கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

சலாஹுத்தீன்


====

‘ஹாத்தமன் நபி’ என்ற அரபிப்பதத்திற்கு பொருள் ‘இறுதி நபி’ என்பது

சரியா ? என்ற கேள்விக்கு விடை காண நேசகுமார் மேற்கொண்ட முயற்சிகள்,

குர்ஆனின் வசனத்திற்கு விளக்கம் அறிய முயலும் ஒரு முஸ்லிமல்லாதவரின்

முயற்சிகள் என்ற கண்ணோட்டத்தில் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆனால் அவர்

இந்த வார்தையின் ஒரு பொருளான ‘முத்திரை நபி’ என்பதோடு நிறுத்தி

விட்டார். இதே கேள்வியை ஒரு மார்க்க அறிஞரின் உதவியோடு நான்

தொடர்ந்தபோது கிடைத்த விளக்கங்களை இங்கு கொடுத்துள்ளேன். குர்ஆனின்

வசனங்களுக்கு விளக்கம் பெற மார்க்க அறிஞர்களின் உதவி ஏன்

தேவைப்படுகிறது என்பதையும் கடைசியில் விளக்கியுள்ளேன். நேசகுமாருக்கு

இந்த விளக்கங்கள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

1. ‘ஹாத்தம்’ என்பதன் அகராதி மொழி பெயர்ப்பு என்ன ?

‘முன்ஜிது’ என்ற பெயரில் ஒரு யூதரால் தொகுக்கப்பட்ட, பிரபலமான,

அரபுலகில் பரவலாக உபயோகிக்கப்படும் அரபி மொழியகராதியில்

‘ஹாத்தம்’ என்ற சொல்லுக்கு நேரடிப்பொருள் ‘மோதிரம்’ என்பதாக

குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் மோதிரங்கள் முத்திரைகளாக

உபயோகப்படுத்தப்பட்டதால், (‘இலச்சினை மோதிரங்கள்’ என்பதுபோல)

‘ஹாத்தம்’ என்ற வார்த்தைக்கு ‘முத்திரை’ எனவும் பொருள் கொள்ளலாம்.

ஆனால், ஒரு வார்த்தையின் நேரடி பொருளை மட்டும்தான் ஏற்றுக்கொள்ளலாம்

என்றால், ‘மோதிரம்’ என்ற பொருளைத்தான் பயன்படுத்த முடியும். அரபு

நாடுகளில் இன்றளவும் மோதிரங்கள் ‘ஹாத்தம்’ என்றே அறியப்படுகின்றன

என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

‘ஹாத்தம்’ ‘ஹத்தம்’ போன்ற அரபி வார்த்தைகளுக்கு ‘மோதிரம்’

‘முத்திரை’ ஆகிய பொருள்களை தவிர, ‘இறுதி’ ‘மூடுதல்’ போன்ற

பொருள்களும் அதே அகராதியில் காணக்கிடைக்கிறது. ‘தொடங்குதல்’

என்பதற்கு எதிர்ப்பதமாகவும் (antonym) இந்த வார்த்தை

குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஹத்தமல் கிதாப’ என்ற வார்த்தையின் பொருள்

‘புத்தகத்தை படித்து முடித்து விட்டான்’ என்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் முஸ்லிம்களிடையேயும் ‘ஹத்தம்’ என்ற வார்த்தை ‘குர்ஆனை ஓதி

முடித்தபின் ஓதும் துஆ’ ‘இறந்தவர்களுக்காக செய்யப்படும் இறுதி பிரார்த்தனை’

ஆகிய பொருள்களில் உபயோகிக்கப்படுகிறது.

ஆக, ‘ஹாத்தம்’ அல்லது ‘ஹத்தம்’ என்ற வார்த்தைக்கு இடத்திற்கேற்ப ‘இறுதி’

என்று பொருள் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

2. ‘ஹாத்தம்’ என்ற வார்த்தை குர்ஆனில் வேறு இடங்களில் பயன் படுத்தப்

பட்டிருக்கிறதா ?

‘ஹாத்தம்’ மற்றும் ‘ஹத்தம்’ என்ற வார்த்தைகள், குர்ஆனில் பல இடங்களில்

(உதாரணமாக 2:7, 4:155, 6:46, 7:100-101, 9:87, 9:93 இன்னும்

பல) உபயோகிக்கப்பட்டுள்ளது. இறைவனின் கட்டளைகளை மனமுரண்டாக

நிராகரித்தவர்கள், மாறு செய்தவர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோரை பற்றி

குறிப்பிடும்போது, அவர்களின் இருதயங்களில் முத்திரையிட்டு விட்டதாக

இறைவன் கூறுகிறான்.

நேசகுமார் சொன்ன, ‘முத்திரை நபி’ என்பது முஹம்மது நபியவர்கள் ஒரு

நபிதான் என்று உறுதிபடுத்துவதற்காக, அவர்களது தோள்களுக்கிடையே இருந்த

‘முத்திரை’யை குறித்து இறைவன் செய்த அறிவிப்பு என்பது இங்கு

பொருந்தவில்லை. நேசகுமாரின் கூற்றுப்படி ‘முத்திரை’ என்ற பதம் தனது

நபியை உறுதிப்படுத்துவதற்காக இறைவன் உபயோகித்த வார்த்தை. ஆனால்

நயவஞ்சகர்களைப்பற்றி குறிப்பிடும்போது அவர்களை இழிவுபடுத்தும் வகையில்

இதே ‘முத்திரை’ என்ற வார்த்தையை இறைவன் உபயோகிக்கிறான்.

3. இந்த வார்த்தைக்கு விளக்கமாக குர்ஆனில் வேறு வசனங்கள் இருக்கிறதா ?

அத்தியாயம் 5 வசனம் 3-ல் (இறுதியாக இறங்கிய வசனம்) இறைவன் இவ்வாறு

கூறுகிறான்: “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை

பரிபூர்ணமாக்கிவிட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையை

பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே

(இசைவானதாக) தேர்ந்தெடுத்துள்ளேன்”.

இஸ்லாம் மார்க்கம் பரிபூர்ணமாக்கப்பட்டபிறகு, இன்னொரு இறைவேதமோ,

அல்லது இருக்கும் இறைவேதத்தில் மாற்றங்களோ, அல்லது இன்னொரு இறைதூதரோ

வரவேண்டிய அவசியம் இல்லை.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு எந்த நபியும் அனுப்பப்படமாட்டார்கள்

என்பதால்தான் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இறைவேதம் எக்காலத்திற்கும் நின்று

வழிகாட்டும் வண்ணம் அன்று முதல் இன்று வரை எவ்விதத்திலும் மாற்றமின்றி

பாதுகாக்கப்பட்டுள்ளது.

தவிர, முஹம்மது (ஸல்) அவர்களைப்பற்றி குர்ஆனுக்கு முன் இறக்கப்பட்ட எல்லா

வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிறகு ஒரு நபி

வருவார் என்றிருந்தால், அதைப்பற்றி குர்ஆனில் நிச்சயம் ஏதாவது

முன்னறிவிப்பு இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

4. ஹதீஸில் இது தொடர்பான விளக்கம் இருக்கிறதா ?

நிறைய இருக்கிறது. நேசகுமார் குர்ஆனிலிருந்து மட்டும் ஆதாரங்கள்

கேட்டதால், ஹதீஸ்களை இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் ஒரு முஸ்லிம்

குர்ஆனின் வசனங்களுக்கு விளக்கம் பெற, ஹதீஸ்கள் தேவையில்லை என்று இருக்க

முடியாது. நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை குர்ஆனின் விளக்கமாகவே

அமைந்திருந்தது. ஹதீஸ்களை ஒதுக்கிவிட்டு குர்ஆனை மட்டும் படிப்பதால்

தேவையான விளக்கங்களை பெற முடியாமலே போய்விடும்.

குர்ஆனை விளங்கிக்கொள்ள மார்க்க அறிஞர்கள் உதவி ஏன் ?

ஒரு மொழியை நன்கு அறிந்திருந்தால் மட்டும் அம்மொழியில் எழுதப்பட்ட

புத்தகங்களை படித்து அதன் கருத்துக்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும்

என்றிருந்தால், நாட்டில் பல்கலைகழகங்களோ கல்லூரிகளோ தேவைப்படாது.

எனக்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை இருக்கிறதென்றால் மருத்துவம் சம்பந்தமான

ஆங்கில புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு நான் ஒரு மருத்துவர் ஆகிவிட

முடியும்! நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை! நாட்டில் பலபேர்

பிழைத்துப்போனார்கள்!

ஒரு பாடபுத்தகத்தை படிப்பதற்கே நமக்கு ஆசிரியர்களின் உதவி

தேவைப்படும்போது, இறைமறையாகிய திருக்குர்ஆன் ஒரு பாடபுத்தகமல்ல என்பதை

நாம் நினைவில் வைக்க வேண்டும். குர்ஆன் விரிவுரையாளர்கள் அரபி

மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்ததோடு, குர்ஆன் வசனங்களுக்கு நபிகளார்

தந்த விளக்கங்களையும் அறிந்திருந்தார்கள். அதோடு, ஹதீஸ்கள், வசனங்கள்

இறங்கிய காலம், பிண்ணனி, ஆகியவற்றையும் அறிந்திருந்தார்கள். இத்தகைய

மார்க்க அறிஞர்களின் குர்ஆன் விளக்கத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வரையில்

பிரச்னை எதுவும் இல்லை. அப்படி இல்லாமல் அதற்கு மாற்றுக்கருத்து சொல்ல

யாராவது விரும்பினால், அவர்களுக்கு மேலே சொன்ன அத்தனை தகுதிகளும்

இருக்க வேண்டும். அத்தனை விஷயங்களையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

இல்லாவிடில் அவர்களின் விளக்கம் வெறும் வியாக்கியானமாகத்தான் இருக்கும்.

இந்த கடிதத்தை எழுத எனக்கு உதவிய மார்க்க அறிஞர் மவுலவி ஹாபிஸ்

ஹுசைன் கனி பாகவி காஸிமி அவர்களுக்கு எனது நன்றிகள்!

– சலாஹுத்தீன்

salahudn@yahoo.co.uk

Series Navigation

சலாஹுத்தீன்

சலாஹுத்தீன்

கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

சலாஹுத்தீன்


====

பர்தா பற்றிய விளக்கத்திற்கு போகுமுன் நேசகுமாரின் கவனத்திற்கு சில

விஷயங்களை வைக்க விரும்புகிறேன்.

நாகூர்ரூமியின் ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் ‘ என்ற நூலில் அவர் ‘முஹம்மது

(ஸல்) அவர்கள் இறுதித்தூதர் ‘ என்று குறிப்பிட்டதற்காக, அதற்கான

ஆதாரங்கள், இறைவசனங்கள், அவை இறங்கிய பிண்ணனி, அது குறித்து நிகழ்ந்த

சர்ச்சைகள், அது பற்றிய மற்றவர்களின் மாறுபட்ட கருத்துக்கள் ஆகியவற்றை

தெளிவாக குறிப்பிடவில்லை என்று ரூமியின் நேர்மையை சந்தேகப்பட்டார்கள்.

ஒரு அறிமுக நூலில் இவற்றையெல்லாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் அல்ல

ரொம்பவே அதிகம். அதே சமயத்தில் நீங்கள் கேட்ட அவ்வளவு விளக்கங்களும்

அததற்குறிய நூற்களில் மிகத்தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது

இஸ்லாத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் நீங்கள் அறியாததல்ல.

இஸ்லாமிய வரலாற்றில், குறிப்பாக நபிகளாரின் வாழ்வு எந்தவித

ஒளிவுமறைவுமின்றி தெள்ளத்தெளிவாக பதியப்பட்டிருக்கிறது. அண்ணலாரின்

மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட அவதூறுகளை கூட,

அவற்றிற்குறிய விளக்கங்களுடன் வரலாற்றில் பதிவு செய்யும் நேர்மை

இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் இருக்கிறது. உதாரணமாக நீங்கள் உங்கள்

கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் அன்னை ஜைனப் அவர்களை நபிகளார் மணமுடித்தது

தொடர்பாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறு, அன்னை ஆயிஷா அவர்களின்

மீது சுமத்தப்பட்ட களங்கப்பழி ஆகியவையும் அவற்றை இறைவன்

துடைத்தொழித்தான் என்ற விபரமும் மெளலானா மெளதூதி அவர்களின்

திருக்குர்ஆன் விளக்கநூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அன்னை ஜைனப் அவர்களின் திருமணத்தையொட்டி எழுந்த சர்ச்சையை குறிப்பிட்ட

நீங்கள், நபிகளார் அன்னை அவர்களை ஆடை விலகிய நிலையில் பார்த்ததாக

உங்கள் கட்டுரையில் மூன்று இடங்களில் எழுதி இருக்கிறீர்கள். இதை நீங்கள்

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதினீர்கள் என்று தெரிவிக்க முடியுமா ?

மெளலானா மெளதூதி அவர்களின் திருக்குர்ஆன் விளக்கநூலில் ‘அவதூறு ‘ என்றே

குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சம்பவத்தை திரித்து கண்ணியக்குறைவான முறையில்

எழுதி இருப்பது எந்த வகை நேர்மை நேசகுமார் ?

நபிகள் நாயகம் அவர்கள் கோடிக்கணக்கான உலக முஸ்லிம்களின் அன்பிற்கும்,

மரியாதைக்கும் உரிய அப்பழுக்கற்ற தலைவர். அவர்களது துணைவியார்

முஸ்லிம்கள் அனைவருக்கும் தாய்மார்கள். இவர்களைப்பற்றி குறிப்பிடும்போது,

நீங்கள் உங்கள் தாய் தந்தையரை, நீங்கள் மதிக்கும் தலைவர்களை பிறர்

எவ்வாறு கண்ணியமாக நடத்த வேண்டும் என்று விரும்புவீர்களோ (அப்படி நீங்கள்

விரும்புவீர்கள் என்றால்) அதே அளவு கண்ணியத்துடன் குறிப்பிடுங்கள். இன்று

இஸ்லாத்தைப்பற்றி ஆனா ஆவன்னா கூட தெரியாத பலர் மெத்தப்படித்த

மேதாவிகள் போல பிதற்றிக்கொண்டிருக்கையில், நீங்கள் ஆதாரங்களுடன் (அது

சரியா தவறா என்பது வேறு விஷயம்) இஸ்லாத்தைப்பற்றி கேள்விகள்

எழுப்புகிறீர்கள் என்பதால்தான், அந்த கேள்விகளுக்கு மதிப்பளித்து பதில்

சொல்லிக்கொண்டிருக்கிறோம். கண்ணியக்குறைவான, ஆதாரமற்ற

விஷயங்களைப்பற்றி எழுதுவதன் மூலம் நீங்கள் உங்களையே அந்த

மற்றவர்களைப்போல தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.

பர்தாவைப்பற்றிய தங்கள் கட்டுரையின் சாராம்சமாக நான் விளங்கிக்கொண்டது

என்னவெனில், குர்ஆனில் பர்தாவைப்பற்றிய வசனங்கள் அனைத்துமே நபிகளாரின்

துணைவியார் மற்றும் நபிகளாரின் காலத்தின் வாழ்ந்த பெண்களுக்கு மட்டுமே

பொருந்தும், அவை ஓட்டு மொத்த மனித குலத்திற்கோ அல்லது எல்லா

முஸ்லிம்களுக்குமான இறைவனின் கட்டளைகளோ அல்ல என்ற உங்களின் வாதம்.

இது எப்படி தவறு என்பதைப்பார்ப்போம்.

இறைவன் நபிகளாரின் துணைவிகளுக்கு மட்டும் என்று கட்டளைகளை பிறப்பிக்க

நாடினால் வசனம் 33:32ல் உள்ளவாறு ‘நபியின் மனைவிகளே! ‘ என்று

நேரடியாக அழைத்திருப்பான். மாறாக ‘மூஃமின்களே ‘ என்று அழைத்தால் அது

ஒட்டுமொத்த முஸ்லிம்களைத்தான் குறிக்கும். ‘மூஃமின் ‘ என்ற சொல்லின்

பொருள் நம்பிக்கையாளர் என்பதாகும். அதாவது இஸ்லாத்தின்

கொள்கைகளின்மீது மனதாற நம்பிக்கைகொண்ட அனைவரையும் இந்த சொல்

குறிக்கும். நீங்கள் சொல்வதுபோல் இந்த சொல் அப்போது நபிகளாரின் கூட

இருந்த கூட்டத்தாருக்கு மட்டுமே பொருந்தும் என்றால், குர்ஆனில் எண்ணற்ற

இடங்களில் ‘மூஃமின்களே! ‘ என்று நம்பிக்கையாளர்களை அழைத்து இறைவன்

சொல்லும் கட்டளைகளை என்னவென்று சொல்வீர்கள் ?

பர்தா விஷயமாக ஹதீதுகளில் முரண்பாடுகளும், மார்க்க அறிஞர்களிடையே

கருத்து வேறுபாடுகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஹதீதுகளில்

முரண்பாடு என்பதை, சம்பந்தப்பட்ட ஹதீதுகளின் காலத்தை ஆராய்ந்தபிறகே ஒரு

முடிவுக்கு வரமுடியும். உதாரணமாக பர்தா சம்பந்தமான இறைகட்டளை வருவதற்கு

முன்பான ஹதீதுகளுக்கும், அதற்கு பின்பான ஹதீதுகளுக்கும் வித்தியாசம்

இருக்கலாம். மார்க்க அறிஞர்களின் கருத்து வேறுபாட்டிற்கு போகுமுன்

பர்தாவைப்பற்றிய சில அடிப்படைகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இஸ்லாத்தின் பார்வையில் பர்தா எனப்படும் ஆடைக்கு சில குறைந்தபட்ச

தகுதிகள் உண்டு. அவை, 1. பெண்களின் ஆடை அவர்களின் முகம், கை

ஆகியவற்றைத்தவிர பிற பாகங்களை மூடியதாக இருக்க வேண்டும் 2. உடல்

அமைப்புகள் தெரியும் வண்ணம் இறுக்கமாக இருக்கக்கூடாது 3. மிக மெல்லியதாக

(see-through) இருக்கக்கூடாது ஆகியவையே. சாதாரணமாக பெண்கள்

அணியும் ஆடைக்குஇந்த தகுதிகள் இருந்தால், அந்த சாதாரண ஆடையே

பர்தாதான். இதற்கென தனியாக ஒரு ஆடை அணிய வேண்டும் என்ற அவசியம்

இல்லை. நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர் ஏழை

எளியவர்கள். அன்றைய பெண்கள் தங்கள் வழக்கமான ஆடைக்கு மேலதிகமாக ஒரு

கறுப்பு பர்தா அணிந்திருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதே சமயம் நாட்டிற்கு

நாடு, ஊருக்கு ஊர் அங்குள்ள சூழ்நிலை, பழக்க வழக்கங்களை கருத்தில் கொண்டு

மேலே குறிப்பிட்ட குறைந்தபட்ச தகுதிகளுக்கு அதிக அளவிலான பர்தாவை

அணிவதில் எந்த தவறும் இல்லை.

பர்தா அவசியமா என்ற கேள்விக்கு, ஒரு மாறுதலுக்காக திண்ணையிலிருந்தே

சில குறிப்புகளை காட்ட விரும்புகிறேன்.

எஸ் கே அவர்களின் ‘மக்கள் மெய் தீண்டல் ‘ என்ற கட்டுரையில், நம்

குழந்தைகளின் பாதுகாப்புக்காக பெற்றோர்கள் மெற்கொள்ள வேண்டிய சில

வழிமுறைகளை சொல்லி இருக்கிறார்கள். அவற்றில் ஒன்று ‘ஆடை விஷயத்தில்

எப்போதும் கவனமாக இருக்கப் பழக்க வேண்டும். தூங்கும்போது கூட விலகாமல்

பார்த்துக்கொள்வது எப்படி என்று விளக்க வேண்டும் ‘ என்பதாகும். இஸ்லாம் இந்த

பாதுகாப்பைத்தான் பெண்களுக்கு கட்டயமாக்கி இருக்கிறது.

ஜோதிர்லதாகிரிஜா அவர்களின் ‘கவர்ச்சி, அடக்கம் X மரியாதை ‘ என்ற

கட்டுரையில் உடை விஷயத்தில் பெண்களில் சிலர்

சீரழியத்தொடங்கியிருப்பது கண்கூடான உண்மைதான் என்பதோடு, அவர்கள்

அவ்வாறு அலங்கோலப்படுத்திக்கொள்ள முனைவதற்கு ஆணே காரணம் என்றும்,

பெண்களின் அங்க அவயங்களை விகாரமாக பார்க்கும் சுபாவம்

படைத்தவர்களாகவே பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள் என்றும்

குறிப்பிடுகிறார். பாரம்பரிய பண்பாடுகள் பெண்களுக்கு

போதிக்கப்பட்டதுபோல் ஆண்கள் விஷயத்திலும் கடைபிடிக்கப்பட்டிருப்பின்

பாலியல் குற்றங்கள் இன்றிருப்பதுபோல் மோசமாக அளவுக்கு வந்திருக்காது

என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கற்பு நிலையை ஆண்களுக்கும்

பெண்களுக்கும் பொதுவில் வைத்த இஸ்லாம், பெண்களை பர்தா அணிம்படி

சொன்னதோடு ஆண்களையும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளும்படி

கட்டளையிடுகிறது. ஏராளமான புள்ளிவிபரங்களை தரும் நேசகுமார்,

இஸ்லாமிய சட்டங்கள் அமுலில் இருக்கும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில்

பாலியல் குற்றங்கள் எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்ற புள்ளிவிபரத்தையும்

தெரிவித்தால், அதை அமெரிக்கா போன்ற ‘வளர்ந்த ‘ நாட்டின்

புள்ளிவிபரங்களுடன் ஒப்பிட்டு உண்மை நிலையை அறியலாம்.

பர்தா முறையில் அமைந்த உடை பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையுமே

அளிக்கிறது. பாகிஸ்தானின் சில பிரதேசங்களில் பர்தா அணியாத

பிறமத பெண்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்ற புள்ளிவிபரம்

எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்கு தெரியாது. இந்த கூற்றில்

ஓரளவிற்காவது உண்மை இருக்கக்கூடும் என்று எடுத்துக்கொண்டால், முதல்

காரியமாக இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் கயவர்களை கடுமையாக

தண்டிக்க வேண்டும் ( ‘இஸ்லாமியச் சட்டங்கள் கடுமையானவை ‘ என்று நீங்கள்

அடுத்த கட்டுரை எழுதலாம்) அடுத்ததாக, பர்தா அணிவதால் அந்த பெண்களுக்கு

பாதுகாப்பு கிடைக்குமென்றால் அவர்கள் பர்தா அணிவதில் என்ன தவறு ?

‘முஸ்லிம்களும்கூட பர்தா அணிவதை கைவிட வேண்டும் ‘ என்ற உங்கள் கூற்று இந்த

பிரச்னைக்கு எந்த விதத்தில் தீர்வாகும் ? ஒரு ஊரில் ஒரு சிலர் மட்டும்

உணவுக்கே வழியில்லாமல் இருந்தால், அவர்களுக்கும் உணவு கிடைக்க ஏற்பாடு

செய்வதற்கு பதிலாக அந்த ஊரில் அனைவருமே பட்டினி கிடக்க வேண்டும் என்று

சொல்வது போலல்லவா இருக்கிறது ?

– சலாஹுத்தீன்

salahudn@yahoo.co.uk

Series Navigation

சலாஹுத்தீன்

சலாஹுத்தீன்