கடித இலக்கியம் – 20

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

வே.சபாநாயகம்


கடிதம் – 20

நாகராஜம்பட்டி
11-6-78
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

லோகதயமாகத் தங்களுக்குச் சில கடிதங்கள் எழுதிவிட்டதாகத் தோன்றுகிறது. மனசைப் பறிமாறிக் கொள்ள இதை எழுதுகிறேன்.
நாளாக நாளாகப் பெரும் பொறுப்புகள் நம்மை எதிர்நோக்கி வருகின்றன போல் தெரிகிறது. ஆனால் உண்மையில், எந்த ஒரு பெரிய பொறுப்புக்கும், நாம் நம்மால் முடிந்த அளவு பங்கைச் செலுத்தினால் போதும்; வாழ்க்கை நம்மை அலைக்கழிப்பதைப் போல, அதுவே எல்லாவற்றையும் தாங்கியும் கொள்கிறது. தொடர்ந்த துயரங்கள் எதிலும் மனித உள்ளம் உழல்வதே இல்லை. எலையற்ற துன்பச் சூழலிலும் அது இடையிடையே எண்ணற்ற ஆனந்தங்களை கண்டு அனுபவித்துக் கொண்டி ருப்பதுதான் உயிரின் சத்தியம். நமது சிந்தனையில் நாமாகக் கெடுத்துக் கொள்வது தான் எல்லாக் கவலைகளூம்.

உங்களை நேர்முகமாகப் பார்த்து நெடுங்காலம் ஆகிவிட்டது. உங்கள் வாழ்வு எங்கேயோ, என் வாழ்வு எங்கேயோ என்று இருந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் சிதம்பரவெளியில் சிவமணம் கலந்தது போல், நினைவுவெளியில் பிரிவுகளையெல்லாம் தாண்டி நாம் எப்பொழுயும் நேர்ப்பட்டுக் கொள்கிறோம். கடிதங்கள் இதற்குத் தானோ என்னவோ?

இதுகூட இரண்டாம் பட்சம்தான் என்று தோன்றுகிறது. கடிதங்கள் எழுதக் கஷ்டமாயிருக்கிறது சபா! எழுத்து ஒரு தடை அல்லது மடைமாற்றம்.

நேருறச் சொல்லி ஆனந்திக்க வேண்டும். அல்லாத பட்சத்தில் பிற வெளிப்பாடுகள் யாவும் கவிதையாய்க் கலையாய்ப் பல்வகைக் கானமாய்ப் பெருக்கெடுக்க வேண்டும். எருக்களை ஓவியம் தீட்டி புஷ்பங்களின் காட்சியருகே கொண்டுபோய் வைத்து என்ன பயன்? நமது சின்னஞ்சிறு கவலைகளை, நமது கரம் கொண்டு எழுதிச் சாஸனமாக்க, அவற்றுக்கு என்ன யோக்கியதை! கரப்பான் பூச்சிகளையோ தின்று ஒரு சிங்கம் பசியாறும்? எனவேதான் கஷ்ட நஷ்டங்களைச் சொல்வதுமில்லை;
அவற்றைக் கேட்கும் போதும் இவை இந்த வாழ்வில் நிலையானவை என்று நினைப்பதுமில்லை.

அஞ்சாதிருப்பது நமது வீரம். முடிந்ததைச் செய்வது நம் கடமை. பக்தி செலுத்துதல் நமது பாங்கு. கலைகளே நமது சுக துக்கங்கள். இவ்வாறு போகிற நாம் ஏதோ ஒரு தவறால் வழி தவறினாலும், சரியான வழிக்கு வெகு அருகிலேயே இருந்து, சட்டென்று மறுபடியும் அதில் சேர்ந்து கொள்வோம்.

சென்னையில் இம்முறை ஜெயகாந்தனோடு இருந்த நாட்களில், இரண்டு நாட்கள் அவரைக் கண்ணெதிரே வைத்து ஒப்பிட்டுக் கொள்கிற மாதிரி ‘Gospel of Sri.Ramakrishna’ என்கிற புத்தகத்தில் ஒரே மூச்சாய்த் தோய்ந்தேன். ராமகிருஷ்ணரின் சபைக்கும் இவர் சபைக்கும் பல ஒற்றுமைகள் தென்படுகின்றன. (ஆனால் வழித் தோன்றல்களாகத்தான் இங்கே யாருமில்லை.) பணிகள் வேறுவேறு. ஆனால் நோக்கம் ஒன்றே. ஓர் உன்னத வாழ்வியலுக்கு மனிதர்களை உயர்த்துதல்.

பக்தியென்பது இப்போதெல்லாம் வேறு மாதிரி ஆகிவிட்டது. அப்படி ஒன்று தனியாக இல்லை. அதற்கு நாம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. ஏற்கெனவே நம்முள் நிரம்பி வழிந்து ஒரு harmony கொண்டு விட்டிருக்கிறது. (சரியான ஆங்கிலச் சொல்தானா என்று தெரியவில்லை.) தமிழில் நான் நினைத்ததைச் சொல்லுகிறேன். “ஒரு லயம் கொண்டிருக்கிறது”. நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே பக்தியினால் தான் என்று நம்புகிறேன். உலகக் காரியங்களை இனி நம் போக்கில் செவ்வனே செய்ய முயற்சி எடுப்பதுதான் இனி நமது பிரயாசை; அதுவே நமது பூஜை.

பூசும் சாந்து என் நெஞ்சமே! புனையும்
கண்ணி என்னுடைய
வாசகம் செய் மாலையே! வான் பட்டாடையும்
அ·தே!
தேசமான அணிகலனும் செங்கை
கூப்பும் செய்கையே!

ஈசனோடு என் பூஜா கைங்கரியங்களை நான் இவ்வாறு வைத்துக் கொண்டு விட்டேன். உங்களையும் பிற நண்பர்களையும், என்னைச் சந்தித்துப் பிரிந்தவர்களையும், சந்திக்கப் போகிறவர்களையும் எப்போழுதும் பார்த்துப் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். எனவேதான் கடிதங்கள் எழுதுவதில்லை……

– பி.ச.குப்புசாமி

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்