கடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

அசுரன்


அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்.

திண்ணையில் எனது உடல்நலன்குறித்த மருத்துவ அறிக்கையை நான் வெளியிட்டதன் நோக்கம் மண் சார்ந்த மருத்துவத்தில் இதற்கானத் தீர்வினைத் தேடுவதே. இதன் மூலம் நான் யாரேனும் மிகச்சிறந்த மருத்துவரைச் சந்தித்ிதால், அது இத்தகைய பிணியாளர்கள் பலருக்கும் உதவக்கூடும் என்ற நப்பாசையே அது. இதுதொடர்பாக, நான் பல அலோபதி, சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்களைத் தொடர்புகொண்டேன்.

அலோபதி மருத்துவர்களைப் பொறுத்தவரையில் பெரிய வாய்ப்புகள் ஏதும் இல்லை. நிலைமை மிக மோசமாக இருக்கிறது, உடனே கையில் அறுசைச்சிகிட்சை மேற்கொண்டு ஒரு குழாயை பொருத்திக்கொள்ளுங்கள், மயக்கம், நிற்காத வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாகச் சென்று டயாலிசிஸ் செய்துகொள்ள இது உதவியாக இருக்கும். முடிந்தவரை டயாலிசிஸ் செய்வோம், பின்னர் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பதே அலோபதி மருத்துவர்களின் ஒரே அறிவுரை. (இதற்கான செலவு 3 இலட்சம் முதல் 5 இலட்சம்வரை). கன்னியாகுமரி முதல் கனடா வரையிலும் அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த ஒரே ஆலோசனை இதுமட்டுமே. தமது அலோபதி துறைசார்ந்த பல்வேறு நிபுணர்களைக் கலந்தாலோசித்த கோவை மருத்துவர் இரமேசும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியும் நேரடியாக வீட்டிற்கு வந்து அவர்களின் ஆலோசனைகளை எடுத்துரைத்தனர்.

சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் இந்நோயைக் குணப்படுத்திவிடலாம் என்று தெரிவித்தபோதிலும் முறையான சோதனைகள் மேற்கொண்டு, மருந்துகளைக்கொடுத்து, நோயைக் குணப்படுத்தும் முறை அவர்களிடம் இல்லாதால் நம்மால் இந்த மருந்தை பயன்படுத்தினால், இத்தனை நாளில் இந்ிநோயைக் குணப்படுத்திவிடலாம் என்ற உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை. இதில் சவால்விட்டு உறுதி கூறியவர்கள் ஓமியோபதி மருத்துவர்கள் மட்டுமே. மதுரையைச் சேர்ந்த டாக்டர் மோகன்தாஸ், தனது பேராசிரியரான திரு. அனந்தநாராயணன் இத்தகைய பல நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்த சித்தமருத்துவர் சோதிக்குமாரும் தொலைபேசிவழியாகவே பல ஆலோசனைகளை அளித்தார். அவரது ஆலோசனை மற்றும் சித்த மருத்துவரான எனது தந்தையார் சிறீ. திருப்பதி ஆசான் ஆகியோரின் ஆலோசனைப்படி சில மூலிகை மருந்துகளை உண்டேன். அதன்விளைவாக இரண்டே நாட்களில் சிறுநீரில் வெளியான ஆல்புமின்யூரியாவின் அளவு +++ல் இருந்து + ஆனது. சிறுநீரில் வெளியான இரத்த சிவப்பணுக்கள் நிறுத்தப்பட்டன. இரத்தத்தில் குறைந்திருந்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால், உடலுக்கு எழுந்து நடக்குமளவுக்கு திறன்வந்தது. இதனூடாகவே, இத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதில் நிபுணத்துவம் பெற்ற சிறந்த சித்த மருத்துவரைத் தேடும் பணியும் நடந்துவந்தது.

எனது சிக்கல் தொடர்பாக திண்ணை வாயிலாக அறிந்த திரு. அரவிந்தன் நீலகண்டன் தன்னுடன் லெனின் என்ற ஆயுர்வேத மருத்துவரை அழைத்துவந்தார். அவரது ஆலோசனைப்படி சத்திய ராஜேஸ்வரன் என்ற சித்த மருத்துவரை சந்தித்தோம். அவர் எலிசா என்ற சித்த மருத்துவரை பரிந்துரைத்தார். அவர் என்னுடன் ஒருநாள் முழுக்க அலைந்துகொண்டிருந்த மருத்துவர் சோதிக்குமாருக்கும் தெரிந்தவராக, சிறந்தவராக இருந்ததால் நாகர்கோவிலில் இருக்கும் அவரை சந்தித்தோம். அவரைச் சந்திப்பதற்கு மருத்துவர் அரவிந்தன் வழிகாட்டினார். இப்போது, அவரது ஆலோசனைப்படி கடந்த 9ஆம் தேதி முதல் மருந்து சாப்பிட்டு வருகிறேன். மீண்டும் வரும் 17ஆம் தேதி அவரை சந்திக்கவேண்டும். மருத்துவர் எலிசாவின் மின்னஞ்சல் முகவரி: elezafinn@yahoo.com

இதில் குறிப்பிட்டுச்சொல்லவேண்டிய அம்சம், திண்ணையில் வெளியான மடல்கண்டு, இன்றுவரையிலும் என் முகம் அறியாத நண்பர்கள் என் மீது காட்டும் அன்புதான். முதல் நாளில் கடும் அதிர்ச்சியடைந்திருந்த எனது துணைவியார் அடுத்துவந்த நாட்களில் எனக்கே ஆறுதல் கூறுமளவிற்கு மாறியது எந்தளவிற்கு எனக்கு வியப்பூட்டியதோ அதற்கு சற்றும் குறையாதளவில் வியப்பூட்டியது திண்ணை நண்பர்களின் ஆதரவு. கடந்த ஓராண்டாக மட்டுமே நான் திண்ணையில் அவ்வப்போது எழுதி வந்தாலும், அதைக்கொண்டே என்னைப் புரிந்துகொண்ட நண்பர்கள் பிரகாஷ் கோமதிநாயகம் எனது ஐசிஐசிஐ வங்கிக்கணக்கைத் தெரிவித்தால் தானும் அமெரிக்க நண்பர்களும் நிதியனுப்ப வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார். நண்பர் பாண்டியன் எனது பதிலைப்பொறுத்து உடனடியாக உறவினர் மூலம் ஆயிரம் டாலர் தொகை அனுப்புவதாகத் தெரிவித்தார்.

உண்மையிலேயே இந்த வரிகளைப் படித்தபோது நான் கண்கலங்கினேன். ஏனென்றால், கடந்த 8 ஆண்டுகளாக எனது உழைப்பால் தனிப்பட்ட முறையில் யார் அதிகம் பயன் பெற்றார்களோ அவர்களே என்மீது காட்டாத அன்பையும் ஆதரவையும் கடந்த ஓராண்டாக மட்டுமே அறிமுகமான திண்ணை நண்பர்கள் என்மீது காட்டியுள்ளார்கள். எந்த மருந்தையும்விட இதுவே எனக்கு அதிக ஊக்கமூட்டுவதாக உள்ளது. நன்றி நண்பர்களே.

நண்பர்களே, நான் இப்போதைய மருத்துவம் மூலம் குணம்பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறு நடந்தால் எனக்காக நிதியுதவி ஏதும் தேவைப்படாது. வேறு சிக்கல்கள் ஏற்பட்டு அலோபதி மருத்துவத்திற்குத் திரும்பநேரிட்டால் அதுதான் தாங்க இயலாத செலவாகவே இருக்கும்.

மருத்துவம் தொடர்பான எனது தனிப்பட்ட இந்த அனுபவங்களை பின்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதவும் திட்டமுள்ளது.

மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,

அசுரன்

(asuran98@yahoo.com)

Series Navigation

அசுரன்

அசுரன்