ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


குபுகுபுவென சூடான ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வெளியேறிய போது கத்தியானது பாதி தலையைத்தான் வெட்டியிருந்தது. கால்கள் இரண்டும் வெடுக்வெடுக்கென இழுத்துக் கொண்டன. இதயம் இன்னும் நிற்கவில்லை என்றுதான் தோன்றியது. நான் சற்று அருகில் சென்று கவனித்த போது அவன் இதயத்துடிப்பை நன்றாக கேட்கமுடிந்தது. நான் உறுதியாக கூறுவேன் அவனுக்கு இது சாக வேண்டிய வயதே இல்லை. அவன் இன்னும் சிறிது காலம் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் வாழ்ந்திருப்பான். யாரைக் கேட்டாலும் தயங்காமல் கூறுவார்கள் அவன் பரம சாது என்று. அவனால் யாரும் இதுவரை தொந்தரவு அடைந்ததேயில்லை. அவன் பயந்த சுபாவம் வேறு. யாராலும் நிச்சயமாக அவனை எதிரியாக நினைக்க முடியாது. எல்லாவற்றிலும் கொடுமை அவனால் பேசக்கூட முடியாது.

அவனது உடல் துடித்துக் கொண்டிருந்தது. மெதுமெதுவாக அந்த துடிப்பு குறைந்து கொண்டிருந்தது. எனக்கு புரிந்துவிட்டது அவனது உயிர் போய் கொண்டிருந்தது. என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. எல்லாம் கனவு போல் இருந்தது. நான் நன்றாக புரிந்து கொண்டுவிட்டேன். இங்கு கருணை செத்துவிட்டது. நீதியும் கூட. இங்கு உயிருக்கு மரியாதையே கிடையாது. ஒரு உயிர் கொல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ளவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சுற்றி நின்றிருப்பவர்களின் மனதில் சற்று கூட, வருத்தமோ, பாவ உணர்ச்சியோ இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் நிற்கிறார்கள்……… பார்க்கிறார்கள்……… அவ்வளவுதான் தெரிகிறது. அது என்னவிதமான உணர்ச்சி என்றுகூட புரியவில்லை. சிலைகள் போல் கைகளை கட்டிக்கொண்டு நிற்பது அவ்வளவு எளிதான விஷயமாக அவர்களுக்கு எப்படி தோன்றுகிறது. அவர்கள் அனைவரும் ஒன்று போலவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தான் பயி;ற்சி பெற்றிருக்கிறார்கள் போல.

நான் கடைசியாக எதிர்பார்த்ததும், நம்பியதும் ஒரு ஆம்புலன்சைத்தான். நான் பலமுறை சாலை நெரிசலில் மாட்டிக்கொண்டு நிற்கும் ஆம்புலன்சை பார்த்திருக்கிறேன். தலையில் சிவப்பு விளக்கை சுற்றியபடி அநாதையாய் கத்திக் கொண்டு நிற்கும். அருகில் நிற்பவன் கூட இதை சட்டை செய்யமாட்டான். அவன் குறைந்தபட்சம் தனது காதுகளை பொத்திக் கொள்ளாமல் நிற்பது குறிது;து நாம் சந்தோஷம் அவடைந்து கொள்ள வேண்டியதுதான். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு விஷயம் உறுதிபட்டுவிட்டது. ஒரு ஆம்புலன்ஸ் தனது அவசரச் சத்தத்தின் மரியாதையை இழந்துவிட்டது. அந்த சத்தம் தனது பொருளை இழந்துவிட்டது. அச்சத்தத்திற்கு பெரிதாக அலட்டிக்கொள்வது என்பது பைத்தியக்காரனின் செயலுக்கு ஒப்பானதாக மாறிவிட்டது.

இனி பிரயோஜனமில்லை. உயிர் போகும் பொழுது ஏற்படும் கடைசி 3 துடிப்பை பற்றி நானறிவேன். ஆம் மெதுவாக ஒரு துடிப்பு……… அதை விட மெதுவாக மற்றொரு துடிப்பு……..கடைசியாக கால்களும், உடலும் ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டன. ஆனால் வெளியே விடப்படவில்லை. வெளிவிடப்பட்டது எனது கண்ணீர்தான். உயிர் மொத்தமாக அடங்கிப் போனது. மனம் வலித்தது.
உண்மையில் மனவலியைபற்றி சொல்ல முடியாது. அது அவ்வளவு ஆழமான உணர்வு. மனம் வலிக்க ஆரம்பித்தவுடன் உடல் 2 மடங்கு எடை அடைந்து விடுகிறது. கண்ணீரைப் பற்றி சொல்வதென்றால் அது நிற்பதாகத் தெரியவில்லை. நான் எனது வீட்டின்அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு அன்று முழுவதும் அழுதேன்.

25 வருடங்களுக்குப் பிறகு……………………ஒரு ஞயிற்றுக் கிழமை காலை

எனது 6 வயது பையன் இன்று கதவை தாழிட்டுக் கொண்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.

நான் செய்த தவறுகள் இவைதான்.

அவன் ஆசைப்பட்டானே என்று ஒரு ஆட்டுக் குட்டியை வளர்ப்பதற்கு அவனை அனுமதித்திருக்கக் கூடாது.

அல்லது

அவன் செல்ல நண்பனைப்போல் வளர்த்த அந்த ஆட்டுக் குட்டியை பிரியாணி செய்வதற்காக வெட்டியிருக்கக் கூடாது.

அல்லது

அவ்வாறு பிரியாணி செய்துவிட்டு அவனை சாப்பிட அழைத்திருக்கக் கூடாது. 25 வருடங்களுக்கு முன் நான் வெறுமனே அழுது கொண்டிருக்கம் செயலை மட்டுமே செய்தேன். ஆனால் எனது பையன் அவ்வாறு இல்லை. சாப்பிட அழைத்தது தான் தாமதம், அறைக்குள்ளிருந்த விலையுயர்ந்த எல்.சி.டி. டி.வி உடைபடும் சத்தம் கேட்டது. கூடவே சேர்ந்து எனது இதயம் உடைபடும் சத்தமும் சின்னதாக கேட்டது. ஏனெனில் அந்த டி.வியின் விலை 34 ஆயிரத்து 999 ரூபாய்.

20 வருடங்களுக்குப் பிறகு கூட எந்த விதமான ஹெசிடேசனும் இல்லாமல் என்னால் ஒரு மட்டன் பிரியாணியை சாப்பிட முடியவில்லை என்பதை நினைத்துப் பார்க்கையில்…………………………….ஏற்கனவே உடைந்த இதயம் வேறு என்னதான் செய்யும்.

(ஒரு இதயம் இரண்டாவது முறை உடைபடுவது என்பது சாத்தியம் அல்ல)

Series Navigation

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்