ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

நாகூர் ரூமி


என் பெயர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி.
நான் நாகூர் ரூமி என்ற புனை பெயரில் 1980களில் இருந்து எழுதி வருகிறேன்.
என் தொழில்: பேராரிசிரியர், ஆங்கிலத்துறைத் தலைவர், மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.
எனது நிழல் படம்:
என் மின்னஞ்சல்: ruminagore@gmail.com
என் வலைத்தளம்: www.nagorerumi.com

நான் இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிறேன். பொதுவாழ்வில் என் கருத்துக்களை நான் எப்போதுமே திறந்த மனதுடன் பேசிவருகிறேன். உதாரணமாக இசை இஸ்லாத்துக்கு விரோதமானதல்ல என்றும், கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை காட்டுமிராண்டித்தனமானது என்றும் விமர்சித்துள்ளேன். அதனால் என் மீது மதிப்பு வைத்திருந்த நண்பர்கள் பலருக்கு என்மீது லேசான சந்தேகம்கூட வந்துள்ளது. ஆனாலும் என் கருத்துக்கள் தவறென்று நீங்கள் நிரூபித்தால் அந்தக் கணமே நான் மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால் என்னைப் பற்றி மற்றவர் வைக்கும் உள்நோக்கம் கொண்ட விமர்சனங்களை நான் எப்போதும் பொருட்படுத்துவதே இல்லை. குறிப்பாக நேசகுமார் என்ற பெயரில் இஸ்லாத்தின் மீது அவதூறை வாரி இறைத்துக் கொண்டிருப்பவரின் கருத்துக்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருப்பது கால விரயம் என்பதை மிகவும் தெளிவாக உணர்ந்திருக்கிறேன்.

பின் ஏன் இக்கடிதம்?

ஒரு காரணம் உள்ளது. அவர் அப்துல் கையூமின் நாகூர் ஹனிபா பற்றிய கட்டுரையைப் பயன்படுத்தி, இஸ்லாத்தின் மீதும், ஆபிதீன் மீதும், கையூம் மீதும் என் மீதும் உமிழ்ந்திருக்கும் வெறுப்புக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை திண்ணை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும், நேசகுமாரைப் பற்றிய சில உண்மைகளையும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான்.

நேசகுமார் என்ற பெயரில்தான் நேசம் இருக்கிறது. இதுவரை அவர் போட்டுக்கொண்டிருப்பது ஒரு வேஷம். கொட்டியதெல்லாம் விஷம். ஒரு பெயருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அவர்மீது மனித நேயத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் அக்கறை கொண்ட பலர் மிகவும் கோபமாக இருந்தார்கள், இருக்கிறார்கள். காரணம், அவர் தொடர்ந்து இஸ்லாத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் தாக்குவதையே தன் வேலையாக வைத்திருப்பதால்.

நேசகுமார் ஒரு வலைத்தளம் வைத்துள்ளார். அதில் அவர் எழுதியவை தொடர்பாக நான் என் கருத்துக்களை பதிவு செய்ய முயன்றபோது, எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. (அதாவது நாகூர் ரூமி போன்றவர்களிடமிருந்து வரும் எதிர்ப்புக் கருத்துக்களை அனுமதிக்க வேண்டாம் என்று தொழில் நுட்ப உத்தரவு கொடுத்திருக்கிறார். இதேபோல அபூ நூறா போன்ற நண்பர்களின் பதில்களும் பிரசுரமாகவில்லை. ஆனால் எனது வலைத்தளத்தில் ஏதாவது ஒரு கட்டுரைக்கான பின்னூட்டத்தில் சம்பந்தமில்லாமல் நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் நுழைந்து என்னைத் திட்டுவார்கள். இது நேசகுமார் கடைப்பிடிக்கும் பண்பாடு).

என் முன் இருக்கும் கேள்விகள் இவைதான்:

1. நேசகுமார் அவர்களே, நான் மேலே கொடுத்திருப்பது போல, உங்கள் பெயர், முகம், முகவரி இவற்றைக் கொடுக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா? அல்லது மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமனுக்கு நேசனாகத்தான் இருக்க விரும்புகிறீர்களா?

2. கொலை, கொள்ளை, வன்முறை, யுத்தங்கள் எல்லாம் எல்லாக் காலத்திலும், எல்லா நாடுகளிலும் நடந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயம்தான் வன்முறை வளர்க்கும் சமுதாயம் என்று யாரையும் முத்திரை குத்துவது அறிவீனம். ஒருவன் இன்னொருவனைக் கொன்றால் அது கொலை. அதையே யுத்த களத்தில் ராணுவ வீரனாகச் செய்தால் அது நாட்டுப் பற்று. தூக்கு மேடையில் மாதச் சம்பளத்துக்காக கயிற்றை இழுப்பவனும் கொலைதான் செய்கிறான். ஆனால் அவனை யாரும் குற்றம் காண்பதில்லை. எனவே கடந்த காலத்தில் நடந்ததைப் பற்றி விமர்சனம் வைக்கும்போது, பல விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எல்லாவற்றையும் விவாதிக்கலாம். அரேபியாவில் நடந்ததையும் என்னவென்று பார்க்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கை எதற்காக, எப்போதெல்லாம் உயர்ந்தது என்றும் பார்க்கலாம். அதற்கு முன் நமது நாட்டில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்ன என்று பார்க்க வேண்டுமல்லவா? ஹிந்து மதம் என்றால் என்ன? ஹிந்துக்கள் என்பவர்கள் யார்? இந்திய மண்ணின் மைந்தர்கள் யார்? உண்மையான இந்திய வரலாறு என்ன? வேத கால மதம் என்ன சொன்னது? மனு தர்மம் என்ன சொல்கிறது? ஏகலைவனின் கட்டை விரல் ஏன் குருதட்சனையாகக் கேட்கப்பட்டது? ஒரு பெண்ணை ஐந்து பேர் பகிர்ந்து கொண்ட கலாச்சாரம் யாருடையது? வர்ணாசிரமம் என்பது என்ன? அதன் விளைவுகள் எப்படிப்பட்டவை? அது எங்கே இருந்து வந்தது? கூட்டம் கூட்டமாக, கும்பல் கும்பலாக ஏன் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்? இந்தியாவில் உள்ள தலித்களும், சீக்கியர்களும், நாத்திகார்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ செய்கிறார்களா? எதற்காக அம்பேத்கார் ஒரு லட்சம் தலித் மக்களோடு பௌத்தம் தழுவினார்? சிவனடியார்களுக்கும் வைணவர்கள்களுக்கு இடையே நடந்தது என்ன? ஜைனர்கள் ஏன் கழுவில் ஏற்றப்பட்டார்கள்? குஜராத்தில், கோயமுத்தூரில் நடந்தது என்ன? எல்லாவற்றையும் பார்க்கலாம்.

Islam is the fastest growing religion in USA என்று ஹிலாரி கிளிண்டன் ஏன் சொன்னார்? மனிதாபிமானமற்ற சிலர் செய்த வன்முறையால் இரட்டைக் கோபுரங்கள் தரைமட்டமாக்கப்பட்ட மண்ணில் அது எப்படி சாத்தியமாயிற்று? அதையும் பார்க்கலாம். உங்கள் குற்றச்சாட்டுகளிள் உண்மை இருக்கிறதா என்றும் திறந்த மனதுடன் விவாதிக்கலாம்.

ஒரு கவிதை. அது அப்துல் ரகுமான் எழுதியது. அதைப் போகிற போக்கில் கையூம் மேற்கோள் காட்டியிருந்தார். அவ்வளவுதான். கல், பூ என்ற விஷயங்கள் மாறி மாறு வரும் முரண் அழகுக்காக ரகுமான் அப்படி எழுதியிருக்கிறார். அதைத்தாண்டி அதில் நேசகுமார் போல யோசிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை கவிதை அறிந்தவர்கள் அறிவார்கள். சிலருக்கு சொரியாசிஸ் என்று ஒரு வியாதி இருக்கும். நேசகுமாருக்கு அதுபோன்ற ஒரு மன அரிப்பு வியாதி இருப்பது போல் தெரிகிறது. அது நீங்க ஒரு வழி உள்ளது. அது இதுதான்

முதலில் வெளியே வாருங்கள். ஆரோக்கியமான காற்றைச் சுவாசியுங்கள். எங்களைப் பிராண்டுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ள வேண்டாம். ஆரோக்கியமான முறையில், நேர்மையாக, நாகரீகமாக விவாதங்கள் நடத்தலாம். ஆனால் முதலில் வெளியே வாருங்கள்.

நான் கேட்டுக் கோள்வதில் உள்ள உண்மைகளைப் பற்றி வாசகர்கள் சிந்தியுங்கள். எனது தளம் எல்லாருக்குமானது. யாருக்கும் தடையில்லை. உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், அது யார் மனதையும் புண்படுத்தாமல், நாகரீகமான முறையில் சொல்லப்பட்டிருந்தால், நீங்கள் திண்ணையில் மட்டுமல்ல, என் மின்னஞ்சலுக்கும் எழுதலாம், வலைத்தளத்திலும் பதியலாம். உண்மையான நேசம் வளர்க்கலாம்.

அன்புடன்
நாகூர் ரூமி


Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி