென்னாட்டுக் கடலோரப் பகுதிகளிலும் இலங்கையிலும் முதலில் வணிகமும் பின்பு, ஆதிக்கமும், தமிழ் அச்சுக்கலைப் பணியும், அகராதிப் பணியும், கிறித்தவ மதப் போதகமும், கிறித்துவப் பணிகளும் செய்த போர்த்துக்கீசியர் பற்றிய வரலாறு இக்கடற்கரை ஊர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இப் போர்த்துக்கீசியர்களை ஒரு நூற்றாண்டுக்காலம் (கி.பி. 1500 முதல் 1600 வரை) கடலோரப் பகுதிகளில் காலூன்றாதவாறு செய்த மரக்காயர் எனும் கடற்தளபதிகளைப் பற்றியும், அவர்கள் பெற்ற பல வெற்றிகள் பற்றியும் பல குறிப்புகள் மலையாள வடக்கன் பாட்டுகளிலும், அரபியர் குறிப்புகளிலும், போர்த்துக்கீசியர் வரலாற்று ஆவணங்களிலும், டச்சுக்காரர்கள் குறிப்புகளிலும், இலங்கை வரலாற்றிலும், தமிழகக் கீழக்கரையோரப் பகுதிகளிலும் காணக்கிடக்கின்றன. அந்த அடிப்படையில் அருதனக்குட்டியார் தாம் கேட்டறிந்த அக்கடற்சேனாதிபதிகள் பற்றிய செய்இதிகளைத் தம் கபாலகார சுவாமி கதைப்பாட்டில் பதிவு செய்துள்ளார்.
கிறித்தவர்களான போர்த்துக்கீசியர்களுக்கும் இசுலாமியரான மரக்காயர்களுக்கும் நடந்த இம்மாபெரும் போராட்டம் போலவே தம் குலதெய்வங்களில் ஒன்றான கபாலகார சுவாமிக்கும் மரக்காயர்களுக்கும் நடந்த கடற்போர் இக்கதைப்பாட்டில் அருதனக்குட்டியாரால் சித்திரிக்கப் பெற்றுள்ளது. மரக்காயர்கள் கோழிக்கோட்டுச் சாமுதிரி என்னும் இந்து அரச மரபினர் ஆதரவு பெற்றவர்கள். போர்த்துக்கீசியர் கொச்சி அரச மரபினர் ஆதரவு பெற்றவர்கள். கொச்சி அரசர்களுக்கும் கோழிக்கோட்டு அரசர்களுக்கும் இடையிலுள்ள போராட்டங்களில் கொச்சியின் பக்கம் போர்த்துக்கீசியரும் கோழிக்கோட்டின் பக்கம் மரக்காயர்களும் நின்று போரிட்டுத் தம் கடல் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயன்றுள்ளனர். ஆயினும் சைவ மதத்துக் கபால காரனாகிய நாட்டார் தெய்இவம் இசுலாமியரான மரக்காயர்களைக் கப்பல் போரில் கொன்றதாக அருதனக்குட்டியார் சித்திரித்ததற்கான வரலாற்றுச் சமூகச் சான்றுகளை ஆராய்இவது இன்றியமையாததாகும்.
பாமரனான அருதனக்குட்டியார்க்கு உண்மையான வரலாற்றுப்பார்வை இருந்திருக்கக்கூடும். ஆயினும் தம் காலத்தில் நடந்த ஒரு கடற்போரை மையமாக வைத்துத் தம் வில்லுப் பாட்டுக் கதையைப் புனைந்ததற்கான வரலாற்றுப் பின்னணி ஆராயப்பெற வேண்டியுள்ளது. அதிலும், நாடார்களில் ஒரு பிரிவினரான அருதனக்குட்டியார் மரபினர் வழிபடும் கபாலகார சுவாமி, நாடார்கள் பலர் வாழ்கின்ற கடற்கரை ஊர்கள் அருகே கடலில் மரக்காயர்களைக் கொன்ற காரணம் வெறும் கற்பனைப் புனைவா அல்லது வரலாற்று உண்மையா என அறிவது இன்றியமையாததாகிறது.
வில்லுப் பாட்டாளிகள் நாட்டார் தெய்வங்களுக்கு ஏதாவது புராண வரலாறுகளைப் புனைந்துபாடுவது இயல்பு. அவ்வாறின்றி, தம் அண்மைக்காலத்திய வரலாற்றைக் கபாலகார சுவாமியுடன் தொடர்புபடுத்தி அருதனக்குட்டியார் பாடியுள்ள உண்மை அறியக்கூடிய ஒன்றாகும். இதற்கு நாம் பெருமாள்சாமி தம்பிரான் என்ற பத்மநாப சுவாமியின் வரலாற்றைப் பார்வையிட வேண்டும்.
கபாலகார சுவாமி கதைப்பாடலின் கதைச் சுருக்கம்
கீழக்கரை நகரிலிருந்து குட்டியாலி மரக்காயன் 999 கப்பல் வைத்து ஆண்டு வருகின்ற போது ஒரே மரத்தாலான கப்பல் செய்ய நினைத்தான். மரம் வெட்டுவதற்குரிய ஆசாரிமார்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டு, உணவு வகைகள் எல்லாவற்றையும் சேகரித்து, வீரர்கள், கப்பித்தான் சகிதமாகக் கப்பற்பயணம் புறப்பட்டான். பாய்மரம் விரித்துக் கப்பல் மலைநாடு நோக்கிச் சென்றது. கண்ணநல்லூர் (கண்ணனூர்) சீர்காழிப்பதியில் உருவாக்கப்பட்ட அந்தச் சரக்குக் கப்பல், சிங்களவரையும் ஏற்றிச் சென்றது. அதற்குத் துணையாக வேறு சில கப்பல்களும் சென்றன. தூத்துக்குடியை அடைந்தவுடன் குட்டியாலியும், குன்னாலி மரக்காயனும் கப்பலை நிறுத்தி, உணவு செய்யச் சொல்லி உண்டு மறுநாள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
பழைய காயல்நகர், காயல்பட்டணம், வீரபாண்டியன் பட்டணம், திருச்செந்தூர், ஆலந்தலை, குலசை ஆகிய நகர்களைக் கடந்து கப்பல் சென்றது. குலசேகரப் பட்டணத்தில் நங்கூரம் பாச்சிக் கப்பலை நிறுத்தி, உண்டு, உறங்கி, மேலும் பல சரக்குகளை ஏற்றி மீண்டும் பயணமாயினர். மணப்பாடு, பெரிய தாழை, கூடு தாழை ஆகிய ஊர்களைக் கப்பல் கடந்தது. கூடுதாழைக்குக் கப்பல் செல்லும்போது இடதுகண் துடித்தது. உவரி சுயம்புலிங்க அய்யனார் கோயில், அந்தோணியார் கோயில் ஆகியவற்றுக்குக் காணிக்கை செலுத்தினர். பின்பு உவரியைக் கடந்து குருசடி, நாட்டாறு பொழிமுகம், தேர்ப்புளி, கூத்தன்குடி ஏசுநாதர் கோயில், இளம்பனை ஆறு, இடையன் சேரி, அரிசிக்கரை, விசுவாமித்திரர் கோயில் (கோசிகனார் ஆலயம்) ஆகிய ஊர்களைக் கடந்து சென்றனர். பாண்டி நாட்டு எல்லை கடந்து சேரநாட்டுக் கடல் எல்லைக்குள் கப்பல் நுழைந்தது. ஆனைக் கல்லு, பெருமணல், கூட்டப்புளி, வெண்கலப்பாறை, வட்டக் கோட்டை, முட்டப்பதி கன்னியாகுமாரி, பசைலிங்கபுரம், மணக்குடி, கீழ்முட்டம், மேலமுட்டம், தவளைக் கரையான் குளம், கடியப் பட்டணம் ஆகிய ஊர்களைக் கடந்து இறுதியில் திருவனந்தபுரம் அடைந்தனர்.
திருவனந்தபுரம் அரசனை வணங்கி, மரியாதை செய்த பின்னர், குட்டி ஆலி மரக்காயன் ஆயிரமாவது கப்பலை ஒரே மரத்தால் செய்ய வேண்டுமென்ற தன் ஆசையை விண்ணப்பித்தான். அரசனும் அதற்கு இசைந்து தன் மலையில் மரம் வெட்டச் சொல்லி விடைகொடுத்தான். ஆசாரிமார் சகிதமாகக் குட்டியாலி பல மரங்களைப் பார்வையிட்டு இறுதியில் கபாலகாரன் தங்கியிருக்கும் மரத்தைக் கண்டான். அம்மரத்தை வெட்டும் போது அதன் உச்சியிலிருந்த கெவுளி ஐந்துமுறை ஒலி எழுப்பியதைக் கேட்டுச் சோர்வடைந்து, சோதிடனை வரவழைத்துப் பலன் பார்த்தனர். சோதிடனும் அந்த மரத்தை வெட்டினால் தெய்வக் குற்றம் வரும் என எச்சரித்தான். அதையும் மீறி அவர்கள் அதை வெட்டினர். வெட்ட வெட்டக் குருதி பாய்ந்தது. கபாலகாரரும் கோபமுற்றார். மண்டை சிதற அடித்துக் கொல்வேன் எனச் சபதமிட்டு மரத்துடனே பயணப்பட்டார்.
மரத்தை இழுத்துக் கப்பலுக்குக் கொண்டு வந்தனர். கபாலகாரரும் உடன் ஏறிக் கொண்டார். வந்த வழியே கப்பல் பயணத்தை மேற்கொண்டது. அது கீழமுட்டம் தாண்டி, பெரிய காடு வருமளவும் எவ்விதத் தொந்தரவும் கப்பலுக்கு ஏற்படவில்லை. பொழிக்கரை, புத்தந்துறை, பள்ளத்தூர், கோலகுளம் எனும் ஊர்களைக் கடந்து கன்னியாகுமரியைக் கப்பல் அடைந்த போது கபாலகாரர் இடைஞ்சல் செஇயத் தொடங்கினார். கபாலத்தைக் கையில் எடுத்துக் கோபத்துடன் கொக்கரித்தார். குட்டியாலி மரக்காயன் பயந்து, சினந்து அவருடன் சண்டையிட்டான். அவருடைய பேய்ப்படையும் குட்டியாலியின் படையும் மோதின. கபாலம் கொண்டு அடித்துப் பலரை அவர் கொன்றார். குட்டியாலி மரக்காயன் ‘அல்லாகோ’ ‘அல்லாகோ’ என விளித்துப் பொருது கபாலத்தால் அடியுண்டு இரத்தம் சிதறிக் கடலில் விழுந்து இறந்தான்.
சிவனார் கொடுத்த வரத்தால் கபாலகாரர் வெற்றிபெற்று அந்தரமார்க்கமாய் எழும்பிச் சென்றார். குருதி வாடையை உணர்ந்து மீன்களெல்லாம் கூடிவந்து கப்பலிலிருந்தவரைத் தின்று தீர்த்தன. அந்தரமார்க்கமாய் எழுந்த கபாலகாரர் கைலாயம் சென்று இறைவனிடம் வரம் வாங்கச் சென்றார். கப்பலில் வந்து இறந்தவர்களும் சிவனிடம் வந்து வரம் வாங்க வந்தனர். தெட்சணாப் பகுதியில் கபாலகார சுவாமி உறையும் கோயில்களில் அடிமைகளாய் இருந்து பலி பெற்றுவருமாறு இறைவன் அவர்களுக்கு வரம் நல்கினார். அவர்களும் கபாலத்தைக் கையில் ஏந்தி, அதில் விளக்கெரித்து, கபாலகாரனை வணங்கி அவரிடம் வரம் பெற்றனர்.
கையில் கபாலமேந்தி நிற்கும் கபாலகாரனுடன் உறையும் பரிவார தெய்வங்கள் எல்லாம் பலிகள் பெற்று வருவதாக இக்கதைப்பாடல் முடிகின்றது.
குட்டியாலி, குஞ்சாலி மரக்காயர்கள் வரலாறு
போர்த்துக்கீசியனான வாஸ்கோடகாமா கி.பி. 15ஆம் நூற்றாண்டு இறுதியில் மேலைக் கடற்கரையில் நுழைந்ததன் பின்னர் கி.பி. 1515 இல் போர்த்துக்கீசியர் அப்பகுதியில் வலுப் பெற்றனர். கள்ளிக்கோட்டை, கொச்சி, கொல்லம் ஆகிய மூன்று பகுதி அரசர்களுடனும் நட்பும், போரும் கொண்டு தம் வாணிகத்தை வளப்படுத்தினர். கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொச்சியில் தங்கியிருந்த முகம்மதிய வணிகர்களான அகமது மரக்காயரும் அவரது சகோதரர் குஞ்ஞாலி மரக்காயரும், தாய்மாமன் முகமது அலி மரக்காயரும் போர்த்துக்கீசியரின் நெருக்குதலின்றும் விடுபட்டுக் கோழிக்கோடு சாமுதிரி அரசர்களின் பகுதியில் வந்து தங்கினர். இதனை அறிந்த போர்த்துக்கீசியர் சாமுதிரி அரசருக்குரிய பொன்னானியைத் தாக்கினர். சாமுதிரிகளுக்குப் பரம்பரைக் கடற்தளபதியான குஞ்ஞாலி மரக்காயர் கோட்டைக் கல்லுக்குத் தம் இருப்பிடத்தை மாற்றினார். கி.பி. 1524இல் குட்டியாலி மரக்காயர் தலைமையில் போர்த்துக்கீசியருடன் நடந்த போரில் குட்டியாலி வென்றார். அவர் வீரம் போர்த்துக்கீசியரைத் திகிலடையச் செய்தது. கி.பி. 1528இல் குட்டியாலி அவர்களால் கைது செய்யப்பட்டார். அதன் பின் குஞ்ஞாலி மரக்காயர் I கடற்தளபதி பொறுப்பை ஏற்றான். போர்த்துக்கீசியருக்கும் சாமுதிரி அரசர்களுக்கும் அடிக்கடிப் போர் ஏற்பட்டது. கொச்சி அரசனின் தூண்டுதலால் போர்த்துக்கீசியர் பலமுறை தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்று தோற்றனர். கி.பி. 1531இல் குட்டி மரக்காயர் இறந்தபோது குஞ்ஞாலி மரக்காயர் II என்பவர் தலைமைப் பொறுப்பெற்றார். மீண்டும் போர்த்துக்கீசியருக்கும் சாமுதிரி அரசர்கள் சார்பில் மரக்காயர்களுக்கும் மேலைக் கடற்கரையிலும், இலங்கையிலும், கீழைக்கடற்கரையிலும் பல இடங்களில் போர் ஏற்பட்டது. இலங்கையில் போர்த்துக்கீசியர் இருந்த இடம் அழிக்கப்பட்டது. இலங்கையிலிருந்த பங்காளிச் சண்டை மரக்காயர்களுக்குச் சாதகமாயிற்று. நாகபட்டினத்தில் போர்த்துக்கீசியரின் அமைப்புகளைக் குஞ்ஞாலி II அழித்ததோடு, குமரி முனையையும் சுற்றி வளைத்தான். கி.பி. 1538க்குப் பிறகு போர்த்துக்கீசியருக்கும் சாமுதிரி அரசர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. குஞ்ஞாலி (I)யின் உறவினன் குட்டி ஆலி கோவாவுக்கு அனுப்பப்பட்டு வரவேற்கப்பட்டான். பத்து ஆண்டுகள் இந்த ஒப்பந்தம் செயல்பட்டது. மீண்டும் கி.பி. 1550இல் போர்த்துக்கீசியர் சாமுதிரிகளின் நண்பர்களைத் தாக்கியதால் இருதரப்பாருக்கும் போர் ஏற்பட்டது. புன்னைக் காயலில் போர்த்துக்கீசியரின் இருப்பிடத்தைக் குஞ்ஞாலி II தாக்கினான். கி.பி. 1558ல் குஞ்ஞாலியின் கொடி வைத்த கப்பல் கீழைக்கடலில் மூழ்கடிக்கப்பட்டது. கி.பி. 1560இல் போர்த்துக்கீசியருக்கு வெற்றி கிடைத்தது. கி.பி. 1570இல் குஞ்ஞாலி II மேலைக்கடற்கரையில் Diu வரை வென்று போர்த்துக்கீசியருடன் பொருதான். குஞ்ஞாலி III என்பவன் பதவி ஏற்று, சாமுதிரிகளிடம் அனுமதிபெற்று மரக்காயர் கோட்டை என்பதைப் புதுப்பட்டணத்தில் கட்டினான். மரக்காயர்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து போர்த்துக்கீசியர் கி.பி. 1572 இல் பரப்பனங்காடியில் இறங்கி மசூதிகளுக்கும், கோயில்களுக்கும் தீ வைத்தனர். கி.பி. 1578இல் இருதரப்பாருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டாலும் சாமுதிரி அரசர்கள் உடன்படிக்கையை ஏற்க முன்வரவில்லை. இறுதியில் போர்த்துக்கீசியருக்குப் பொன்னானியில் கோட்டை கட்ட அவர்கள் அனுமதி நல்கினர். பொன்னானியில் நிலை கொண்ட போர்த்துகீசியரின் செல்வாக்கை விரும்பாத குஞ்ஞாலி III கி.பி. 1586இல் அவர்களுடன் போரிட்டு வென்றான். கி.பி. 1591இல் பாதிரியார் ஒருவரால் உடன்பாடு ஏற்பட்டது. ஆயினும் மரக்காயர்கள் போர்த்துக்கீசியரின் கப்பல்களை நாசப்படுத்தியே வந்தனர்.
கி.பி. 1595இல் குஞ்ஞாலி IV தலைமைப் பொறுப்பேற்றான். தங்கள் கோட்டையைப் பலப்படுத்தி நிலை கொண்டான். அதனால் ஏற்பட்ட அகங்காரத்தால் சாமுதிரிகளுக்குட்பட்ட யானை ஒன்றின் வாலை வெட்டியும், சாமுதிரி அரசர்களைச் சார்ந்த நாயர் ஒருவரை இழிவு செய்தும் இந்துக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டான். சாமுதிரிகளும் குஞ்ஞாலி IVஇன் போக்கை விரும்பாததால், போர்த்துக்கீசியருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு முறையே தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் மரக்காயர் கோட்டையைத் தாக்கினர். முதலில் தோல்வி ஏற்பட்டாலும் கி.பி. 1599இல் மீண்டும் இணைந்து குஞ்ஞாலி IVஐ எதிர்த்தனர். சாமுதிரிகளிடம் பணிந்து தன்னைக் கொல்லக் கூடாது என வேண்டிக் கொண்டு தன் வாளைக் கொடுத்தான். ஆயினும் சாமுதிரிகள் அவனைப் போர்த்துக்கீசியரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவனைக் கோவாவில் வைத்துக் கொன்றனர். அத்துடன் மரக்காயர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. 100 ஆண்டுகளாக ஐரோப்பியர்களைக் கடலோரங்களில் நிலை கொள்ளவிடாது தடுத்து வந்த மரக்காயர்களைக் கடற்கொள்ளையர் என ஐரோப்பிய எழுத்தாளர்கள் வருணித்தனர். கொழும்பிலிருந்து கட்ச் வரை குஞ்ஞாலி மரக்காயர்களின் கொடி பறந்தது. குஞ்ஞாலி மரக்காயர்களின் பலம் பெருகிய காரணத்தாலும், அவன் தனி ஆட்சியாளனாக அறிவித்துக் கொண்டதாலும், இந்துக்களை இழிவு படுத்தியதாலுமே குஞ்ஞாலியைப் பிடிக்க சாமுதிரி அரசர்கள் முயன்றனர் என்பர்.
குட்டியாலி, குஞ்ஞாலி மரக்காயர்கள்
குட்டியாலி, குஞ்ஞாலி போன்ற மரக்காயர் வீரர்களின் கடற்போர்கள் கீழக்கரை, காயல் பட்டணம், கொழும்பு போன்ற ஊர்களில் நடந்ததைத் தென்பாண்டி நாட்டுக் கடலோரப் பகுதியினர் கண்டிருத்தல் கூடும். அதனடிப்படையில் அருதனக்குட்டியாரும் தம் கதைப்பாட்டை வில்லில் புனைந்துள்ளார் என அறியமுடிகிறது. ஆயினும் பெருமாள்சாமி என்பவர் வரலாற்றுடன் தொடர்புறும் கபாலகாரன் கதையைக் காணும்போது வேறு வரலாற்றுப் பின்னணி இப் போருக்குப் பின்னால் இருக்கும்போல் தெரிகிறது. அது, மூவேந்தர் வமிசாவளியுடன் தொடர்புறுவது.
வெள்ளைக்காரன் கதையில் வரும் செங்கிடாய்க் காரனும் கபாலகாரன் கதையும்
சிவனிடம் வரம் வாங்கி, மலைநாட்டு மரத்தில் உறைந்த கபாலகார சுவாமி கடல் வீரர்களான மரக்காயர்களைக் கொன்ற கதையுடன் வெள்ளைக்காரனை அவன் தானிருந்த மரத்தை வெட்டினான் என்ற காரணத்திற்காகக் கொன்ற செங்கிடாய்க்காரன் செயலுடன் ஒப்பிடலாம். இரு கதைப் பாடல்களிலும் கடற்பயணமும், மரம் வெட்டுதலும் நடக்கின்றன. கோழிக் கோட்டில் மரக்காயர்கள் நிகழ்ச்சி தொடங்கினாலும், கீழக்கரை என்ற ஊரிலும் அவர்களிருப்பதால் கபாலகார சுவாமி கதைப்பாடலாசிரியர் தன் கதையைக் கீழக்கரையிலிருந்து தொடங்குகிறார். வெள்ளைக்காரன் செங்கிடாய்க்காரனால் மடிவதும், மரக்காயர்கள் கபாலகாரனால் மடிவதும் குமரிக் கடற்கரைப் பகுதியில் நடைபெறுகின்றதாகக் காட்டப்படுகின்றன. குமரிப்பகுதிகளில் கடற்பாறைகளில் கப்பல்கள் மோதி அழிந்த நிகழ்ச்சியை மையமாக வைத்தும் இக்கதைகள் புனையப் பெற்றிருக்கலாம். இறப்புக்குப்பின் வெள்ளைக்காரன், நாட்டார் தெய்வமாகக் குமரிப் பகுதிகளில் வழிபடப் பெற்று வருகிறான். அதுபோன்று மரக்காயர்களும் கபாலகார சுவாமியுடன் பலிபெற்று உறைவதாக இக்கதைப் பாடல் முடிகின்றது.
சுடலை மாடன் கதையும் ஓட்டக்காரன் கதையும்
மரத்தில் உறைந்த மற்றொரு தெய்வம் சுடலை மாடனாகும். சுடலை மாடனும் பிற பரிவார தெய்வங்களும் தென்மேற்கு மலைத் தொடர் ஒன்றில் உறைந்தபோது திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குக் கொடிமரம் வெட்ட வந்தோர் அம்மரத்தை வெட்டும் போது இறந்துபட்டதும், பின்பு தக்க பூசை மரியாதைகளுடன் வெட்டி, திருச்செந்தூருக்குக் கொண்டு வந்ததும், அம்மரத்துடனே சுடலை மாடனும் திருச்செந்தில் பதிக்கு வந்ததாகச் சுடலை மாடன் கதை குறிப்பிடுகின்றது.
வில்லுப்பாட்டு இலக்கியங்கள் பெரும்பாலும் தொன்மப் பகுதிகளைக் கூறி, பழங்கதைகளை நினைவு கூர்ந்து, ஓரிரு கடந்தகால வரலாற்றுச் செய்திகளைச் சொல்லி, சமகால நடப்புகளைத் தொட்டுக் காட்டிச் செல்லுவனவாக அமையும். அதிலும் சமகாலச் செய்ய்திகளைக் கூறும்போது குறியீடாகவும், உள்ளுறையாகவும் சொல்லுவதால் ஊரார், ஆட்சியாளரின் வெறுப்புக்கு ஆளாகாதவாறு அப்பாட்டாளிகள் பார்த்துக்கொள்வர். இந் நிலையில் தமிழ் வில்லுப்பாட்டு முன்னோடிகளில் ஒருவரான அருதனக்குட்டியார் தம் காலத்திலோ அதற்குச் சற்று முன்போ நடந்த ஒரு கடற்போரை நேரில் பார்த்தோ, கேட்டோ அதைத் தம் குலதெய்வமான செண்பக நாச்சியார் கோயிலில் உறையும் கபாலகார சுவாமி பேரில் ஏற்றிச் சொல்லியிருப்பது அவருடைய வரலாற்று அணுகுமுறைக்கு ஒரு சான்றாகும். எல்லா நாட்டார் தெய்வங்களுக்கும் வரலாறு வேண்டும் என்ற அடிப்படையில் பல வில்லுப் பாட்டுகளையும் புனைந்து, வில்லில் அரங்கேற்றிப் பாடி, தம் சீடர்களையும் பாட வைத்த அருதனக்குட்டியார் கபாலகார சுவாமிக்கும் ஒரு வரலாறு வேண்டுமென்பதற்காக இச்சரித்திர நிகழ்வை எடுத்துக் கொண்டுள்ளார். கடலில் பயணமாகும் கப்பல்கள் பாறைகளில் மோதி உடைவதும், சூறாவளியால் தாக்குண்டு மூழ்குவதும் இயல்பு. அந்நிலையில் கடல் வீரர்களான மரக்காயர்களின் மரக்கலங்கள் மோதுண்டோ கபாலகாரனால் அழிந்ததாகவோ நிகழ்ந்த ஒரு நிகழ்வை மையமாக வைத்து, கேட்கும் பொது மக்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் இக்கதைப்பாட்டைப் புனைந்துள்ளார்.
திருநெல்வேலி சரித்திரம் எழுதிய கால்டுவெல்கூட போர்த்துக்கீசியரை மரக்காயர் வென்றனர் எனக் கூறாது விட்டு விட்டுள்ளார். வேறு எந்தத் தமிழ்ப் படைப்பாளிகளும் கூட மரக்காயர்களுக்கும் தமிழ் நாட்டுப்புறத் தெய்வங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் காட்டவில்லை. தமிழ் நாட்டு வரலாற்றாசிரியர்கள் எவரும் மரக்காயர் தொடர்பைச் சுட்டிக் காட்டவில்லை. அந்நிலையில் அருதனக்குட்டியார், நாடார்களில் ஒரு பிரிவினர் வணங்கும் தெய்வத்திற்கும் கடல் வீரர்களான மரக்காயர்களுக்கும் ஏற்பட்ட பகைமையைக் கதைக்கருவாக ஏன் எடுத்துக் கொண்டுள்ளார் எனத் தெரியவில்லை. போர்த்துக்கீசியருக்கும் மரக்காயர்களுக்கும் நடந்த போரில் 40,000 பனை மரங்கள் சேதமுற்றன என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட பகையா? அல்லது குஞ்ஞாலி மரக் காயன் IV இந்துக்களை இழிவு செய்ததாக நடந்த நிகழ்ச்சியினால் ஏற்பட்ட பகையா? அல்லது அருதனக் குட்டியாரின் மூதாதையர் படை வீரர்களாயிருந்து அவ்வீரர்களுக்குக் குஞ்ஞாலியர்களால் தொல்லைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றதனால் ஏற்பட்ட பகையா? அல்லது அருதனக்குட்டியார்க்கே மரக்காயர்களால் ஏதாவது தொல்லை ஏற்பட்டதா? எனத் தெரியவில்லை.
(http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=121&products_id=121002 ‘கபாலகார சுவாமி கதைப்பாடல்’ நூலின் முன்னுரை, முனைவர் ஆ. தசரதன், தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம், சென்னை – 41)
thasarathan.a@gmail.com
- கீதாஞ்சலி (81) கடந்ததின் மீது கவலை!
- கபாலகார சுவாமி கதைப்பாடல் அறிமுகம்
- 500 டாலர் நகைச்சுவை
- SIVANANDA ORPHANAGE IN CHENNAI TAMIL NADU
- சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-4
- ஆனந்தவிகடனுக்கு என்ன நேர்ந்தது?
- விரைந்து தமிழினி வாழும்
- வானலையில் நூல் வெளியீடு
- ஜெயந்தி சங்கரின் கதை மாந்தர்கள்
- பெண்ணின் இடம் அல்லது அழியும் பூர்வீக வீடு
- தமிழ் இணைய இதழ்கள் – ஒரு முன்னோட்டம்
- கடித இலக்கியம் – 13
- கலக்… கலக்… கானிஸ்பே
- வண்ணக் கோலங்கள் !
- ஒரு கோரிக்கை
- அல்லாவை மொழியியல் ரீதியாக புரிந்துக் கொள்வது
- கண்ணகியும் ஐயப்பனும்
- கஅபா ஒரு சிறுவிளக்கம்
- மனிதகுல எதிரிகள்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 29
- பெரியபுராணம் – 96 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மரணத்தை எதிர் கொள்ளுவது பற்றி
- இன்னும் எஞ்சி இருக்கவே இருக்கிறது
- முத்தம் போதும்
- “ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”
- கணிதம் என்பது அறிவியல் மொழி
- பொய்யை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை
- இணையமில்லா இடைவெளியில் – புஸ்பராஜா, ம்!, புத்தவேடு விகாரம், மும்பாய், ·பனா.
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 6 : யோகியின் பார்வையினூடே வாழ்க்கை
- தமிழ்வழி வாழ்வு மெல்லப் போகும் பொருட்காட்சியகத்துக்கு!
- யு க ங் க ள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-9)
- க ட வு ளே !