ஒப்பிலான்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

நெப்போலியன்


எதிர்பாராத
தருணங்களில்
அதிர்ச்சியாய்
நிகழ்ந்துவிடும்
நெருங்கியவர்களின்
இழப்பு
வாழ்வின்
எல்லா பிரயத்தனங்களும்
வெற்று பூச்சியம்
நிரந்தரமற்ற பிம்பமே
நிகழ் என்பதை
உணர்த்திக் கொண்டேயிருக்கவா ?

மரண உளியால்
செதுக்கப்படும் நிமிடங்களே
நம் ஆயுள்
வடிவம் பூரணமாகையில்
முடிவதே முற்றுப்புள்ளியா ?

கண்ணீர் சொட்டுக்களைவிட
உன் ஈர நினைவுச்சுனை
இனி வாழ்நாளெல்லாம்
என் மனக்கேணியுள்
பிரிவின் சுரப்பாய்
நிரந்தர ஊற்றுக்கண்ணாகுமே….
என் கனிவான சகோதரா ,

அஃறிணையும் உயர்திணைதான்
அஃறிணையாய் உயர்திணை
அஃறிணையே உயர்திணை
எனச் சொன்ன நீ
முதல்நாள்
தொலைபேசியில் உரையாடியபோது
எனக்குத் தெரியாது
அதுதான் நீ
என்னுடன் பேசிய
கடைசி நிமிடங்களென்று .

இலக்கிய அமர்வுகளில்
துணிச்சலான உன்
விமர்சனப்பேச்சும்…
சாவகாச சமயங்களில்
சாலையோர தேநீர்க்கடைகளில்
கதைத்துக் கேட்ட
உன் தோழமை உற்சாகமும்…
மாலை வேளைகளில்
கிருபாசாலை செல்வி ஸ்டோரில்
இனி நீயின்றி கூடும்
நண்பர் வட்டமும்…
.
நினைத்துப் பார்க்கமுடியவில்லை

ஒப்பற்ற உன் நட்பை
யாரும் ஒப்பிட்டு
நிரப்பிவிடமுடியா
ஒப்பிலான்
இனி நீயின்றி
நினைத்துப் பார்க்கமுடியவில்லை.

வாழ்வின் கவிதை
முரணான முடிவுடன்
எழுதப்படும்போதெல்லாம்
கடவுள்
விதி
விஞ்ஞானம்
எனும் கோட்பாடுகளின்மேல்
அதீத அவநம்பிக்கையும்
அர்த்தமற்ற நம்பிக்கையும்
ஒருசேர தோன்றிவிடுகின்றது ?
—- நெப்போலியன்
சிங்கப்பூர்

(2005 ஜனவரி 2ம்தேதி மாரடைப்பால் தனது 47ம் வயதில் மரித்துப்போன
திரு. உதுமான்கனி அவர்கள் வானொலி தொலைக்காட்சி கவிதை கதை
இலக்கியப்பேச்சு தமிழ் கருத்தரங்கநிகழ்வுகள் என பன்முக படைப்பாளியாய்
சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க இலக்கியவாதிகளில் ஒருவர். ‘அஃறிணை
உயர்திணை ‘ எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு தென்கிழக்காசிய சிறுகதை
நூல்களில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. வழக்கறிஞரான இவரின் இழப்பு சிங்கை
தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாததாகும் )

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்