காலை
புல்லில் உருகி வரும் மெழுகொன்று
காலை ஜில்லிட்டு நனைக்கவும்
உதறிக் குதித்து,
‘அட !நத்தை ‘ என்றேன் .
மறு கணம்
உயிரைக் கல்லாக்கிய மட ராமனாகி
ஒரு காலைச் சொறிந்து நின்றேன்.
பறக்கும் மலர்
கொடியில் மலரும் பட்டுப் பூச்சி
கைப்பிடி நழுவிக்
காற்றில் பறக்கும் மலராச்சு.
கூடல் 2
நான் சந்தனம்
பூசிக்கொள்
மணம் பெறுவாய்.
நான் மலர்
சூடிக் கொள்
தேன் பெறுவாய்.
நான் நதி
எனக்குள் குதி
மீனாவாய்.
நான் காற்று
உறிஞ்சிக் கொள்
உயிர் பெறுவாய்
நான் உயிர்
கூடிக் கொள்
உடம்பாவாய்.
பாத மலர்
மலரற்ற தார் ரோடில்
பாதங்கள் விழிக்கு மலர்.
கார் அலையும் தெருக் கடலில்
பாதங்கள் மிதக்கும் மலர்.
வெயில் எரிக்கும்
வெறுந் தரையில்
வழி யெதிரில்
பாவாடை நிழலுக்குள்
பதுங்கி நகரும் வெண் முயல்கள்.
மண்ணை மிதித்து
மனதைக் கலைத்தது.
முன்னே நகர்ந்து
மலரைப் பழித்தது
பாதங்கள்.
உரிப்பு
இந்த நகரச் சுவர்கள்
நகராத பாம்புகள்.
அடிக்கடி வால் போஸ்டர் தோல்
வளர்ந்து தடித்து விட,
நள்ளிரவில்
அவசரமாய் சட்டையுரித்துப்
புதுத் தோலில் விடிந்து
பள பள்க்கும்
பட்டணத்துப் பாம்புகள்-
இந்த நகராத சுவர்கள்.
விடிவு
மல்லிகை விற்ற காசெண்ணும்
மாலை மகிழ்ச்சியில்,
கூவக் கரையோரம்
குழந்தையை மருக் கொழுந்தாய்
மோந்து முத்தமிட்டு
மண்விளக்கின் எண்ணெயற்ற சிறு சிரிப்பில்
இரவை சற்றே துடைத்து வைத்து,
முடித்து வைத்த காசாய்
மூலையில் படுத்தவளுக்கு,
நடு சாம உதைகளும்
கலயம் உடைக்கும் கணவனும்
எதையும் தாங்கும் இதயமும்
தினம் தினம் உண்டு
விடியுமட்டும்.
திண்ணை
|