கடித இலக்கியம் – 12

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

வே.சபாநாயகம்


நாகராஜம்பட்டி
7-11-76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

பிரபந்தத்தில் ஆழ்வார்கள், ‘ஆய்ச்சியர் ஊடி அமலனை எள்ளுவதா’கச் சில பாடல்கள் பாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஊடலும் ஓவ்வொரு பாவனையில். பெண்ணின் பொய்க் கோபம், அவள் வீம்பு. ரகசியமாய் அவள் பேசுகிற பேரம் – ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாட்டில்.

அதில் ஒரு பாடல் ரொம்பவும் சோகமாயிருக்கிறது. வார்த்தைகள் என்னும் தோணியேறப் பழகிக் கொண்டால் மட்டுமே அதன் அர்த்த சஞ்சாரத்தின் அழகை எல்லையற்று அனுபவிக்கலாம்.
“பையர வின்னணைப் பள்ளியினாய்
பண்டையோம் அல்லோம் நாம்
நீ யுகக்கும்

மையரி ஒண் கண்ணினோரும் அல்லோம்
வைகி யெம்
சேரி வரவொழி நீ

செய்ய உடையும் திருமுகமும்
செங்கனி வாயும்
குழலும் கண்டு

பொய்யருநாள் பட்டதே யமையும்
புள்ளுவம் பேசாதே
போகு நம்பீ!”

பண்டையோம் அல்லோம் என்பதும், நீயுகக்கும் மையரி ஒண் கண்ணினோம் அல்லோம் என்பதும், எங்கள் சேரிப்பக்கம் வராதே என்பதும், எல்லாவற்றையும் கண்டு ஒரு பொய்க்கு ஏமாந்த காலம் போதும் என்பதும், கண்ணனைப் போகச் சொல்வதும் – எவ்வளவு நயமான ஆழ்ந்த உணர்ச்சிகள்! எவ்வளவு அழகாக ஆழ்வார்கள் தீட்டியிருக்கிறார்கள்!

எல்லாம் என்றோ படித்தவைதாம். ஆனால் இந்தமுறை பிரபந்தத்தைத் தொட்டபோது இதன் அழகு கருதி இது எனக்கு மனப்பாடம் ஆயிற்று. எப்பொழுதாவது சொல்லிப் பார்த்துக் கொள்கிறபோது, எவருடனாவது பகிர்ந்து கொள்கிற ஆசை பிறக்கிறது. தங்களுக்கு எழுதினேன்.

இன்று நவம்பர் ஏழாம் தேதி. ருஷ்யப் புரட்சியின் ஞாபகார்த்த நாள். இந்த நாளைக் குறித்து நமக்கு என்றும் ஒரு விசேஷ உணர்ச்சி இருக்கும். ஆனால் எதிர் காலத்தில் தி.க.சிவசங்கரன்கள் எல்லாம் சேர்ந்தால், ஆழ்வார்களுக்கு அவர்களது சமுதாய இலக்கியத் திறனாய்வில் என்ன கதி என்று நினைத்து வருத்தப்படாமலிருக்க முடியவில்லை. வருந்தி ஆவது என்? லெனின் என்கிற மகாபுருஷன் நமது டால்ஸ்டாயைக் காத்தது போல, அவன் தந்த பார்வை இன்னும் அந்தப் புதிய ருஷ்யாவைத் துர்கனேவின் புகழ் பாட வைத்திருப்பது போல, நம் தேசத்திலும் அப்படி ஒரு அதிர்ஷ்டம் நிகழும் என்று நம்புவோம்.

தமிழ்நாட்டின் மார்க்ஸிய இலக்கியவாதிகளுக்கு, அவர்களது திறனும் அறிவாற் றலும் கருதி பல ஸ்தாபன வாயிலாக அளிக்கப்பட்ட நல்ல சம்பளமுள்ள குமாஸ்தா உத்தியோகங்களே அவர்களைப் பாட்டாளியைப் பற்றி அர்த்தமற்றுப் பேசும் “சூடோ” இலக்கியவாதிகளாக்கி விட்டன. இவர்கள் தான் டாங்கே என்றால் பயங்கரம் தான்.

10 11 76

இப்பொழுதெல்லாம், ஒரு மூன்று நான்கு தடவைகளுக்கு மேல் தங்களுக்கு எழுதவாரம்பித்து, போஸ்ட் செய்யாமலேயே பாதியில் கடிதங்கள் நின்று விடுகின்றன. ஓரிரு நாள் கழித்து அவைகளைப் படித்துப் பார்க்கிற போது, சில சரியாக எழுதப்பட்டனவாகவும், சில ‘அமெச்சூரிஷ்’ ஆகவும் தோன்றுகின்றன.

இவற்றை எழுதுகிற என்னை விடவும், பெறுகிற நீங்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சொல் ஒளிந்து கொண்டபோது ( அதாவது “உண்மை” மனதில் தோன்றாத போது ) ஓடி அலைந்து தடவி, சுவரில் முட்டிக் கொண்ட ‘இடறல்’கள் இவற்றில் இருக்கலாம்.

இந்தக் கடிதத்தோடு, அப்படி எழுதின, நிறுத்திய இன்னொரு கடிதம் வருகிறது. அதைத் திருத்த வேண்டும், crisp ஆகச் செப்பனிட வேண்டும், அல்லது கிழித்தாவது போட வேண்டும் என்ரு கருதினேன். தப்பி, தங்கள் கைக்கு வருகிறது.

இங்கு எப்போது வருகிறீர்கள்? குளிர்காலம் அதிகமாகிக் கொண்டு போகிறதே! வெளியில் நிறையத் திரிய முடியாதே! கூடிய சீக்கிரம் வாருங்கள். அழைப்பு அப்படியே இன்னும் எதிரே நின்று கொண்டு உங்களை வற்புறுத்துவதாகக் கருதி, ஆன மட்டும் சீக்கிரமாக நாற்காலியை விட்டு எழுங்கள்.

துணைவியாருக்கு அன்பான விசாரிப்புகளையும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் கூறுங்கள்.

தங்கள் – பி.ச.குப்புசாமி.

**********

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்