கண்ணகியின் கற்பு சாஸ்திரம்..?

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

புதியமாதவி, மும்பை


கவிப்பேரரசு வைரமுத்து முன்னிலையில் மும்பை திருவள்ளுவர் கலையரங்கில்
19-01-2002ல் தமிழினம் என்ற தலைப்பில் ஒரு கவிதை வாசித்தேன்.

அந்தக் கவிதையிலிருந்து சிலவரிகள்:

காட்சிப் பொருளல்ல -என்
கண்ணகியின் சிலை -அவள்
நீதியைக் காக்கும் பொருள்

அவள் சிலம்புப் பரல்களைத்
தொட்டவன் வாழ்ந்தில்லை -இந்த
தொடர்கதை முடிவதில்லை

பாண்டியன் குடை உடைக்காத
கண்ணகியின் பீடத்தை
லாரியின் எடை உடைத்ததா?
தமிழன் என்ன ஏமாளியா?

வாஸ்த்து சாஸ்திரத்திற்கு
வாழ்க்கைப் பட்டவர்கள்
கண்ணகியின் கற்பு சாஸ்திரத்தைக்
கற்றிருக்க நியாயமில்லை”

அது என்ன கண்ணகியின் கற்பு சாஸ்திரம்?

கணவன் தன்னை விட்டு அகலாத காதலுடன் காலமெல்லாம் வாழவேண்டும் என்று அன்றும் இன்றும் பெண்ணின் எதிர்பார்ப்புகள்.
அதற்காக எதையும் செய்யத் துணியும் பெண்களை இன்றும் நாம் காணலாம். பூசைகள், மந்திரங்கள், விரதங்கள் என்று பெண்கள் மதவழிபட்ட பல சடங்குகளைச் செய்வது எப்போதும் எல்லா மதங்களிலும் கணவனையும் அவன் காதலையும் எல்லா பிறவிகளிலும் பெற வேண்டும் என்ற ஒரே புள்ளியைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அன்றைய சமுதாயத்தில் கண்ணகியின் சில செயல்பாடுகளை எண்ணிப் பார்க்கும் போது இன்றைக்கு அவளைப் பற்றி விமர்சிக்கும் முற்போக்கு கருத்துகளுக்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் செய்கின்ற விதண்டாவாதம் புரியவரும்.

“பொய்கையில் நீராடி பூசைகள் செய்தால் கணவன் திரும்பி வந்துவிடுவான்” என்று மத நம்பிக்கையுள்ள கருத்தை அவள் முன் வைக்கும்போது அதிகம் பேசாத கண்ணகி ஒற்றைச் சொல்லில் மறுக்கிறாள்:

“பீடன்று”

அப்படிப்பட்ட பொய்கை நீராடலும் பூசைகளும்தான் என் கணவனை என்னிடம் கொண்டு சேர்க்கும் என்றால் அதில் எனக்கு உடன்பாடில்லை, எனக்குச் சிறப்பில்லை, அப்படிப்பட்ட மத நம்பிக்கைகளில் தரப்படும் பிச்சைக்காதல் எனக்குத் தேவையில்லை…. அன்றைக்கே அப்படிப் பேசியவள் கண்ணகி.. !!

நினைத்து பார்க்க பார்க்க எத்தனைச் செய்திகளை எப்படிப் பட்ட முற்போக்கு கருத்தை – பெண்ணியத்தின் – காதல் மனைவியின்
குடும்ப வாழ்வின் – மிகச் சிறந்தக் கருத்தை தன் ஒற்றைச் சொல்லில் உலகுக்கு உணர்த்தி இருக்கிறாள் கண்ணகி.

கண்ணகி சொல்லிய “பீடன்று” என்ற சொல்லுடன் திருவள்ளுவர் சொல்லிய ஒரு திருக்குறளை, பலரும் பெண்ணிய தளத்தில் திருவள்ளுவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் ஒரு குறளை மறுவாசிப்பு செய்யலாம்.

“தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

கணவனின் அன்பை, காதலை வேண்டி தெய்வங்கள் தொழ மாட்டாள், கணவனை மட்டுமே நம்பும் பெண் எப்படிப் பட்டவள் என்றால்
மழை வேண்டும் போது பெய்தால் எத்துணை மகிழ்ச்சியைத் தருமோ அத்துணை மகிழ்ச்சியைத் தருபவள்.

அது என்ன மழை வேண்டும் போது பெய்தால் மகிழ்ச்சி.. லகான் திரைப்படம் பார்த்த்துக் கொண்டிருந்தப் போது
கரிய மேகங்களைக் கண்டவுடன் மழை வரப்போகிறது என்று அந்த வறண்ட நிலத்தின் மக்கள் பாடும் பாடல் காட்சியைப்
நினைவில் கொண்டு வாருங்கள். ” பெய்யெனப் பெய்யும் மழை” எவ்வளவு இன்பமானது என்பதைக் காட்சிப் படுத்தியதைப் பார்க்கும் போது எவரும் புரிந்து கொள்ள முடியும்.

திருவள்ளுவர் இப்படித் தான் அர்த்தப் படுத்திக் கொண்டு எழுதி இருக்கிறார் என்று நான் வாதிடவில்லை. ஆனால் மறுவாசிப்பு தேவை என்பதையும் அதை ஒவ்வொருவரும் வாசிக்கும் முறை அவரவரின் மறுவாசிப்பின் நோக்கத்தைப் புரியவைக்கும் என்றும் நம்புகிறேன்.

கண்ணகி மதுரையை எரித்ததை இன்று கேள்விக்குறியாக்கும் சிலர் நம் காலத்தில் டில்லியில் அன்னை இந்திராகாந்தி அவர்கள் சுடப்பட்டு இறந்தப்போது அதற்கு காரணமாக ஒட்டுமொத்த சீக்கீய சமுதாயத்தையும் கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான சீக்கியர்களை இந்தியாவின் தலைநகரில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்த இரத்தக் கறைப் படிந்த நாட்களையும் மறந்திருக்க முடியாது. இதைச் செய்தியாக்கிய புனைவுகள் இல்லாத செய்தித்தளத்தில் கூட ” அன்னை இந்திராவைக் கொன்ற துப்பாக்கி 3000 சீக்கியர்களையும் கொன்று குவித்துவிட்டது. தலைநகரில் ரத்த ஆறு” என்று எழுதியிருந்ததை மறந்திருக்க முடியாது.

கண்ணகியின் ” தேராமன்னா” நிகழ்வுக்குப் பின் மன்னன் இறந்துவிடுகிறான், அரசியும் இறந்துவிடுகிறாள்.. அதுவும் புகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணால் இவ்வளவும் நடந்துவிட்டது என்றால் அன்றைய மதுரையில் எப்படி எல்லாம் கலவரங்கள் நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். நாடகக் காப்பியம் எழுதிய இளங்கோவடிகள் சிலப் புனைவுகளுடன்இந்தச் செய்தியை எழுதிச் செல்கிறார். அவ்வளவுதான்.

இளங்கோவடிகள் சொல்லியிருக்கும் எல்லாவற்றையும் இப்படி வரிக்கு வரி நேரடிப் பொருள் கொண்டு முற்போக்கு கொடிப் பிடித்தால் கண்ணகி அழைத்துச் செல்ல மலையடிவாரத்தில் ஆகாயவிமானம் வந்து இறங்கியதையும் அவள் கணவனுடன் ஏறியதையும் நம்ப வேண்டி இருக்கும். !!

சென்ற வாரம் திண்ணையில் திரு சின்னக்கருப்பன் அவர்கள் எழுதியிருந்த இந்த வரிகளை மீண்டும்
வாசிக்கிறேன்.

“புராணம் ஒரு வரலாற்று உண்மையை சொல்வதில்லை என்பதை நம் மரபு திருப்பித்திருப்பி சொல்கிறது. அதனை
நாம் கிஞ்சித்தேனும் உணராது, மீண்டும் மீண்டும் விதண்டாவாத திறமையையே காட்டுகிறோம்.

திண்ணை ஆசிரியர் கோ ராஜாராம் ஒரு முறை பேசும்போது, “நாம் வரலாற்றை புராணம் பண்ணுகிறோம்,
மேற்கத்தியர்கள் புராணத்தை வரலாறு பண்ணுகிறார்கள்” என்று சொன்னார்.

நன்றி.
———————

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை