கனடா பல்கலைக் கழகம் திரு சுந்தர ராமசாமிக்கு ‘இயல் ‘ விருது கொடுத்துக் கெளரவித்தது

This entry is part [part not set] of 16 in the series 20010602_Issue

அ முத்துலிங்கம்


மே மாதம் 25ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் திரு சுந்தர ராமசாமிக்கு ‘இயல் ‘ விருது வழங்கும் விழாவும் அதைத் தொடர்ந்து அவருடைய சிறப்பு பேச்சும் இடம் பெற்றன. இந்த விழாவை ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசிய ஆய்வு மையமும், கனடாவின் இலக்கியத் தோட்டமும் இணைந்து நடத்தின. இந்த மையத்தின் நெறியாளரும், பேராசிரியருமான நரேன் வாக்ளி அவர்கள் சுந்தர ராமசாமியை வரவேற்றார். முதல் தடவையாக தமிழ் எழுத்தாளர் ஒருவரை பேச அழைத்து கெளரவிப்பதில் தங்கள் மையம் பெருமை அடைவதாக அவர் தன் வரவேற்புரையில் கூறினார்.

பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் சுந்தர ராமசாமியை அறிமுகம் செய்து வைத்தார். அவர் தன் பேச்சில் பாரதியார், புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உலக தரத்திற்கு தன் படைப்புகளால் இடம் பிடித்தவர் சுந்தர ராமசாமி என்று கூறினார். இலக்கியத்தில் தரம், அழகு, பார்வை, ஆழம், விரிவு ஆகிய பிரக்ஞையுடன் யதார்த்தத்தின் எல்லைகளை விரித்துக்கொண்டு கவித்துவம் நிறைந்த படைப்புகளை இவர் எழுதி வருகிறார். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, சஞ்சிகை வெளியீடு ஆகிய சகல இலக்கியத் துறைகளிலும் ஈடுபட்டு தமிழில் நவீனத்துவத்தின் பன்முகத்தன்மையையும், பார்வையையும் வளர்ப்பதற்கு பெரும் பங்காற்றியவர் சுந்தர ராமசாமி என்றும் உரைத்தார்.

ரொறொன்ரோ பல்கலைக் கழக ஆங்கிலப் பேராசிரியர் செல்வா கனகநாயகம் பேசியபோது, அண்மையில் அமிதா கோஷுக்கு ஒரு விருது வழங்கியபோது அதை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும், அதன் காரணம் தான் ஆங்கிலத்தில் எழுதியதற்காக அது கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் எத்தனையோ தகுதி வாய்ந்த எழுத்தாளர்கள் ஆங்கிலமல்லாத தாய் மொழியில் எழுதி வருகிறார்களென்றும் விருது வழங்குபவர்கள் அதை கவனத்தில் எடுக்கவேண்டும் என்று சொன்னதாகவும் கூறினார். இந்த வரிசையில் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர் சுந்தர ராமசாமி. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இவர் தமிழில் எழுதி வருகிறார். இவருடைய படைப்புகள் ஆங்கிலத்தில் எழுதும் எந்த எழுத்தாளர்களின் தரத்துக்கும் குறைந்தது அல்ல. இன்றுள்ள தமிழ் எழுத்தாளர்களில் இவரே முதன்மையானவர் என்றும், சிறப்பு விருது பெறுவதற்கு முற்றிலும் தகுதியானவர் என்றும் கூறி தன் பேச்சை முடித்தார்.

பின்னர் பேராசிரியர் நரேன் வாக்ளி அவர்கள் ‘இயல் ‘ விருதை சுந்தர ராமசாமிக்கு வழங்கினார். விருதை ஏற்றுக்கொண்ட சுரா தன் ஏற்புரையை முதலில் சுருக்கமாக ஆங்கிலத்திலும் பின்னர் தமிழில் ‘என் மண்ணும், என் மொழியும் ‘ என்ற தலைப்பிலும் பேசினார்.

‘நவீன உலகில் அறியவேண்டியவை, அறிய அவசியமற்றவை என்று எதுவுமில்லை. மனிதன் எதிர்கொள்ளவேண்டிய எதிர்காலச் சவால்கள் சிக்கலாகிக் கொண்டிருக்கின்றன. புதிய அறிவுத் துறைகளைத் தேடிக்கொண்டு நாம் போகவேண்டியிருக்கிறது. அறிவின் பயணத்திற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ளவேண்டுமானால் அனைத்து அறிவுகளையும் உள்ளடக்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட மொழியை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும். புதிய அறிவுடன் இணைந்து வருவது புதிய மொழி அல்லது புதிய மொழிதான் புதிய அறிவை ஏந்தி எடுக்கிறது என்றும் சொல்லலாம்.

‘தமிழ் இலக்கியத்திற்கு இரண்டாயிரம் வருடம் நீண்ட கவிதை மரபு இருக்கிறது. இந்த மரபு பல இலக்கியச் சிகரங்களைக் கொண்டது. நவீன இலக்கியத்தில் சிறுகதைகளிலும், கவிதைகளிலும், நாவல்களிலும் நம் படைப்பாளிகளில் பலர் உலக தரத்திற்கு படைத்திருக்கின்றனர். அவற்றை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பது எம் கடமை. அப்பணிகளை முன்வைத்து செயல்படும் எந்தக் குழுவுக்கும் என்னால் ஆன உதவிகளையும், மிஞ்சியிருக்கும் என் வாழ்நாளில் கணிசமான நேரத்தையும் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது ஒதுக்குவேன். ‘ இப்படி பலத்த கையொலிக்கிடையில் திரு சுந்தர ராமசாமி கூறி தன் உரையை முடித்துக்கொண்டார்.

இந்த விழவுக்கு ரொறொன்ரோவின் முக்கிய தமிழ் எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும், வாசகர்களும், மற்றும் கனேடிய ,வட அமெரிக்கப் பல்கலைக்கழகத் தமிழ் அறிஞர்களும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வு மையத்தைச் சேர்ந்த பிறமொழிப் பேராசிரியர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.

இவ்விழாவின்போது திரு சுந்தர ராமசாமி இதுவரை எழுதிய சகல நூல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான ஒரு சிறப்பிதழை ‘காலம் ‘ பத்திரிகை வெளியிட்டிருந்தது. இதில் சுந்தர ராமசாமியின் ‘என் மண்ணும், என் மொழியும் ‘ என்ற ஏற்புரையும், சுராவின் படைப்புகள் பற்றிய இன்னும் பல கட்டுரைகளும் இடம் பெற்றிருந்தன.

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்