ஒரு பேனா

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

புஷ்பா கிறிஸ்ரி


பரீட்சை என்றதும் நெஞ்சு படபடத்துக் கொண்டது. எப்படியாவது நல்ல சித்தி பெற வேண்டும் என்று மனம் பாடு பட்டது. ஊரில் உள்ள, மனதுக்குத் தெரிந்த அத்தனை கோவில்களிலும், மனம் மானசீகமாகச் சென்று, பிரார்த்தனை செய்து மீண்டு வந்தது.

பரந்தனில் ஏறிய வண்டி வவுனியாவை அடைந்தது. அடுத்த வண்டி மன்னாருக்கு எடுத்துக் கொண்டு, மனம் அலைபாய பயணம் தொடர்ந்தது. பள்ளிக்குச் செல்லாமல், சுயமாகப் படித்தது. எப்படி ஆகுமோ ? ஏதோ கடவுள் மேல் பாரத்தைப் போட்டு, பரீட்சையை எழுதி முடிப்போம் என்று எண்ணிக் கொண்ட போது, வண்டி மன்னாரில் தரித்தது.

வண்டியை விட்டிறங்கி, அந்தக் கன்னியர் மடத்தை அடைந்த போது, ஒரு வயதான கன்னி வந்து அழைத்து உள்ளே கூட்டிச் சென்றார். என் பதிவுகளை எல்லாம் கொடுத்து முடித்த போது, என்னை அறைக்குக் கூட்டிச் சென்றார். நான் அறைக்குச் சென்ற போது ஆச்சர்யம். அந்தத் திறந்த வெளி அறையில் சுமார் நாற்பது பேர்கள் தங்குவதற்கு, கட்டில்கள் போடப்பட்டிருந்தன. அத்தனை கட்டில்களிலும் பெண்கள் அமைதியாக இருந்து படித்துக் கொண்டிருந்தனர்.

எனக்கென்று தரப்பட்ட கட்டிலில், என் பையை வைத்து விட்டு, அலுமாரியைத் திறந்து, என் கைப்பையை வைத்து, சாவியை எடுத்து, பயணப் பையைத் திறந்து, உடைகளை எடுத்து, அலுமாரியினுள் வைத்து விட்டு, குளியல் பொருட்களை எடுத்துக் கொண்டு, குளிக்கப் புறப்பட்ட போது, அவள் வந்தாள்.

‘என் பெயர் ஆனந்தி. நான் பூனகரியில் இருந்து வந்திருக்கிறன். இவர்களில் பலர் இந்த மடத்தில் இருந்து படிப்பவர்கள். ஏதும் உதவி தேவை என்றால், கேளுங்கள். நான் அடுத்த கட்டிலில் தான் இருக்கிறேன். ‘ என்றாள்.

குளியலறை… என்ற போது.. ‘அதோ அந்தப் பக்கம், மடத்துக் கோயில் அந்தப் பக்கம், பெரிய கோவில்,, இந்தப் பக்கம், மற்றும் சாப்பாட்டு அறை அந்தப் பக்கம்,.. ‘ என்று அவள் சொல்லி முடித்த போது, என் முக்கியமான சந்தேகங்கள் தீர்ந்து போன ஒரு திருப்தி.

நான் குளித்து விட்டு, மடத்துக் கோவிலினுள் சென்று, மன்றாடி விட்டு, சாப்பாட்டறையினுள் சென்று, சிற்றுண்டி எடுத்து உண்டு விட்டு, என் கட்டிலுக்கு வந்து சேர்ந்தேன். படித்தேன். கொஞ்சம் படுத்துக் கொண்டேன்.

காலை விடிந்தது. கைதட்டலுடன் பெரிய சத்தமாக, காலைச் செபம் தொடக்கினார் கன்னியாஸ்திரி. அது அதிகாலை ஐந்து மணி. எழுந்து பிரார்த்தனை செய்து விட்டு, பல் துலக்கி, முகம் கழுவி, உடை மாற்றிக் கொண்டு, தேனீர் அருந்திய பின்னர், பெரிய ஆலயத்தில் பூசை இருக்கிறது போவோம் என்றாள் ஆனந்தி. இருவரும் பூசைக்குப் போய் விட்டு வந்தோம். வழியில் மன்னார்க் கழுதை பாட்டுப் பாடியது. அதுவும் ஏதோ ஒரு ராகம் இசைப்பது போல் தான் தோன்றியது. கொஞ்சம் படிப்பது, படுப்பது, மீண்டும் படிப்பது, சாப்பிடுவது, பரீட்சைக்குப் போவது என்று பொழுது ஓடிக் கொண்டிருந்தது.

இரண்டு வாரங்கள் பரீட்சைகளுடன் ஓடி மறைந்தன. பிரியும் நாள் வந்தது. எப்படி ? சேரும் போது அந்நியர்களாய், சேரும் உயிர்கள், பிரியும் போது, உடன் பிறப்புக்களாகி விடுவது ? ஒரு பிரமை தானோ ? நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய மனமில்லாது பிரிந்த போது, மடத்துக் கன்னியர்கள் கண்கள் கூட கலங்கி, எமக்குப் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

ஆனந்தி கேட்டாள். ‘நீங்கள் என்னோட பூனகரிக்கு வந்து, பூனகரி பஸ்ஸில் பரந்தன் போகலாம் தானே! அப்ப இரண்டு பேருக்கும் பேச்சுத் துணையாகவும் இருக்கும். என்ர வீட்டுக்கு வந்து போனமாதிரியும் இருக்கும். ‘ நானும் உடன் பட்டுப் போனேன்.

ஆனந்தி வீடு பெரிய கல்வீடு. வீட்டு வளவில் ஆடு, மாடு, கோழிகள், நாய்கள், பூனை, கிளி என்று அன்பு மிருகங்கள், பறவைகள் நின்று எம்மை வரவேற்றன. வாசலில் அகால மரணமான அப்பாவின் படத்திற்கு மாலை போட்டு இருந்தது. கடை ஒன்றும் இருந்தது. அம்மா எங்களை வரவேற்றாள். ஆச்சி சாய்மானைக் கட்டிலில் படுத்திருந்தார். ஆனந்தி அக்கா, யாழ் வளாகத்தில் படிக்கப் போய் உள்ளதாக அம்மா சொன்னார். ஆனந்திக்கும் இறைவன் அருள் கிட்டி, நல்ல பரீட்சை முடிவு வந்தால், தானும் அவர்களுடன் கூட போய் இருந்து சமைத்துக் கொடுக்கப் போவதாக ஆனந்தியின் அம்மா சொன்னார்.

குளித்து உடை மாற்றி விட்டு, காலார வயல் வெளிகளில் நடந்தோம். மாலை என் பஸ் வண்டி வரும் நேரத்தைக் கேட்க பாதை அருகில் இருந்த கடைக்குச் சென்றோம். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்த போது, அம்மா சமையல் மூக்கைத் துளைத்தது. சாப்பாடு முடித்ததும், ஆனந்தியிடம் விடை பெற்றுக்கொண்டு, நான் பரந்த்தனுக்குப் போய் மறுநாள் கொழும்புக்குப் பயணமானேன்.

மனதில் மன்னார் நினைவுகள், ஆனந்தியின் அன்பும் நட்பும், ஆனந்தி வீட்டு நினைவுகள் என்று திரைப் படம் ஓடிக்கொண்டிருந்தது. இனி எப்போது ஆனந்தி வீடு செல்வது ? என்று மனம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டது.

கேள்விகட்கு விடை இல்லாமலே, நான் கொழும்பு சென்றேன்.

ஏனோ மூன்று வருடங்கள் ஓடி மறைந்த போதும் ஆனந்தியின் நினைவுகள் என்னை விட்டு மறைய மனமில்லாமல், தினமும் வந்திருந்து போனது. கொழும்பிலிருந்து பரந்தன் வர சந்தர்ப்பங்களும் அமையவில்லைத்தான். எப்படியாவது அவளை ஒருமுறை சென்று பார்த்து வர வேண்டும் என்று மனம் அலை பாய்ந்தது.

வந்தது சந்தர்ப்பம். ஒரு முறை அம்மாவுடன் பரந்தன் செல்ல வாய்ப்பு வந்தது. நான் கொழும்பில் இரயில் ஏறும் போதே நினைத்து விட்டேன். நிச்சயம் ஆனந்தியுடன் இரண்டு நாட்களாவது கழிக்க வேண்டும், நிறைய கதைக்க வேண்டும், அவள் எண்ணங்களை அறிய வேண்டும். ஒரு வேளை அவள் வீட்டில் இல்லையென்றால், திரும்பி ஏமாற்றத்துடன் வந்து விட வேண்டும்.. எதற்கும் மனத்தை தைரியப்படுத்திக்கொண்டு, பரந்தன் புறப்பட்டேன்.

என் அவசரம் அம்மாவுக்கு நன்கு தெரிந்திருந்தது. மறுநாளே போக அனுமதித்து விட்டார். எப்படி போவது ? நல்ல வேளை, என் அண்ணாவின் புதிய honda மோட்டார் சைக்கிள் இருந்தது வீட்டில். அண்ணா சோமாலியாவில், தொண்டனாக கடமை செய்யப் போயிருந்தார். ஆக அவர் ஊரில் இலலை. எனவே சைக்கிளை எடுத்துப் போகலாம், யார் ஓடுவது ? எனக்கு சைக்கிள் ஓடத் தெரியாது. யாரிடம் கேட்கலாம். ?

பக்கத்து வீட்டு தருமு அண்ணா சொன்னார், ‘நீர் சைக்கிள் ஓடப் பழகுவீரெண்டால், நான் கூட்டிக் கொண்டு போய், இடத்தையும் காட்டி, உம்மட சிநேகிதியையும் காட்டிப் போட்டுக் கூட்டிக் கொண்டு வாறன். பழக விருப்பமோ ? ‘

‘ஆம் ‘ என்று தலை அசைத்தேன். நல்லது தான். ஆனந்தியிடம் சைக்கிள் ஓடத் தெரியும் என்று காட்ட இதுவும் ஒரு வழிதான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். புறப்பட்டு விட்டேன்.

வழி நெடுகலும் ஏதோ ஓடி, பார்த்த படி போனாலும், மனம் ஆனந்தி வீடு எப்போது வரும் என்று எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டிருந்தது. எப்படியோ பூனகரிச் சந்தியை அண்மித்து விட்டோம். வீடு முற்றாக மறந்து போனதால், அங்கிருந்த ஒரு கடையில் கேட்டேன்.

‘ஆனந்தி வீடு எங்க இருக்குது ? வழி சொல்ல முடியுமா ? ‘

‘ஓம் ஆனால், அவ, இப்ப அங்கில்லை. அவவின்ர அம்மாவும், ஆச்சியும் தான் அங்கை இருக்கிறீனம். போய்ப் பாருங்கோ. இந்த தெருவாலை போய், வடக்கை திரும்பிப் போக வார முதல் ஒழுங்கையில, தென்னை மரங்கள் தெரியிற வீடு தான். கஸ்டமில்லை. ‘

அவர்கள் சொன்ன பாதை வழியே போனோம். வீடு வந்தது. மனம் விரத்திப் பட்டது. இவ்வளவு தூரம் வந்தும் என் ஆனந்தியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையா ? கடவுளே இதுவும் உன் சோதனையா ? அவ்வளவு தூரம் தேடி வந்தேனே என்று எண்ணிக் கொண்டு வீட்டுப் படலையைத் தட்டினேன்.

கடையினுள்ளிருந்து ஆனந்தியின் அம்மா தான் வெளியே வந்தார். ‘யாரது பிள்ளை ‘ என்று கேட்ட போது, ‘ அம்மா, நான் ரேவதி, ஆனந்தியோட படிச்சனான். மன்னாரிலிருந்து அவவோட இங்க வந்துவிட்டுப் போனனான். ஞாபகமிருக்கே ? ‘ என்று கேட்டபோது, அவர் கண்களிலிருந்து தாரை தரையாக கண்ணீர் கொட்டியது.

எனக்கு எல்லாமே புதிராக இருந்த்து. ஒருவேளை என் ஆனந்திக்கு ஏதாவது நடந்து போயிருக்குமோ ? அது தான் கடைக்காரர் அவ அங்கை இல்லை என்று சொன்னாரோ ? என் சந்தேகம் வலுத்த போது நான் அம்மாவை அணைத்தபடி கேட்டேன். ‘ அம்மா சொல்லுங்கோ! ஆனந்திக்கு என்ன நடந்தது ? ஆனந்தி இப்ப எங்க இருக்கிறா ? ஏன் அழுகிறீங்க ? சொல்லுங்கோ அம்மா, சொல்லுங்கோ ‘.

அம்மாவால் எதையும் சொல்ல முடியவில்லை. கண்ணீர் மட்டும் தான் கொட்ட முடிந்தது. இதற்கிடையில் ஆச்சி கேட்டார்.. ‘ யா..ர…து.. சத்..தம்.. கேட்டது.. ‘

அம்மா தான் பயந்த படி சொன்னார். ‘அது ரேவதியாம். ஆனந்தியைத் தேடி வந்திருக்கிறார். முன்னம் இங்கை வந்தவ. இப்ப தேடி வந்திருக்கிறார். ‘

‘அவையளைப் போகச் சொல்லும். அவள் போனவள் போன இடத்து நிலைமைகளை அவையள் அறிஞ்சு என்ன செய்யப் போகிறீனம். அதுகளையும் அங்க அனுப்பி, அதுகளின்ர மானத்தை வாங்காமல், பேசாமல் போகச் சொல்லும். ‘ ஆச்சி சொன்னதில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ பாரதூரமாக நடந்திருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. என்றாலும் என்ன செய்வது ? யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று குழப்பத்தில் நான் நிற்கையில், ஆச்சி என்னைத் தன்னிடம் அழைத்துச் சொன்னார்.

‘மோனை, நீ நல்ல இடத்துப் பிள்ளை மாதிரிக் கிடக்குது. நீ அவளைத் தேடி அங்கை போய், உன்ர மானம், மரியாதையை இழக்க வேண்டாம். பேசாமல் வந்த வழி திரும்பிப் போ. அதுகள் மதிப்பு, மரியாதை இல்லாத சனம். மகள் போய்விட்டார். இனி தாயும் அழுது கொண்டு மகளைத் தேடித் திரிகிறா. நாங்கள் எங்கட காலத்தில இதுகளை அறியாததால,, எங்களுக்கு வினோதமாகக் கிடக்குது. நீ போ மோனை..!

நான் மேலும் எதுவும் கேட்க விரும்பாமல், அம்மா தந்த தேனீரை வாங்கிக் குடித்து விட்டு புறப்படப் போனபோது, அவசரமாக பின்னால் வந்த அம்மா, ஆனந்தி வீட்டு விலாசமும் தந்து, அவள் வாழ்வு மாறிப்போன கதையையும் அவசரமாகச் சொல்லி விட்டு, மகளிடம் தரும்படி ஒரு சிறு பார்சலும் தந்து விட்டு, ஆச்சி கண்டுவிடாதபடி, வீட்டினுட் சென்று மறைந்து விட்டார். எனக்கு அழவேண்டும் போல் தோன்றியது. என் ஆனந்தியின் வாழ்வு……..திசை மாறிப் போனதா ?

கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க நேரமில்லாமல், அம்மா தந்த முகவரி தேடிக் கொண்டு ஓடினேன். மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கினேன். ஒரு சிறு குடிசை. அந்தக் குடிசைக்குள்ளிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். அவள்., அவளை என் கண்கள் அடையாளம் கண்டு கொண்டன. அது.. அது.. என் ஆனந்தி.. என் ஆனந்தியே தான். அப்படியென்றால், அவளுக்குத் திருமணமாகி விட்டதா ? ஆம். ஆனந்தி கையில் ஒரு குழந்தையையும், இடுப்பில் ஒரு குழந்தையையும், வயிற்றில் ஒன்றையும் சுமந்து கொண்டு நான் வரும்திசை தேடி வந்து கொண்டிருந்தாள்.

‘யாரது ? உங்களை என்கேயோ பார்த்திருக்கிறேனே! நீங்கள்.. நீங்கள்… ரேவதி தானே! வாங்கோ. நான் எதிர்பார்க்கவேயில்லை.. எப்படி வீடு கண்டு பிடிச்சனீங்கள் ? வாருங்கோ..என்றபடி அருகில் வந்தாள். அவள் இடுப்பில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு அவளை ஆரத் தழுவிக் கட்டிக் கொண்டேன். என் உயிர் அவளில் முட்டி மோதி சுகம் கேட்டு வந்தது. கண்கள் பனித்தன.

கையில் பிடித்திருந்த குழந்தை என்னை ஏறெடுத்துப் பார்த்தது. அதனையும் மறு கையில் தூக்கிக் கொண்டேன். ஆனந்தி அந்தக் குடிசைக்குள் என்னை அழைத்துப் போனாள். அம்மா தந்த பொட்டலத்தை அவளிடம் தந்து விட்டு, என் ஆனந்தியின் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு, அவள் எடுத்து விரித்த அந்த ஓலைப் பாயில் அமர்ந்து கொண்டேன். அவள் தேனீர் போட்டாள். நான் ஆச்சர்யமாக அவளை உற்றுப் பார்த்தேன்.

‘என்ன ரேவதி. அப்படிப் பார்க்கிறீங்கள் ? நான் மாறிப் போனன் என்று தானே! என்ன செய்ய ? இது தான் விதி என்கிறது. அப்பா இல்லாமல், அம்மாவும் சரியான கஸ்டப் பட்டு என்னையும் அக்காவையும் படிக்க வைத்தார். அக்கா யாழ் வளாகத்தில் படித்துப் பட்டம் எடுத்து வெளியே வந்து, நல்ல வேலையும் பார்த்தார். ஆனாலும் கல்யாணம் என்று கதை துவங்க, ஆள் மாறி, ஆள் வந்து,, அவவைப் பெண்பார்த்துப் போனவையள், ஆனால், சீதனம் கேட்டு,, அம்மாவை நல்லா நோக வைச்சிட்டினம். அம்மா பாவம். இருந்த காணி, பூமி நகை நட்டு, சாமான் எல்லாம் கொடுத்து, அக்காவை ஒரு இன்சினியர் மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்தார். நான் வீட்டில் இருந்து இதுகளைப் பார்த்தனான். இனி எனக்கு ஒரு கலியாணம் என்றால், அம்மா அந்தக் கடையை நம்பித்தானே ஏதும் செய்ய வேணும். அது தான் கடைக்கு உதவி செய்து, சாமான்கள் கொண்டு வந்து தர வந்தவர் செந்தில். எனக்கும் அவரைப் பிடிச்சுப் போச்சுது. அவருக்கும் என்னில் கொள்ளை விருப்பம். கேட்டு இருவரும் முடிவு செய்து போட்டு, அம்மாவுக்குச் சொன்ன போது, அவ தான் இறந்து போவன் என்றார். ஆச்சி அம்மாவுக்கு மிகவும் கஸ்டம் தந்தார்.

நான் சாதி குறைஞ்ச இடத்தை விரும்பிப் போறன் என்றார். எனக்கு இது ஒன்றும் அப்பவும் இப்பவும் ஒரு குறையாகத் தெரியேல்லை. எனக்கு அவருடைய மனம் பிடிச்சது. நல்ல மனிதர். உழைப்பாளி.

இந்தக் காணி இரண்டு ஏக்கரும் அவர் தனியாகக் காடு வெட்டி உழுது பண்படுத்தி, இன்று விவசாய நிலமாக்கினவர். நான் வந்த பிறகு தான் தன்ர வாழ்க்கை சிறந்து இருக்குது என்று வாய்விட்டுச் சொல்கிறார். நாங்கள் சந்தோசமாக இருக்கிறம். அதற்கு அடையாளம் தான் இந்த குழந்தைச் செல்வங்கள். நான், சமூகம் என்று பார்த்து யோசித்து ஒரு முடிவு எடுக்காமல் விட்டிருந்தால், ஒரு நல்ல உழைப்பாளி இந்த நாட்டுக்கு இல்லாமல் போய் விட்டிருக்கலாம். என்னால் ஒருவரை உருவாக்க முடிந்தது எனக்கும் பெருமை தானே! நீரே சொல்லும். நான் எடுத்த முடிவு சரிதானே! அவர் என்னை ஒரு தேவதை மாதிரித்தான் நடத்துகிறார். அவரின் சொந்த பந்தங்கள் என்னைத் தெய்வமாகவே மதித்து நடத்துகின்றனர். இதை விட எனக்கு என்ன வேண்டிக் கிடக்குது ? நான் சந்தோசமாகத் தான் இருக்கிறன். ஆனால், அம்மா என்னோட கதைக்கப் பயப்பட்டு என்னைப் பார்க்க வாரதில்லை. அக்காவும் என்னை ஒதுக்கி விட்டுப் போட்டார். ஆச்சிக்கு என்ர பெயர் கேட்டால், கொதி கிழம்பி விடுமாம் என்று ஆட்கள் சொன்னவையள். எனக்கு அவையளை விட இவர் தான் வேணும். என்ர வாழ்க்கையை இவரால் தானே ஆழமுடியும். என்ர பிள்ளைச் செல்வங்கட்கும் எனக்கும் இந்த வாழ்க்கை போதும். இப்ப தானே வாழத் தொடங்கி இருக்கிறம். இன்னும் ஒரு நாலு, ஐந்து வருடத்தில நாங்கள் நல்லாக இருப்பம். அப்ப இந்தச் சனங்கள், சாதி, சமயம் பார்க்காமல் எங்கட காலடி தேடி வருங்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்குது. ‘

அவள் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடந்தன. நாளை மனிதர்கள் அவளைத் தேடிப் போவார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்று தனியே வாழ்ந்து கொண்டிருக்கும் என் ஆனந்தியின் நம்பிக்கை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவள் மீது பெரும் மதிப்பு வந்தது எனக்கு.

நான் அவளிடமிருந்து விடை பெறப் போன போது, அவளது விலாசம் கேட்டேன். அடிக்கடி குழந்தைகட்டு ஏதும் அனுப்பலாம் என்று. அவள் கேட்டாள். ‘இப்ப எங்கை இருக்கிறீர் ? பரந்தனில் தானா ? அல்லது கொழும்பிலா ? உம்மட விலாசத்தைத் தாரும் நான் அடிக்கடி கடித்த்திலாவது கதைக்கலாம் தானே! ‘

நான் மடியிலிருந்த அவள் மகளை இறக்கி வைத்து விட்டு ஒரு பேனை கேட்டேன். அவள் அங்கும் இங்கும் ஓடினாள். ‘ என்ர சாமான் எல்லாம் அம்மா வீட்டிலேயே விட்டு விட்டு வந்தனான். ஆச்சி ஒன்றும் தரமாட்டன் என்று சொல்லிப் போட்டார். அம்மா பாவம். ஆச்சிக்கு சரியான பயந்தவ. ஆச்சிக்குத் தெரியாமல், அவ்வப்போது வார போறவர்களிடம் என்ர சாமான்கள், உடுப்புக்களை அனுப்பி வைச்சவர். அதில ஒன்றும் என்னட்டை இல்லை. ‘ இயலாமையுடன் அவள் சொன்ன போது, என் தொண்டைக்குழிக்குள் ஏதோ அடைத்துக் கொண்டது.

நான் என் பைக்குள் கைவிட்டு, என் பேனாவை எடுத்து என் கொழும்பு விலாசத்தை எழுதி முடித்து விட்டு, அவளிடம் அந்தப் பேனாவைத் தந்தேன். ‘இது என் ஞாபகமாக உம்மிடம் இருக்கட்டும். அடிக்கடி கடிதம் போடும். ஏதும் தேவை என்றால் எழுதும். கொழும்புக்கு வந்தால் என்னை வந்து பாரும். நான் என்றைக்கும் உம்மட ரேவதிதான். மாறேல்லை. என்ர அன்பு உமக்கும் குடும்பத்துக்கும் இருக்கும். ‘

நான் கூறி முடித்த போது அவள் கண்கள் குழமாகின. அந்தப் பேனா, அவள் கைகளிலிருந்து கொண்டு என்னிடம் விடை பெற்றது. அவள் கணவர், தூரத்தில் இருந்து, வயலில் வேலை செய்து கொண்டிந்த படியே, என்னை கையசைத்து விடை கொடுத்தனுப்பினார்.

அந்தப் பிஞ்சுக் குழந்தைகள், என்னை ஆரத் தழுவி விடை தந்தன. ஆனந்தியைக் கண்ட திருப்தியுடனும், ஓரளவு மோட்டார் சைக்கிள் பயின்ற திருப்தியுடனும் என் வீடு நோக்கி நான் நடக்க, என் நினைவுகள், ஆனந்தியின் வாழ்வை சுற்றி சுற்றி, பருந்து போல் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

***

pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி