கண்ணகி சிலை விவகாரமும், மரபு மறு பரிசீலனைகளும்

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

ஜடாயு



கண்ணகி சிலை மறுபடியும் நிறுவப் படப் போவது பற்றி திண்ணை ஜூன் 1 இதழில் ஜோதிர்லதா கிரிஜா எழுதியிருப்பது நகைப்புக்கிடமானது. காவியங்கள் மற்றும் இலக்கியங்கள் ஒரு கலாசாரத்தின் பதிவுகள் மற்றும் குறியீடுகள். உலகின் எல்லா நாடுகளிலும் மரபைப் போற்றும் நடைமுறை இருந்தே வந்துள்ளது. கண்ணகி என்னும் காவியப்பெண்ணை இந்த மரபின் ஒரு குறியீடாகப் பார்க்க வேண்டுமே அல்லாது இக்காலத்திய நியாயங்களை வைத்துக்கொண்டு கண்ணகியை மதிப்பீடு செய்து தூற்றுவது மரபை அவமதிக்கும் செயலே. ராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம் போன்ற நம் மரபின் அழியாத முத்திரைகளைக் கேலி பேசியும், இழிவு செய்தும், தீயிட்டுக் கொளுத்தியதுமான திராவிடப் பாரம்பரியத்தில் வந்த கருணாநிதி செய்யும் உருப்படியான இந்தக் காரியம் ஆதரிக்கப் படவேண்டியதே. இதே போக்கில் அவர் மனம் திருந்தி தன்னுடைய மஞ்சள் துண்டு ரகசியத்தையும் வெளியிட்டு, இந்து மரபின் பழம்பெரும் ரிஷிகள் உருவாக்கிய யோகப் பயிற்சிகளை தினந்தோறும் கடைப்பிடிப்பதே இந்த வயதிலும் தாம் ஆரோக்கியமாக இருப்பதன் ரகசியம் என்கிற அந்த ரகசியத்தையும் வெளியிட்டு, தன் மரணப் படுக்கையில் அஜாமிளன் நாராயண நாமத்தை உச்சரித்தது போல, தன் இந்து மரபின் பல அம்சங்களைப் போற்றிய படியே இறுதிக்காலத்தை அணுகுவார் என்றும் எதிர்பார்க்கலாம். கால தேவனின் லீலைகளை யார் தான் அறிவார்?

மகாபாரதம் என்னும் ஒரு ஆழம் காண முடியாத காவியத்தில், மனித உணர்வின் பல பரிமாணங்களும், முரண்களும் காணக் கிடைக்கின்றன. அறமே வடிவான தருமனிடத்தில் இருக்கும் குறைபாடுகளையும், பொறாமை வடிவெடுத்த துரியோதனனின் நல்ல குணங்களையும் சுட்டிக் காட்ட பாரதம் தவறவில்லை. “தர்மம் எது அதர்மம் என்று கண்டு தெளியும் அறிவு மிக நுட்பமானது, பெரும் அறிவாளிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியது” என்பது பாரத்தில் வரும் வியாசர் கூற்று. தான் வாழ்ந்த காலத்தில், தருமம் என்று கருதப் பட்ட நெறியில் பிறழாது வாழ்ந்த கண்ணகி பத்தினித் தெய்வமாக வணங்கப் படுவது இதன் பொருட்டே. பீமனும், அர்ச்சுனனும், கண்ணனும், ராமனும், சீதையும், நளனும், தமயந்தியும் இதிகாச நாயர்களாக மதிக்கப் படுவதற்கு ஒரு மிகப்பெரிய கலாசாரப் பின்புலம் உள்ளது. இன்றைய நியாயங்களின் பின்னணியில் இவர்களது வாழ்வை அலசுவது நூலறிவின் ஒரு பகுதி (academic exercise) என்று சொல்லலாமே அன்றி நம் தேசிய கலாசாரத்தில் இந்தக் குறியீடுகள் உணர்த்தும் நினைவுகளையும், நெறிகளையும் இது கண்டிப்பாக மாற்றப் போவதில்லை. குறிப்பாக, பாரத நாட்டுக் கலாசாரத்தில், வரலாறும், நன்னெறிகளைப் போதிப்பதற்காக உருவான புனைவுகளும் பல இடங்களில் பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்து விட்டன. கண்ணகி என்பவள் வரலாற்றில் உண்மையாக வாழ்ந்தவளா இல்லையா என்ற விவாதங்கள் எல்லாம் கண்ணகி பற்றிய கலாசாரப் புரிதலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டும். அமெரிக்காவின் தேசிய நாயகர் ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்ந்த காலத்தில் கறுப்பர் உரிமை பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லை. அக்காலத்தில் வாழ்ந்த பல வெள்ளையர்கள் போல, அவரும் தன் பண்ணை வீட்டில் ஏகப்பட்ட கறுப்பின அடிமைகளை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அவர்களை அவர் நடத்திய விதமும் அக்காலத்திய முறைமைகளின் படியே. கறுப்பர் உரிமைப் போராட்டங்கள் தீவிரமடைந்து வந்த காலத்திற்குப்பின், இந்தச் செய்திகளை வைத்து விவாதங்கள் நடந்தன, இன்றும் நடந்து வருகின்றன. கறுப்பர்களை அடிமைகளாக நடத்திய வாஷிங்டனின் நினைவாலயங்களை அழிக்க வேண்டும் என்றெல்லாம் கூடக் கோரிக்கைகள் எழுகின்றன. அமெரிக்கர்களில் பெரும்பான்மையினர் (சில கறுப்பினத் தலைவர்கள் உட்பட) இந்தப் போக்கைக் கண்டித்தனர்.. அமெரிக்காவின் தேசியத்திற்கு வாஷிங்டன் ஆற்றிய பெரும்பணியை வைத்தே அவரை வரலாறு மதிப்பிட வேண்டுமே தவிர, இந்தப் புதிய சிந்தனைகளின் ஒளியில் அவரது ஒன்றிரண்டு நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இழிவு செய்தல் கூடாது என்ற கருத்தே பொதுவாக உள்ளது. அமெரிக்க கலாசாரத்தின், சமூகத்தின் அறிவார்ந்த சிந்தனைப் போக்கு இதில் தென்படுகிறது. நன்கு அறிந்த சமீப கால வரலாற்றின் பின்னணியிலேயே வாஷிங்டன் பற்றிய இத்தகைய மதிப்பீட்டு இருக்குமனால், வரலாறும், புனைவும் கலந்து கிடக்கும் நமது தொன்மை மரபுகளை நாம் எவ்வாறு கருதவேண்டும் என்பது புரியும்.

இந்த அடிப்படையில், நம் நாட்டில் நிகழும் முட்டாள்தனமான கலாசார மறு பரிசீலனைகளை எண்ணிப்பாருங்கள். வாலி வதம், சீதை அக்னிப் பிரவேசம் இவை பற்றிய குறிப்பை வால்மீகி எழுதாவிட்டால் நமக்கு அது தெரிந்தே இருக்காது.. இவற்றை எழுதத் துணிந்ததன் மூலம் வால்மீகி முனிவரின் அறிவுசார் நேர்மை (intellectual honesty) வெளிப்படுகிறது. இந்த ஒன்றிரண்டு விஷயங்களை வைத்துக்கொண்டு ராமனின் “நடையின் நின்றுயர் நாயகன்” என்னும் பண்பு முழுவதையுமே ராமனின் மரபினரில் சில பேர் கேள்விக்குரியதாக்குவார்கள் என்று வால்மீகியே எண்ணிப் பார்த்திருக்கமாட்டார். இதே போல கீதை கூறும் பலன்சாரா கருமம், ஞானம், யோகம், தியானம், பக்தி போன்ற அற்புதமான வாழ்வியல் தத்துவங்களையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, அதன் 700 சுலோகங்களில் 4-5 சுலோகங்கள் நால்வருண முறை பற்றிக் குறிப்பிடுவதை வைத்து அது சாதீய ஆதிக்க தத்துவம் என்றெல்லாம் பிதற்றுபவர்களும் இந்நாட்டில் இருக்கிறார்கள்.

இங்குதான் பாரத நாட்டின் சமய கலாசாரம் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய கலாசாரங்களினின்று மாறுபடுவதைக் காண்கிறோம். முரண்பாடு என்பதே இல்லாத தத்துவம் ஒன்றை முன்மொழிவதாக இந்த கலாசாரத்தை உருவாக்கிய ரிஷிகளும், முனிவர்களும், சான்றோர்களும் கூறவில்லை. இதுவே நமது மதமும், கலாசாரமும், பரிணாம வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கு வழிவகுத்தது. வைதீக மதம், வேதாந்தம், பௌத்தம், சமணம், சைவம், வைணம், சாக்தம் மற்றும் கர்ம-ஞான-பக்தி யோகங்களின் அற்புத சங்கமமாக இன்றைய இந்து ஆன்மீகப் பார்வை வளர்ச்சியடைந்திருக்கிறதென்றால், எத்தனையோ மரபு மறு ஆக்கங்களை அது செய்திருக்கிறது என்பது கண்கூடு. இவை அனைத்தும் பெரும்பாலும் வன்முறையும், சமயப்போர்களும் இன்றியே நடந்தேறின என்பதே இந்தக் கலாசாரத்தின் சிறப்பியல்பு.

எந்த ஒரு சமூகமும் வளர்ச்சியடைவதற்கு மரபு மறுசீலனை, மரபு மீறல் கண்டிப்பாக நடந்தேற வேண்டும். ஆனால், ஒவ்வொரு நாடும், சமுதாயமும், கலாசாரமும் அதைத் தனக்கே உரிய முறையில் செய்ய வேண்டும். நம் போற்றுதலுக்குரிய சுவாமி விவேகானந்தரும், மகாகவி பாரதியும் மரபு பற்றிக் கொண்டிருந்த பார்வையும் இதுவேயாகும்.

jataayu_b@yahoo.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு