கண்ணகி எதன் அடையாளம்?

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

பரிமளம்


வடமொழியின்றித் தமிழால் தனித்து இயங்க இயலாது என்றும், தமிழிலக்கியங்களும் வட இலக்கியங்களுக்குக் கடன் பட்டவை, இரண்டாந்தரமானவை என்றும் தமிழெதிர்ப்பாளர்கள் நெடுங்காலமாகக் கூறிவந்தனர். தமிழரின் தன்மானத்துக்குச் சவால்விடும் இந்தக் கருத்துகளை அவ்வப்போது பலர் எதிர்கொண்டும் வந்தனர். மொழி, இலக்கியம், சமூகம் என்னும் மும்முனையிலும் தற்காப்பு போராட்டங்கள் ஏற்பட்டன. மொழிக்களத்தில் இந்தப் போராட்டத்தின் உச்சமாக வடமொழியின்றித் தமிழ் தனித்தியங்கவல்லது என்பதை வலியுறுத்தும் எதிர்ப்பியக்கமாகத் தனித்தமிழ் இயக்கம் உருவாயிற்று. இந்தியெதிர்ப்பு இந்தப் போராட்டத்தின் மற்றோர் அங்கம்.

அதுபோலவே இலக்கியக்களத்தில் வட இலக்கியங்களின் கலப்பின்றி இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களை முன்னிறுத்தி அவற்றின் சிறப்பை விளக்கவேண்டியதாயிற்று. அப்படி முன்னிறுத்தப்பட்டவை திருக்குறளும் சிலப்பதிகாரமுமாகும். இவையிரண்டும் தமிழ்த்தேசியத்தின் அடையாள இலக்கியங்களாகத் தோற்றம்பெற்றன. `இந்து` இயக்கத்தினருக்கு ராமனும் அயோத்தியும் போல் திராவிடத் தமிழ்த்தேசிய இயக்கத்தினருக்கு திருக்குறளும் சிலம்பும் குறியீடுகளாயின. இவற்றின் சிறப்பைப் பட்டிதொட்டியெங்கும் திமுக பரப்பியது. திருக்குறளார் என்றும் சிலம்பொலி என்றும் பேச்சாளர்கள் பட்டப்பெயர் பெற்றனர். கீதையை விட குறள் எவ்வகையிலெல்லாம் சிறந்தது என்ற விளக்கங்கள் தோன்றின. என்.எஸ். கிருஷ்ணன் திமுக என்றால் திருக்குள் முன்னணிக் கழகம் என்று ஒரு படத்தில் விளக்கம் கொடுப்பார். சிலப்பதிகாரம் (மோசமான) திரைப்படமாக்கப்பட்டது. கம்பராமாயணம் சிறந்த தமிழ் இலக்கியம் என்றாலும் அது வடநாட்டிலிருந்து வந்த கதை என்னும் ஒரே காரணத்துக்காக அதைத் தாழ்த்த வேண்டியதாயிற்று. இதனாலேயே கம்பரசமும் (இரண்டு பாகங்கள்) எழுதப்பட்டது. சிலப்பதிகாரம் தமிழ்நாட்டில் நடக்கும் கதை, முத்தமிழ்க்காப்பியம், தமிழ் நாடகத்தின் வளர்ச்சிக்குச் சான்றாக உள்ள ஒரே நூல் என்னும் பற்பல சிறப்புகளுக்கு மேல் கூடுதலாகத் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியளிக்கும் ஒரு தகவலையும் (புனைவையும்?) கொண்டிருந்தது. ஒரு தமிழரசன் இமயம்வரை சென்று வடவரை வென்று அவர்கள் தலையில் கல்லைச் சுமத்திக் கொண்டுவந்து கண்ணகிக்குச் சிலை அமைத்தான் என்பதுதான் அச்செய்தி. தமிழ்நாடு இப்போதிருப்பதுபோல் எப்போதுமே வடநாட்டுக்கு அடிமையாக இருந்ததில்லை. தமிழரசர்களும் வடநாட்டை வென்றிருக்கிறார்கள் என்பது மனவூக்கத்தைத் தரும் ஒரு செய்தியல்லவா! அண்ணாதுரை செங்குட்டுவனின் வடநாட்டு வெற்றியை நாடகமாக எழுதினார். மேடைகளில் நடிக்கப்பெற்று அது நல்ல வரவேற்பைப் பெற்றது. கனக விசயரின் தலையில்வைத்துக் கல்லைக்கொண்டு வந்த சிறப்பை எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் பாடுவார்.

திமுக தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்ததும் தமிழகத்தில் அப்போதிருந்த மூன்று பல்கலைக்கழகங்களிலும் திருக்குறள் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. பிறகு பூம்புகாரும் கண்ணகி சிலையும் வள்ளுவர் கோட்டமும் ஏற்படுத்தப்பட்டன. கண்ணகி சிலை சிலப்பதிகாரத்தையும், சிலப்பதிகாரத்தின் உச்சக்காட்சியையும், செங்குட்டுவனின் வடநாட்டு வெற்றியையும் சித்திரிக்கும் ஒரு குறியீடு. அதில் பெண்ணியத்தைத் தேட வேண்டியதில்லை.

இராமயணம் இந்தியில் நாடகத்தொடராக வந்து வெற்றிபெற்ற நேரத்தில் சிலப்பதிகாரத்தையும் அவ்வாறே ஒரு நாடகத்தொடராக்கி ஒளிபரப்பவேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டு மறக்கப்பட்டது. திருக்குறளைத் தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கை இன்னும் அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது.

***

வடநாட்டுக்கூறுகள் தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதற்கொண்டு தமிழிலக்கியங்கள் பலவற்றிலும், சிலப்பதிகாரம் உட்பட, காணப்படுகின்றன.

இன்று தமிழரின் தேசிய இலக்கியமாகத் திருக்குறள் மட்டுமே திகழ்கிறது.

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்