கடித இலக்கியம் – 33

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

வே.சபாநாயகம்


திருப்பத்துர்.வ.ஆ.
26 – 7 – 85

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

எனது நேற்றைய கடிதத்துக்குத் தாங்கள் பதில் எழுது முன்பாகவே அடுத்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசீயச் சம்மேளனத்தில், தமிழ் மாநிலக்கிளைதான் அதிக விறுவிறுப்பாகச் செயல்படுவதாக ‘மத்தியில்’ பெயராம். நாங்கள் வேறொன்றும் செய்வதில்லை; உலகளாவிய கோஷங்களை உடனுக்குடன் வழங்குகிறோம். ‘மகாநதி’ என்று ஒரு மாதப் பத்திரிகை ஆரம்பிக்க முயன்று தோற்றோம். மூன்று நான்குமாதங்களுக்கு ஒரு முறை ஆங்காங்கே ‘எழுத்தாளர் முகாம்’ நடத்துகிறோம். சுமார் நாற்பது ஐம்பது எழுதாளர்கள் – பிரபல்யமுள்ளோர் இல்லாதோர் – சேருகிறார்கள். முதல் முகாமைத் திருப்பத்தூரில் நாங்கள் நடத்தினோம். அடுத்து, திண்டுக்கல்லில் ஒன்று வெகு சிறப்பாக நடந்தது. JK வைச் சந்தித்துக் கால் நூற்றாண்டு இந்த செப்டம்பரில் பூர்த்தியாவதால், அதையொட்டியும் சம்மேளனத்தின் செயல்பாடாகவும், அடுத்த முகாம் ஜம்னாமரத்துரில் செப்டம்பர் 6,7,8 தேதிகளில் வைக்க இருக்கிறோம்.

– பாவனை மிக முக்கியம் என்கிறார் விவேகானந்தர். பாவனை இல்லாமல் பக்தி என்பதே இருக்க முடியாது. நான் எனது சிறுசிறு போராட்டங்களையும் இதிகாச யுத்தங்களாகத்தான் பாவித்துக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும்
தேவாசுர யுத்தம்தான் தெரிகிறது. எங்கும் தேவர்கள். எங்கும் அசுரர்கள். இலக்கியம் என்பதும், இலக்கிய புருஷர்கள் என்பதும் போல நான் ஈடுபட்டறிந்தது இன்னொன்று இல்லை. எனவே எனக்குப் பாரதி வாழ்ந்த காலமும் கம்பன் வாழ்ந்த காலமும்
புஷ்கினும் டால்ஸ்டாயும் வாழ்ந்த காலமும் எந்தத் தேசத்தின் எந்தக் காலத்தின் கதைகளோ அன்று. அவையே ஒத்தது என் காலம். அவர்களின் நேரடிச் சந்ததியுடன் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் நான். இந்தப் பாவனையே இந்த முகாம்கள் விஷயத்தில் எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

இந்த முகாமில் நான் ‘பால்ய இலக்கிய’த் தோழர்களில் ஒருவரையும் இதுவரை சந்திக்கவில்லை. – JK வையும் தேவபாரதியையும் தவிருங்கள். வையவன் இல்லை. நீங்கள் இல்லை. ஆதிராஜ் இல்லை. நீலவன் இல்லை. இது குறைபாடும் அன்று. குற்றச்சாட்டும் அன்று. ஒரு யதார்த்தம். யார் யாரோ புது முகங்கள். சா.கந்தசாமி, இதயன், பரிணாமன் போன்றோரும் உண்டு.

சில நேரங்களில் எங்கள் முகாம் வீண் அரட்டை போலவும் தோன்றும். ஆனால் அப்போது காதிலே விழுகிற வார்த்தைகள் போன்று அவ்வளவு அழகான வற்றைத் தமிழ் கூறும் நல்லுலகம் வரலாற்றில் எப்பொழுதும் வெகு காலம் காத்திருந்த பிறகே கேட்கிறது.

கவிதைகள் கூடப் படித்துவிட்டுப் போகிறார்கள்.

முகாமின் நடுநாயகம் JK என்பதால் நிகழ்ச்சிநிரல்களின் போக்கை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.

அணு ஆயுத எதிர்ப்பு, உலசமாதானம், மனிதகுல நம்பிக்கை இவற்றை ஏந்திச் செல்லும் பேரணிப் பொதுக்கூட்ட அலைகளிலும் கூட, நான் முதலில் சொன்ன பாவனையின் மகத்துவத்தால், எங்களாலும் அணிவகுக்க முடிகிறது. அதற்காக இறும்பூதெய்துகிறோம்.

எழுத்தாளர் சம்மேளன நடைமுறைகளை அறிமுகப்படுத்த இவ்வளவும் எழுதினேன்.

காடு வனங்களின் மீதெல்லாம் காதல் அதிகரித்து விட்டது. அருணாசலத்திடம் ஒரு ‘புல்லட்’ இருக்கிறது. அவர் தந்தையார் பாரஸ்டராயிருந்தவர். ஹாஸ்டலில் படித்திருந்த பிள்ளை அவ்வப்பொழுது விடுமுறையில் அப்பாவைக் காண தனியாகக் காட்டுவழி நடந்து சென்றதில் எவ்வளவு கவிதை இருக்கும் பாருங்கள்! எனவே அருணாசலத்துக்கும் காட்டுப் பித்து. நன்றாக எங்கள் ஜவ்வாது மலைப்புறங்களில் எல்லாம் சுற்றுகிறோம். அவரது பூர்வீகம் செஞ்சி பக்கம்தான். ‘முட்டிப்பூ’ என்று ரோட்டோரம் பூக்கிற ஒரு பூவைக் காண்பிப்பதற்காக அங்கெல்லாம் என்னைக் கூட்டிச் சென்றார். தென்னாற்காட்டுக்கும் எனக்கும் எப்பொழுதும் விசேஷ உறவு. JK, நீங்கள், இவர். தொண்டை நன்னாட்டின் தொடர்பிது.

கூட்டங்கள் முன்னைவிடவும் இப்போது தீர்மானகரமாக அமைகின்றன. எத்தனையோ காலமாக எவ்வளவோ பேர் இயற்றிச் சலித்த இந்தக் காரியத்தில் நமக்கு மட்டும் இன்னும் ஏன் சலிப்பில்லை என்று தோன்றும்.

இனிமேல்தான் எழுதவேண்டும். அதற்கு முன்னதாக, காப்புச் செய்யுள் போல சோவியத் யூனியனில் உள்ள டாக்டர் விதாலி பூர்ணிகோவிற்கு, JK வைப் பற்றியும் நமது இலக்கிய வளர்ச்சியைப் பற்றியும் இரு கூறுகளும் இணைந்து நடந்த பகுதிகள் பற்றி விவரித்து ஒரு கடிதம் எழுத வேண்டும் – ஒரு நீண்ட கட்டுரை ஆகிறாற் போல.

– இல்லை. மேல்கண்ட பாராவில் நான் தெளிவாகச் சொல்லவில்லை. JKவை
எந்தப் பருவத்தில் எவ்வாறிருந்து, நான் சந்தித்தேனோ அதிலிருந்து இந்தக் கால் நூற்றாண்டுக் கால JK + நாம் + தமிழிலக்கியம் பற்றிய விவரிப்பு இது.

இது பாயிரமாக, பின்னால் நிறைய எழுத வேண்டும். புனைகதைகள் அல்லாததோர் இலக்கிய வடிவத்தை என் மனம் நாடுகிறது. “My land, my people” “எனது பூமி, எனது மக்கள்” என்று, வாழ்க்கை நமக்குத் தந்த காட்சிகளையும் தரிசனங்களையுமே விவரித்து எழுதலாமா என்று தோன்றுகிறது.

ஒர் விரதம் பூண்டுள்ளேன். பத்திரிகைகளை மறந்து எழுதுவேன்.

எவ்வாறோ உங்களுக்கு இம்முறை உடனுக்குடன் இவ்வளவு பெரிய கடிதம் எழுதிவிட்டேன். அன்றாடம் எழுதினால் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் பற்றி எழுதலாம். சீக்கிரம் தபாலில் சேர்த்து தங்கள் கைக்குக் கிடைக்கட்டும் என்று நிறுத்திக் கொள்கிறேன்.

– தங்கள், பி.ச.குப்புசாமி.

.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்