கடிதம் ஜூலை 22, 2004 – தமிழ் சங்க பேரவை

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

மயிலாடுதுறை சிவா


அன்பு நண்பர் PKSக்கு

மயிலாடுதுறை சிவாவின் இனிய வணக்கம். தங்களின் ‘ஒடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் ‘ என்ற கட்டுரையை வாரா வாரம்

படித்தும், ரசித்தும் வருகிறேன். அதுப்போல நீங்கள் நிறைய எழத வேண்டும். நியுசெர்சி குறும்பட விழாவிற்கு வந்த பொழது தங்களிடம்

நேரிலும் தெரிவித்தேன்.

இந்த வாரம் ‘AIMS INDIA FOUNDATION ‘ பற்றி நன்கு பாராட்டி எழதி உள்ளீர்கள். எனது மனபூர்வமான பாராட்டுக்கள். அந்த கட்டுரையில்

அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகள் வாய்ப்பு கிடைக்க போதெல்லாம் வைகோவைப் பேச வைப்பார்கள் என்று உங்களது வருத்ததை

கோடிட்டு காண்பித்து, சிதம்பரத்தை அறிவு ஜிவீ என்றும் பாராட்டி உள்ளீர்கள். இதற்கு எனது தனிப்பட்ட சில கருத்துகளை உங்கள் முன்

வைக்க ஆசைப் படுகிறேன்.

நீங்கள் சொல்லும் தமிழ் சங்க அமைப்பு என்பது ‘தமிழ் சங்க பேரவை ‘ மற்றும் சில தமிழ் சங்கங்களை…

அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்க பேரவை என்பது, அமெரிக்காவில் உள்ள தமிழர்களை,தமிழ் சங்கங்களை ஒரு குடையின் கீழ்

ஒருங்கிணைக்கும் ஒர் அமைப்பு. இந்த அமைப்பில் திரு வைகோ இருமுறை பேசினார். ஒரு முறை பேரவை அழைத்தது மற்றொரு முறை

அவர் தன்னுடைய மகள் வீட்டால் சிகாகோவில் தங்கி இருந்தப் போழது மீண்டும் பேசினார்.

வைகோ – இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழ் நாட்டில் அனைவரும் பாராட்டும்படி பேச்சாற்றல் மிக்க ஓர் அரசியல்வாதி.

அவரை இரு முறை பேச அழைத்ததில் என்ன தவறு கண்டார்கள் என்று புரியவில்லை ? அவருடைய பல பேச்சுகள் வெறும்

உணர்ச்சிக்களை மட்டும் தூண்ட கூடியது அல்ல, சிந்தனைகளையும் தூண்ட கூடியது என்பது என் தாழ்மையான கருத்து.

நம்மைப் போல தமிழ் மொழி பேசும், நமக்கு தொப்புள் கொடி உறவுள்ள நம் ஈழ தமிழ்ர்களுக்கு குரல்

கொடுத்து, கிட்டதட்ட 600 நாட்கள் சிறையில் இருந்த வைகோவை பேச அழைத்தது தவறா ?

ஈழ தமிழர்களுக்காக ஜெனிவாவிலே மனித உரிமைகள் அமைப்பிலே ஈழ தமிழர்களின் போரட்டத்தை, பட்ட கடினங்களை,

அவர்களின் மனித உரிமைகளை மீட்க அவர்களிடம் முறையிட்டு வந்ததை, நாங்கள் கேட்டு தெரிந்து கொண்டோமே ?அது தவறா ?

தமிழ் நாட்டில் மிக பிரபலமான அரசியல்வாதி ஒருவரை இங்கு வந்த பொழது பேச வைத்து எங்களை போல இளைஞர்கள் பலர்

உணர்ச்சிகளை மட்டுமல்ல, சிந்தனைகளையும் தூண்ட உதவியாக இருந்தது என்றால் அது மிகையாகது.

நீங்கள் குறிப்பிட்டதை போல, வைகோ மட்டும் அல்ல, இதுப் போல் பலரை பேச தமிழ் சங்க பேரவை பேச அழைத்து உள்ளது.

ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் பட்ட, தலித் மக்களுக்காக போராடும் தொல்.திருமாவளவனை பேச அழைத்தது, அதைப் போல

கிருஷ்ணசாமி அவர்களையும் பேச பேரவை அழைத்தது.

நம் தமிழ் சமுதாயத்தில் புறையோடி விட்ட மூடபழக்கத்தை பற்றி பேசவும், பெண் உரிமைகளுக்கு போராடும் வழக்குரைஞர்

அருள் மொழியை பேச வைத்துள்ளது பேரவை.

தமிழ் அறிஞர்கள் பலர் சாலமன் பாப்பையா, ஞானசம்மந்தம், வானொலி புகழ் சுந்தர ஆவுடையப்பன், கவிஞர் அறிவுமதி,

கவிஞர் சேரன் இப்படி பலரை பேச அழைத்து உள்ளது பேரவை. ஆனால் நீங்கள் வைகோவை மட்டும் சொல்லி உள்ளீர்கள்…

அரசியல் மட்டுமல்ல, கலையில் சிறந்து விளங்கும் பலரை தமிழ் சங்க பேரவை பேச வைத்துள்ளது.

அதுமட்டுமல்ல, குறிப்பாக அடிதட்டில் உள்ள, நம் பழமையான கலையை போற்றும் ‘நந்தன் கதை ‘ அமெரிக்க தமிழ் மக்களுக்கு

தாரை, தப்பட்டை, உடுக்கு, மேளம், பரை இப்படி பல வாத்தியங்களை அறிமுகப் படுத்தியது தமிழ் சங்க பேரவையே!!!

இந்த ஆண்டு தமிழ் சங்க பேரவையில், திருமங்கை நர்த்தகி நடராஜ் அவர்களின் பரத நாட்டியிம் காண்போர் கண்களை கொள்ளை கொண்டது.

இதுவல்ல விசயம், திருமங்கை நர்த்தகி யார் தெரியுமா ? அரவாணி என்றும் சொல்லப் படும் கலைஞர். ஆண் / பெண் இல்லாமால் பால்திரிபு கொண்ட கலைஞர். இப்படிப் பட்ட கலைஞரை முதன் முதல் வெளிநாடு அழைத்து மக்கள் முன் அங்கீகாரம் கொடுத்து, ‘பிறப்பொக்க எல்லா உயிர்க்கும் ‘ என்பதைபோல தமிழ் சங்க பேரவை பலரை அழைத்து உள்ளது. என்னை பொறுத்தவரை இப்படி பட்ட கலைஞர்களை அழைத்து வந்து விழாவில்

சிறப்பிப்பதை மாபெரும் விசயமாக நினைக்கிறேன்.

அடுத்து வைகோவை பேச அழைத்தது தவறு என்பது போல் சொன்ன நீங்கள், சிதம்பரத்தை அறிவுஜீவி என்று சொன்னது தவறு என்றே தோன்றுகிறது.

முன்பு நிதி அமைச்சர் இருந்த காரணத்தால் நன்கு புள்ளி விவரங்கள் தெரிந்து இருக்கிறது. ஜனநாயக பேரவை என்று தனிக் கட்சி நடத்தி விட்டு தனது தொண்டர்களை அம்போ என்று விட்டுவிட்டு காங்கிரஸ் தலைவி சோனியாவிடிம் பேசி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று மத்திய நிதி அமைச்சர் ஆனவர். அரசியலில் எல்லோரும் சுயநலம் என்று வைத்துக் கொண்டாலும் இவர் சுயநலத்தின் மொத்த உருவம். இவருடைய கட்சி என்னாவானது ?

இவரை மிகவும் நம்பி வந்த கட்சி தொண்டர்களுக்கு என்ன பலன் ? இவரை பார்த்து பழகும் வாய்ப்பு எனக்கும் ஏற்பட்டது அவரிடம் பணக்காரத்தனம்

நன்கு தெரிகிறது. அடித்தட்டு மக்களிடம் சிறுதும் செல்வாக்கு இல்லாதவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இவருக்கு இந்தியாவில் உள்ள பல பணக்காரர்கள்(டாடா, பிர்லா, அன்பானி, ரிலையன்ஸ்) பழக்கமாக இருக்கலாம், இதனால் இவர் சார்ந்து இருக்கும் சிவகங்கை தொகுதி மக்களுக்கு

ஏதாவது பலன் கிடைத்ததா ? இந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஏதாவது உருப்படியாக செய்தால் நலம். ‘AIMS INDIA FOUNDATION ‘ முனைவர் உதயமூர்த்தியை கூப்பிட்டு பேச சொன்னது மிக்க மகிழ்ச்சியே. மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மூலம் AIMS INDIA FOUNDATION க்கு ஏதாவது

உதவி கிடைத்தால் மிக மிக மகிழ்ச்சி அடைவேன். காலம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இவை அனைத்தையும் உங்களிடம் நான் சொல்ல காரணம், நாம் அனைவரும் தமிழ் நாட்டில் இருந்து இங்கு வந்து இருப்பது, நம்மை கல்வியிலும்,

பொருளாதாரத்திலும் வளப்படுத்தி கொள்ள என்பது அனைவரும் அறிந்த உண்மை. இடைப்பட்ட நேரத்தில் இதுப் போல தமிழ் அமைப்புகளில் சேர்ந்து அல்லது கலந்து நம் தமிழ் உணர்ச்சிகளை தமிழ் சிந்தனைகளை சீர்ப்படுத்தி கொள்ள முடியும். சிறு சிறு தவறு இருக்கலாம், அதனை பெரிதுப் படுத்தாமால்

அமைப்புகளை ஆதரிக்கலாம் அல்லது வலுவான காரணங்கள் இல்லாமால் குற்றம் சொல்லமால் இருக்கலாம் எனபது என் தாழ்மையான கருத்து…

தவறாக சொல்லி இருந்தால் மீண்டும் எழதுங்கள்..பதில் சொல்ல முயற்சிக்கிறேன்…

மயிலாடுதுறை சிவா…

mpsiva23@yahoo.com

Series Navigation

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா