க.ராஜம்ரஞ்சனி
எனக்கு அழுகை அழுகையாய் வருகின்றது. இன்று நேற்றல்ல. கிட்டத்தட்ட நாற்பதைந்து வருடங்களாக நான் படும் கஷ்டம் என்னுள்ளே புதைந்து நித்தமும் வதை செய்கின்றது. என் மனதில் ஒரு பெண்ணின் மனதைச் சுமந்து நான் படும் துயரம் கொஞ்சமானதா? இந்த பூட்டிய அலமாரியில் நானே அழுது நானே தேற்றிக் கொள்கிறேன். அந்தப் பெண்ணும் ஏறக்குறைய என் நிலையில்தான் இறக்கும் வரை இருந்தாள். அவளும் தானே அழுது தானே தேற்றிக் கொண்டாள். அவளின் மனதைப் புரிந்து கொள்ளவோ ஆறுதல் கூறவோ யாருமே இருந்ததில்லை. அதனால்தான் என்னவோ என்னிடம் அவள் நெருங்கிய சிநேகமாய் இருந்தாள். யாரிடமும் சொல்லாத ரகசியங்களை என்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு என் மீது அளவில்லா நம்பிக்கை அவளிடம் இருந்தது. நானும் அவளை என் உயிர் சிநேகிதியாய் ஏற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் என்னிடம் முறையிடவும் பேசவும் அவள் மறந்ததே இல்லை.. இது அவள் பெற்றோருக்கோ கணவருக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ தெரியவே தெரியாது. அதற்காகவே என்னைச் சமையலையறையிலேயே வைத்திருப்பாள். அவள் சுதந்திரமாய் நடமாடக் கூடிய ஒரே இடமாக அது இருந்ததும் மற்றொரு காரணம். நான் சொல்வது உங்களுக்குப் புரிந்தும் புரியாமலும் இருக்கலாம். சரி உங்களிடம் கொஞ்சம் என் சோகத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். கொஞ்சம் மனப்பாரம் குறைந்தது போல் இருக்கும்.
30 டிசம்பர் 1965
எனக்குப் படிச்சி டீச்சர் ஆகணும்னு ரொம்ப ஆசை. ஆனா நான் இதுக்கு மேல படிக்க முடியாதாம். பொம்பள பிள்ளைக்குப் பெரிய படிப்பு வேண்டியதில்லைனு அப்பா சொல்றாரு. அண்ணனும் தம்பிங்களும்தான் பெரிய படிப்பு படிக்க முடியுமாம். என்ன நியாயம் இது? ஆம்பள பிள்ளையானாலும் பொம்பள பிள்ளையானாலும் அம்மா பத்து மாசம் சுமந்து தான பெக்கறாங்க. எனக்கும் அண்ணனை மாதிரியும் தம்பிங்கள போலவும் ரெண்டு கை, ரெண்டு கால், ரெண்டு கண்ணு, ஒரு மூக்கு, ஒரு வாய். அப்புறம் ஏன் இந்த பாராபட்சம்? கேட்டா வாய் பேசாதனு சொல்றாங்க. என்னதான் செய்யறது? எனக்கு ஒன்னுமெ புரியல.
19 பிப்ரவரி 1973
அடுத்த வாரம் எனக்குக் கல்யாணம். அம்மா அப்பா பார்த்த மாப்பிள்ளை. ஜாதக பொருத்தம் ரொம்ப நல்லா இருக்காம். ஜாதக பொருத்தம் பார்க்க முடியும், மன பொருத்தத்தை எப்படி தெரிஞ்சுக்க முடியும்? எல்லா பொண்ணுங்கள போலவும் எனக்கும் கல்யாண களை கட்டி சந்தோசமாதான் இருக்கேன். அடிக்கடி நல்ல கனவெல்லாம் கூட வருது. என் கூட்டாளி ராதா கூட கல்யாணம் பண்றப்ப இதப்பத்தி சொல்லிருக்கா. கல்யாணத்துக்கு அப்பறம் நான் அவள பார்க்கவே இல்ல. அவ அம்மாகிட்ட கேட்டேன். கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு போய்ட்டா அடிக்கடி அம்மா வீட்டுக்கு வர கூடாதாம். அப்ப நானும் வர முடியாதா? அம்மா வீட்டுக்கு வர முடியாத அளவுக்கு அடிமையா புருசன் வீட்டோடவே இருக்கனுமா? அம்மாகிட்ட இதுப்பத்தி கேட்கனும். வரதட்சனை எத்தனையோ ஆயிரமுனு பேசிகிட்டாங்க. அப்படினா மாப்பிள்ளை விலை கொடுத்து வாங்கற சாமானா? எனக்கு ஒன்னுமெ புரியலெ.
25 மே 1976
கல்யாணமாகி மூனு வருசம் ஓடியாச்சு. நேரம் என்னமொ சீக்கிரமாதான் ஓடுது. ஆனா எனக்குத்தான் ஒவ்வொரு நிமிசமும் கஷ்டமா இருக்கு. காலைல எழுஞ்சி வீட்டை சுத்தம் பண்ணி, துணி துவைச்சி, சமையல் செய்து இப்படிதான் ஒவ்வொரு நாளும் போகுது. மனைவி என்றால் இது மட்டும்தான் போல. அவர் வீட்டுக்கு வந்து கோபத்தெல்லாம் எங்கிட்டதான் காட்டுவாரு. அதையும் சகிச்சுகனும். உட்காந்து கொஞ்ச நேரம் அன்பா எங்கிட்ட பேச ஏன் இவருக்கு தோண மாட்டுது? ஒன்னா வெளிய போய் எத்தன நாளாச்சு? இந்த வாழ்க்கையே வேணானு உதறிட்டு போகத்தான் நெனச்சேன். அதே போல புருஷனை தூக்கி எறிஞ்சுட்டு வந்த ராதா அக்காவ எல்லாரும் வாழவெட்டினு கூப்பிட்டது என் ஞாபகத்துக்கு வந்துச்சு. அந்த முடிவையும் கை விட்டுடேன். ராதா அக்கா அந்த வார்த்தையை தாங்கிக்க முடியாம ஒரு நாள் மருந்து குடிச்சு செத்துட்டாங்க. தையல் கத்துகிறேனு சொன்னேன். அதெல்லாம் அவருக்கு பிடிக்காதாம். என்னதான் பிடிக்கும் அவருக்கு? அவருக்கு பிடிச்ச மாதிரிதான் செய்யனும். எனக்கு பிடிச்சத எதுவும் செய்ய கூடாதா? கோபம்தான் எனக்கு. கேட்கனும்னு நினச்சேன். ‘வீட்டுகாரு சொல்றததான் கேட்கனும், அவர் பேச்ச மீற கூடாதுனு’ அம்மா சொன்னது நினைவுக்கு வந்துச்சி. கோபத்தை அடக்கிக்கிட்டேன். மனைவினா மனுஷியா இல்ல உணர்ச்சிகளற்ற ஜடமா? எனக்கு புரியல.
10 ஜனவரி 1977
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் பத்து மாசத்தில எனக்கு குழந்த பொறந்திரும். கடைசில கடவுள் கண்ண தொறந்திட்டாரு. இந்த வரம் கிடைக்க நாலு வருஷம் தள்ளி போனதால நான் எல்லாத்துகிட்டயும் வாங்கிய பேச்சு, பட்ட பாடு இருக்கே. இப்ப நினச்சாகூட அழுகை வரும். மலடின்ற சொல்லு எவ்வளவு கடுமையானதுனு நல்லா தெரிஞ்சுகிட்டேன். அவரும் சேர்ந்து மத்தவங்களோட என்னை குறை சொன்னதுதான் இன்னும் கூடுதலா வலிச்சிச்சு. குழந்தை பாக்கியம் நம்ம கையலயா இருக்கு? இது யாருக்குமே புரியமாட்டுது. குழந்தைன்றது கணவன் மனைவி ரெண்டு பேருமே சம்பந்தபட்டது. ஆனா குறை மட்டும் எப்படி மனைவி மேலயே விழுது? குழந்தைய சுமக்கறது, பிரசவம்னு எல்லாத்தையும் மனைவியே தாங்கிக்கனும். எந்த தாய்க்கும் இது சுமையா தெரியாதுதான். வீட்டுக்காரர் கொஞ்சம் அன்பா கவனிச்சிக்கிட்டா எவ்வளவு நல்லாருக்கும்? ஏன் இது ஆண்களுக்கு புரிய மாட்டுது? எனக்கு புரியலெ.
12 ஆகஸ்டு 1979
இப்பல்லாம் குடிக்க தொடங்கிட்டாரு. கேட்டா ஆம்பளைங்க உழைக்கறதால உடம்பெல்லாம் வலிக்குமாம். அதனால இதெல்லாம் சகஜமாம். அப்ப வீட்டுல உழைக்கிற பொண்ணுங்களுக்கு உடம்பு வலி வராதா? குடிக்கிறதென்ன பெரிய விசயமா? பொண்ணுங்க குடிச்சாலும் தொண்ட வழி இறங்கதான் செய்யும். கொஞ்சஞ்கூட நியாயமா படல எனக்கு. தற்கொலை பண்ணிக்கலாம்னுகூட தோணுச்சு. கோழை மாதிரி நான் ஏன் தற்கொலை பண்ணனும்னு மறுநிமிஷமெ மனசை மாத்திக்கிட்டேன். என்னோட ரெண்டு பிள்ளைங்கள நெனச்சிதான் மனம் நிம்மதி அடைய முடியுது. இனிமே என்னோட சந்தோஷமெல்லாம் அவங்கதான்.
16 அக்டோபர் 2003
என்னோட சந்தோசமா நான் நெனச்ச என் பிள்ளைகளும் ஒதுக்கிட்டாங்க. அவங்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கைதான் பிடிச்சிருக்காம். நான் மட்டும் கணவர இழந்து இந்த வீட்டுல தனியா இருப்பது அவங்களுக்கு கவலையாம். அதனால என்னை முதியோர் விடுதில சேர்க்க போறாங்களாம். நான் பெத்த பிள்ளைங்களெ சேர்த்தா அவங்களுக்கு தான கெட்ட பேரு. எனக்கும் கவலயா இருக்கும். அவங்க சேர்க்கறதுகுள்ள நானே ஏதாவது விடுதிக்கு போயிடுறேன். பொண்ணா பொறந்து எனக்கு புரியாத பல விசயங்கள்லேயே என் வாழ்க்கை கரைந்துடுச்சு. கடவுளே இனி நான் பொண்ணா பொறக்கவே கூடாது.
நான் அந்தப் பெண்ணுடைய முழு மனதையும் உங்ககிட்ட சொல்லவில்லை. கொஞ்சம்தான் சொன்னேன். அப்படி முழுதையும் சொன்னால் நீங்களும் என்னைப் போல அழ தொடங்கிவிடுவீர்கள். அவளும் தான் கடந்து வந்த பாதையை மற்றவர்களிடம் சொல்ல விரும்பவில்லை. அதனால்தான் விடுதிக்குச் செல்வதற்கு முன் எனக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த விஷயங்கள் எங்களுடனே முடியட்டும் என்ற எண்ணத்தில் என்னைச் சாம்பலாக்கிவிட்டுதான் போனாள். உன்னதமான பெண்ணாகிய அவளின் பசுமையான நினைவுகள் எனக்குச் சுவாசத்தை இன்னும் கொடுத்து கொண்டிருக்கின்றன.
க.ராஜம்ரஞ்சனி
மலேசியா
ktrajamranjini@yahoo.co.in
- இன்னும் சில வார்த்தைகள், நட்புணர்வுடன்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -7
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பரிதி வடுக்களின் காந்த வீச்சுகள் பூமியில் பூகம்பத்தைத் தூண்டுமா ?
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- இருளில் ஒளி?
- வாழ்வின் நீளம்
- நிலத்திற்கு மேலே நடப்பவர்களின் கதை
- வெண்சங்கு
- Latest Information of Solar Cycle 24
- சங்கச் சுரங்கம் – 19: ஆடுகள மகள்
- “முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மாநாடு-2009”
- “உண்மை இல்லாத புனைவு எது?”
- வசதி போலப் பொருள் கொள்ளவா சொற்கள்?
- ‘வலக்கர விளக்கம்’
- இஸ்லாம் : திண்ணை விவாதங்கள்
- சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழ்
- உலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு
- பதவி உயர்வு
- ட்ரேடு
- ‘உலகக் கிராமத்து’ மக்களே!
- பருந்துகளும் என் வீட்டுக்கோழிக்குஞ்சும்
- விசுவாசம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -41 << காதலி இறந்தால் ! >>
- வேத வனம் -விருட்சம் 38
- படைப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனிதனின் கானம் >> (முதற் பாகத் தொடர்ச்சி)கவிதை -11 பாகம் -2
- பூவேந்திரன் ஹாங்காங்கில் நிகழ்த்திய 28 மணி நேர யோக சாதனை
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 6
- சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்!
- அக்கா பையன் சுந்தரம்
- அறிவியல்கதை: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
- மன்னிப்பு
- பேரழகியும்,அறபுநாட்டுப் பாதணிகளும் !
- ஒரு பெண்ணின் டைரி சொல்லும் கதை
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பது
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – எட்டாவது அத்தியாயம்