ஒரு நீண்ட நேர இறப்பு

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

சுமதி ரூபன்


மிகமிக நீண்ட துாரத்தில் முகில்களில் சாயையால் அவள் ஒருகால் மடித்து பிருஷ்டம் சரியப்படுத்திருந்தாள். தொப்புள்கொடியின் விடுபடலின் அவஸ்தையாய் இழுபட்டு மிதந்துகொண்டிருந்த அவன் கைகள் கிளைகளாய் நீண்டு அவள் இடுப்பில் மெல்ல நகர்ந்து காயங்களின்றி இறுக்கி, இழுத்தது. முழங்கால் மடித்து குதியினால் அவன் தொடையில் ஓங்கி உதைந்தாள் அவள். அவன் பிடி இறுக நோக்கண்டாள் அவள். “போ விடு” சிணுங்கலோடு விம்மினாள். எறிந்த பந்தின் விசையாய் அவள் முதுகோடு ஒட்டி காதோர மூச்சு தலைமயிர் கலைக்க “ஏனம்மா” என்றான். காதோர அவன் சுடு மூச்சு உடல் சிலிக்க அவள் சின்னக்குரலெடுத்து அழுதாள். அலையும் மெழுகுதிரியின் சுவாலையில் மென்சிவப்பாய் உருத்திரிய கைவிரல்கள் கொண்டு அவள் முகம் அலசினான் அவன். கோடை வெய்யிலின் வியர்வைப் பீரிடல்களுடன் கலந்த அவள் கண்ணீர் சிதறல்கள் தலைமயிரை ஈரப்படுத்தி முகத்தில் அப்பி பரவிக்கிடந்தது. மென்சிவப்பு முகத்தில் கறுப்புக் கோடுகளாய் நீளும் தலைமயிரை மெல்ல ஊதி ஊதி ஒவ்வொன்றாக எடுத்துப் பின்னால் போட்டு அவள் கையில் கிடந்த துணி ரப்பரை மெதுவாகக் கழற்றி தலைமயிரைக் கோதிச் சேர்த்துப் போட்டான்.

காற்றின் கணம் சாளரங்களில் நிழலாய் அசையும் கிளைகளால் அடையாளம் காட்டியது. மெல்ல அவள் முகம் திருப்பி இதழில் இதழ் பதித்து விலகிக் கொண்டான்.

சீரான சுவாசத்துடன் கண்இமைகள் மூடி ஓய்ந்து கிடந்தாள் அவள். வியர்வையும் சம்பூவும் சமையலும் கலந்து அவள் தலைமயிரிலிருந்து எழுந்த மணம் அவன் சுவாசத்துடன் கலந்தது சென்றது. அவள் நெஞ்சிலிருந்து வயிறு வரை ஆதரவாக வருடிக்கொடுத்தான் அவன். வியர்வையில் ஊறிக் கசிந்து கலந்து விரலோடு வந்தது ஊத்தை உருண்டை. உடல் அசைக்காது மெல்ல மெல்ல உருட்டி உருட்டித் துாக்கிப் போட்டான் அதை. அவன் ஒற்றை கையை அணையாக வைத்து அவள் நித்திரையாகிப் போனாள்.

அவன் முகடு பார்த்தான். சுத்த வெள்ளையில் பரந்து கிடந்தது அது. ஒற்றைப் புள்ளியில் வரியாகத் தொடங்கிப் பெரிதாய் ஒரே சீராக வளைந்து வளைந்து வட்டம் பெரிதாகி வரி எங்கோ மறைந்தது. மறைந்த புள்ளியிலிருந்து மீண்டும் பார்வையை சிறிதான வட்டத்தில் பதித்து சுத்திச் சுத்தி வந்து புள்ளியில முடித்தான். மேடு பள்ளமற்ற முகட்டில் ஒற்றை நிறத்தில் வளையும் வட்டத்தைப் பிரமிப்புடன் சிறிது நேரம்பார்த்தான். பின்னர் பார்வை யன்னலோரம் சென்றது. பருத்த மரத்தின் கிளையொன்று யன்னலை உரசித் தெரிந்தது. கறுப்பு கடும்பச்சை பச்சை இளம்பச்சை கடும் மஞ்சள் மஞ்கள் இளமஞ்சள் எனக் கலவையாய் சின்ன இலைகள் கலந்து தெரிந்தன. ஒற்றைக் காம்பில் சின்னநிகம் போன்ற இலைகளை மனதுக்குள் எண்ணினான். வியந்தான். பருத்த மரத்தின் முழுவதுமான இலைகளை எண்ண மனம் அடித்துக் கொண்டது. களைத்து பார்வையை திசை திருப்பினான். சிறிது அசைந்து விட்டு மீண்டும் சீராக சுவாசித்த அவள் வியர்வை அவன் உடலில் ஒட்டி வழிந்தது.

அவன் பார்வை அறையை வேவு பார்த்தது. கடும் பச்சையில் சுவர்கள் வினோதமாய் கிடந்தன. வெளிர் நிறங்களே அறைக்குப் பொருத்தமாவை என்று எண்ணிக் கொண்டான். இருப்பினும் கடும்பச்சை அழகாக இருப்பது போலும் பட்டது. சுவரில் தொங்கும் ஆபிரிக்க ஓவியங்கள் கறுப்பிலும் மஞ்சளிலும் சுவருக்குப் பொருத்தமாய் தீப்பிளம்புபோல் காட்சியளித்தன. மேசையில் கிடந்த பூச்சாடியின் பூக்களை இனம்காண முனைந்து பின் பார்வையை நாலாபக்கமும் அலைய விட்டான். கை விறைத்தது. கால்களைப் பிரித்துப் போட்டான். அவள் பிருஷ்டம் குளிர்ந்துபோய்க் கிடந்தது. வெள்ளை படர்ந்து அவள் முழங்கைகள் பொருக்குக் கண்டிருந்தன. முதுகில் சின்னச் சின்னக் கறுப்புப் புள்ளிகளும் சிறிய கொழுப்புப் பருக்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிடந்தன. தனது நிகம் கொண்டு மெல்ல பருக்களை நெரித்தான். அவள் உடல் சிறிது உதறி அசைந்து உடல் திருப்பி அவன் கழுத்தோடு முகம் வைத்துப் படுத்துக் கொண்டாள். மச்ச வாசத்தோடு வெண்காய மணமும் கலந்த அவள் மூச்சு அவன் முகத்தில் பரவியது. அவன் தள்ளி அவள் முகத்தைப் பார்த்தான். கண்ணீர் கன்னத்தில் கறையாகிக் கிடந்தது. புருவங்கள் அலங்கோலமாய்க் கிடந்தன. மெல்லத் தன் நிகம் கொண்டு அதை ஒழுங்கு படுத்தினான். கண் இமைகள் ஈரலிப்போடு மினுமினுத்தன. சொண்டின் மேற்பகுதியில் பூனை மயிர்கள் சுருண்டு கிடந்தன. “பெண்ணுக்குள் ஒளிந்திருக்கும் ஆண்மை” தன் மீசையை ஒருமுறை வருடி விட்டுக் கொண்டான்.

அவள் உடல் முறித்தாள். கண்கள் சொடுக்கி அவன் முகம் பார்த்தாள். ஒரு கொட்டாவி விட்டாள். சின்னதாகப் புன்னகைத்தாள். பின் எக்கி அவன் இதழ் முத்தி மீண்டும் கழுத்துக்குள் முகம் புதைத்தாள். கலவையாய் வெவ்வேறு வாசனைகள் அவளிடமிருந்து எழுந்து அடங்கின. அவள் கால்களால் அவனை வளைத்துக் கொண்டாள். அவன் கைகளை உயர்த்திப் போட்டுக் கொண்டு அசையாது கிடந்தான். வியர்வைகள் வற்றிப் போய் விட்டிருந்தன. கொட்டாவி விட்டான். கண்கள் மூட அவனிடமிருந்தும் சீராக சுவாசம் வெளிப்பட்டது. ஒரு சீரான லயத்துடன் இருவரின் மூச்சு ஒலியும் அந்த அறையை ஆட்கொண்டது.

அனல் காற்றின் வீரியம் குறையவில்லை. குழந்தைகளின் கும்மாள ஒலிகள் துாரத்தில் கேட்டன. வாகனங்கள் புழுதியைக் கிளப்பிச் சென்றன. இடம்மாறிப் பறக்கும் பறவைகளின் குரல்கள், காற்றில் கலக்கும் பாடல் வரிகள், நடைபாதைப் பேச்சுக்குரல்கள் இயங்கும் நகரத்தின் அடையாளமாய் வடிந்து சென்றன. சுவரோரக் கடிகாரம் சத்தமிடமறந்து அசைந்துகொண்டிருந்தது.

அவள் இருமினாள். தொடர்ந்து இருமினாள். கால்களை எடுத்துக் கொண்டாள். கட்டிலை அசைக்காது எழுந்து அருகிலிருந்த தண்ணீர் சாடியில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தாள். துவாயால் கழுத்து வியர்வையைத் துடைத்தாள். அவன் நெற்றியை ஒருமுறை ஒற்றி விட்டாள். அவனிடமிருந்து வினோதமான ஒலியில் குறட்டை வெளிவந்துகொண்டிருந்தது. சீராகக் கத்தரிக்கப்படாத மீசையில் சிறிய நரை ஓடியது. சொண்டுகள் வறண்டு போய்க் கிடந்தன. கன்னத்தில் நீளமாய் ஒரு காயம் காய்ந்து தெரிந்தது. கண்களின் அடியில் கருவளையம். கன்னத்து மயிரிலும் சிறிய நரை. அவள் குனிந்து விரல் நுனியால் நரை மயிரில் ஒன்றை இடுக்கி மெல்ல இழுத்தாள். அவன் அசைந்தான். அவள் தனக்குள் சிரித்து மெல்லிய குரலி;ல் பாட்டுப் பாடிய படியே சுவரை நோட்டமிட்டாள். பார்வையை சுற்றிச் சுற்றி ஓட விட்டாள். குப்புறப் படுத்து குமுதம் புரட்டினாள். அவன் தலைமயிரை விரல்கள் கொண்டு கலைத்து விட்டாள். அவன் மூடி மூடித் இமைகள் திறந்தான். புன்னகைத்தான். அவனுக்கு மூத்திரம் முட்டியது எழுந்து வோஷ்ரூம் சென்றான். குளிக்கும் சத்தம் கேட்டது. அவள் கட்டிலி;ல் புரண்ட படியே பாடல் ஒன்றை ஹம் பண்ணினாள். தண்ணீர் சத்தம் நிற்க அவன் மீண்டும் வந்தான். அவள் எழுந்து கொண்டாள். வோஷ் ரூம் போனாள். குளித்தாள் வெளியே வந்தாள். இருவரும் மெளனமாகத் தொலைக்காட்சி பார்த்தார்கள். அவன் வயிறு புரண்டு குளறியது. “சாப்பிடுவமா ?” கேட்டான். அவள் தலையசைத்தாள். பார்சலை உடைக்க குளிர்ந்து போய்க் கிடந்தது சாப்பாடு. கையால் அள்ளி அள்ளிச் சாப்பிட்டார்கள். தண்ணீர் குடித்தார்கள். யாரோ ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தொலைக்காட்சி செய்தி சொல்லிச் சென்றது. அவன் மேசையில் கிடந்த பழங்களை எடுத்து அவளுக்கு நீட்டினான். அவள் வாயுக்குள் கிடந்த சுவிங்கத்தை எடுத்து விரல் நுனியில் பிடித்த படியே ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டு விட்டு மீண்டும் சுவிங்கத்தை வாயுக்குள் திணித்துக் கொண்டாள். அவன் பழங்களைச் சாப்பிட்ட படியே தொலைக்காட்சி செய்தியில் மூழ்கிப் போனான். அவள் குமுதத்தையும் தொலைக்காட்சியையும் மாறி மாறிப் பார்த்து நேர்தைப் போக்காட்டினாள். அவன் தொலைக்காட்சியை அணைத்து விட்டு “போவமா ?” என்றான். அவள் தலையசைத்தாள். கைப்பையினுள் கார் திறப்பைத் தேடினாள்.

அவன் அருகில் வந்து அவள் இடுப்பைக் கைகளால் வளைத்து “ஏன் அழுதனீ” என்றான். அவள் சொண்டுகள் நடுங்க, கண்கள் பனிக்க மீண்டும் விம்மிய படியே அவன் தோள் சாய்ந்தாள். முகில்களின் நடுவில் பறப்பதாய் ஒரு கனவு அவனுக்குள். நீலமாய் வெள்ளையாய் கறுப்பாய் முகில்களின் நிறங்கள். அவளை இறுக்கினான். மீண்டும் இறுக்கினான் பலம் கொண்ட மட்டும் இறுக்கினான். அவளுக்கு நோகவில்லை. அவள் எப்போதோ இறந்து விட்டிருந்தாள். சாளரத்தைக் கீறிக் கீறி சத்தம் எழுப்பியபடி இருந்தது பருத்த மரத்தின் ஒரு கிளை. காற்று வெப்பம் தணிந்த குளிராய் வீசியது.

சுமதி ரூபன்

thamilachi2003@yahoo.ca

Series Navigation

சுமதி ரூபன்

சுமதி ரூபன்