ஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

-மோனிகா


‘One day I was looking at the red flower patterns of the tablecloth on a table, and when I looked up I saw the same pattern covering the ceiling, the windows and the walls, and finally all over the room, my body and the universe. I felt as if I had begun to self-obliterate, to revolve in the infinity of endless time and the absoluteness of space, and be reduced to nothingness. As I realized it was actually happening and not just in my imagination, I was frightened. I knew I had to run away lest I should be deprived of my life by the spell of the red flowers. I ran desperately up the stairs. The steps below me began to fall apart and I fell down the stairs straining my ankle. ‘ —Yayoi Kusama

புறமும் சூழலும் ஒரு கால கட்டத்தின் வாழ்வின், மனிதனின் ஒரு பகுதியாக நிலைத்துவிடுகிறது. அதன் பிறகு அது மனிதனின் அடையாளத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது.

ஒரு ஜென் கதையில் ஆசிரியர் மாணவரிடம் தினமும் ஒரு குறிப்பிட்ட ஜன்னல் வழியாகப் பார்த்து அங்கு தெரிகின்ற மலைகளை வரையச் சொல்கிறார். ஒரு நாள் அந்த மாணவன் வரையத் தொடங்குவதற்கு முன் ஜன்னலின் கதவுகளை மூடிவிடுகிறார். அப்பொழுதும் கூட அந்த மாணவன் முன்னைப் போலவே வரைந்துவிடுகிறான். இந்தக்கதையின் மூலம், தொடர்ந்து ஆழமாகக் காணும் பயிற்சியின் மூலம் பொருள் பார்வையாளனின் அகத்தினுள் ஊடுருவி அவனில் ஒரு பகுதியாகிப் போகிறது என்பது புலனாகிறது. புகைப்படக்கலை வருவதற்கு முன்னர் ஓவியர்களும் சிற்பிகளும் இம்முறையைக் கையாண்டிருக்க வேண்டும் என்பதில் ஐயம் இல்லை.

யயோய் குஸாமா என்ற ஜப்பானிய பெண் ஓவியரின் கருத்துச் சார்ந்த கலை வடிவங்கள் (conceptual art forms) மேற்கண்ட கருத்தை முன் வைத்து உருவாக்கப்பட்டவையாகும்.

1957ல் தனது 27ம் வயதில் நியூயார்க்கிற்கு வந்த யயோய் குஸாமா அதற்கு முன்னர் காகிதங்களில் ஓவியங்கள் வரைந்து வந்தார். நியூயார்க்கிற்கு வந்த பின்னர் அவர் கருத்துச் சார்ந்த கலை வடிவங்களை உருவாக்கத் தொடங்கும்போது மிகக் குறைந்த கால கட்டத்தில் அவர் அவன்கார்ட் கலையின் முன்னோடிகளான ஜாஸ்பர் ஜான்ஸ், ஆண்டி வாரோல், க்லாஸ் ஓடென்பெர்க் போன்றவர்களின் வரிசையில் சேர்ந்துவிட்டார்.

ஆரம்பகாலத்தில் அவர் சுவர், தரை, கான்வாஸ், வீட்டு சாமான்கள் மற்றும் மனிதர்களின் மேல் சீரான புள்ளிகளை பதிப்பதை தனது பாணியாக வைத்துக்கொண்டிருந்தார். அப்படி செய்வதன் மூலம் அப்பொருள்களுக்குள் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி ஒருமித்த உணர்வைக் கொடுக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தினார். இந்த பரந்த போல்கா புள்ளிகளின் பரப்பு அவருக்கு அடிக்கடி ஏற்படும் சித்தப் பிரம்மையிலிருந்து (hallucination) ஏற்படுவதாக அவ்ர் கூறுகிறார்.

ஐம்பதுகளுக்குப் பிறகு அவர் தனது படைப்புகளில் நாடகம் (performance), சிற்பம், ஓவியம் மற்றும் நிர்மாணக் கலையை (installation) பயன்படுத்தினார். தனக்கே உரிய பாணியின் கூறுகளை அவற்றில் செலுத்தி உயிரூட்டமுள்ள கவர்ச்சிகரமான படைப்புகளாக அவற்றை மாற்றினார்.

Mirror Room (Pumpkin), 1991, Mirrors, wood, papier mபூchளூ, paint.

Fire flies on the Water, 2002. Mirror, plexiglass, 150 lights

2002ம் ஆண்டு குஸாமாவின் படைப்பான “தண்ணீரின் மேல் மின் மினிப் பூச்சிகள்”, முகம் காட்டும் கண்ணாடிகளால் கட்டப்பட்ட அறை ஒன்றாகும். அதன் நடுவே 150 சிறு மின்சார பல்புகள் கட்டி தொங்கவிடப்பட்டு அதன் நடுவே உள்ள தொட்டியிலுள்ள நீரிலிருந்தும் கண்ணாடியிலிருந்தும் பிரதிபலிக்கப்பட்டு பல ஆயிரம் ஒளிப் புள்ளிகளாக இவை தோன்றுவது மின் மினிப் பூச்சிகளைப் போல் காணப்படும். இவரது பிரம்மையில் தோன்றிய இப்படைப்பு யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பிம்பத்தை வெளிக் கொணர்ந்து ஒரு கனவுலகை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

1970 ம் ஆண்டு டோக்கியோ திரும்பிய குஸாமா தானாகவே ஒரு மனநோய் காப்பகத்தில் சேர்ந்து கொண்டு அங்கு வசித்து வருகிறார். காப்பகத்துக்கு பக்கத்திலேயே தனது ஸ்டூடியோவை அமைத்துக் கொண்ட குஸாமா அப்போது முதல் தொடர்ந்து படைப்பில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார். முதல் முதலாக வெனிஸ் இரண்டாண்டுக்கொருமுறை கண்காட்சியில் அழைப்புவிடப்பட்ட கலைஞர் குஸாமா ஆவார். அதற்கு பிறகு தொடந்து உலக அளவில் பங்களித்து வரும் குஸாமாவின் தற்போதைய வயது 75.

எதையுமே வித்தியாசகமாகச் செய்யும் குஸாமாவின் இந்த நிகழ்வுக் கலைவடிவம் (Naked Happening Orgy and Flagburning) நிர்வாணக் கூட்டுக் கலவியும் கொடி எரிப்பும் வியட்நாம் போரின் சமயத்தில் நியூயார்க்கின் புரூக்ளின் பாலத்தின் மேல் நடைபெற்றதாகும்.

Naked Happening Orgy and Flagburning,

Brooklyn Bridge, New York, 1968

தற்போது நியூயார்க்கின் ராபர்ட் மில்லர் காலரியில் குஸாமாவின் நிர்மாணங்கள் காட்சிக்கு வைக்கப்-பட்டிருக்கின்றன. அவற்றில் மிகவும் பிரபலமானது “நார்ஸிஸச் தோட்டம் (Narcissus Garden)” எனப்படும் நூற்றுக்கணக்கான சூழலைப் பிரதிபலிக்கும் இரும்புப் பந்துகளாகும். டோக்கியோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவ்விரும்புப் பந்துகளை கண்காட்சியின் முடிவில் குஸாமா இரண்டு டாலர்களுக்கு விற்று பணக்கார கலா போஷகர்களை எரிச்சலுக்-குள்ளாக்கியதாகவும் ஒரு சுவாரசியமான தகவல் உண்டு. இப்பந்துகள் போல்கா புள்ளிகளின் முப்பரிமாண வடிவங்களாகவும் சூரியனின் பிரதியாகவும் வடிக்கப் -பட்டுள்ளன.

Narcissus garden (detail) 1966/2002

Site-specific work ,Mirror balls: approx. 2000, 18cm dia

2004 ஏப்ரல்/மே மாதங்களில் நியூயார்க்கின் விட்னி மியூசியம் சென்ட்ரல் பார்க்கில் திறந்த வெளிச் சிற்பங்களை காட்சிக்கு வைத்திருந்தபோது குஸாமாவின் 1500 கண்ணாடிப் பந்துகள் நீரில் மிதந்து கொண்டிருந்தன. அவற்றில் “உங்களது நார்ஸிஸம் விற்பனைக்கு” என்ற ஒரு வாக்கியம் காணப்பட்டது.

குஸாமாவின் பிரதிகள் எப்போதுமே பெண்கள். அவர்களது இருப்பு படைப்பின் பரப்பின்மீது ஒரு வடிவச் சுருக்கமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான இடக் குறியீடின்றி (special reference) அது எல்லா புறங்களிலும் விரிந்து பரவிக் கிடக்கிறது. அவரது சிகப்பு நிற போல்கா புள்ளிகள் பெண்ணிற்கான ஒரு குறியீடாக செயல்பட்டு பரப்பு முழுதும் வியாபிக்கும்போது அதனுள் தென்படும் அசைவு முக்கியத்துவம் பெறுகிறது. பிரம்மையின் ஒரு பகுதியாக உள்ள அச்சுக் கோடுகள் (கண்ணாடி, பரப்பின் தன்மை, ஆண்குறியைப் போன்றதொரு நீட்சி..)

புள்ளிகளுடன் ஊடாடும்போது ஒரு வகையான நடனத்தைப் போன்றதொரு பிரம்மையை ஏற்படுத்துகிறது. அவர் நம்மை அவரது பிரபஞ்சத்தினுள் அழைத்துச் செல்கிறார். நமக்குள் ஒரு நாட்டியத்தின் குதூகலத்தை தூண்டுகிறார்.

Infinity Mirror Room (Phalli ‘s Field), 1965

கலை எல்லா இடங்களிலும்/ வடிவங்களிலும் புலப்படக்கூடியது, எல்லா இயக்கங்களின் உள்ளும் ஒரு கலை வடிவம் இருக்கிறது என்று உரைக்கின்ற இவரது மொழியினுள் வெகுஜனக் கலை (pop-art), எளிமைக்கலை (minimalism), அரூப வெளிப்பாடு (abstract expressionism) போன்ற நுட்பங்களுடன் தொடர்பிருந்தாலும் அது முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது. நார்ஸிஸம், காதல், காமம், கனவுகள் எல்லாம் கொண்ட ஒரு சாதாரண மனித இருப்பின் வலி, வாதை, விண்ணப்பம், தேடல் இவைகளின் வெளிப்பாடு குஸாமாவின் இந்த இணையில்லாத படைப்புகள். படைப்பினளவில் இவை குழந்தையைச் சமாதானப் படுத்துகின்ற ஒரு தாலாட்டைப் போலவும், அதன் பின் கனவில் வருகின்ற ஒரு தேவதையின் உலகத்தைப் போலவும் நமது வலிமையையும், சோர்வையும் நமக்கே மற்றொரு வெளியிலிருந்து விஸ்தரித்துக் காட்டுபவை.

—-

monikhaa@gmail.com

Series Navigation

மோனிகா

மோனிகா