எ ட் டி ய து

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

ஐ. சாந்தன்


பந்தலின் இந்த மூலையில் ஆட்களில்லை. விரித்திருந்த புற்பாயில் படுத்து உருளவேண்டும் போல் ஆசையாய் இருந்தது தண்டுவுக்கு. படுத்ததும் கூரை மேலே போய்விட்டது. கிடுகு ஓட்டையால் வந்த வெளிச்சம், கூரைக்குக் கட்டியிருந்த வெள்ளையில் மஞ்சள் மஞ்சளாக வட்டப் பூக்கோலம் போட்டிருந்தது. தண்டு, வட்டங்களை எண்ணினான். இருபத்திமூன்றுக்கு வந்தபோது ஆட்கள் பரபரத்துக் கேட்டது. எழுந்து பார்த்தான். மாப்பிள்ளையைப் பந்தலுக்குக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தினார்கள்.

மாப்பிள்ளையைப் பார்க்க முசுபாத்தியாயிருந்தது. வெள்ளை வேட்டி கட்டி, வெள்ளைத் துண்டால் போர்த்துக் கொண்டு, நிறைகுடம். குத்துவிளக்குக்கு முன்னால், கையில் வெற்றிலைச் சுருளைப் பிடித்தபடி, தலையைக் கொஞ்சம் குனிந்து இருந்தார் தங்கண்ணை. அவரின் தாய் தகப்பனில் தொடங்கி, பெரியாட்கள் ஒவ்வொருவராக முன்னாலிருந்த அருகம்புல்லு போட்ட பாலைக் கிள்ளி அவரின் தலையில் வைத்து விட்டார்கள். நெற்றி, முகம், தோளெல்லாம் பால் வடிந்தது.

பந்தலுக்குள் பன்னீர், சந்தனம், சந்தனக்குச்சி எல்லாம் சேர்ந்து மணத்தன. மாப்பிள்ளையைக் கிணற்றடிக்குக் கூட்டிக்கொண்டு போனதும், தண்டு அடுப்படிப் பக்கமாக இன்னொரு ‘ரவுண்ட்’ போனான். தணிகையனையுங் காணவில்லை.

இன்றைக்கு சமையல் அடுப்படியிலில்லை. பின்னால் பத்தி இறக்கி, பெரிய அடுப்புகள் மூட்டி சமையல் இரவிரவாக நடந்தது. ஆனால் சோறு கறியெல்லாம் அடுப்படிக்குள்தான் வைத்திருந்தார்கள். கிடாரங்கள், அண்டாக்களில், கறி, குழம்பு, சொதி. கடகத்தில் அப்பளம். பாயசம் எதிலிருக்கும் என்று தண்டு யோசித்தான்.

இதற்கிடையில் செல்வராசண்ணை வந்துவிட்டார்.

”என்ன தண்டபாணி, என்ன செய்கிறாய்?”

”ஒண்டுமில்லை…”

”சின்னப் பெடியளெல்லாம் இங்க வரக்கூடாது. அங்கை முன்னுக்குப் போயிருந்து விளையாடு. தணிகாசலம் உன்னைத் தேடுகிறான் அங்கை.”

உண்மையாகவே தணிகை இப்போது பந்தலுக்குள் இருந்தான். இவனைக் கண்டதும் ”எங்கயைடா போன நீ?” என்று கேட்டான்.

அதைக் கவனியாமல் தண்டு சொன்னான். ”எப்பிடியாவது முதல் பந்தியிலை இருந்திட வேணும்… ஓரிடமும் போயிடாதை.”

”பின்னை…? பிந்தினா பாயசம் கிடைக்காது.”

”அதுவும் ரா முழுக்க இருந்து ஏலக்காய், கசுக்கொட்டை உடைச்சுக் கொடுத்த நாங்கள்…” – தண்டு இப்போதும் ஞாபகமாய்க் கையை மணந்து பார்த்தான்.

”இஞ்ச வா தண்டு…” ஆரோ கூப்பிட்டார்கள். ”இவன் தணிகையும் நீயுமாப் போய், உங்காலை அந்தச் செம்புகளை வாங்கிக்கொண்டு வாங்கோ. சுறுக்கா.”

**
திரும்பி வந்தபோது பந்திக்கு ஆயத்தம். ”இதிலை இடமிருக்கு… பெடியளெல்லாம் இப்படி வந்து ஆம்பிளையளோட இரு…” என்று கந்தையா அம்மான் கத்தினார். அவர் கையில் வாழையிலைக்கட்டு இருந்தது. வேட்டியைச் சண்டிக்கட்டாகக் கட்டியிருந்தார். தலைவாசலுக்குள் ஆம்பிளைச் சபை.

கந்தையாம்மான் கடகடவென்று இலை போட்டுக்கொண்டு போக, அவருக்குப் பின்னால் செந்துரு, அப்பளம் போட்டுக்கொண்டு போனான். செல்வராசண்ணை, மணிய மாமா இரண்டுபேரும் து¡க்குச் சட்டிகளில் கறிகளோடு பின்னால் வந்தார்கள்.

தண்டுவுக்கு ஒரு பெரிய தலைவாழையிலை விழுந்திருந்தது.

”பார். உன்னிலும் பெரிய வாழையிலை” என்றார் மணிய மாமா, கறி போடும்போது. தண்டுவுக்குப் பக்கத்திலிருந்த விசயாவின் தகப்பன் சிரித்தார்.

”கன சனம், என்னடா” என்றான் தணிகை.

”ம் ம்”

கந்தையாம்மான் இலைபோட்டு முடித்துவிட்டு, சோற்றுக் கடகத்தைத் து¡க்கிக்கொண்டு அடுத்தவட்டம் தொடங்கினார். சோறு வந்தபோது ”கொஞ்சம், கொஞ்சம்… அம்மான்” என்றான் தண்டு.

”கொஞ்சம், கொஞ்சம்… அம்மான்” என்றான் தணிகையும்.

அம்மான், இரண்டுபேரையும் ஒருதரம் நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்த இலைக்குப் போனார். அவர் போனதும் ”நீ ஏன், ‘கொஞ்சம், கொஞ்சம்’ என்ட நீ?” என்று தண்டு கேட்டான்.

”நீ ஏன் சொன்ன நீ?”

”கன சோத்தைப் போட்டா, நாங்கள் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ளேயே பாயசம் வந்திட்டுப் போயிடும்.”

”நானும் அதுக்குத்தான்.”

கடைசி ஆளுக்கும் பயறு போட்டு முடித்ததும், கந்தையாம்மான் நடுவில் வந்து நின்றார்.

”ஆ, சரி. துவங்குங்கோ.”

**
குழம்பு சரியான உறைப்பு. தண்டுவுக்கு இரண்டாவது தரம் சோறு போடவில்லை என்றாலும் மணிய மாமா குழம்பை அள்ளி ஊற்றிவிட்டுப் போய்விட்டார். முதலிலேயே கறிகள் கூட. எல்லாமாகச் சேர்ந்து நாக்கு எரிந்தது.

ஏழெட்டு மிடறு தண்ணீர் குடித்தும், உறைப்பு முழுக்க நிற்கவில்லை. வெறும் சோறும் இலையிலில்லை. தண்டு குழையல் சோற்றில் உருளைக்கிழங்குகளைத் தேடினான்.

வயிற்றுக்குள் தண்ணி கூடிவிட்டது போலிருக்கிறது. லேசாக ஏதோ செய்தது. தண்டு நிமிர்ந்து இருந்தான். உள்ளுக்கு ஏதோ ஒடி விளையாடியது. அவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.

காலைமை, கல்யாண வீட்டுக்கு வருகிற அவசரத்தில், பல்லுத் தீட்டி முகங் கழுவிக் குளித்ததோடு சரி. இப்போதுதான் வயிற்றை வலிக்கிறது.

செந்துரு விட்டுப்போன சொதி இலையால் வழிய நின்றது,

”இனி, வரப்போகுது…” – தணிகை மிஞ்சியிருந்த எல்லாவற்றையும் ஒரு மூலையில் ஒதுக்கினான். தண்டு ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு மேலெல்லாம் வியர்த்தது. குடங்கி இருந்து பார்த்தான். அடக்க முடியாமல் அந்தரமாய் இருந்தது. அழுகை வந்தது.

”என்னடா?” என்றான் தணிகை பிறகும்.

”வயித்தை வலிக்குது…” – தண்டு மெல்லச் சொன்னான்.

”என்ன…” என்று திரும்பினார் விசயாவின் தகப்பன். அவருக்குக் கேட்டிருக்கும்… ”எழும்பிப் போ. ஓடு, ஓடு” என்று சிரித்தார்.

தண்டு, எழும்பி இலையைத் தூக்கினான்.

”அது கிடக்கட்டும்… நீ போ.”

தண்டு கெதியாகப் போனான்.

அடுப்படியிலிருந்து பாயச வாளியோடு வந்த செல்வராசண்ணை, ”எங்கடா ஓடுகிறாய் தண்டபாணி?” என்று கேட்டார்.


நன்றி – மல்லிகை 1978
sayathurai@gmail.com

Series Navigation

ஐ. சாந்தன்

ஐ. சாந்தன்