ஒரு கலப்பை கண்ணீர் வடிக்கிறது….

This entry is part [part not set] of 18 in the series 20010211_Issue

சேவியர்


கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பச்சையைக் கட்டி வைத்திருந்த
கிராமம்
தன் கோவணத்தைக் கழட்டிவிட்டு
காங்கிாீட் நிழலில் கால்நீட்டியிருக்கிறது….

இதோ
இங்கிருந்து துவங்கி
சர்ப்பக் குளத்தின் எல்லைவரை
மொத்த நிலத்துக்கும் நான் தான்
வியர்வை வடிய உழவு செய்திருக்கிறேன்.

அதோ அங்கிருந்த வாய்க்காலில்
வால் நனைத்து ஓடுகின்ற நாய்கள்….

கால்வாயில் கண்திறந்து
வாய்க்காலில் வழுக்கிவிழும்
அயிரை மீன்கள்
எதிரேறும் இடம் பார்த்து
அரைக்கால் சட்டையோடு காத்திருக்கும்
பள்ளிச் சிறுவர்கள்….

நெடிய வரப்பின் அடியில் ஒளிந்து
பீடி குடிக்கும்
கைலி இளைஞர்கள்…

வெட்கத்தில் முகம் செய்து
பாத நிழலைப் பார்த்து நடக்கும்
முனியம்மாக்கள் …

வயலின் நிறம் பார்த்து வியாதிசொல்லும்
வெற்றிலைப் பொிசுகள்….
களை பிடுங்கி வயல் வளர்க்கும்
கூனல் கிழவிகள்….

வாழை மரத்தில் உட்கார முயன்று
தோற்றுத் தோற்று
வரப்புக் குச்சிகளில் அடைக்கலமாகும்
சலவை செய்த கொக்குகள்….

சலசலக்கும் சிறு குருவிகள்….
சருகு மிதிக்கும் அணில் குஞ்சுகள்….
சேறு மிதித்து நடக்கும் தவளைகள்….

எதுவும் இன்று காணவில்லை !!!
நான் மட்டும்
வடக்குப் புறத்தின்
விறகுக் கூட்டுக்கிடையில்….

சிறுவர்கள்
சக்திமானுக்கும் சச்சினுக்கும் காத்து
தொலைக்காட்சி பெட்டியைத்
தொட்டுக்கொண்டு நிற்கிறார்கள்…

அந்த கால்வாய்….
அதில் தான் லாாிகளில் மண் கொண்டு
கொட்டுகிறார்கள் !!!

வயல்கள் எல்லாம் ஈரம் விற்று விட்டன
வாழைகள் எல்லாம்
நிலத்தை விட்டு நகர்ந்து
வேலிகளுக்குள் விழுந்து விட்டன….

வெட்கம் உடுத்திய பெண்களும்
களை பிடுங்கும் கிழவிகளும்
தொலைந்து போன வெறுமையில்
அந்த ஒற்றைத் தென்னை மரமும்
காய்ப்பதை நிறுத்திவிட்டிருக்கிறது….

இயற்கையின் கவிதை மேல்
செயற்கையின் கட்டிடங்கள்
காலூன்றி விட்டன…

விவசாயின் தோள்களோடு
சொந்தம் கொண்டாடிய நான்
இன்று விறகுகளோடு முதுகு உரசுகிறேன்…

கலப்பை- ன்னா என்னப்பா ?
ஈரம் விட்டுப் போன காதில்
ஏதோ கான்வெண்ட்
ஈயம் பாய்ச்சுகிறது…

ஒன்று மட்டும் புாியவே இல்லை
இயற்கையின் அழகை புதைத்து விட்டார்கள்
சுகாதாரச் சூழலை சிதைத்து விட்டார்கள்….
அதெல்லாம் இருக்கட்டும்
அாிசியை என்ன
இண்டர்நெட்டிலிருந்தா
இறக்குமதி செய்யப் போகிறீர்கள் ?

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்