கடிதங்கள் மே 27, 2004

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

நாக இளங்கோவன் – பி கே சிவகுமார்


முனைவர் இராம.கி எழுதிய பணம் பற்றிய பால பாடம்

கட்டுரை மிக அருமை. பொருளாதாரத்தின் அடிப்படையை,

வழக்குத் தமிழில் அழகுற சொல்லியிருக்கிறார்.

அதோடு, பல ஆங்கிலச் சொற்களுக்கு எளிமையான

வேர் கூடிய தமிழ்ச் சொற்களை ஆக்கி, நல்ல தமிழ்

கட்டுரையாகத் தந்திருப்பது, ஆங்கிலத்துக்கு நிகரான

தமிழ்ச் சொற்களின் ஆழத்தையும் ஆளுமையும் அறியத் தருகிறது.

இவ்வணுகு முறை நுட்பத்திலும் அறிவியலிலும் நாம் இழந்திருக்கும்

தமிழை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

அன்புடன்

நாக.இளங்கோவன்


திரு.இராசேசு எழுதிய இரா.சு.ச (r.s.s), சவர்க்கர் பற்றிய

கடிதத்திற்கான எதிர்வினை.

1) இரா.சு.ச ஒரு தேசபக்தி இயக்கம் மற்றும் இந்துக்களின் பெருமை போற்றும்

இயக்கம் என்கிறார் திரு.இராசேசு.

அப்படியானால், மகாத்மா காந்தியடிகளை கொலை செய்தது தேசபக்தி செயலா ?

இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர் காந்தியடிகள். அவரைக்

கொன்றதை சரி என்கிறாரா இராசேசு ?

2) இரா.சு.ச இல்லையென்றால் பல விசயங்களை பேசுதற்கே வெட்கப் படவேண்டிய

நிலையில் இருப்போம் என்று சோ கூறியதாக எழுதியிருக்கிறார். காந்தியடிகளைக்

கொலைசெய்ததற்கு வெட்கப் படாதவர்களுக்கு எதுதான் வெட்கம் என்பது புரியவில்லை.

சோவும் காந்தியடிகளை கொலை செய்ததை ஏற்றுக் கொள்கிறாரா ?

3) இந்து மதத்தின் வேதகாலப் பெருமைகளைப் பேசும் சோவும் இராசேசும் மொகலாய,

வெள்ளைக்காரர்களின் காலத்திற்கு முன்னர் இந்து என்ற மதம் இருந்தது என்பதற்கான

தெளிவான ஆதாரங்களை வேதத்தில் இருந்தாவது எடுத்துக் காட்ட முடியுமா ? வெறும்

கோயபல்சு போல எழுதுவதாலேயோ, பேசுவதாலேயோ பூசணிக்காயை எந்நாளும் சோற்றுக்

குள்ளே மறைத்துக் கொண்டு இருக்க முடியாது. அப்படி மறைக்கப் புறப்பட்ட

பா.ச.க அரசும், வரலாற்று அழிப்பு மந்திரியான முரளி மனோகர் சோசியும் மண்ணைக்

கவ்வி இருப்பது இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளால்தான் என்பதை திரு.இராசேசும்

சோவும் உணர வேண்டும்.

4) ‘ஒரு தாய் மக்கள் நாம் ‘ என்று இசுலாமிய-இந்து பிரிவினையைக் குறித்து காந்தியார்

வருந்திக் கெஞ்சியதாக உருகுகிறார் திரு.இராசேசு. அதில் நம்பிக்கை இருந்திருந்தால்

இரா.சு.ச ஏன் காந்தியாரை போட்டுத் தள்ளியது ?

5) இராசேசும் இரா.சு.சவும் சோவும் பெருமைப்படும் சவர்க்கர் ஒரு சுயநலவாதி; அவரின்

இயக்கத்தைப் போன்ற வறட்டு வெறி பிடித்தவர். சுதேசிக் கொள்கைகளைக் கொண்டது

இரா.சு.ச என்பதோடு, இரா.சு.சவின் சில வருடத்திற்கு முற்பட்ட 15 நாளைய போராட்டத்தையும் சுட்டிக் காட்டுகிறார் இராசேசு. சவர்க்கரையும் அப்படித் தேசபக்தியாளராக சுதந்திரப் போராட்ட வீரராக

படம் பிடித்துக் காட்டுகிறார்கள் இரா.சு.சவினர்.

ஆனால், உண்மையில் சவர்க்கருக்கு அப்படிப் பட்ட எண்ணங்களே கிடையாது. வெறும்

ஏமாற்று அரசியல் மற்றும் மதவெறி.

1906 ஆம் ஆண்டில் சவர்க்கர் ‘ஆங்கிலேயப் பொருள்களை ‘ மறுத்து

ஒரு போராட்டம் நடத்தி ஆங்கிலேயப் பொருள்களை தீயிட்டுக் கொளுத்துகிறார்.

அதன் பின்னர், உலோகமான்ய பாலகங்காதர திலகரின் பரிந்துரையின் பேரில்,

பண்டித கிருட்டிண வர்மா என்பார் கொடுத்த நிதியுதவியுடன் இங்கிலாந்து

சென்று சட்டப் (பாரிசுட்டர்) படிப்புப் படிக்கிறார்.

ஆங்கிலேயப் பொருள்களை மறுப்பவர், இந்தியப் பொருள்களையே வாங்க வேண்டும்

என்று சொல்லும் தேசபக்தர் ஏன் படிப்பு மட்டும் வெள்ளைய நாட்டில் பெறச் செல்லவேண்டும் ?

புரட்டு அல்லவா இது ? இதை இராசேசு ஏற்கிறாரா ? இல்லை படிப்பு வேறு பொருள் வேறு

என்று அரசியல்த்தனமான பேச்சு பேசப் போகிறாரா ?

6) அது மட்டுமல்ல, சவர்க்கர் ஒரு கோழை; பாரிசுட்டர் பட்டம் படிக்க இலண்டன்

சென்றவருக்கு, சாக்சன் என்ற நாசிக் நகர ஆட்சியரின் (collector) கொலை வழக்கில்

சம்பந்தம் இருக்கிறது என்று கருதி ஆங்கிலேய அரசு இலண்டனில் சவர்க்கரை

கைது செய்து விசாரணைக்காக இந்தியாவிற்குக் கப்பலில் கொண்டு வருகிறது.

சவர்க்கர் என்ன செய்தார் ? பாதி வழியில் மார்சில்சு என்ற பிரெஞ்சு நாட்டுக்

கடல்பகுதியில், கப்பலில் இருந்து குதித்து தப்பித்து பிரான்சுக்குள் ஓடி விட்டார்.

பிறகு அங்கும் தேடி, கட்டி இழுத்து வந்துதான் இந்தியாவில் தண்டனை கொடுத்தது

ஆங்கிலேய அரசு. இவராக ஒன்றும் நெஞ்சை நிமிர்த்தி நின்று போராடி

அந்தமான் சிறைக்குள் போடப்பட்டவர் அல்ல.

அதனால்தான் சவர்க்கர் ஒரு கோழையாகத்தான் தெரிகிறார். அவர் கொள்கைப்படி

இலண்டனில் படிக்கப் போனதே சுயநலம் மற்றும் முரண்பாடு. அதிலே கொலை வழக்கு வேறு.

அதில் இருந்து பாதி வழியில் தப்பித்துக் கடலில் குதித்து ஓடுகின்றார் என்றால்

அவருக்கும் சோப்ராசு போன்றோருக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்பதை

நாம்தான் ஆயவேண்டும். இந்த மாதிரியான கொள்கை முரண்பாடு கொண்டவர்களால்,

வறட்டுத்தனத்தால் ஏற்படுத்தப் பட்டதால்தான் இரா.சு.ச மற்றும் அதன் தோழமைக் கட்சிகள்

நாட்டையும் மக்களையும் கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றன.

7) இந்து மதம் என்ற பெயரில் தீராத வெளிப்பகை மற்றும் உள்பகையை விதைத்து

இந்தியாவை கெடுத்து வருபவர்கள் இரா.சு.ச மற்றும் அதன் அரசியல் பிரிவினர்.

எந்த எல்லைக்கும் மதத்தின் பெயரால் சென்று வருபவர்கள் இவர்களின் பரிவாரங்கள்.

இவர்களின் வளர்ச்சி மனித நேயத்துக்கும், நாட்டுக்கும் பெரும் தீங்கேயன்றி – வேறில்லை.

இவர்களின் கூட்டங்களைப் பார்ப்போருக்கு நன்கு புரியும் – இவர்களின் பேச்சுக்கள்

சர்க்கரை தடவிய விச உருண்டைகள் என்று.

அற்பச் சரவல்களான ஊர்வலம், சிறு கூட்டங்கள் போன்றவற்றிலேயே அரசியல் வாழ்வு

வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

elangov@md2.vsnl.net.in

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)


சென்ற வார சின்னக் கருப்பன் கட்டுரை:

சின்னக் கருப்பன் சென்ற வாரக் கட்டுரையில் –

‘கலாம் அவர்களைச் சந்திக்கச் செல்லும் முன்னர் வரைக்கும் தானே பிரதமர் என்ற நிலையிலிருந்து ஒரு மாற்றமும் இல்லை. சந்தித்துத் திரும்பிய பின்னர் அளித்த பேட்டியில் (கூடவே மன்மோகன் சிங்) தான் பிரதமராக விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்பது கலாமுக்கே வெளிச்சம். ‘

சின்னக் கருப்பன் அந்தக் கட்டுரையை எப்போது எழுதினார் என்று தெரியவில்லை. ஆனால், இத்தகைய வதந்திகளில் உண்மையில்லை என்பதை குடியரசுத் தலைவர் மாளிகை ஆணித்தரமாக அவ்வதந்தி வந்தவுடனேயே மறுத்தது. வாதத்துக்கு இந்த வதந்தி உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அரசியல் அமைப்புச் சட்டப்படி, சோனியாகாந்தியின் பிறப்பைக் காரணமாக வைத்து சோனியாகாந்தி பிரதமராவதைத் தடுக்க எந்த அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு இல்லை. தற்போதைய குடியரசுத் தலைவர் அத்தகைய அரசியல்களிலும் ஈடுபடக் கூடியவர் அல்ல. எனவே, மேற்கண்டதை எழுதியதன் மூலம் சின்னக் கருப்பன் 1) உண்மையில்லை என்று மறுக்கப்பட்ட ஒன்றை உண்மையென நிரூபிக்க முயல்கிறார். 2) தன் அரசியலுக்கும் கட்டுரைக்கும் உதவக்கூடும் என்று அனுமானத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் பதவியை அரசியலாக்குகிறார். இரண்டாவது கண்டிக்கப்படத்தக்கது.

இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த – பா.ஜ.க. பாஷையில் சொல்வதென்றால் ‘முடி முதல் அடி வரை ‘ இந்தியரான ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பாதுகாப்புத் துறையின் அமைச்சராக இருந்தபோதுதான் இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய ஊழல்கள் அத்துறையில் நடைபெற்றன. சின்னக் கருப்பன் அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு, சோனியாகாந்தி பிரதமரானால் நாட்டு பாதுகாப்பு ரகசியங்கள் வெளியே சென்றுவிடும் என்று மற்றவர்கள் போராடுவதாகக் கண்டுபிடித்துப் பாராட்டுகிறார். எதிர்கட்சித் தலைவராக சோனியா காந்தி இருந்தபோது நாட்டு பாதுகாப்பு உட்பட முக்கியமானப் பிரச்னைகளில் பிரதமராக இருந்த வாஜ்பாயே அவரைக் கூப்பிட்டு அவருடன் பல அரசாங்க விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் சோனியா காந்தியால் நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்து, வாஜ்பாய் சோனியாகாந்திக்கு அரசாங்க விஷயங்களைச் சொல்லி விடுகிறார் என்று யாரும் அழுததாகத் தெரியவில்லை.

என்ற போதிலும், சோனியா காந்தி இப்போது பிரதமராகாமல் போனது பா.ஜ.க.வுக்கு ஏமாற்றமே தருமென்று எதிர்பார்க்கலாம். சோனியா காந்தியை வைத்து – ராமர் கோவில் விவகாரம் போல மக்களின் உணர்வுகளைக் கிளப்புகிற அரசியல் – செய்ய முடியும் என்று பா.ஜ.க. நம்பியதாலேயே அது ஆட்சியில் இருந்த காலத்தில் இந்தியாவில் பிறந்தவர் மட்டுமே பிரதமர் பதவி வகிக்க வேண்டும் என்கிற கோஷத்தைச் சட்டமாக்கும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. சின்னக் கருப்பனும் இதைச் சுட்டியிருக்கிறார். இப்போது அரசியல் பண்ணுவதற்கு வேறு விஷயங்களைத் தேட வேண்டுகிற அவசரம் வந்துவிட்டது பா.ஜ.கவுக்கு. இதனாலாவது இனிமேல் உருப்படியான விஷயங்களைக் கண்டெடுத்து பா.ஜ.க அரசியல் செய்யும் என்று எதிர்பார்ப்போம்.

பி கே சிவகுமார்

pksivakumar@att.net


Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்