கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

மாயவரத்தான்


ஒரு காலத்தில் தமிழ்ப் பத்திரிகையுலகில் ‘காமிக்ஸ் ‘ புத்தகங்கள் கலக்கிக் கொண்டிருந்தன. முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என்று வெளிநாட்டு காமிக்ஸ் வீரர்களின் தமிழ் பதிப்பை சிறுவர் முதல் பெரியோர் வரை ரசித்து படித்துக் கொண்டிருந்த காலம். அதன் தாக்கத்தில் தினப் பத்திரிகைகளில் கூட மந்திரவாதி மாண்ட்ரேக் போன்ற காமிக்ஸ் தொடர்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பிறகு வந்ததோ சிறுவர்கள் கதை புத்தகங்கள். கோகுலம், பூந்தளிர், அம்புலிமாமா என்று சக்கை போடு போட்டன.

அதன் பிறகு நாவல்களின் ஆட்டம்…பாக்கெட் நாவல், கிரைம் நாவல், அந்த நாவல், இந்த நாவல் என்று பத்திரிகையுலகமே கத்தியும், ரத்தமும், துப்பாக்கியும், சத்தமுமாய் வெளிவந்து கொண்டிருந்தன.

பக்தி பத்திரிகைகள், சிறுவர் பத்திரிகைகள், ஜனரஞ்சக பத்திரிகைகள் என்று அனைத்து பத்திரிகைகளும் போணியாகிக் கொண்டிருக்கும் நேரம் இது!

புலனாய்வுப் பத்திரிகைகள் என்ற பெயரில் ஒரு பகுதி இருக்கிறது. இதற்கு முன்னோடி என்று ஜூ.வி. என்று வாசகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘ஜூனியர் விகடன் ‘ பத்திரிகையை குறிப்பிடலாம். ஜூ.வி.யின் வெற்றியைத் தொடர்ந்து அதே போல ஜெராக்ஸ் காப்பிகளாக இன்றும் பல பத்திரிகைகள் வெளிவருகின்றன.

மேற்படி பத்திரிகைகளைத் திறந்தாலே ‘ரத்த வாடை ‘ வீசுகிறது என்று சொன்னால் அதில் மிகையில்லை! வெட்டு, குத்து, கொலை என்று ஒரே களேபரச் செய்திகள் தான்! மக்களுக்கும் இப்படி ஒரு பரபரப்பு தேவைப்படுகிறதோ ?!

பரபரப்புக்காக இந்த இதழ்கள் வெளியிடும் செய்திகளால் முக்கால்வாசி நேரம் மக்களுக்கு நேரடியான நன்மை கிடைக்கிறது என்றாலும் சமயத்தில் பாதிப்பும் ஏற்பட்டு விடுகிறது என்பதும் உண்மை தான்.

சமீபத்தில் வெளியான நடிகை ‘த்ரிஷாவின் திவ்யதரிசன ‘ செய்தியையே எடுத்துக் கொள்ளுங்களேன்…மேற்படி அசிங்கமான காட்சியில் இடம் பெறுவது த்ரிஷாவா அல்லது அவரைப் போன்ற வேறொருவரா என்ற கேள்விக்கெல்லாம் நாம் போக வேண்டாம். பத்திரிகைகளில் இந்த செய்தி தெரிய வருவதற்கு முன்பு ஓரிரு நூற்றுக்கணக்கானவர்களுக்கோ, அல்லது ஆயிரக்கணக்கானவர்களுக்கோ மட்டும் தெரிந்த அந்த விவகாரம், பத்திரிகைகளில் வெளியான உடன் உலகமெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களின் பார்வைக்கும் வந்து விட்டது. ‘அந்தப்படம் பாத்திட்டியா ? ‘ என்று ஏதோ சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி படத்தை பார்த்து விட்டு வரும் ரசிகனை கேள்வி கேட்பது போல கேட்டு, அதை எப்படியாவது பார்த்து விடும் ஆசையில் பெரும்பாலோர்!

பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு நன்மைகளையே விளைவிக்கும் பத்திரிகைகள் சமயங்களில் சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக தவறான திசையிலும் திருப்பி விடுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று தான்!

– மாயவரத்தான் (info@mayiladuthurai.net)

Series Navigation

மாயவரத்தான்

மாயவரத்தான்