கடித விமர்சனம் – 6 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

வே.சபாநாயகம்


‘சுஜாதா: சில நினைவுகள்’ கட்டுரையில் அவருடனான சில இனிய அனுபவங்களை எழுதி விட்டு, இறுதியில் அவரைக் கடைசிவரை சாகித்யஅகாதமி கண்டு கொள்ளாததைக் குறிப்பிடுகையில், ‘சுஜாதாவின் எழுத்துலகத்தை ‘நைலான் கயிறுக்கு முன்/நைலான் கயிறுக்குப்பின்’ என்று பிரித்தால், நைலான் கயிறுக்குப்பின் அவரைக் கட்டவே முடிய வில்லை! அவர் இருந்தபோது கண்டு கொள்ளாத சாகித்ய அகாதமி, இப்போது
விழித்துக்கொண்டு – நிச்சயமாக விழித்துக் கொள்ள மாட்டார்கள் – ‘மரணோபராந்த்’ (மரணத்துக்குப்பின்னால்)
விருது கொடுக்க முன் வந்தால், அவர் குடும்பத்தினர் அதை நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் சுஜாதாவின் ஆத்மாவுக்குச் சாந்தி கிடைக்கும். அவரும் அதைத்தான் செய்திருப்பார். உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான ‘சுஜாதா விசிறிகள்’அவருக்களித்திருக்கும் அபரிமிதமான அன்புக்கும் ஆதரவுக்கும் மேலல்ல இவ்விருதுகள். பல
வருஷங்களுக்கு முன்பே சென்னையில் அந்த மாபெரும் எழுத்தாளருக்கு ‘கட்-அவுட்’ வைத்தவர்களல்லவா நாம்’ என்று குறிப்பிட்டிருப்பது அவரது விசிறி அல்லாதவரும் ஏற்கக் கூடியதே.

‘தில்லியில் தென்னிந்திய ஹோட்டல்களும் கையேந்தி பவன்களும்’ கட்டுரை தில்லியில் தமிழருக்குத் தங்கு மிடங்களும் உணவு வசதிகளும் கடந்த 50 ஆண்டுகளில் வளர்ந்த கதையைச் சொல்கிறது.

அடுத்த கட்டுரையான ‘காந்திபாய் தேசாய்: தலைவர்களும் தனையர்களும்’, நம்மூர் தலைவர்களிண் வாரிசுகளை நல்லவர்களாக்கி விடுவதாக உள்ளது. நேர்மைக்கும் நாணயத்திற்கும் சிறந்தவர் என்று அனைவராலும் போற்றப்பட்ட மொராய்ஜி தேசாயின் மகன் காந்திபாய் தேசாயின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கை களை அறியும்போது இது ஊர்ஜிதமாகிறது.’இவர் மொராய்ஜியின் மகனாகவே இருக்க லாயக்கில்லை என்பார்கள். ஊர்வன பறப்பனவில் ரயில் வண்டியையும், ஏரோப்பிளேனையும் தவிர மற்றவையெல்லாம் தள்ளுபடியல்ல! தண்ணியில் மீன் குட்டி போல நீந்துவார்’ என்பது உண்மையில் வெட்கக்கேடானதுதான். இதைவிடக் கேவலம் நீங்கள் குறிப்பிட்டுள்ள அவரது நாணயக்குறைவான செயல் பற்றியது. தங்களது முதலாளி வினோத் என்பவர் நெருக்கமாய் இருந்த உங்களிடம்கூட சொல்லாமல், காந்திபாய் தேசாய்க்கு – மொராய்ஜி மகன் ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கையில் 40 லட்சம் கைமாற்றாகக் கொடுத்ததைக் கேட்டபோது காந்திபாய் அடியாட்கள் வைத்து மிரட்டி பணத்தைத் திருப்பித் தராததுபற்றி அறிய அதிர்ச்சியாக உள்ளது. முடிவில் காந்தியவாதியாக அறியப் பட்ட மொராய்ஜிக்குத் தன் மகன் காந்திபாய் நடத்திய பண ஊழல்களை விசாரிக்க வைத்தியநாதன் கமிஷனை நியமிக்க நேர்ந்துதான் பரிதாபம்!

அடுத்து தில்லியில் சுலபத்தில் சாதிக்க முடியாத பலவற்றை வி.ஐ.பி களுக்காக உங்களால் மட்டும் எப்படி செய்து தர முடிந்தது என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் புருவத்தை உயர்த்த வைப்பது:

‘அந்தக் காலத்தில் என்னைப் போன்றவர்கள் தில்லியில் குப்பை கொட்ட கீழ்கண்ட திறமைகள் இல்லாமல் முடியாது –

1. Indian Airlines- ல் வீட்டில் இருந்து கொண்டே தொலைபேசியில் யாருக்கும் எந்த நேரத்திலும் எந்த ஊருக்கும் Ticket confirm செய்யும் திறன். இது இந்தியன் ரயில்வேக்கும் பொருந்தும்.

2. தில்லியில் அசோகா ஹோட்டலில் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், நடு இரவிலும் telephone மூலம்
ஒரு டபுள் ரூம் ஏற்பாடு செய்யும் சாமர்த்தியம்.

3. தில்லி ஏர்ப்போர்ட்டில் எந்த ஹாஜி மஸ்தானையும் சுங்கப் பரிசோதனை இல்லாமல் வெளியே அழைத்து வருவது.

4. Takkal வராத காலத்தில் 24 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கச் செய்யும் திறமை.

5. நடு நிசியில் ஆயிரம் டாலர் கரன்சியோ இரு பாட்டில் ஸ்காட்சோ வரவழைக்கும் மாஜிக்.

6. போலீஸ் கேசில் மாட்டிக் கொண்டவரைப் பூப்போல எந்தக் கேசும் இல்லாமல் வெளியே கொண்டு வருவது.

7. Delhi Telephones General Managerன் அந்தந்த நட்பு.

– உண்மையாகவே இது அசாதாரணமானதுதான்!

‘தில்லியிலிருக்கும் ஒரு மத்திய மந்திரிக்கே மேலே சொன்ன பல விஷயங்கள் செய்ய வராது. எங்களைப் போன்ற பாமரருக்கத்தான் இது அத்துபடி. அதனால்தான் எங்களுக்கும் ஒரு ‘விலை’ இருந்தது’ என்பது சுவாரஸ்யமான முத்தாய்ப்பு!

– தொடர்ச்சி அடுத்த கடிதத்தில்.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்