கணினிக்கட்டுரைகள் 13 – இணையத்தில் இயங்குபக்கங்களை(Dynamic Pages) உருவாக்கப் பயன்படும் சேவையர் பக்க நிரலமைவு (Server Side Progra

This entry is part [part not set] of 10 in the series 20001104_Issue

மா.பரமேஸ்வரன்


இஃது வலைத்தளம் அமைப்பவர்கள் அனைவரும் அறிந்திருக்கவேண்டிய ஒன்று. நம்மில் பலர் அவரவர்களுக்கு என வலைத்தளங்கள் அமைத்திருக்கின்றனர். அவற்றில் கட்டுரைகள், பலதரப்பட்ட சிந்தனைகள், கவிதைகள், பிற சிறந்த அல்லது சம்பந்தப்பட்ட வலைத்தளங்களுக்கான இணைப்புகள் என பக்கங்கள் ஒழுங்குற அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்தும் HTML எனப்படும் உயர்/தொடர் எழுத்துக்குறிப்பிடு மொழியில் எழுதப்பட்டுள்ளன இவற்றை, இத்தகைய வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் எளிது இவற்றிற்கு என்றே நிறைய மென்பொருள்கள் வழக்கில் இருக்கின்றன அவற்றைப்பயன்படுத்தி பார்ப்பதற்கு அழகிய பயன்படுத்துவதற்கு எளிய பக்கங்களை நமது வலைத்தளத்தில் நாமே அமைக்க முடியும். இவ்வாறு HTML என்னும் மொழியை மட்டும் பயன்படுத்திப் பக்கங்கள் அமைக்கப்படுமானால் அப்பக்கங்கள் நிலையான பக்கங்களாக இருப்பதுடன் அவற்றால், பயன்படுத்துபவரோடு அதாவது அந்தப்பக்கத்திற்கு வருகைதந்து அவற்றைப் பார்வையிடுபவரோடு எந்த தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாது. அவைகளால் தங்களிடம் இருக்கும் தகவல்களை பிறருக்கு அளிக்கமுடியுமேயொழிய பிறரிடம் ஏதேனும் தகவல்களைப்பெற்று அதனை தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளவும் முடியாது நிலையான பக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக பல பக்கங்களைத தரலாம். பலர் அவரவர்களுக்கு என உருவாக்கி இருக்கும் பக்கங்கள் அவரவர்களது கணினியில் வடிவமைக்கப்பட்டு அப்படியே வலையேற்றம் செய்யப்படுகின்றன இவை கடைசி வரை எந்தவித மாற்றமும் இல்லாமல் வேண்டிய பொழுது தகவல்களைத் வேண்டுவோருக்கு தந்துகொண்டிருக்கும். அவற்றில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டும் எனில் அதன் உரிமையாளர் அப்பக்கங்களை எடுத்து மாற்றங்களைச்செய்து மீண்டும் வலையேற்றம் செய்யவேண்டும்.

ஆனால் என்னுடைய வலைப்பக்கம் அவ்வாறு இல்லாமல் பயன்படுத்துபவருக்கு ஏற்ப தகவல்களைத் தரவேண்டும். அவரை ஏற்கனவே சந்தித்திருந்தால் அவரை ஞாபகம் வைத்துக்கொண்டு குசலம் விசாரிக்கவேண்டும் ‘ திரு. பரமேஸ்வரன் எப்படி இருக்கிறீர்கள் ? தாங்கள் இங்கு கடந்த 5-5-2000 அன்று இங்கு விஜயம் செய்திருந்தீர்கள் மீண்டும் வருகைதந்ததற்கு நன்றி ‘ என்று முகமன் கூறி வரவேற்கவேண்டும் யாரெல்லாம் அந்த வலைத்தளத்திற்கு வருகிறார்களோ அவர்கள் அனைவரையும் இவ்வாறு உபசரிக்கவேண்டும் அவர்இதற்கு முன்பு அவ்வலைத்தளத்திற்கு வந்திருக்கவில்லையா (இதை உங்கள் வலைப்பக்கங்களே கண்டுபிடித்துக்கொள்ளவேண்டும்) அவரிடம் மெதுவாக உங்கள் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா ? என்று கேட்டு அதனை பதிவு செய்துகொள்ளவேண்டும்.. பின்னர் அதனையே மீண்டும் அவர் உங்கள் பக்கத்துக்கு விஜயம் செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதுமட்டுமா ‘ நீங்கள் TAB எழுத்துருவை உபயோகிக்கிறீர்கள் உங்களுக்காக எங்களது பக்கங்களை நான் TAB எழுத்துக்களில் தருகிறோம் என்று கூறி அவருக்கு TAB உருவிலும் TSC எழுத்துக்களை உபயோகப்படுத்துபவருக்கு அந்தந்த உருக்களிலும் பக்கங்களைத் தந்தால் எப்படி இருக்கும் ? இவ்வாறும் நமது வலைப்பக்கங்களை அமைக்கமுடியும். அது படிப்பவர் எத்தகைய மொழியை அல்லது எத்தகைய எழுத்துக்களைப் பயனபடுத்துகிறார் என்பதை அறிந்து அந்த மொழியில் அல்லது அந்த எழுத்துருவில் பக்கங்களை அவரது கணினியில் காட்டும்.

இப்பொழுது இணையத்தில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் மிகவும் பிரசித்தம் பெற்றுள்ளன இவை எவ்வாறு நடத்தபபடுகின்றன ? ஒவ்வொருவருடைய கருத்துக்களும் கருத்துக்கணிப்பு முடியும் வரை சேமித்து வைக்கப்படவேண்டும். ஒருவர் ஒருமுறை வாக்களித்தால் மீண்டும் அவரை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது. அவர்கள் தந்த வாக்குகளைக்கொண்டு அவ்வப்போது முடிவுகளையும் எத்தனை சதவீதம்பேர் ஒவ்வொரு கருத்துக்கும் வாக்களித்திருக்கிறார்கள் போன்ற கணக்கீடுகளையும், அதற்காக Graph களையும் தரவேண்டும் அப்பொழுது தான் பக்கங்கள் பயனபடுத்துவோரைக் கவரும் விதத்தில் இருக்கும்.

இவ்வாறு நடந்துகொள்ளும் பக்கங்களைத்தான் நாம் இயங்கு பக்கங்கள் என்று அழைக்கிறோம் இத்தகைய இயங்கு பக்கங்களை எழுதவேண்டும் எனில் இதற்கு நாம் மேற்குறிப்பிட்ட Server Side Programming என்னும் வகை நிரல்களை எழுதவேண்டும். இவைகளை எழுத மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ASP (Active Server Pages) என்னும் மென்பொருளையோ, அல்லது Perl, C போன்ற கணினி மொழிகளையோ பயன்படுத்தலாம்.

இவ்வாறு வேறு வேறு மென்பொருள்களைப் பயன்படுத்தி நிரல்களை எழுதி அதன்மூலம் இயங்கு பக்கங்களை அமைப்பது என்பது உங்களது வலைத்தளம் அமைந்துள்ள பரிமாரிக்கணினியின் வினைக்கலனைப் பொருத்தது. எடுத்துக்காட்டாக உங்களுடைய வலைத்தளம் ஒரு விண்டோஸ் NT வினைக்கலனைக் கொண்ட பரிமாரியில் இருந்தால் நீங்கள் ASP நிரல்களை எழுதலாம் அல்லாமல் அதுவே Unix அல்லது Linux வினைக்கலனில் அல்லது பிற பெருங்கணினிகளின் Solaris போன்ற வினைக்கலனில் இருந்தால் நீங்கள் CGI Programs எனப்படும் நிரல்களை Perl அல்லது C போன்ற மொழிகளைக்கொண்டு எழுதிப் பயன்படுத்தலாம்.

இத்தகைய நிரல்கள் பரிமாரியில் இருந்து கொண்டு உங்களது பக்கங்களை இயக்கிக் கொண்டும் புதிய பக்கங்களை அவ்வப்பொழுது உருவாக்கிக்கொண்டும் இருக்கும். நீங்கள் ஒரு தகவல் தளத்தினை(Database) பரிமாரியில் நிருவி அதில் வேண்டிய தகவல்களச் சேகரித்துக்கொண்டு அதனை வேண்டியபோதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக கானல் வலைத்தளத்தின் வலையகராதி (Online Dictionary) நிரல்கள் ASP யினைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள தகவல் தளத்தில் (Database) ஆங்கில கலைச்சொற்களும் அவற்றிற்கு நிகரான தமிழ் கலைச்சொற்களும் சேமிக்கப்பட்டுள்ளன நீங்கள் அங்கு கலைச்சொற்கிடங்கு என்னும் பக்கத்தை இயக்கி அங்கு ஆங்கில வார்த்தைகளை எழுதி அங்கிருக்கும் பொத்தனை அழுத்தினால் அது பரிமாரியில் நமது தகவல் தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள கலைச்சொற்களைச் சோதித்து அதில் தாங்கள் தந்த வார்த்தை இருக்குமானால் உடனுக்குடன் அதற்கு இணையான தமிழ்சொல்லை அங்கு வெளியிடுகின்றன. இத்தகைய வேலைகளை வெறும் HTML மொழியில் எழுதப்பட்ட பக்கங்களால் செய்யமுடியாது.

அதுபோல நாம் விருந்தினர் வருகையை பதிவு செய்கிறோம், மற்றும் கருத்துக்களை எழுதும் பக்கங்கள், ரீடிஃப் வலைத்தளத்தின் கரும்பலகையில் எழுதுங்கள் போன்றவை, மற்றும் யாகூ, காட்மெயில் வலைத்தளத்தில் பயன்படும் வாடிக்கையாளர்களைப் பதிவுசெய்யப் பயன்படும் பத்திரங்கள் மற்றும் அவற்றில் நாம் தரும் தகவல்களை முறையாக பதிந்து அவற்றை மீண்டும் பயன்படுத்தி நம்மை சரியானவர்களா என சோதித்து அனுமதிக்கும் பக்கங்கள் போன்றவை இத்தகைய நிரல்களல் எழுதப்பட்டுள்ளன.

மின்வணிகத்தில் இத்தகைய பக்கங்களே வியாபார சம்பந்த தொடர்புகளை இணையத்தின் வழியே அமைக்கிறது. சாதாரணமாக HTML மொழியில் எழுதப்பட்டுள்ள பக்கங்கள் நமது உலவி வழியே நமது திரையில் தெரிகிறது ஆனால் இந்த பரிமாரி நிரல்கள் அங்கிருந்தபடி பக்கங்களை இயக்குவதால் நம்மால் அவற்றில் என்ன எழுதப்பட்டுள்ளன எத்தகைய கட்டளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனக் காணமுடியாது. எனவே பிறர் நாம் எழுதிய நிரல்களை எடுத்து அவருடைய பக்கங்களுக்கு பயன்படுத்துவிடுவார் என்று நாம் அஞ்சவும் தேவையில்லை.

Contact Address :

M.Parameswaran
Post Box NO: 19769
Sharjah, UAE.
Mobile Phone : 00971507974298
Emai – param@emirates.net.ae

Series Navigation

மா.பரமேஸ்வரன்

மா.பரமேஸ்வரன்