ஏறத்தாழ பூமியில் மோத இருந்த விண்கல்

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

டாக்டர் டேவிட் ஒயிட்ஹெளஸ்


கடந்த சூன் 14ஆம் தேதியன்று கால்பந்தாட்ட மைதானம் அளவு இருக்கும் ஒரு விண்கல் ஏறத்தாழ பூமியில் மோத இருந்தது என்பதை வானவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுவரை பார்த்ததில், சந்திரனுக்கும் பூமிக்கும் நடுவே வந்த பெரும் விண்கற்களில் இது ஆறாவது. இதுதான் இதுவரை வந்ததிலேயே மிகப்பெரியது.

வானவியலாளர்களுக்கு மிகவும் கவலை தருவதென்னவென்றால், இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது சூன் 17ஆம் தேதி என்பதுதான். அதாவது இந்த கல் நம் பூமியைக் கடந்து பல நாட்களுக்குப் பிறகு.

பூமி அருகாமை அஸ்ட்ராய்ட் ஆராய்ச்சிக்கான லிங்கன் பரிசோதனைச்சாலை Lincoln Laboratory Near Earth Asteroid Research (Linear) வானவியலாளர்கள் இதனைக் கண்டறிந்து தெரிவித்திருக்கிறார்கள்.

2002MN என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல் என்னும் அஸ்ட்ராய்ட், வினாடிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் (அதாவது சுமார் மணிக்கு 23000 மைல் வேகத்தில்) பூமியைக் கடந்து சென்றது. இது பூமியிலிருந்து சுமார் 120,000 கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து சென்றது.

இப்படிப்பட்ட ஒரு விண்கல் பூமியைக் கடந்து சென்றது கடைசியாக டிஸம்பர் 1994இல்.

இந்த விண்கல்லின் விட்டம் சுமார் 50-120 மீட்டர்கள். இது உலக அளவில் நாசத்தை விளைவிக்கக்கூடிய விண்கல் (அஸ்ட்ராய்கள்) அளவைக் ஒப்பிடும்போது சிறியதுதான்.

இருப்பினும் இது மோதியிருந்தால், இதன் விளைவு மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்கும்.

சைபீரியாவில் 1908இல் நடந்து போன்று சுமார் 2000 சதுர கிலோமீட்டர் தரை மட்டமாகியிருக்கும்.

டாக்டர் பென்னி பெய்ஸர், என்ற லிவர்பூல் ஜான் மோர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர், ‘சிறிய கற்களைக்கூட கண்டுபிடிக்கும் நம் திறமை வளர்ந்துதான் இருக்கிறது. இதேபோன்று அல்லது இதைவிட பெரிய ஒரு பொருள் நம்மை நம் வாழ்நாளிலேயே தாக்குவதற்கான வாய்ப்பு மிக அதிகம் ‘ என்று கூறுகிறார்.

எவ்வளவு காலம் தாழ்த்தி இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் கவலைதரும் பிரச்னையாக ஆகியிருக்கிறது.

டாக்டர் ஜான் டேவிஸ் இந்த விண்கல்லின் பாதையை ஆராய்ந்து எந்த திசையிலிருந்து வந்திருக்கிறது என்பதை கணக்கிட்டார்.

இந்த அஸ்ட்ராய்ட் விண்கல், சூரியன் இருக்கும் திசையிலிருந்து வந்து ஒரு மணி நேரத்தில் பூமியைக் கடந்து சூன் 14ஆம் தேதி சென்றது என்று கூறுகிறார்.

‘ஒரு அஸ்ட்ராய்ட் விண்கல் பூமியையும் சூரியனையும் இணைக்கும் ஒரு கற்பனைக் கோடு வழியாக வந்தால், இரவு நேரத்தில் அந்தக் கல்லைப் பார்க்கவே முடியாது. எந்த சாதாரண தொலைநோக்கியாலும் பார்க்க முடியாது. அது வந்து வெடிக்கும் போதுதான் பகலில் வந்து இடிக்கும் பெரும் வெடியாக இருக்கும் ‘ என்று கூறுகிறார்.

வானத்தில் இருக்கும் தொலைநோக்கிகளான ஹப்பில் தொலைநோக்கி, ஐரோப்பா எதிர்காலத்தில் அனுப்ப இருக்கும் கையா தொலைநோக்கி போன்றவையே பகல் நேரத்திலும் வானத்தை பார்க்க வல்லவை.

http://news.bbc.co.uk/hi/english/sci/tech/newsid_2056000/2056403.stm

Series Navigation

டாக்டர் டேவிட் ஒயிட்ஹெளஸ்

டாக்டர் டேவிட் ஒயிட்ஹெளஸ்