ரெ.கார்த்திகேசு மலேஷியா
முன்னுரை.1
ரெ.கார்த்கேசு மலேஷியா
வலைகளினால் பின்னிய நாவல்
என் மனக்குறையை முதலில் சொல்லிவிடுகிறேன்.
தமிழ் புத்திலக்கிய நாவல்களிலும் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் கூட எதனை எதிர்பார்த்து அவற்றை வாசிக்க அணுகுவது என்பது இன்னமுங் கூட எனக்குப் பிடிபடவில்லை. இந்த வடிவங்கள் எதுவும் முன்னமே நிர்ணயிக்கப் பட்டுள்ள எந்த இலக்கணங்களினாலும் எடை போடக் கூடியனவாய் இல்லை. அவை படைப்பாளனின் எண்ண ஓட்டத்திற்கேற்ப வெடித்துக் கிளம்புபவை. அவை எழுதி முடிக்கப் பட்ட பின்னரே அவற்றின் வடிவம் தீர்மானிக்கப் படுகிறது. அவை படித்து முடிக்கப் பட்ட பின்னரே அவற்றின் தரம் வாசகன் மனதில் தீர்மானிக்கப் படுகிறது. படைப்பிலக்கியத்தில் தகுதரம் (standard quality) என்று ஒன்று இல்லை.
இப்படிப் புரிந்து கொண்டு அணுகினால்தான் ஒரு படைப்பை என்னால் அனுபவித்துப் படிக்க முடிகிறது. ஒரு முதல் 30 பக்கத்துக்குள் எனக்குச் சோர்வு தரும் எந்த நாவலையும், ஒரு முதல் இரண்டு பக்கங்களுக்குள் எனக்குச் சோர்வு தரும் எந்தச் சிறுகதையையும் நான் தொடர்ந்து படிப்பதில்லை. Cut and run என்று சொல்வது போல நீங்கி வேறு படைப்புக்கோ வேறு வேலைக்கோ போய் விடுகிறேன். அதற்குமேல் நேரத்தையும் முயற்சியையும் அதில் முதலீடு செய்வதில்லை. என்னை யாருடைய எந்தப் படைப்பும் “படி படி” என நிர்ப்பந்தப் படுத்துவதில்லை.
“நீர்வலை” நாவலுக்குள் நான் நுழைந்த போதும் அதே எண்ணம்தான் தூக்கி நின்றது. ஆனால் நீர்வலை முதல் 30 பக்கங்களைத் தாண்டியும் பின்னர் அதன் கடைசிப் பக்கம் வரைக்கும் என்னை ஈர்த்துக் கொண்டே போயிற்று. ஆகவே என் நேர முதலீடும் முயற்சி முதலீடும் வீணாகவில்லை.
நீர்வலையைப் பற்றி எண்ணும்போது அது வெறும் நீர்வலை மட்டுமல்ல என்பதைத்தான் முதலில் சொல்ல வேண்டும். அது மூன்று வலைகளால் ஆன நாவல். நீர்வலையை அதன் குறியீட்டுப் பொருளில் கொள்ளாமல் வெளிப்படையான பொருளில் கொண்டால் அது நாவலின் கடைசி மூன்றாம் பகுதிக்குத்தான் பொருந்துகிறது.
அதன் முதல் பகுதி வறுமை வலையால் ஆனது. அது முழுக்கவும் ஒரு அடித்தட்டு அநாதைச் சிறுவனான ராஜா அலையஸ் பிச்சை அலையஸ் வீரசிவாஜியை வருணித்துப் பேசுகிறது. அவனிலும் சில படிகள் மட்டுமே மேலே உள்ள இன்னொரு ஏழைத் தொழிலாளியான கிருட்டினமணியின் வாழ்வுக்குள் அவனை எதேச்சையாகக் கொண்டு வந்து சேர்த்து (“டீ வேணுமா அண்ணே? வரீங்களா, கொண்ட்டு வரட்டுமா அண்ணே”) அந்த வறுமைப் பின்னலைச் செறிவு படுத்துகிறார்.
நாவலின் இரண்டாம் பகுதியில் வறுமைப் பின்னலின் தீவிரம் குறைந்து அது ஒரு பாசப் பின்னலாகிறது. இந்த அனாதையைக் கிருட்டினமணியின் குடும்பத்துடன் கொண்டு இணைத்து (கி ருட்டினமணி: “பாவம். அப்பா அம்மா உறவு சுத்தம் யாரும் இல்லை. சுத்தமா இல்லை… ஒதுங்க இடம் கிடையாது… பாத்தா நல்ல பிள்ளையாட்டம் தெரியுது …” எனத் தயங்கினான். சி வஜோதி: “இங்கியே இருக்கட்டும்”) அங்கே பாச வலையைப் பின்ன ஆரம்பிக்கிறார். அது ரொம்ப மனதுக்கு இதமான வலை. முற்பகுதி வறுமையின் கொடுமைக்கு மாற்று மருந்தாக இருக்கிறது.
மூன்றாம் பகுதியில்தான் வருகிறது நீர்வலை. இந்த வலை இந்த நாவலின் பாத்திரங்களுக்கு மட்டுமே உரியது அல்ல. உலகம் முழுதும் பல பகுதிகளில் திரண்ட பெரும் மனிதக் கூட்டத்துக்கு உரியது. இது இந்த நாவலாசிரியர் தனது கற்பனையில் பின்னிய வலை அல்ல. அவருடைய பாத்திரங்களை அவர் செலுத்த நினைக்கும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய வலை அல்ல. இது விபத்து. இது இயற்கை பின்னிய வலை. அதில் இந்த ராஜா அலையஸ்.. அலையசை மாட்ட வைத்தது மட்டுமே நாவலாசிரியர் செய்தது.
வறுமை வலையில் அவர் காட்டுகின்ற காட்சிகள் மிக அருமையானவை. ஆனால் அந்தக் காலச் சினிமா செய்வதுபோல அந்த ஏழைமையைச் சுரண்டி நம்மைப் பிழியப் பிழிய அழச்செய்யும் முயற்சி ஏதும் அதில் இல்லை. அநாதையாகி வீதிக்கு வந்து அடி உதை பட்டு, வீதி வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட ஒரு streetwise சிறுவனாக அவன் இருக்கிறான்.
‘ஒன் பேர் என்னடா?’
‘ராஜா’
சிரிப்பு வந்து விட்டது. ‘ஆளயும் லட்சணத்தையும் பார்த்தா…’ என்று சிரித்தாலும் அதில் குத்திக்காட்டும் த்வனி இல்லை.
‘நானே வெச்சிக்கிட்டேன்…’
‘அப்பா வச்ச பெயர் என்ன?’
‘பிச்சை!’ என்றான் ராஜா.
‘என்ன படிக்கிறே?’
ராஜா அவனைப் பார்த்து புன்னகை செய்தான்.
‘என்ன சிரிக்கிறே’ என்றபடி இவனும் புன்னகைக்கிறான்.
‘என்ன அவசரம்? மொத்தமாய் படிச்சிக்கலாம்னு…’
‘வேற யாராவது படிச்சிட்டா ஒனக்கு இல்லாமப் போயிருமடா…’
‘அப்ப அவன்கிட்ட கடன் கேட்டு கைமாத்தா வாங்கிக்கிர்றதுதான்’
பேச்சுக்குப் பேச்சு துணிச்சலாகப் பதில் வீசி விளையாடத் தெரி ந்தவன். அந்த விளையாட்டில் தன் சொந்தத் துயரங்களை ஒளித்துக் கொள்ளத் தெரிந்தவன். ஆனால் இந்த விளையாட்டின் முடிவில் யாராவது உண்மையாக அக்கறைப்பட்டு விசாரி த்தால் முன்வாழ்வின் துயரங்கள் பொங்கி ஃப்லாஷ்பேக்கில் வருகி ன்றன.
மனதுக்குத் தூண்டில் போட்டுக் கவர்ந்து கொள்ளும் நல்ல யுக்திகளால் ஆன முதல் பகுதி.
இரண்டாம் பகுதியில் பாசம் ரொம்ப எளிதாகப் பொங்கி விடுகி றது. கிருட்டினமணியும் சரி, அவன் மனைவி சிவஜோதியும் சரி, சிறுமி கமலாவும் சரி அவனை ஏற்றுக் கொள்ளும் வேகம் திகைக்க வைக்கிறது என்றால் அந்தப் பாசப் பொழிவு கொஞ்சம் திகட்டவும் வைக்கிறது.
அதோடு இங்கிருந்து ராஜாவின் வாழ்வு தொடர்ந்து சிக்கல்கள் இல்லாமல் எட்டுத்திசைகளிலும் நல்லவர்களையே கொண்டு தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதும் இயற்கை இல்லையோ என்று தோன்றுகிறது. விழுந்தால் பாதாளம் எழுந்தால் இமயம் என்ற இருநிலைகளிலா யதார்த்த வாழ்வு இருக்கிறது? இப்படி நடக்கவில்லை என்பதில்லை. ஆனால் அப்படி நடப்பது நாவலின் கதை பின்னும் உத்திகளை மழுங்கடிக்கிறது என்றே என் வாசக அனுபவத்திற்குப் படுகிறது.
இதன் பின் நீர்வலை. வாழ்க்கையில் மனித நேயத்தை அனுபவி த்து ஓர் உற்சாக உச்சத்துக்கு வந்த ராஜாவை மீண்டும் போட்டு அழுத்துகின்ற பொறுப்பை இப்போது இயற்கை எடுத்துக் கொள்ளுகிறது. வீதியில் பலரோடு சண்டை போட்டு மீள வீதிவித்தை தெரிந்த ராஜாவுக்கு அந்த வித்தை ஏதும் இந்தச் சூழ்நிலையில் இருந்து மீள உதவவில்லை. இறுதியில் தற்செயலாக நிகழும் ஒரு கப்பலின் வரவால் மட்டுமே அவன் பிழைக்கிறான். அதுவும் நாம் ஊகிப்பதே. நாவல் அதுவரைக்கும் போகவில்லை.
கடலில் விழுந்த ராஜாவுக்குக் கப்பலைக் காட்டி கரையில் இருந்த வாசகனைக் கடலில் போட்டுவிடுகிறது நாவல்.
முடிவு சரியில்லை என்பதா? முழுமையில்லை என்றுதான் தோன்றுகி றது. ஆனால் எந்த நாவலில் முடிவு சரியாகவும் முழுமையா கவும் இருக்கிறது? முடிவு சரியாக இருந்தால்தான் எல்லாம் சரியென்ற பொருளா?
இறுதியில் இது ஒரு செழுமையான வாசிப்பு அனுபவம்தான். ராஜாவின் வறுமை, அந்த வறுமைச் சூழ்நிலையில் முகிழ்க்கும் நகைச்சுவை உணர்வு, உரையாடல்களில் காணும் சாமர்த்தியம், அந்த வறுமையின் கொடுமையைத் தனித்திருக்கும் நேரங்களில் அவன் திரும்ப எண்ணும்போது நிகழ்வுகளும் உணர்வுகளும் தீவிரப்படுவது (உ-ம்: ராஜாவின் அப்பாவின் சாவும் புதைத்த விதமும்), ஒரு பாசமுள்ள குடும்பத்தின் அன்புப் பரிமாறல்கள் (கொஞ்சம் மிகை என்றாலும்), இயற்கையின் கொடுமைகளுக்கு உள்ளே நிகழ்த்தப்படும் மனித சாகசங்கள் (இது ஆசிரியரின் கற்பனைக் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றாலும்) ஆகிய அனைத்தும் அரிய அனுபவங்கள்.
ஆக இது நல்ல நாவலா? தெரியவில்லை. எதற்கு வேண்டும் நல்ல நாவல், வாசிப்பதற்குத்தானே? இது ஓர் அருமையான வாசிப்பு அனுபவம்.
அன்புடன்
ரெ.கார்த்திகேசு.
முன்னுரை.2
நீர்க்கவலை
எஸ். ஷங்கரநாராயணன்
காலத்தின் அடிமையா மனிதன்? அல்ல, அவன் காலத்தைக் குனியப் பண்ணுகிறான். கேள்விக்குறி ஆக்குகிறான். ஞப்போல் வளைக்கிறான். என்றாலும் காலம் அவன் கணிப்புகளில், அவனால் தவிர்க்க முடியாமல், தன்னை முகம்புதைத்துக் கொள்கிறது. தடம் பதிவு பண்ணி விடுகிறது. சொல், செயல், சிந்தனை காலத்துக்குக் காலம் தொடர்ந்து முன்னிலிருந்து சிறிது மாறிக்கொண்டே வருகிறது. அது – ஆகவே அது, காலத்தின் அடையாளமாகவே கூட ஆகிப்போகிறது. காலத்துக்கு மனிதன், ஆகவே இடந் தந்துவிடுகிறான். காலத்தைப் புறந்தள்ளுதல், எனில் அதுவே காலத்துக்கு மறைமுக அங்கீகாரமே அல்லவா?
எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனிதனோவெனில் இந்தக் காலத்தின்பாற்பட்ட தன்னனுபவ விஸ்தீரணங்களை, பாதிப்புகளைப் பதிவுசெய்யவும் முன்வருதல் தவிர்க்க முடியாது போகிறது. மனதை அசைத்து விரலை உலுக்கி காலம் அவனை எழுத வைக்கிறது. பேச வைக்கிறது.
வாழ்வின் நிஜங்களை, வெளிப்பாட்டுப் பக்குவத்தோடு மனசில் ஆறப்போட்டு, கலைப்படைப்பாக அது முட்டையுடைத்து வெளிவரும்வரை, சில வாய்ப்புகளில் காத்தி ருத்தல் சாத்தியமற்றுப் போகிறது. ஆத்திரங் கொண்டோர்க்கு சாத்திரம் உண்டோடி, என்பான் பாரதி. கட்டுடைத்துப் பெருகும் வெள்ளம் போல ஒரு நிகழ்வு அது. அதன் அழகே, அதன் ஒழுங்கின்மைதான். அதன் எதிர்பாராத்தன்மை – அதன் நம்ப முடியாத்தன்மைதான். வேறெவ்வகையிலும் அது வெளிப்பட்டால், இந்த உடல்சூடு, இதம் – அட நியா யமே கூட, அதில் கிடைக்காமல் போய்விடும் ஆபத்து உள்ளது.
1999ல் இந்திய பாகிஸ்தான் எல்லையில் கார்கில் போர். என் வாழ்நாளில் நான் உணர்வுபூர்வமாய் அறிந்த போர் அதுதான். மனஊக்கப் பட்டு முழுக்க முழுக்க கார்கில் பின்னணியில் கதைகள் – ‘யுத்தம்’ சிறுகதைத் தொகுதி வெளியிட்டேன். தனித் தொகுதியாக அது வடிவம் கொள்ளுமுன், அந்தக் கதைகளை, நான் எழுதிய வேகத்தில், விரும்பி வாங்கிப் பிரசுரித்த அத்தனை இதழ்களையும் இப்போதும் நன்றிகூர்ந்து மகிழ்கிறேன்.
யுத்தம் – பிற்பாடு, ‘இரத்த ஆறு’ என மறுபிரசுரம் கண்டது.
சுனாமி – என் வாழ்நாளில் நான் சந்தித்த மிகப் பேரழிவுச் சூழல். உலகமே வாய்விக்கித்துப் பார்த்தது. ஐயோ எனக் கதறவும் தெம்பில்லாத திகைப்பு அது. ஒரு அரசியல் பேரறிஞர் சொன்னார் – நூறு பேர் இறந்தால் விபத்து. ஆயிரம் பேர் என்றால் செய்தி. மிகக் குரூரமாக இதை முதல்நினைப்பில் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் நிஜம்தானே? பேரழிவு – என்றால், இறந்தவர் பற்றி அல்ல – பிழைத்தவர் பற்றிக் கவலைப்பட வேண்டிய நெருக்கடி நிலை அது, அல்லவா? அழுகை, பதட்டம் எல்லாம் எளிய நிலைகளே அப்போது.
சுனாமி – பின்னணியில் முழுக்க முகாரி ராகம் – வேண்டாமே! மனிதனை வியப்பில் ஆழ்த்திய சாதனைச் செய்தி…. தன் மனவுரம் தானே அறிந்துகொள்ளக் கிடைத்த மகத்தான தருணம்…. மனிதனால், நம்பினால், துணிந்து எதிர்கொண்டால் எதுவும் சாத்தியம், என நிரூபணமான அந்தக் கணம்… பாரதி, காத்திருத்தல் என்னாலும் கூடவில்லையடா!
ஒரு செய்தித்தாள் செய்தி, இந்தோனிஷியக் குடிமகன் ஒருவன் பதிமூன்று நாட்கள் கடலில் மரத்திண்டு ஒன்றில் மிதந்தபடியே காத்திருந்து, கப்பல் ஒன்றால் மீட்டெடுக்கப் பட்டான்!
பல்லாண்டு வாழ வேண்டும் அவன்.
அவனே இந்நாவலின் கதாநாயகன். காலத்தைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். சற்று அவசரமாக, என்பது தெரியும். பரவாயில்லை, என்றும் பட்டது.
வருடங்கள் கடந்தும், இன்றுவரை, குறிப்பாக முதலில் தாக்கிய அந்தப் பகுதிகளிலும், தவிர புதிய பகுதிகளிலும், மீண்டும் மீண்டும் பூகம்ப அதிர்வுகள், ஒரிரு முறை சுனாமித்தாக்குதல், அலைகளில் மூர்க்கம், உள்வாங்குதல்…. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மனிதன் மகத்தானவன். அவன் எச்சூழலையும் சா தகமாக்கி வெற்றி பெற்றுக் கொண்டே வருகிறான்.
முகவுரை தந்திருக்கிறார் பேராசிரியர் ரெ. கார்த்திகேசு. இணையத்தில் கடிதம் மூலம் நான் கேட்டு, அவர் தந்தார். நன்றி ஐயா! வாழ்க நீர் எம்மான்!
அன்பன்
எஸ். ஷங்கரநாராயணன்
சென்னை
storysankar@gmail.com
·
சமர்ப்பணம்
Old Man and the Sea
எழுதிய எர்னஸ்ட் ஹெமிங்வேக்கு
·
அடுத்த இதழ்முதல் எஸ். ஷங்கரநாராயணனின்
புதிய நாவல் ‘நீ ர் வ லை’ தொடர்கிறது
- கிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்
- புதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006
- இலை போட்டாச்சு! – 5 – அவியல்
- ‘இளைஞர் விழிப்பு’
- அளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..
- சூபியின் குழப்பம்
- ஜார்ஜ் ஒர்வலின் 1984
- கடித இலக்கியம் – 35
- சிங்கப்பூர் கணையாழி விருது-2006
- ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்
- ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை
- புதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)
- ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை
- புதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை
- தமிழன் (கி . மு . 2000, கி . பி . 2000)
- ஒன்று ! இரண்டு ! மூன்று !
- மனு நீதி
- பெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- கீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்!
- தேவதையின் கையில்
- இயான் ஹாமில்டன் கவிதைகள்
- சுஜாதா பட் கவிதைகள்
- கற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)
- அரபுநாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம்
- எது ‘நமது’ வரலாறு?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.
- சுயம்பிரகாசம்
- அவல்
- எஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)
- ம ந் தி ர ம்
- மடியில் நெருப்பு – 15
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 14