கடிதங்கள் – நவம்பர்-20, 2003

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

நாடோடி-அப்துல் ரஹ்மான்-மாலன்-சி ஜெயபாரதன் – அரவிந்தன் -கலைமணி -தமிழ் மணவாளன்-அருண் பிரசாத்


நண்பர் நாகூர் ரூமிக்கு வணக்கம்.

என் கட்டுரையைப் படித்துவிட்டு சாரு நிவேதிதா திருந்திவிடுவாரென்றோ, திடாரென மனிதத்தன்மை பெற்றுவிடுவாரென்று எண்ணி நான் எழுதவில்லை. அந்த அளவு பண்ப நாம் அவரிடமிருந்து எதிர்பார்க்கமுடியாது என்றும் அறிவேன். என் கட்டுரையை பலபேர் படித்திருக்கக்கூடும். அதில் சில பேராவது அவரின் உண்மையான முகத்தைத் தெரிந்து

கொண்டிருந்தாலே போதுமானது. என் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கியதாக கருதமாட்டேன். மேலும்

ஏற்கனவே காலங்கடத்தியாகிவிட்டது. கடுமையான விமர்சனங்களை நாம் முன்வைக்கவேண்டிய கால கட்டத்திலிருப்பதாக உணர்கிறேன். அதற்கான முன்னோட்டமே இது. ஆபிதீனின் இணைய தளத்தையும் பார்த்தேன். சாரு போன்ற நம்பிக்கை

(சிநேகத்) துரோகிகளுக்கு என்ன தண்டனைக் கொடுப்பது என்பதைக் காலம் தீர்மானிக்கட்டும்.

வாழ்த்துக்களுடன்,

நாடோடி.

to_writers@yahoo.com


எதுவெல்லாம் ஃபாசிசம் ?

தமிழ் திரைப் படங்களிலும், டிவி தொடர்களிலும் வரும் வில்லன்கள்,

வில்லிகளைப் போல் முழுக்க முழுக்க தீயவர்களாய் இருப்பவர்கள் அல்ல

ஃபாசிஸ்டுகள். ஏதேனும் ஒரு நல்ல கொள்கையிலும், செயல் பாட்டிலும்

இருந்து கொண்டு பெரும்பாண்மை மக்களையோ, அல்லது கனிசமான

சிறுபாண்மை இனத்தினரையோ ஒடுக்குவது தான் ஃபாசிஸ்டுகளின் வழிமுறை

என்பதை மெத்தப் படித்த மேதாவிகளே புரிந்து கொள்வதில்லை.

இந்த புரிதலைக் கொண்டு தமிழ் நாட்டின் முதல் அமைச்சர்

ஜெயலலிதாவின் செயல்பாடுகளை மதிப்பிட்டுப் பார்ப்போம். அவர் நடுத்தர

மக்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள்,

மதச் சிறுபாண்மையிர் ஆகிய பிரிவினருக்கு எதிராகப் போடும் சட்டங்களையும்,

எடுக்கும் நடவடிக்கைகளையும் பணக்காரர்களும், ஏழைகளும் கண்ணை மூடிக்

கொண்டு ஆதரவு தெரிவிப்பது இவர்கள் ஃபாசிசத்திற்கு ஆதரவாக

இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையைத் தான் காட்டுகிறது.

ஜெயலலிதாவின் செயல்கள் ஏழைகளை பாதிக்கவில்லையா என்று கேட்கலாம்.

பாதிக்கத் தான் செய்கிறது. ஆனாலும் ஜெயலலிதா எம்ஜியாரைப் போலவே

ஏழைகளை சிந்திக்க விடாமல் ஏமாற்றத் தெரிந்து வைத்து இருக்கிறார்.

இலவச மின்சாரத்தை எடுத்தாலும் மானியம் தருவது, விவசாயிகளிடம்

அரிசி கொள்முதல் செய்யாவிட்டாலும் இலவசச் சாப்பாடு போடுவது இப்படி.

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை ஜெயலலிதா தன் காலில் விழச்

செய்வதை அவரது ஆனவத்திற்கு உதாரணமாக எப்போதும் தி.மு.கவினர்

சொல்லிக் காட்டுவதுண்டு. பரிதி இளம்வழுதி சிறையிலிருந்து விடுதலை

ஆகிறார். தி.மு.க. தலைவர் கருணா நிதியைச் சந்திக்கிறார். அவருடன்

சேர்ந்து பத்திரிக்கைக்கு போஸ் கொடுக்கும் போது, கலைஞர் நாற்காலியில்

அமர்ந்திருக்கிறார். பரிதி இளம் வழுதி தரையில் அமர்ந்து இருக்கிறார். கலைஞர்

பரிதி இளம் வழுதி என்ற தனி நபரை அவமதிக்கவில்லை. எழும்பூர் தொகுதி

மக்களை அவமதித்துள்ளார். பரிதி இளம் வழுதி ஒரு தனித்தொகுதி உறுப்பினர்

என்பதால் கலைஞர் தலித் மக்களை அவமதித்துள்ளார்.

என் சிற்றப்பா டாக்டர் அ. அய்யூப் ஒரு முறை ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்

தலைவராக இருந்த போது அறிவாலயத்தில் கலைஞரைச் சந்தித்தார். அப்போது

கலைஞர் தனக்கு இருக்கை தராததை வருத்தத்துடன் குறிப்பிடுவார். கலைஞர்

அய்யூப் என்ற தனி மனிதரை அவமதிக்கவில்லை. ஹாங்காங் தமிழர்களையே

அவமதித்துள்ளார். நாம் ஃபாசிஸ்டுகளின் ஆட்சியிலிருந்து மன்னராட்சியை நோக்கிப்

போய்க் கொண்டு இருக்கிறோமா ?

ந. அப்துல் ரஹ்மான்

ஹாங்காங்

aruladiyan@netscape.net


மஞ்சுளா நவநீதன் திசைகளில் வெளியான என்னுடைய கட்டுரையிலிருந்து ‘கருணாநிதியின் படைப்புகள் இலக்கியமாகாது அவை பிரசாரம் என்று அவர் வெளியிட்ட கருத்து அவரது சொந்தக் கருத்தல்ல. இலக்கியச் சிற்றிதழ்களின் அரசியலில் வெறு சில உள்நோக்கங்களுக்காக நெடுங்காலமாக உதிர்க்கப் பட்டு வரும் கருத்து, க நா சு போன்றவர்கள் திருக்குறளையே இலகீயமாக ஏற்க மறுத்தவர்கள். ‘ என்ற வரிகளைமட்டும் மேற்கோள் காட்டி, ‘மாலன் தன்னுடைய சொந்தக் கருத்தை எழுதுகிறார். சிற்றிலக்கியக்காரர்களுக்கு என்ன உள்நோக்கம் இஇருந்தது என்று தெரிவித்தால் பலன் உண்டு ‘ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த நோக்கம் அவர் மேற்கோள் காட்டியுள்ள வரிகைளைத் தொடர்ந்தே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சற்றுப் பொறுமையாகப் படித்திருந்தால் அவர் பலனடைந்திருக்க முடியும். இதோ முழுமையாக அந்தப் பகுதி:

‘கருணாநிதியின் படைப்புக்கள் இலக்கியமாகாது அவை பிரசாரம் என்ற அவர் வெளியிட்ட கருத்து அவரது சொந்தக் கருத்தல்ல. இலக்கியச் சிற்றிதழ்களின் அரசியலில் வேறு சில உள்நோக்கங்களுக்காக நெடுங்காலமாக உதிர்க்கப்பட்டு வரும் கருத்து. க.நா.சு போன்றவர்கள் திருக்குறளையே இலக்கியமாக ஏற்க மறுத்தவர்கள். அது நீதி நூல், நீதி நூல் இலக்கியமாகாது என்பது அவரது வாதம். பாரதியினுடையவை சிறுகதைகள் அல்ல என்றும் அவர்களில் பலர் சொல்லி வந்திருக்கிறார்கள். சமஸ்கிருதக் கல்வியின் காரணமாக அறிய நேர்ந்த அதன் காவிய மரபு, ஆங்கிலக் கல்வியின் காரணமாக அறிய நேர்ந்த ஐரோப்பியக் கலைமரபு இவற்றின் அடிப்படையில் தங்கள் இலக்கியப் பார்வையை அமைத்துக் கொண்டவர்கள். கல்வி பரவலாக்கப்பட்டதின், ஜனநாயகமாக்கப்பட்டதின் காரணமாக. ஒரு குறிப்பிட்ட சமூகம், அறிவுலகில் செலுத்தி வந்த ஆதிக்கத்தை இழக்கத் துவங்கியபோது, அந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இலக்கியத்தை தாங்கள் அறிந்திருந்திருந்த, மற்றவர்களுக்கு வாய்க்கப் பெறாத, ஒருமரபின் தொடர்ச்சியாக நிறுவ முற்பட்டவர்கள். ஏற்கனவே இங்கு இருந்த வந்த மரபின் சிறப்புக்களைப் பற்றிப் பேசுவது இவர்களது இந்த நோக்கத்திற்கு முரணாக அமையும் என்பதால் அதை நிராகரித்து அல்லது மட்டம் தட்டி பேசியவர்கள். இவர்களது இலக்கியப் பார்வை, வெகுஜனங்களுக்கு எதிரான, மேல்தட்டுப் பார்வை. (elitist) இவர்களுக்குக் கண்ணெதிரே காணக் கூடிய சமூகம் முதன்மையானது அல்ல. திட்டவட்டமாக வரையறுக்க முடியாத கலைதான் முக்கியம். இந்த சிந்தனைப் பிரிவினர் நிராகரித்து வந்திருப்பவர்களின் படைப்புக்களில் ஒரு பொது அம்சத்தைப் பார்க்க முடியும். அது அந்தப் படைப்புகள் சமூகத்தை முன்னிறுத்தி சிந்திப்பவை. சமூக மாற்றத்தை விரும்புவை. சமூகத்தை விளித்துப் பேசுபவை.

கருணாநிதி இந்தக் குழுவினருக்கு நேர் எதிரான சிந்தனைப் பிரிவை சேர்ந்தவர். அவருக்கு ஐரோப்பிய, சமஸ்கிருத மரபுகளை விடத் தமிழ் மரபு முதன்மையானது. சமூகம் முதன்மையானது. சமூக மாற்றம் முதன்மையானது. அந்த மாற்றத்திற்கு அடிபடையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது முதன்மையானது. அதற்காக அவர் தன்வசம் இருந்த எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்தி வந்திருக்கிறார், எழுத்தாற்றல் உட்பட. விழிப்புணர்வு பிரதானமாக இருப்பதால் பூடகமாக சொல்வதை விட விளம்பச் சொல்வதைத் தனது உத்தியாகக் கொண்டிருக்கிறார். நுட்பமாகச் சொவதை விட நேர்படச் சொல்வதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார். அவருடைய கலை இலக்கியப் பார்வை வெகுஜனங்களுக்கானது.

முன்கூடிய முடிவுகளோடு அல்லாமல், திறந்த மனத்தோடு இலக்கியத்தை அணுகுபவர்களால், இந்த இரண்டும் இலக்கியத்தின் இரு வேறு கூறுகள், இரண்டும் தன்னளவில் சிறப்புக்களும், பலவீனங்களும் கொண்டவை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். ‘

மாலன்

malan@sunnt.com


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

தகுதியான விஞ்ஞானம், பொறியியல், உளவியல், சமூகவியல், மருத்துவக் கட்டுரை எழுதுவோர் தம் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் பட்டத்தைத் தொடுத்துக் கொள்வது சரியா, தப்பா என்று திண்ணையில் சிலர் கேள்வி எழுப்பி யுள்ளார்கள். மருத்துவ டாக்டர்கள் தமது பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக் கொள்வதிலோ, எந்தச் சமயத்திலும் பிறரால் டாக்டர் என்று அழைக்கப் படுவதிலோ நாணம் அடையாத போது மற்ற பெளதிக, இரசாயன, உளவியல் முனைவர்களோ, வழக்கறிஞர்களோ, எஞ்சினியர்களோ தமது பட்டங்களைத் தொடுத்துக் கொள்வதில் எந்த விளம்பரமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பட்டங்களைப் போட்டுக் கொள்வதால், கட்டுரையின் உள்ளே வரும் அவரது கருத்துக்கள் ஆதாரமும், ஆணித்தரமும் பெறுகின்றன.

அமெரிக்காவிலோ, பிரிட்டனிலோ அச்சாகும் ஆங்கில விஞ்ஞானப் பொறியியல் இதழ்கள், நூல்களில் கட்டுரை எழுதுவோர் தமது பட்டங்களைத் தொடுத்துள்ளதைக் காணலாம். பொறியியல் கட்டுரை எழுதுவோர் தாம் லைசென்ஸ் பெற்ற ‘புரஃபெஷனல் எஞ்சினியர் ‘ [Professional Engineer (P.Eng)] என்று சொல்லிக் கொள்வதில் கூச்சமின்றி, அவர் கூறும் கருத்துக்களுக்கு உகந்த மெய்ப்பாட்டையும், ஆதாரத்தையும் காட்டிக் கொள்கிறார்கள். மருத்துவ டாக்டர்கள், எஞ்சினியர்கள் மேல் நாடுகளில் தமது பணியைச் செய்ய லைசென்ஸ் பெறும் போது, முறையே ‘மருத்துவ ஒழுக்கவியல் ‘, ‘பொறியியல் ஒழுக்கவியல் ‘ [Medical Ethics, Engineering Ethics] மீது உறுதி மொழி அளித்து பெற்றுக் கொள்கிறார்கள்.

வட அமெரிக்காவில் [USA, Canada] பணி செய்யும் துறைஞர்கள் அனைவரும் [Medical Doctors, Lawyers, Engineers, Charted Accountants, Chiropractors, Registered Nurses, Audiologists, Psychologists, Physiotherapists etc] தாம் பணி செய்யும் பொது அறைகளில் தாங்கள் வாங்கிய பட்டம், பட்டத்து லைசென்ஸைப் புதுப்பித்த ஆண்டுகள், அதனை அளித்த பல்கலை நிறுவனங்கள் பெயரைக் கொண்ட சான்றிதழ்களைச் சட்டமிட்டு அழகாகத் தொங்க விடுகிறார்கள். இவற்றை எல்லாம் அவர்கள் தம்மைப் பற்றிச் செய்யும் விளம்பரம் என்று கருதலாமா ? அல்லது அச்சிறப்புப் பணிகளைச் செய்யத் தகுதி பெற்ற துறையாளர் என்பதை எடுத்துக் காட்டும் நியாயமான சான்றுகள் என்று மதிப்பளிப்பதா ?

திண்ணையில் ‘2003 ஆண்டின் அறிவியல் நோபெல் பரிசுகள் ‘ என்னும் அரிய விஞ்ஞானக் கட்டுரையைச் செந்தமிழில் சிறப்பாக எழுதிய முனைவர் மு. சுந்தரமூர்த்தியும், முனைவர் சொ. சங்கரபாண்டியும் நமது மனமார்ந்த பாராட்டுக்கு உரியவர்கள்.

சி. ஜெயபாரதன், கனடா

jayabar@bmts.com


அன்புள்ள ஆசிரியருக்கு

ஞாநியின் கருத்துக்களுக்கு எழுதிய பதிலில் மனுஷ்ய புத்திரன், காலச்சுவடில் நான் எழுதிய கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். உயிர்மையில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரையை சுஜாதாவுக்கு ஆதரவானதாக ஞாநி கூறக்கூடும் என்று கூறும் மனுஷ்ய புத்திரன், காலச்சுவடில் வந்த கட்டுரை ரங்கராஜனின் கட்டுரைக்கு இணையான கருத்தைக் கொண்டது என்றும் கூறுகிறார். இதை நான் மறுக்கிறேன். ரங்கராஜனின் கட்டுரை, தமிழ்ச் சமூகம் மற்றும் ஊடகங்களின் பின்னணியில் பாய்ஸ் படத்தை ஆதரிக்கும் தொனியைக் கொண்டிருக்கிறது. என் கட்டுரை பாய்ஸ் படத்தை நிராகரிப்பதற்கான தமிழ் ஊடகங்களின் தகுதியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. தமிழ்ப் படங்களின் இன்று வரையிலான வரலாற்றில் பாய்ஸைத் தனிமைப்படுத்தி விமர்சிப்பதில் அர்த்தமிலை என்கிறது. ஆனால் சுஜாதாவையோ பாய்ஸ் படத்தையோ என் கட்டுரை எந்த விதத்திலும் ஆதரிக்கவில்லை. பாய்ஸ் படத்தில் உள்ள, தமிழ் ஊடகங்களின் கண்ணில்படாத சில அபாயக் கூறுகள் பற்றியும் கவனப்படுத்தியிருக்கிறேன். எனவே என் கட்டுரை ரங்கராஜனின் கட்டுரைக்கு இணையானதல்ல என்று கூற விரும்புகிறேன்.

அன்புடன்

அரவிந்தன்


அன்புள்ள ஆசிரியருக்கு,

நாட்டில் எத்தனையோ விஷயங்கள் விடைகாணாமல் இருக்க, இப்போதைக்கு

திண்ணை பத்திரிக்கை திமுகவை குறிவைத்து தாக்குவதன் நோக்கம் என்ன என்று

புரியவில்லை. என்றைக்கு திரு.ஜெயமோகன் எந்த அவமான பிரச்சனையை

கிளப்பினாரோ அன்றைக்கு இருந்து திண்ணை நடுநிலை தவறுவதாகத்தான்

படுகிறது. என்னை பொருத்தவரை திண்ணையில் இது வரை கட்சி

சார்பின்மையை கண்டேன். தற்பொழுது வரும் கட்டுரைகளும், விளக்கம்களும் எனது

கருத்தை தவறு என்று எடுத்துரைப்பதை போல் இருக்கிறது. திரு.கருணநிதியை

தாண்டி இப்போது திரு.அண்ணாவையும் வம்புக்கு இழுக்கும் அளவிர்க்கு

கட்டுரையாளர்கள் சென்று இருப்பது வருந்தத்தக்கது. கட்டுரையாளர்

குறிப்பிட்டதை போல் மற்ற அனைவரது பட்டங்களையும் ஆராய்வோமேனால்

விடையாக வருப்போவது என்னவோ வெறுமையே. இதிலே அனைவரும் அடக்கம்

இவர் அவர் என்று எந்த பாகுபாடும் இல்லமல். ஞானி குறிப்பிட்டதை போல்

சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் இருப்போரை தேடித்தான் தலைவராக

ஏற்கவேண்டும் என்று கூறும் வாதம் அடிப்படையில் தவறு. அடிப்பட்டவனுக்கு மற்றவனை

பார்த்து ஜாக்கிரதை என்று சொல்ல எல்லா அருகதையும் உண்டு. இந்த

விஷியத்தில் திரு.ஞானியின் முடிவுரை கருத்து அனேகமும் அடிப்படையில்

தவறாக அமையும். ஆகவே இனிமேலாவது இப்படி பிரயோஜனம் இல்லா

விஷியத்தில் கவனத்தை செலுத்துவதைவிட ஏற்கனவே உள்ளதை போல் ஆக்க

விஷியங்களில் நமது கவனத்தை செலுத்துவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்படி இந்த விமர்சணங்கள் தொடருமேயானால், கலவரத்தில் தானும் கல்

வீசினால் என்ன என்று நினைத்து வீசுவதுபோல் அனைவரும் தொடரக்கூடும் என்று

தோன்றுகிறது. அப்படி விமர்சணங்கள் எழும் பட்சத்தில் எத்தனை

விமர்சணங்களுக்கு நாம் மறுப்புகள் வெளியிட முடியும் ஆகவே ஆரோக்கியமாக

இப்பொழுதுதே நிருத்திக்கொள்வதே நலம் என்று தோன்ற, எழுதுகிறேன்.

கடிதத்தின் நோக்கம் யாரையும் புன்படுத்தவோ, விமர்சணம் செய்யவோ அல்ல,

இந்த முறை வாக்குவாதங்கள் வேண்டாமே என்று கூறிட மட்டுமே. இவ்வளவும்

எழுதுவதற்கு காரணம், இன்னமும் திண்ணை நடுநிலை ஏடு என்று

எண்ணிக்கொண்டுதான். ஆனால் அப்படி இல்லை, இது இன்னும் ஒரு கட்சி சார்ந்த

பத்திரிக்கை, ஆனால் வெளிப்படையாக அதை வெளியில் சொல்லுவதற்கு இல்லை

என்று நீங்கள் கருதுவீர்கள் ஆயின் உங்களது வெளியீடுகள் இவ்வண்ணமே

தொடர்வது இயற்கை, வாழ்த்துக்கள்.

அன்புடன்,

கலைமணி.

kalaimani1@yahoo.com


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

வணக்கம்.

ஞாநிக்கு மனுஷ்யபுத்திரன் எழுதியிருந்த கடிதத்திலுள்ள கருத்துகளில் நான் உடன்படுகிறேன். சமூகத்தில் நிகழும் எல்லா நிகழ்வுகளுக்கும் எல்லோரும் கருத்துச் சொல்லவேண்டுமென்னும் கட்டாயம் கிடையாது. பொதுவாக ஏதேனுமொன்றிற்கு பரவலான எதிர்வினை தோன்றும் பட்சத்தில் அதன்மீது தமது கருத்தையும் பதிவுசெய்ய முனைவது ஒருவித மன உந்தலே. மேலும் ‘பாய்ஸ் ‘ படம் குறித்து எனக்கும் எதிர்வினை உண்டெனினும் ‘அதைப் பேசாத நாவென்ன நா, எழுதாத எழுத்தென்ன எழுத்து ‘ எனச்சொல்ல ஒன்றும் அது புனிதத்தில் நேர்ந்த பூகம்பமில்லை. மோசங்களில் மோசம்.

மேலும் கலைஞர்-ஜெயமோகன் பிரச்சனையில் எளிமையாகவும், அழுத்தமாகவும் இருந்த கருத்து மனுஷ்யபுத்திரனுடையது. தனது கடிதத்தில் ம.பு கோபம் வெளிப்படாதவாறு பார்த்துக்கொண்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். தனிநபர் மீதான கோபம் கவிஞனின் கம்பீரத்தைக் குலைத்துவிடக்கூடியது

தமிழ்மணவாளன்

tamilmanavalan@yahoo.co.in


மாலதியின் அம்மா வந்தாள் குறித்த கட்டுரை பற்றி…

முரண்களை எடுத்து படிமங்களாக மாற்றும் ஜானகிராமனின் ஒரு அற்புதமான படைப்பு அந்த நாவல்.

நம் அனைவருக்கு உள்ளேயும் இருக்கும் மரபுக்கு எதிராக குரலெழுப்பும் போராளிகளை வெளிக்கொணர்வது ஜானகிராமனின் சிறப்பம்சம். அதை உரைக்கு கருவாக எடுத்திருந்தது ஒரு அருமை.

ஒரு நல்ல கவிதைக்கும் ஒரு நல்ல கதைக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதில்லை.

குறிப்பாக ‘எழுத்துக்கள் அழிந்த பின் கல்வெட்டு வெறும் கல் ‘ என உரையில் பல இடங்களில் மிளிர்ந்த ஓவிய நடை சிறப்பாக இருந்தது. இறுதியில் கற்பிதங்கள் பற்றிய உரையாளரின் கற்பிதத்தை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

அன்புடன்,

அருண்பிரசாத்.

everminnal@yahoo.com


Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா