ஒட்டுதல்

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

வண்ணதாசன்


குளியலறையை விட்டு வெளியே மஹேஸ்வரி வரும்போது செஞ்சு லட்சுமியும் அவள் கணவரும் ஹாலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

அம்மா குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள். செஞ்சுதான் பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘எங்கே போகப் போகிறாள். ஏற்கனவே பார்த்த ஆபீஸ். ஏற்கனவே பார்த்த வேலை ‘ என்று என்னென்னவோ சொல்வது கேட்டது.

துவைத்த உடைகளையும் வாளியையும் வைத்த கையோடு எப்போதும்போல அடுக்களையின் ஒரு பகுதியாக இருக்கிற பூஜை அலமாரியின் பக்கம் வந்து நின்றாள்.

எல்லாச் சாமி படங்களையும்விட ராம்பிரசாத்தின் படம் பெரியதாக இருந்தது. இன்றைக்கு மாலை ஒன்றும் போட்டிருக்கவில்லை. ஆனால் கண்ணாடிக்கு மேல் வைத்திருந்த குங்குமப் பொட்டு அளவுக்கு அதிகமாக நெற்றியை மறைத்துக் கொண்டிருந்தது.

ஒகனேக்கல் போயிருக்கும்போது எடுத்த படம். எதிர் வெயிலுக்கு முகம் சற்றுச் சுருங்கியிருந்தது. முழுப்படத்தில் இடதுபக்கம் மஹேஸ்வரியும் செஞ்சுலட்சுமியும் நிற்பார்கள். வலதுபக்கம் செஞ்சுலட்சுமியின் கணவர் இருப்பார். எப்போதும் புகைப்படம் க்ளிக் செய்யப் போகிற சரியான வினாடியில் எதையாவது சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்துவிடுகிறவர் செஞ்சுவின் கணவர்தான். சிரிக்கிற முகங்களே அழகு. புகைப்படங்களில் சிரிக்கிற முகங்கள் அதைவிட அழகுதானே.

ராம்பிரசாத் முகத்தைச் சுருக்கிக் கொண்டிருப்பதற்கு வெயில் மட்டும் காரணமில்லை. அவன் கால்களையொட்டி, ‘அப்பாவோட நிப்பேன் ‘ என்று சொல்லிக் கொண்டு சங்கீதா, கடைசி நேரத்தில் கையிலிருந்து நழுவின பலூனைப் பிடிக்க ஓடிப்போய் விட்டதும்தான்.

சங்கீதாவை நினைக்கும்போது மஹேஸ்வரிக்குத் திகைப்பாக இருந்தது. வெறும் ஐந்து வயது. இன்னும் எத்தனை வருடம் அம்மா துணைக்கிருப்பாள். இன்னும் எத்தனை வருடம் இப்படி வேலைக்குப் போய்க் கொண்டிருப்பேன். இன்னும் எத்தனை வருடத்தில் சங்கீதா படித்து ஆளாவாள் ?

மஹேஸ்வரிக்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்று தோன்றவில்லை. வெறுமனே கைகளைக் கூப்பினாளே தவிர, கும்பிடுகிற மனநிலை இல்லை. என்னசொல்லிக் கும்பிடுவது ? என்ன வேண்டிக் கொள்வது ? கும்பிட்டதெல்லாம் போதாதா என்று சண்டை போடவும் தோன்றவில்லை. துடைத்து வைத்ததுபோல் நின்றாள். உதடு கடித்து அழுதாள். இந்த ஒன்றரை மாதம் அழுதாலும் கூட, இன்னும் அதை நிறுத்த முடியவில்லை.

அம்மாவும் அழுதுகொண்டேதான் உள்ளே வந்தாள்.

‘செஞ்சுவும், அவள் வீட்டுக்காரரும் வந்திருக்காங்க ‘ என்றாள்.

‘நீ போய்ப் பேசிக்கிட்டு இரு. நான் காப்பி போட்டு எடுத்துகிட்டு வாரேன் ‘ என்று மஹேஸ்வரியிடம் சொல்லும்போது கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பே தீர்மானித்து வைக்கப்பட்டதுதான். அலுவலகத்தில் முதல் வாரம் தாண்டி விட்டதால் வேலை சற்றுக் குறைவாக இருக்கும். சனிக்கிழமை என்றால் போய்விட்டு, அரைநாள் வேலையோடு வீட்டுக்குத் திரும்பிவிடலாம். எலெக்ட்ரிக் ட்ரெயினில் போவது இன்னும் கொஞ்ச காலத்துக்குக் கஷ்டம். ராம்பிரசாத் தன்னுடைய பைக்கில் ஏற்றிக் கொண்டு வந்து ஸ்டேஷனில் விட்டது ஞாபகம் வரும்.

இன்றைக்கு செஞ்சுவும் மஹேஸ்வரியும் ஆட்டோவில் போவார்கள். தேவைப்பட்டால் இன்னும் சில தினங்களுக்கு அப்படித்தான் போக வேண்டும்.

ஆட்டோ இரண்டு பக்கமும் மழைத்தண்ணீரைச் சுருட்டி எறிந்து கொண்டு விரையும்போது ராம்பிரசாத் ஞாபகம் வரும் ராம்பிரசாத்துக்கு மழை பிடிக்கும். ஒரு முறை சினிமாவுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது மழை வந்துவிட்டது. அவர்கள் சினிமாவுக்குப் போகவில்லை. வீட்டுக்கும் திரும்பவில்லை.

மவுண்ட்ரோடில் ஆரம்பித்து கடற்கரைச் சாலை வரை, நேர்கோடு போட்டது போல் மழையிலேயே பைக்கில் போய்த் திரும்பினார்கள். மஹேஸ்வரிக்குக் கடலில் மழை இறங்குவது பிடித்திருந்தது.

இரும்பு அலமாரி கதவைத் திறக்கும்போதே கத்தியது.

என்ன புடவை உடுத்துவது என்று முடிவுக்கு வர முடியவில்லை.

மேல்தட்டில் ராம்பிரசாத் உடைகள். அடுத்த இரண்டு தட்டுக்கள் மஹேஸ்வரிக்கு. கீழ்த்தட்டு சங்கீதாக் குட்டிக்கு. மஹேஸ்வரி மேல்தட்டைப் பார்த்தாள். கடைசியாக அவன் அணிந்திருந்தது நீல முழுக்கைச் சட்டை. நசுங்கின மோட்டார் சைக்கிளுக்கும் பஸ்ஸிற்கும் மத்தியில் ராம்பிரசாத் கிடந்தது தூங்குவது போலத்தான் இருந்ததாம். பார்த்தவர்கள் சொன்னார்கள்.

இனிமேல் மஹேஸ்வரி தூங்க முடியாது. பாதித் தூக்கத்தில் எழுந்திருக்கும்போது தலையணையைப் பிடித்துக் கொண்டு ராம்பிரசாத் தூங்குவதைப் பார்க்க முடியாது. சங்கீதா மட்டும்தான் படுத்திருப்பாள்.

‘புறப்படவில்லையா ? ‘ – செஞ்சு லட்சுமியின் குரல் கேட்டது.

மஹேஸ்வரியின் இரண்டு கைகளையும் பின்பக்கமிருந்து பிடித்து இழுத்து, ‘சற்று நகர்ந்துகொள் ‘ என்பது போல் அலமாரிப் பக்கம் வந்தாள். நூலகங்களில் புத்தக முதுகைப் பார்த்து விரல்களால் தள்ளிக்கொண்டே வருவோமே அதுபோலப் புடவை அடுக்கைத் தள்ளிக் கொண்டிருந்தாள். ஒரு புடவையை உருவி எடுத்து மஹேஸ்வரியின் தோளில் போட்டுவிட்டு, ‘வெளியே இருக்கிறேன், வா ‘ என்று செஞ்சுலட்சுமி நகர்ந்து போனாள்.

செஞ்சுவால் உடனுக்குடன் தீர்மானித்துவிட முடிகிறது.

‘இத்தனை நாள் விடுமுறையில் இரு. தேவைப்படுகிறதா, மேலும் இத்தனை நாள் போது. இன்னதேதியில் அலுவலகம் வருகிறாய். அம்மா உன்னுடன் இருக்கட்டும் என அண்ணனுக்கு எழுது. சங்கீதா பள்ளிக்கூடத்தை அடுத்த வருடம் மாற்று. சிறிதாக ஒரு வாஷிங் மெஷின் வாங்கு. பொறு. இரண்டு பேரும் வாகனம் ஓட்டப் பழகிக் கொள்வோம். வண்டி வாங்க முடிகிறதா பார்க்கலாம் ‘ – எல்லாம் செஞ்சுலட்சுமியின் யோசனை. அவளுடைய தீர்மானம்.

புடவைத் தலைப்பை சரிசெய்து கொண்டபோது கண்ணாடி பார்க்கலாமா என்று தோன்றியது. ‘கண்ணாடி பார் ‘ என்று மஹேஸ்வரி தீர்மானித்தாள். ‘கண்ணாடி என்பது பார்த்துக் கொள்ளத்தானே ‘ என்று சிலும்பல்களைப் படியவைக்கிற மாதிரித் தலையின் இரண்டு புறமும் சீப்பால் வருடி விட்டாள்.

ராம்பிரசாத் எப்போதும் உபயோகிக்கிற சீப்பு கண்ணாடி முன் இன்னும் இருந்தது.

‘தேன் கலர்ச் சீப்பு இருக்கா ? ‘ என்று கல்யாணம் ஆன சமயம் ராம்பிரசாத் கடையில் கேட்டது ஞாபகம் வந்தது. யோசித்துப் பார்க்கும்போது ருசிமட்டும் அல்ல, தேனின் நிறமும் அழகாக இருப்பது மாதிரித்தான் பட்டது. பாட்டிலில் இருந்து மடிந்து மடிந்து இறங்குகிற தேனை ராம்பிரசாத்தும் சங்கீதாவும் குழிந்த உள்ளங்கையில் ஏந்துகிறார்கள். மஹேஸ்வரி மட்டும் தேக்கரண்டியில் எடுத்து அண்ணாந்து வாயில் விட்டுக் கொள்கிறாள். கம்பி மாதிரி இனிப்பு இறங்குகிறது.

ஏதோ இப்போதுதான், இந்தக் கண்ணாடிக்கு எதிரே நின்று கொண்டு தேனை அப்படிக் கரண்டியால் வாயில் ஊற்றுகிற மாதிரி அண்ணாந்து பார்த்தாள்.

எல்லாம் சரி. தலைவாரி ஆகிவிட்டது. வழக்கமாகப் போடுகிற காதுத் தோட்டிற்குப் பதிலாக, சிறியதாக வேறு ஒன்று போட்டாயிற்று. துணை சங்கிலியாக எப்போதும் கழுத்தில் இருக்கிற பொடிச் சங்கிலியைப் போட்டுக்கொள். கழற்ற வேண்டாம் என்று பதினாறாம் நாளே அம்மா சொல்லிவிட்டாள்.

பொட்டுத்தான் வைக்கவில்லை. வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா ? மஹேஸ்வரிக்கு மறுபடி அழுகை வந்தது. இன்னும் எத்தனை தடவை அலுவலகத்தில் இன்று அழுகை இருக்கிறதோ ?

கைப்பையை எடுத்துக் கொள்ளவில்லை. அலுவலக மேஜை சாவியை ஏற்கனவே கொடுத்து அனுப்பியாயிற்று. சீசன் டிக்கெட் தேவையில்லை. ஒவ்வொன்றாக வரிசையாக யோசித்துக் கொண்டே இன்னொரு தடவை கண்ணாடி பார்த்தாள். இன்னொரு தடவை பொட்டில்லாத நெற்றி மட்டும் தெரிந்தது. முகமே இல்லாமல் நெற்றி மட்டுமா கண்ணாடியில் தெரியும் ? எதைப் பார்க்க நினைக்கிறோமோ அதை மட்டுமா கண்ணாடி காட்டும் ? அல்லது பார்க்கவேண்டாம் என்று நினைக்கிறதையா ?

‘சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினால் சரியாக இருக்கும் ‘ அம்மாகுரல் கொடுத்தாள்.

‘வேண்டாம் ‘மா ‘ என்று மஹேஸ்வரி சொல்லும்போது செஞ்சுலட்சுமியின் கணவர் எழுந்திருந்து வந்து, ‘உங்ககூட சாப்பிடணும்னே செஞ்சு சாப்பிடாமல் வந்திருக்கிறாள். அவளைப் பட்டினி போட்டுடாதீங்க ‘ என்று மஹேஸ்வரியிடம் சொல்லிவிட்டு ‘அம்மா, செஞ்சுவுக்கும் சேர்த்துத்தானே டிபன் ‘ என்று அம்மாவைப் பார்த்து சிரித்தார். இந்தச் சிரிப்பு மஹேஸ்வரிக்கு வேண்டியதிருந்தது. மஹேஸ்வரியின் அம்மாவுக்கும் வேண்டியதிருந்தது.

கிழிக்கும்போது சன்னமாக மிருதுவாகச் சரசரவென்று தட்டுப்படுகிற தினசரிக் காலெண்டர் தாள் மாதிரி, இந்த சிரிப்பு இந்தக் குரல் பழசை எல்லாம் கிழித்து அப்புறப்படுத்துகிற மாதிரி இருந்தது.

இரண்டு தட்டுகளை எடுத்துக் கொண்டு செஞ்சுலட்சுமி வந்து மஹேஸ்வரியின் கைகளைப் பிடித்துச் சாப்பாட்டு மேஜை முன் அமர்த்தினாள். அவளும் அமர்ந்தாள்.

சாப்பிட்ட கைகளைக் கழுவி விட்டு வரும்போது அம்மா சொன்னாள்-

‘சாமியைக் கும்பிட்டுவிட்டு, நெற்றிக்கு வச்சுக்கோ ‘

அம்மா பூடகமாகச் சொல்வது போல இருந்தது. திருநீறு வைத்துக் கொள்ளச் சொல்கிறாளா ? பொட்டு வைத்துக் கொள்ளச் சொல்கிறாளா ? நீ எதை நினைக்கிறாயோ அதை வைத்துக் கொள் என்று மஹேஸ்வரியின் முடிவுக்கு விட்டு விடுகிறாளோ தெரியவில்லை.

மஹேஸ்வரி சாமி கும்பிட்டாள். ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லை. அப்படியே நின்றாள். செஞ்சுலட்சுமி வந்து கையைப் பிடித்து மஹேஸ்வரியை அப்புறப்படுத்தினாள். அடுக்களையில் இருந்து ஹால் வெகுதூரத்தில் இருப்பது போல இருந்தது. வாசல் அதைவிடத் தொலைவு என மஹேஸ்வரிக்குத் தோன்றிற்று.

அம்மாவிடம் எதுவும் பேச முடியவில்லை.

‘இன்றைக்கு ஆபீஸிற்கு வரவில்லை ‘ என்று செஞ்சுவிடம் சொல்லிவிடலாமா என்று மஹேஸ்வரி தயங்கியபோது, ‘ஆட்டோ கொண்டு வந்துவிட்டேன் ‘ என்று செஞ்சுலட்சுமியின் கணவர் உள்ளே வந்தார். அவருடைய கைப்பை, ஹெல்மெட், பைக் சாவி எல்லாவற்றையும் குனிந்து எடுத்துக் கொண்டார்.

‘நீங்க ரெண்டு பேரும் அம்மாகிட்டே சொல்லிக்கிட்டுப் புறப்படுங்க. நான் வீட்டுக்குப் போய்ப் பிள்ளைகளைப் பார்த்துக்கிறேன். சங்கீதா அவங்ககூட விளையாடிக்கிட்டு இருப்பா. கவலைப்படாதிங்க ‘ – அவர் சிரித்தார். மறுபடியும் அந்தச் சிரிப்பு இந்த அறையை நிரப்புவது போலிருந்தது.

ஒருவரை ஒருவர் நகர்த்திக் கொண்டது போல எல்லோரும் வாசலுக்கு வந்தார்கள். இன்றைக்குத்தான் புதிதாக வருவது மாதிரிப்பட்டது.

மஹேஸ்வரியின் அம்மா மஹேஸ்வரியின் கையைப் பிடித்தார்கள். தலையைப் பின்பக்கமாக வருடிவிட்டார்கள். செஞ்சுலட்சுமியின் தோளின் மேலும் லேசாக கை வைத்தார்கள். பேசவில்லை. ஆனால் மஹேஸ்வரியைச் செஞ்சுலட்சுமியிடம் ஒப்படைத்தது மாதிரி இருந்தது.

‘ஏறிக்கிடுங்க ‘ செஞ்சுலட்சுமியின் கணவர் சொன்னார்.

மஹேஸ்வரி முதலில் ஏறினாள். கைப்பையின் பொத்தானைத் திறந்து கொண்டே செஞ்சுலட்சுமி ஏறி உட்கார்ந்தாள்.

‘என்ன தேடுதே ? ‘ மஹேஸ்வரி கேட்டாள். ஒன்றும் சொல்லாமல் செஞ்சுலட்சுமி, இரண்டு விரல்களால் பையைத் துளாவினாள். வரிசையாக ஒட்டுப்பொட்டுக்கள் அடங்கிய பட்டை ஒன்றை வெளியில் எடுத்தாள். ஏற்கனவே ஒன்றிரண்டு பிய்த்து எடுக்கப்பட்டிருந்தன. மீதிப் பொட்டுக்கள் வரிசையாக இருந்தன. அரக்கு நிறப் பொட்டுக்கள்.

ஒட்டுப் பொட்டுக்களின் வரிசையில் மேல்பக்கம் இருந்த ஒரு பொட்டை நுனி நகத்தால் உரித்து எடுத்தாள். மஹேஸ்வரியின் நாடியை இறுகப்பிடித்துக் கொண்டு நெற்றியில் வைத்தாள். குபீர் என்று அழுத மஹேஸ்வரியைத் தோளில் சேர்த்து அழுத்திக் கொண்டாள்.

‘போகலாம்ப்பா ‘ என்று சொன்னாள்.

ஆட்டோ புறப்பட்டதுபோது மஹேஸ்வரி செஞ்சுலட்சுமியின் தோளில் நன்றாகச் சாய்ந்துக் கொண்டிருந்தாள். செஞ்சுலட்சுமி கை அசைத்தாள். பதிலுக்குக் கை அசைக்கிறபோது, மஹேஸ்வரியின் அம்மாவைவிடச் செஞ்சுலட்சுமியின் கணவர்தான் அதிகம் அழுது கொண்டிருந்தார்.

Series Navigation

வண்ணதாசன்

வண்ணதாசன்