கடைசி பிரார்த்தனை

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

என்.கணேசன்


____

கற்பகம் படுத்த படுக்கையாகி ஒரு வாரமாகி விட்டது. மரணம்

நாட்களில் வருமா இல்லை வருடங்களாகுமா என்று சொல்ல முடியாதென டாக்டர்கள்

சொல்லி விட்டார்கள். உடம்பில் கண்களை மட்டுமே அவளால் அசைக்க

முடிகிறது. மற்றவர்கள் பேசுவதைக் கேட்கவும், சுற்றியும் நடப்பதைப் புரிந்து

கொள்ளவும் அவளால் முடியும் என்றாலும் பம்பரமாய் சுற்றி வந்து ஆட்சி செய்த

வீட்டில் ஒரு அசையா ஜீவனாக இருக்கிறாள். சுமங்கலியாகப் போய் சேர்ந்து

விட வேண்டும் என்று வாழ்நாள் பூராவும் வேண்டி வந்த அவள் தன் பிரார்த்தனை

நிறைவேறக் காத்திருக்கிறாள்.

இந்த ஒரு வார காலத்தில் சபேசன் தன் மனைவியை விட்டு

நகரவில்லை. அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருந்து விட்டு ரிடையரான

காலம் முதல் பத்திரிக்கைகள், புத்தகங்கள் மட்டுமே அவரது உலகமாக இருந்தது.

எல்லாப் பொறுப்புகளையும் அவளிடமே விட்டு விட்டு எதிலும் தலையிடாமல்

கவலையில்லாமல் இருந்த மனிதரை மனைவியின் இந்த நிலை பெரிதும்

பாதித்து விட்டது. யாரோ விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்தால் மிகவும் நல்லது

என்று சொன்னதால் அவள் அருகில் உட்கார்ந்து சத்தமாகப் படித்துக் கொண்டு

இருந்தார். இந்த ஒரு வாரமாக தன்னை விட்டு நகராமல் உட்கார்ந்துள்ள அவரை

மனம் நெகிழ்ந்து பார்க்கிறாள், கற்பகம்.

ஹாலிலிருந்து அவர்கள் பிள்ளைகளின் வாக்குவாதம் அவரது

சஹஸ்ரநாமத்தையும் மீறி கேட்டது. கணவரை கேள்விக்குறியோடு கற்பகம்

பார்த்தாள்.

‘உன்னோட நகைகளைப் பிரிக்கிற விஷயமாய் அவர்களுக்குள் சண்டை,

கற்பகம் ‘

மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், பேரன் பேத்திகள் என்று ஒரு பெரிய

குடும்பத்தை நிர்வகித்து வந்த அவளுக்கு பிள்ளைகளின் எண்ணங்கள் அத்துபடி.

ஆனால் அவருக்கோ உலகம் ஒரு வார காலத்தில் தலைகீழாக மாறியது போல

அதிர்ச்சி. இவ்வளவு நேரமாக மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்து வந்த

விஷயத்தை இப்போதும் சொல்லா விட்டால் அவருக்கு இதயம் வெடித்து விடும்

போல் தோன்றியது. மெள்ள துக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.

‘போன வாரம் வரை நம்ம குழந்தைங்க இப்படி மாறுவாங்கன்னு நான்

கற்பனையாக் கூட நினைச்சதில்லை கற்பகம். இப்ப நம்ம குழந்தைங்க

வியாபாரிகள் மாதிரி ஈட்டிக்காரங்க மாதிரி பேச

ஆரம்பிச்சுட்டாங்க…. ‘

பிள்ளைகளிடம் எப்படிப் பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள

வேண்டும், எப்போது வளைந்து கொடுக்க வேண்டும், எப்போது உறுதியாக நிமிர

வேண்டும் என்பதையெல்லாம் அவள் நன்றாக அறிவாள். ஆனால் இது வரை எதிலும்

தலையிடாமல் இருந்த அவருக்கு இப்போது எல்லாமே அதிர்ச்சியாக இருந்தது.

‘என்னை இந்த வீட்டை விற்கச் சொல்லி வற்புறுத்தறாங்க கற்பகம்.

எல்லாருக்கும் பணக் கஷ்டமாம். வீட்டை வித்துட்டு பணத்தைப் பிரிச்சுத் தரச்

சொல்றாங்க. அவங்க கூடப் போய் ஒவ்வொரு மாசம் ஒவ்வொரு வீட்டில் நான்

இருக்கணுமாம். உன்னை ஏதோ ஆஸ்பத்திரியில் சேர்க்கிறாங்களாம். ஏதாவது

ஆனா ஆஸ்பத்திரியில் இருந்து சொல்லி அனுப்புவாங்களாம். என்னங்கடா இதுன்னு

கேட்டா என்னை ப்ராக்டிகலாய் இருக்கச் சொல்றாங்க. ப்ராக்டிகல்னா மனசை

கல்லாக்கிக்கறதுன்னு அர்த்தமா கற்பகம் ? ‘

ஆரம்பத்திலேயே இப்படி உடைந்து போகிறாரே இனி எப்படி சமாளிக்கப்

போகிறாரோ என்று நினைக்கையில் அவளுக்கு மனதில் இரத்தம் கசிந்தது.

‘எல்லாம் என் தப்புன்னு தோணுது கற்பகம். நான் நல்லா இருக்கணும்னு நீ

சுமங்கலி பூஜை, அந்த பூஜை, இந்த பூஜைன்னு நிறைய செஞ்சே. அதனால நான்

குண்டுக்கல்லாட்டம் இருக்கேன். ஆனா நீ நல்லா இருக்க நான் எந்தப் பூஜையும்

செய்யலியே. அதான் உனக்கு இப்படி வந்துடுச்சோன்னு தோணுது. உன்னை

விட்டுட்டு நான் எப்படிப் போய் அவங்களோட எல்லாம் எப்படி இருக்கப்

போறேன்னு தெரியலையே கற்பகம் …. ‘

சொல்லச் சொல்ல அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. தாயை

விட்டுப் பிரியப் போகிற குழந்தையைப் போல் அவர் கண்கலங்கினார். அவள்

கண்களும் கலங்கின.

‘உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா நான் உன்

கிட்டேயிருந்து இது வரைக்கும் எதையும் மறைச்சதில்லையே கற்பகம். அதான்

சொல்லிட்டேன்…. ‘

நிறைய நேரம் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்து

விட்டு இரவில் தன்னறைக்கு உறங்கப் போன போது அவர் நடையில் தளர்ச்சி

இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் மனதில் ஒரு பெரிய

போராட்டம். மனமுருக அவள் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். அந்த

நிலையில் அவளால் வேறு என்ன செய்ய முடியும் ?

மறுநாள் காலையில் அவள் பிள்ளைகள் அழுதபடி அவளிடம் ஓடி வந்தனர்.

‘அப்பா தூக்கத்திலேயே இறந்துட்டார்ம்மா. ஹார்ட் அட்டாக்ம்மா…. ‘

சுமங்கலியாக இறக்க வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் பூஜைகள்

செய்திருந்த கற்பகம் மனம் உடைந்து போவாள் என்று எண்ணியிருந்த அவள்

பிள்ளைகள் ஏமாந்து போனார்கள். அவள் முகத்தில் அது வரை தேங்கி இருந்த

துக்கம் நீங்கி முகத்தில் பூரண அமைதி நிலவியது. தன் கடைசி

பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றிய அந்தக் கருணை உள்ள கடவுளுக்கு

அவள் நிறைந்த மனதுடன் நன்றி சொன்னாள்.

நன்றி: நிலாச்சாரல்.காம்

-என்.கணேசன்

nganezen at yahoo dot com

Series Navigation

என்.கணேசன்

என்.கணேசன்