ஓரம் போ!

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

லக்கிலுக்



கன்னிராசி என்ற படத்தில் ஜனகராஜ் ஒரு ஜோசியரிடம் ஜோசியம் பார்க்க போவார். ஜோசியத்துக்கான கட்டணத்தை அவர் பேரம் பேசும் காட்சி நகைச்சுவையால் வயிற்றைப் பதம் பார்க்கும்.

“ஜோசியரே, ஜோசியம் பார்க்க எவ்ளோ?”

“நூறு”

“என்னாது??? நூறா?” அதிர்ச்சியில் ஜனகராஜின் வாய் இன்னமும் கோணிக்கொள்ளும்.

“ஏன் வாங்கக் கூடாது. நான் பாக்குற ஜோசியம் அவ்ளோ துல்லியமா இருக்கும். இருந்தாலும் நான் அவ்ளோவெல்லாம் வாங்குறதில்லை. அம்பது!”

“அம்பதா?” ஜனகராஜ் கண்ணாடிக்குள் இருக்கும் கண்களில் கொலைவெறி அதிர்ச்சியை காட்டுவார்.

ஜோசியர் பதறியபடி, “உங்க ஜோசியத்துக்கு அம்பது வாங்கக் கூடாதான்னு எல்லாரும் கேட்குறாங்க. நான் அவ்ளோவெல்லாம் வாங்குறதில்லை. இருபத்தி அஞ்சி!”

“இருபத்தஞ்சா?”

ஜோசியர் தாவூ தீர்ந்துப் போய் “பத்து”

“பத்தா”

வெறுத்துப்போன ஜோசியர் “அஞ்சி!”

“அஞ்சு தானா!” ஜனகராஜ் முகத்தில் திருப்தி.

இதுபோல தான் சென்னையில் ஆட்டோக்காரர்களிடம் பேரம் பேசவேண்டியிருக்கிறது. கண்டிப்பாக மீட்டர் போடவேண்டும் என்று போலிசார் வற்புறுத்தினாலும் கூட எந்த ஆட்டோ டிரைவரும் மீட்டர் போடுவதில்லை. வாய்க்கு வந்த தொகையை சொல்லி இதயநோய் இல்லாதவர்களுக்கு கூட ஹார்ட் அட்டாக் வரச்செய்யக்கூடிய வகையில் துட்டு கேட்கிறார்கள். மீட்டர் ஓடுகிறதா என்று சோதிக்க வேண்டிய நிலையில் இருக்கும் டிராபிக் போலிசாரோ அப்பாவி டூவீலர்களை மடக்கி மாமூல் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்ற வாரம் அறிவாலயத்திலிருந்து என் அலுவலகம் இருக்கும் ஆனந்த் தியேட்டர் சிக்னல் வரை செல்லவேண்டியிருந்தது.

“ஆனந்த் தியேட்டர் போவணும்னா!”

“ஒக்காரு, போலாம்!”

“எவ்ளோண்ணா”

“அறுவது கொடு”

“ஆள உடு”

“நாற்பது”

“இரண்டரை கிலோ மீட்டருக்கு ரொம்ப அதிகம்”

“முப்பது”

“ம்ஹூம். ரெகுலரா இருவது தான் கொடுக்கறது!”

“சரி இருவத்தி அஞ்சி கொடு. உக்காரு. காலங்காத்தாலே ரோதனை!”

ஓரளவுக்கு சென்னை நகரில் இந்த இடத்திலிருந்து இந்த இடத்துக்கு செல்ல இவ்வளவு கிலோ மீட்டர், இவ்வளவு கொடுத்தால் போதும் என்று தெரிந்தவர்களே இந்த பாடு படவேண்டியிருக்கிறது. புதிதாக சென்னைக்கு வருபவர்கள் கதி அதோகதி தான்.

ஆட்டோக்காரர்கள் துட்டு வாங்குவதில் மட்டும் அடாவடி காட்டுவதில்லை. கஸ்டமர் கேர் படு கேவலம். ஒரு தொகைக்கு ஒப்புக்கொண்டு இறங்கும்போது அதிகத்தொகை கேட்டு அடாவடி செய்வதும் உண்டு. கேட்ட தொகையை கொடுக்காத கஸ்டமரை ஆபாச வார்த்தைகளில் திட்டுவதும் உண்டு. இவர்கள் திட்டுக்கு பயந்து கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் கேட்ட தொகையை கொடுக்கும் அப்பாவிகளே அதிகம்.

ஆட்டோக்காரர்களின் இந்த அடாவடி காரணமாக மேல்தட்டு நடுத்தரவர்க்கம் ஆட்டோவை புறக்கணித்து கால்டாக்ஸிகளில் பயணிக்கிறார்கள். கணக்குப் போட்டு பார்த்தால் ஆட்டோவில் செல்லுவதை விட கால்டாக்ஸி பயணம் மலிவாக இருக்கிறது. அதே நேரத்தில் வசதியாகவும் இருக்கிறது. கால்டாக்ஸி மட்டுமல்லாமல் புறநகர்களில் வேன்கள் மலிவு விலை போக்குவரத்து நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களுக்கு முறையான அரசு அனுமதி இல்லாததால் ஆர்.டி.ஓ. காரர்களுக்கு செம மாமூல் கிடைக்கிறது. ஆயினும் இந்த வேன்களுக்கு மக்களிடையே அமோக ஆதரவு இருக்கிறது. அண்ணாசாலை, தலைமைச்செயலகம் போன்ற இடங்களில் பணிபுரிபவர்கள் மொத்தமாக ஒரு வேனை குறிப்பிட்ட மாதவாடகைக்கு அமர்த்திக் கொண்டு வசதியாக பயணம் செய்வதை இப்போதெல்லாம் அதிகமாக காணமுடிகிறது.

ஆட்டோவை விட வேன் மலிவாக இருந்தாலும், அதைவிட மலிவான சேவையை ஷேர் ஆட்டோக்கள் சென்னையில் வழங்கி வருகிறார்கள். அசோக் நகர் உதயம் தியேட்டரிலிருந்து கிண்டி பேருந்து நிலையம் செல்ல மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை மட்டுமே வாங்குகிறார்கள். ஆயினும் பத்து முதல் பண்ணிரெண்டு பேர் வரை ஷேர் ஆட்டோவில் ஏற்றுவதால் கொஞ்சம் வசதிக்குறைவான பயணம் தான். பல இடங்களில் மாநகரப் பேருந்து கட்டணத்தை விட ஷேர் ஆட்டோ கட்டணம் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ கட்டணங்களின் தொகை விண்ணை முட்டுவதற்கு சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்கள் முக்கிய காரணம் என்று சொன்னால் அந்த துறையை சேர்ந்தவர்கள் என்னை அடிக்க வருவார்கள். ஆயினும் அதுதான் உண்மை. சாப்ட்வேர் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரிவதில்லை. ஆட்டோக்காரனே தொண்ணூறு ரூபாய் போதும் என்று சொன்னாலும் கூட நூறு ரூபாய் நோட்டை கொடுத்து “கீப் த சேஞ்ச்” என்று சொல்லுகிறார்கள்.

ஆட்டோ, வேன், ஷேர் ஆட்டோக்கள் பெருகுவதற்கும், கன்னாபின்னா கட்டணங்களுக்கும் மாநகரப் பேருந்துகள் குறைவாக இருப்பதும், அப்பேருந்துகளின் நெரிசலும் தான் காரணம். இருந்தாலும் இதற்கு மேல் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் ஏற்கனவே பாலங்கள் கட்டுவதால் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெருக்கடியால் தாவூ தீர்ந்துப் போயிருக்கும் சென்னைவாசிகளின் விழி இன்னும் பிதுங்கி வெளியே தள்ளிவிடும்.

அரசு இன்னமும் புதிய பேருந்துகளை விடத் தேவையில்லை. இருக்கும் பேருந்துகளை பரமாரித்து விட்டாலே போதுமானது. அதற்குப் பதிலாக மாற்றுப் போக்குவரத்தான ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால்டாக்ஸி போன்றவற்றுக்கு நியாயமான கட்டணங்களை அறிவித்து அதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதிக கட்டணம் வசூலிப்பவர்களின் உரிமத்தை நீக்கவேண்டும். வேன்களுக்கும் போக்குவரத்து சேவை நடத்த குறிப்பிட்ட தொகை வாங்கிக் கொண்டு லைசென்ஸ் கொடுக்கலாம். இந்த விஷயங்களை திட்டமிட்டு முறைப்படுத்தினாலே சென்னைத் தமிழனின் போக்குவரத்து சிக்கல் குறையும். அதை விடுத்து ஐம்பது, அறுபது ரூபாய் கட்டணங்களுடன் கூடிய டீலக்ஸ் மற்றும் நவீனரக பேருந்துகளை அறிமுகப்படுத்துவது தேவையற்றது. அவற்றால் சாமானியப் பயணிக்கு எந்த பிரயோஜனமுமில்லை.


luckylook32@gmail.com

Series Navigation

லக்கிலுக்

லக்கிலுக்