சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
பாயுமொளி நீ எனக்கு! பார்க்கும் விழி நான் உனக்கு!
தூயசுடர் வானொளியே! ..ஞான ஒளி வீசுதடி!
வெண்ணிலவு நீ எனக்கு! ..
கண்ணின் மணி போன்றவளே! ..
காணுமிடம் தோறும் நின்றன்,
கண்ணின் ஒளி வீசுதடி! ..
மகாகவி பாரதியார்
‘ஒரு நியதி முறையை நிலைப்படுத்துவதற்கு முன்பு, இரண்டு அல்லது மூன்று தரம் பயிற்சி செய்து, ஒரேவித விளைவுகளை உண்டாக்குகின்றதா என்று முதலில் ஆழ்ந்து ஆராய வேண்டும். ‘
லியோனார்டோ டவின்ஸி (1452-1519)
‘லேஸர் அறுவை முறை கண்ணோய்த் தீர்ப்புக்கு மகத்தானதோர் கண்மருத்துவச் சிகிட்சையாகும். அமெரிக்காவில் இந்த அறுவை முறையில் பயிற்சி பெற்றவர் இப்போது 20% மருத்துவ டாக்டர்களே. ‘
டாக்டர் ஜேம்ஸ் ஸால்ஸ் [James J. Salz M.D. University of Southern California (1999)]
‘மெதுவாகக் குணமடைவோரும், நீண்ட கால மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரும், கண்விழி விறைப்பு நோய், நீரிழிவு நோய் (Glaucoma, Diabetes) உள்ளவரும், கர்ப்பப் பெண்டிரும் லேஸர் அறுவைக்குத் தகுதி பெற்றவர் அல்லர். ஆதலால்தான் அறுவைச் சிகிட்சைக்கு முன்பு, ஒருவருக்கு ஆழ்ந்த மருத்துவச் சோதனை தேவைப்படுகிறது. ‘
மேரி ஆன் டியூக் [Mary Ann Duke M.D. (Opththalmologist), Potomac, Maryland, USA]
‘ஒரு பில்லியன் டாலர் பணமுடிப்பு, தெளிவான பூரணக் கண்ணொளி அளிப்பு இவை இரண்டில் நான் எதனைத் தேர்ந்தெடுப்பேன் என்று நீ நினைக்கிறாய் ? ‘
டாக்டர். ரங்கசாமி ஸ்ரீனிவாசன் [Inventor of Laser Eye Surgery Device (Times News Network, Nov. 2003)]
முன்னுரை: இது ஒரு மருத்துவக் கட்டுரை இல்லை. குளிர்ச்சியான லேஸர் ஒளிக்கதிரைப் பயன்படுத்தி அறுவை முறையில் பழுதுபட்ட கண்ணொளி செம்மைப்பாடு செய்வதை எடுத்துக் காட்டுகிறது இந்த கட்டுரை. நானொரு மருத்துவத் துறையைச் சேர்ந்தவன் அல்லன். பல துறைகளில் பயன்படும் லேஸர் ஒளிக்கதிர் மருத்துவப் பணிக்கும், குறிப்பாக கண்ணொளி மீட்சிக்கு அறுவை மூலம் உதவுவதை ஆழமாய் விளக்காமல் மேலாக மட்டுமே எடுத்துக் கூறி யிருக்கிறேன். கண்ணொளிப் பிரச்சனைகளுக்கு லேஸர் அறுவை முறை ஒன்றுதான் உகந்தது என்று சுட்டிக் காட்டவோ அல்லது கண்ணோய் உற்றோருக்கு ஆலோசனை கூறுவதோ என் கட்டுரையின் நோக்கமில்லை. கண்ணொளிப் பிரச்சனை உள்ளவர் தகுந்த கண்ணொளி மருத்துவ நிபுணரை அணுகி, தமது பழுதுக்கேற்ற சிகிட்சை முறைகளை அறிந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
லாஸ் ஏஞ்சலஸில் வாழும் ஜெரி கோல்டுஸ்டைனின் [Jeri Goldstein] கண்களில் ஒட்டு லென்ஸ் ஆடி [Contact Lens] இல்லாவிட்டால் உருவங்கள் யாவும் மங்கலாகத்தான் தெரியும். 35 வருடங்களாக ஒட்டு ஆடிகளைக் கண்களுக்குள் இட்டுக் கொண்டிருந்தவர், தனது 49 வயதில் ஒளித்திரிபு கண்ணறுவைச் சிகிட்சையைச் [Refractive Eye Surgery] செய்து கொண்டதும் மாபெரும் மாறுதலைக் கண்டார். அவருக்கு லேஸர் அறுவை செய்தவர் புகழ் பெற்ற கண்மருத்துவர் ஜேம்ஸ் சால்ஸ் என்பவர். கண்ணில் ஏற்படும் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வைப் பிறழ்ச்சி [Myopia, Hyperopia, Astigmatism] போன்ற ஒளித்திரிபுப் பழுதுகளைச் செப்பனிட அம்முறை பயன்படுத்தப் படுகிறது. பல்வேறு வழிகளில் ஒளித்திரிபு அறுவை சிகிட்சைகள் செய்யப்பட்டாலும், லேஸர் அறுவை முறை ஒன்றே விரைவில் செய்து முடிப்பதாகவும், முற்போக்கான நுணுக்கமுறை யென்றும் அமெரிக்க கண்ணொளிப் பேரவை [American Academy of Opththalmology, San Francisco] குறிப்பிட்டுக் கூறுகிறது. அத்துடன் லேஸர் அறுவை ஒன்றுதான் ஈடு இணையற்ற நுட்பத்தில் துல்லியதான, முன்னோடி யூகிப்புக்கு [Predictable Surgery] ஏற்றதான முறை என்று கண்ணோய் நிபுணர்கள் சொல்கிறார்கள். உலகெங்கும் நாளுக்கு நாள் லேஸர் அறுவை முறைகள் செங்குத்து வளைவு உயர்ச்சியில் பெருகிப் [Exponential Growth] பலருக்குக் கண்ணொளி அளித்து வருகின்றன. 2004 ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் லேஸர் அறுவைச் சிகிட்சைகள் 3.6 மில்லியன் எண்ணிக்கையைக் கடந்து விட்டன என்று அறியப்படுகிறது.
ஸ்ரீனிவாசன் படைத்த எக்ஸைமர் லேஸரின் விபரம்
டாக்டர். ஆர். ஸ்ரீனிவாசன் கண்டுபிடித்த தட்ப லேஸர் அறுவைச் சாதனத்தில் மின்சார ஓட்டம் ஆர்கான், ஃபுளூரைடு வாயுக்கள் [Argon & Fluoride Gases] மூலமாகச் செலுத்தப் பட்டது. மின்னோட்டத்தில் வாயுக்களின் அணுக்கள் கொந்தளிப் படைந்து, புறவூதாக் கற்றையில் [Ultraviolet Light Spectrum] ஒளிக்கதிர்களை [Photons] வெளியாக்கியது. இம்முறையில் நூதனமாக ஒளிக்கதிர் லென்ஸ் ஆடித் தொகுப்புகளின் [Lens Package] ஊடாகச் செல்வதால், ஒளியூசி மிக்க நுட்பமாகத் துல்லியமாகக் கட்டுப்படுத்தப் பட்டு குவியும்படிச் செய்யப்படுகிறது. அந்த ஊசி ஒளிமூலம் மனித மயிரை கீறிப் பிளக்கும் போது, எத்தனை துல்லியமாகச் செய்ய முடிகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். கூந்தல் கொத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட மயிரைத் துண்டாக்க முடியும்; இரண்டாய், மூன்றாய்ப் பிளக்க முடியும். வெப்ப மில்லாமல் குளிர்ந்த ஒளிக்கதிர் ஓட்டத்தை இச்சாதனத்தின் மூலம் பெறுவதால், கண்ணின் மென்மையான கார்னியல் தசைப் பிண்டங்கள் எரிக்கப் படுவதில்லை. மேலும் கரிக்கப் படுவதில்லை!
இம்முறையில் வெளிவரும் லேஸர் ஒளிக்கதிரில் சில குறைபாடுகளும் உள்ளன. ஒளிக்கற்றை தசைப் பகுதிகளைத் தாக்கும் போது தட்ப, வெப்பக் கதிர்த்துளிகள் இருந்தால், கார்னியா ஆடியைச் செப்பனிடும் போது சீரான முறையில் செதுக்கப் படாமல், இடையிடையே ‘திட்டுகள் ‘ எனப்படும் பழுதுகளை [Island Faults] விளைவித்து விடும்! பிற்காலத்தில் மேம்படுத்தப்பட்ட எக்ஸைமர் ஒளிக்கதிர்களில், திட்டுகளைச் சமப்படுத்த வசதி செய்யப் பட்டிருக்கிறது. முக்கியமாக மூன்று வித எக்ஸைமர் லேஸர் முறைகள் உள்ளன. 1. PRK லேஸர் கண்ணறுவை [Photo-Refractive Keratectomy (PRK)] 2. LASIK லேஸர் கண்ணறுவை [Laser Assisted In-situ Keratomileusis]. 3. மூன்றாவது முறையான PTK லேஸர் கண்ணறுவை [Photo-Therapeutic Keratectomy] கார்னியா கீறல் [Corneal Erosion], கார்னியல் கறை [Corneal Scar], கார்னியா சீரழிவு [Corneal Dystophy] போன்ற கண் பழுதுகளைச் செப்பனிடலாம்.
1. LASIK முறையுடன் ஒப்பிடும் போது, PRK அறுவை முறையில் பாதக எதிர்பார்ப்புகள் குறைவு [Less Risky Surgery]. மேலும் அறுவை நிபுணருக்கு LASIK செய்யும் கைமுறை சிரமமானது; சிக்கலானது.
2. PRK அறுவை முறைகள் மின்கணனி உதவியில் பேரளவு எண்ணிக்கையில் [> 4 பில்லியன்] செய்யப் படுவதால், அவற்றின் வெற்றி, தோல்விகள், பிரச்சனைகள், பலாபலன்கள் நிறைய பதிவாகி உள்ளன.
3. LASIK அறுவை முறையில் ஒருவர் கண்ணொளி மீட்சியைச் சீக்கிரமே பெற முடிகிறது.
4. ஒருநாள் விட்டு அடுத்தடுத்து, ஒருவருக்கு இரண்டு கண்களிலும் LASIK அறுவைச் சிகிட்சை செய்ய முடியும். ஆனால் PRK அறுவை அடுத்த கண்ணில் புரிய மூன்று வாரங்கள் ஒருவர் பொறுக்க வேண்டும்.
5. PRK அறுவை முறைக்கு ஆகும் செலவு அமெரிக்காவில்: ஒரு கண்ணுக்கு 1500-2000 டாலர் (2004 நிதி மதிப்பு). LASIK அறுவைக்கு ஆகும் செலவு இதைவிடக் கூடுதலானது.
PRK லேஸர் அறுவை முறை:
கண்ணறுவை செய்வதற்கு முன்பு, கண்ணில் உள்ள பார்வைப் பழுதின் அளவு கருவி மூலம் கணிக்கப்பட்டு, கண்ணின் தளப்படம் வரையப் படுகிறது. இப்படத்திலிருந்தும், பழுதின் அளவிலிருந்தும் கார்னியா எவ்விதம் செதுக்கப் படவேண்டும் என்று கணக்கிடப்பட்டு, அந்த விபரம் மின்கணனியில் செலுத்தப் படுகிறது. PRK லேஸர் கண்ணறுவை வெளிப்புற நோயாளியிக்குச் [Outpatient] செய்யப்படும் சிகிட்சை. கண் முடக்கத் துளிகளைக் [Anesthetic Eye Drops] கண்ணிலிட்டு செய்யப்படும் கண்ணறுவை அது. மின்கணனி கட்டுப்படுத்தும் குளிர்ந்த புறவூதா ஒளிக்கற்றை [Computer Controlled Cool Ultraviolet Light Beam] கண்ணில் உள்ள கார்னியா தட்டில் [Cornea] மிக்க நுண்ணிய தசைத் துணுக்குகளை அகற்றி, வெகு மென்மையாகச் செதுக்குகிறது. ஊசி முனை ஒளிக்கற்றை மிக நுட்பமாய் மயிரிழையில் கூடப் பள்ளம் பறித்து, அதை உடைத்து விடாமல் பணியை முடிக்கும் திறன் கொண்டது. ஒவ்வொரு லேஸர் துடிப்பும் [Laser Pulse] ஓரங்குலத்தில் 39 மில்லியன் பகுதியில் ஒரு பகுதி துணுக்குச் சதையை, 12 பில்லியன்த் பின்ன விநாடியில் [39 millionth of an Inch of tissue is removed in 12 billionth of a second] அறுத்து விடுகிறது! சில நிமிடங்களில் அறுவை முடிந்து, கண் நோயாளி ஒன்று அல்லது மூன்று நாட்களில் வீட்டுக்குத் திரும்புவார்.
அமெரிக்க மருத்துவ ஆணையகத்தின் [(FDA) Federal Drug Agency] கூற்றுப்படி PRK லேஸர் அறுவை செய்தவர்கள் 5% கண்ணில் கண்ணாடி போட்டுக் கொள்வதாகவும், 15% எப்போதாவது அணிந்து கொள்கிறார் என்றும் அறியப்படுகின்றது. சிகிட்சைக்குப் பின் பலர் கார்னியா ஒளிமங்கலில் [Cornea Haze following the Surgery] நடமாடுகிறார் என்றும், அது பொதுவாக கண் குணமுறும் சமயத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தற்காலியப் பழுது என்றும் கூறப்படுகிறது. அந்த கண்மங்கல் இறுதி குணமாகும் கண்ணை ஒன்றும் செய்வதில்லை. அறுவை முடிந்தவர் சிலர் வெளிச்சமுள்ள விளக்கில் அதன் பிரதிபலிப்பையும், ஒளிவட்டத்தையும் [Glare & Halo] கண்டிருக்கிறார். சுமார் ஆறு மாதங்களாக இந்த பார்வைக் கோளாறுகள் சிலருக்கு வந்தும், போயும் இருக்கலாம். அதே சமயத்தில் 5% கண்ணோயாளிகளுக்கு, கண்ணாடி அணியாதிருந்தால் செப்பனிட்ட கண்ணொளி முன்னதைவிட மோசமாகப் போனது என்று அறியப்படுகிறது.
LASIK லேஸர் அறுவை முறை:
லேஸிக் கண்ணறுவை முறையானது PRK அறுவைச் சிகிட்சையைக் காட்டிலும் மிகச் சிரமமானது, சிக்கலானது. எல்லா விதமான கிட்டப் பார்வைப் [Myopia] பழுதுகளுக்கும் அம்முறை பயன்படுகிறது. அறுவை மருத்துவர் ஒரு கத்தியால் [Knife, called Microkerotome] முதலில் கார்னியல் தளத்தின் தசை மூடியை அறுத்து நீக்கி, அதன் கீழே உள்ள பகுதியில் லேஸர் அறுவை செய்து, பின்னால் மூடியை மீண்டும் பழைய பகுதியில் நிரப்புகிறார்.
PRK அறுவை முறையில் பெரும்பான்மையான வேலைகளை யந்திரமே செய்கிறது. ஆனால் LASIK சிகிட்சையில் கண் மருத்துவரின் கைத்திறமும் அறுவை செய்யத் தேவைப் படுகிறது. ‘சென்ற ஆண்டு (1998)அமெரிக்கா நாட்டில் 40%-45% ஒளித்திரிபு அறுவைகள் (சுமார்: 80,000) லேஸிக் முறையில்தான் செய்யப் பட்டுள்ளன ‘ என்று கண் மருத்துவ நிபுணர் கென் டெய்லர் (Vice President of Arthur D. Little Inc. Cambridge, Mass) கூறுகிறார்.
லேஸிக் அறுவை முறையின் மேம்பாடுகள் யாவை ? மிகத் தீவிர ஒளித்திரிபு கண் பழுதுகளுக்கு லேஸிக் முறையே செப்பனிடச் சிறந்தது என்று சில கண் மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள். PRK அறுவை முறையை விட, லேஸிக் அறுவை சீக்கிரம் குணமாகும் சிகிட்சை என்றும் கூறுகிறார்கள். லேஸிக் அறுவைக்குப் பின் நோயாளிகள் உடனே காட்சி தெளிந்து காரோட்ட முடியும் என்றும், ஒரு வாரத்திற்குள் கண் பார்வை பூரணத் தெளிவடையும் என்றும் சொல்கிறார்கள்.
குளவ்கோமா என்னும் கண்விழி விறைப்பு நோய் [Glaucoma]
குளவ்கோமா என்னும் குழுக் கண்ணோய்கள் [A Group of Eye Diseases] கண்களின் ஒளி நரம்புகளைப் பாதகப் படுத்தி முடிவில் கண்களைக் குருடாக்கும் கொடிய தன்மை கொண்டவை. அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் ‘திறவுக் கோண குளவ்கோமா ‘ [Open-Angle Glaucoma] சுமார் 3 மில்லியன் பேரைப் பாதித்திருப்பதாகவும், அவர்களில் பாதிப் பேருக்குக் குளவ்கோமா நோயுள்ளது தெரியாமல் இருப்பதாகவும் அறியப்படுகிறது! ஆரம்ப காலங்களில் குளவ்கோமா நோயால் எந்த சிரமோ, வலியோ தெரிவதில்லை. காலம் கடந்து போகப் போக உருவம் முழுமையாகத் தெரியாமல் ஒருவரது கண்பார்வையைக் குன்றச் செய்கிறது. ஆரம்ப நிலையிலே அது குணப்படுத்தப் பட்டால், கண்பார்வை இழப்பினின்றும், குருடாய்ப் போவதிலிருந்தும் கண்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பலருக்குக் கண்ணுக்குள் அழுத்தம் மிகையாகி குளவ்கோமா நோய் உண்டாகுகிறது. கண் நரம்பு என்பது ஒரு மில்லியன் நரம்பு நார்கள் சேர்ந்த நரம்புக் கட்டு. அது கண்ணுக்குப் பின்னால் இருக்கும் ரெடினா [Retina] என்னும் ஒளி உணர்வுள்ள தசை [Light Sensitive Tissue] கொண்ட கண்திரையோடு மூளைக்கு இணைப்பை உண்டாக்குகிறது. நல்ல கண்ணொளி உள்ளவருக்கு நலமிக்க கண் நரம்புகள் அமைந்திருக்கும். கண்ணின் உட்கோளத்தில் பளிங்குபோல் தூய ஒருவிதத் திரவம் நிரம்பி, கண் தசைகளுக்குச் செழிப்பை உண்டாக்குகிறது. திரவம் குறிப்பிட்ட கோணத்தில் ஏறும் போது சல்லடை வழியாக வடிகட்டப் பட்டுத் தொடர்ந்து ஓடிச் சுற்றி வருகிறது. திறந்த கோண குளவ்கோமா நோயில் திரவத்தை வழியச் செய்யும் கோணம், சீராக இல்லாமல் திறந்த மடமாய் உள்ளது.
குளவ்கோமா நோயைக் குணப்படுத்த முடியுமா ? ஆம் முடியும். சிலருக்குக் கண்ணோய் முற்றிலிம் குணமாகா விட்டாலும், நோயைப் பரவ விடாமல் கட்டுப் படுத்த முடியும். கண்ணின் உட்கோள அழுத்தம் லேஸர் முறையால் சீராக்கப்பட வேண்டும். முதலில் மருந்து சிகிட்சை செய்த பிறகுதான், லேஸர் அறுவை முறையில் [Laser Trabeculoplasty] கண் கோளத்தில் உள்ள திரவத்தை வழிய வைத்து வெளியேற்ற வேண்டும். பலவித குளவ்கோமா நோய்களுக்கு வெவ்வேறான சீரமைப்பு முறைகள் இருப்பதால் மற்ற விளக்கங்களை விவரிக்காமல், அவற்றைக் கண் மருத்துவரிடம் விட்டுவிட்டு இத்துடன் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
(முற்றும்)
****
தகவல்:
1. History of Laser Eye Surgery [www.LaserSurgeryForEyes.com] [2002]
2. Crossing the Final Frontier By: Dr. S.K.Rao & Dr. Prema Padmanabhan ( ‘The Hindu ‘ Dec 16, 2001)
3. Dr. Rangaswamy Srinivasan, Medical Center, Dept of Ophthalmology, 2002 Inventors Hall of Fame (Jan 10, 2005)
4. Seeing A New Path: Pioneer of Laser Surgery Honoured for Application By: Martha J. Heil (2003)
5. They Also Deserve Laurels, Times News Network, The Times of India (Nov 23, 2003)
6. Dr. C. Kumar Patel Inventor of the Week: Archive [http://web.mit.edu/invent/iow/patel.html] (Jan 2000)
7. Schawlow & Townes Invent the Laser, The Invention of the Laser at Bell ‘s Lab [www.bell-labs.com/history/laser/] (1998)
8. Laser Eye Surgery: Is It Worth Looking Into ? By Carol Lewis [April 1999]
9. What is the Excimer Laser ? WebSite Reports.
10 Glaucoma Can Lead to Damage to Eye ‘s Optic Nerve & result in Blindness. What are the Symptoms of Glaucoma ?
11. Glaucoma -New Family Medical Guide [1987]
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 25, 2005)]
- தீக்களம்
- திணித்தல்
- இயக்கம்…
- கேட்பதெல்லாம் தந்திடுவேன்..
- திருப்பதி வரிசை
- அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தருக்கு பாராட்டு விழா..
- கடிதம்
- ரஜினி – ஷங்கர் ‘சிவாஜி ‘ தேறுமா… ?
- வறுத்த வறுகடலை – 1
- மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தடா! (மதிவண்ணன் கவிதைகளைப் பற்றி ஒரு கடிந்துரை)
- வாழ்க்கைக் கவிஞன் வல்லிக்கண்ணன்
- கண்களைச் செப்பனிட தட்ப ஒளிக்கதிர் லேஸர்அறுவை முறைகள் -5 (Eye Surgery with Cool Laser Beams Part 2)
- நவீனங்களின் சாம்பல்
- பூனைகள்
- தீதும் நன்றும்
- கீதாஞ்சலி (37) என்னுள் விடப்பட்ட ஒன்று ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 53
- மக்கள் மேம்பாடு !
- தோழியின் வீடு
- அன்புள்ள ஆண்டவருக்கு
- ஆயினும் – இரண்டு கவிதைகள்
- முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவச் சூழலியற் சிக்கல் – இறால் பண்ணைகள்; (Prawn Farms)
- நடை – சுருளிப்பேட்டையில் சுருண்டோம் – பாகம் 2
- ஒரு விசாரணையின் நூற்றாண்டு
- தேவை : நீதி வழுவா நெறிமுறை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-5)
- என்னுரை
- ஆண்மகன்