எழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

மலர்மன்னன்



குலசேகரர் நமக்குத் தெரியும். அரசர். அரியணையில் அமர்ந்து நீதி பரிபாலனமும் ஆட்சி நிர்வாகமும் செய்தவர். எனினும் அரவணையில் அறிதுயில் செய்யும் விஷ்ணுப் பிரேமையில் மூழ்கித் திளைத்து, குல சேகர ஆழ்வாராக ஆனவர்.

குலசேகர ஆழ்வாரைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். ராமாயண பாராயணத்தில் மூழ்கிப் போன குலசேகரர் யுத்த காண்டம் படிக்கத் தொடங்கியபோது ராம பிரான் களத்தில் தன்னந் தனியனாக ராவணனை எதிர்கொண்ட கட்டம் வந்ததும் பதறிப் போய் எழுந்து, அடடே, ஸ்ரீராமன் தனியாக அரக்கன் முன் நிற்கிறார். எங்கே தளபதி? சேனையைத் திரட்டு, புறப்படு சீக்கிரம், ராமருக்குத் துணையாகப் போக வேண்டும் என்று அவசரப்பட்டாராம்.

நமது தஞ்சையில் ஒருவர் ராம பக்தியில் நம் ஆழ்வாரையும் மிஞ்சியிருக்கிறார். வெகு சமீபகாலத்தில்தான். அதிக பட்சம் எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ராமாயணத்தை மூன்றே மாதங்களில் கரைத்துக் குடித்ததன் விளைவாகக் கையில் பட்டாக் கத்தியுடன் எங்கே அந்த ராவணன் என்று அலைந்தாராம். அவரது அதிருஷ்டம், அவருக்கொரு பேரன் தேர்ந்த கவிஞனாக மலர்ந்தான். பரம்பரைச் சொத்தான பட்டாகக் கத்தியுடன் தாத்தா ராவணனைத் தேடி அலைந்ததைப் பாட்டியிடம் கதை கேட்ட பேரன் அதைக் கவிதையாக்கிவிட்டான். கவிதையில் தாத்தா நிரந்தரமாகிப் போனார். ஒரு குடும்பம் மட்டுமே சொல்லிச் சொல்லி ரசித்த கதை உலகுக்கே சொந்தமாகிப் போனது.

சீதையை மீட்க ராமனுக்கு ஒரு
சேனையே தேவைப் பட்டது
தாத்தா ஒண்டி ஆளாக
ராவணனை அழிக்கப் புறப்பட்ட
வீரம் பிடித்தது

என்று தமது கவிதையை நிறைவு செய்கிறார், கவிஞர்.

என்ன அழகான கவிதை! படிக்கையில் ஒரு மனிதன் குடுமி அவிழ, துருவேறின நீண்ட பட்டாக் கத்தியைச் சிலம்பமாய்ச் சுழற்றிக் கொண்டு தெருத் தெருவாய் அலையும் கோலம் கண்முன் விரிந்தது.

இத்தனை காலமும் எப்படி நம் பார்வையில் படாமல் போனார் என்று சிறிது வெட்கத்தோடு ஆச்சரியப்பட வைக்கும்விதமாக, எழுத்துக்காரத் தெரு என்னும் தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பின் மூலம் எனக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார், தஞ்சாவூர்க் கவிராயர் என்கிற கவிஞர். நானும் ஏதேனும் ஒருவிதத்தில் எழுதுகிறவனாக ஆகிப் போனதால் எழுத்துக்காரத் தெரு என்கிற தலைப்பைப் புத்தகத்தில் பார்த்ததுமே படிக்க ஆசை வந்தது. பிரித்துப் படிக்கத் தொடங்கியபின் புத்தகத்தைக் கீழே வைக்க மனசு வரவில்லை.

தஞ்சாவூர்க் கவிராயரானவர் தஞ்சை பிரகாஷ், கவிஞர் நா. விச்வநாதன், சி.எம். முத்து ஆகியோரின் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்கிற விவரம் கவிதைத் தொகுப்பிற்கு நா. விச்வநாதன் அளித்துள்ள அறிமுக உரையிலிருந்து தெரிய வந்ததுமே கவிராயர் லேசுப்பட்டவராக இருக்க மாட்டார் என்று புரிந்துவிட்டது. ஒவ்வொரு கவிதையாகப் படிக்கப் படிக்க அது ஊர்ஜிதமாகியது.

மரஞ்செடிகொடிகளோடும், விலங்கினங்களோடும் ஒன்றிப் போய்விடுகிறவர் தஞ்சாவூர்க் கவிராயர் என்பது அவரது பல கவிதைகளிலிருந்து புலப்படுகிறது. தம் தந்தையையே ஒரு மரம் என்றுதான் அவர் அறிமுகம் செய்துவைக்கிறார்.

கட்டப்பட்டுவரும் வீட்டின் சுவரில் காகம் விட்டுச் சென்ற எச்சத்தால் எப்படியோ ஒரு ஆலம் விதை வேர்விட்டுச் செடியாக முளைத்துவிடுகிறது. பிடுங்கி எறியாவிட்டால் சுவரில் விரிசல் விட்டு வீடே இடிந்துவிடும், ஆலங் கன்றால் கட்டிடத்துக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார்கள், கொத்தனார்கள். ஆனால் கவிஞரோ கட்டிடத்தால் ஆலங் கன்றுக்கு ஆபத்து என்று பதறுகிறார்.

கட்டிடத்தின் மீது சில சமயம்/இடியே விழுகிறது/சுவர்களில் விரிசல் விடுகிறது/கூரை ஒழுக ஆரம்பிக்கிறது/எல்லாவற்றுக்கும் ஆலமரம்தான்/காரணம் என்கிறார்கள்/இந்தக் கட்டிடத்திலிருந்து எல்லோரும்/ வெளியே வரட்டும் என்று காத்திருக்கிறேன்/ அப்போது இடிப்பேன் ஒரு செங்கல்லும் பாக்கியில்லாமல்/ நானும் ஆலமரமும் மிஞ்சும் ஒரு/ஆனந்தமான தருணத்தில்/அழைப்பேன் உங்களை/புதுமனை புகுவிழாவிற்கு!

என்கிறார், தஞ்சாவூர்க் கவிராயர்.

மனிதனிடம் சிக்கி யானையும் குதிரையும் படும் அவலத்தைக் கண்டு மனம் நைந்து போகிறார், கவிஞர்.

இந்தக் குதிரை நன்றாக ஓடும்/என்றான் என் ஜாக்கி/ என் பின்புறம் தட்டி/ தட்டியதே வலித்தது
என்று தொடங்கும் கவிதை, குதிரை சொல்வதாய்,

விடுதலைக்கான என்/தப்பித்தல் முயற்சிகளை/தவறாய்ப் புரிந்துகொண்ட/முட்டாள் நீ என்று/கனைத்தேன் கோபத்துடன்/தாடைகள் நடுங்க./ஆமோதிக்கிறது பாருங்கள்/ என்று சொல்லிச் சிரித்தான் அப்போதும்/ என் ஜாக்கி/ பேரத்தின் முடிவில்

என முடிகிறது.

இந்தக் கவிதையில் கவிஞன் தன்னையே பந்தயக் குதிரையாய்க் காண்பதும் வாசக மனத்திற்குப் புரிகிறது.

கவிஞன் கடைத் தெருவில் காணும் யானை,

கடை கடையாய் ஒற்றைக்கை நீட்டிப்/போய்க்கொண்டிருக்கிறது./கானகத்தின் கம்பீரம்/அங்குசம் கண்டு அஞ்சும் அவமானம்/கண்ணில் கசிய/ போய்க் கொண்டிருக்கிறது./

இப்படிப் போகிற யானை,

வாழைப் பழம், ரொட்டித் துண்டு, காய்கறிகள்/துடிதுடித்து நீளும் தும்பிக்கையில்/திணிக்கப்படும் அனைத்தையும்/வாய்க்குள் போட்டபடி/

போகிறபோதே,

பணிவோடும் பயத்தோடும் குனியும்/மனிதர்களின் தலைதொட்டு ஆசீர்வதித்தபடி/
கிடைக்கும் காசுகளையெல்லாம் தன்/ மேலிருக்கும் பாகனிடம் அலட்சியமாய் எறிந்தபடி/போய்க் கொண்டிருக்கிறது யானை./

மனிதனின் சுய நலம், சூழ்ச்சி, வீண் ஜம்பம், துராக்கிரமணம் முதலிய சகலவிதமான கீழ்க் குணங்களையும் கண்டு பொங்கும் வெறுப்பை வழியவிடுகிறது, கவிதை. உயிரியல் பூங்காவக் கண்டதும் சீற்றத்துடன் பல கேள்விகளைக் கேட்கவும் கவிதை தவறவில்லை.

தேசங்களுக்கிடையே ஆன/ நல்லுறவை வளர்க்க/ஆப்பிரிக்க நாட்டு/ஜனாதிபதி பரிசளித்த/யானைக் குட்டி இது/என்கிறீர்களே/அதற்கு அதன் அம்மாவைப்/பரிசளிக்கும்/ உத்தேசம் இருக்கிறதா, இல்லையா?/

என்றும்,

நீண்ட நெடிய/அழகிய உடல்களுடன் நெளிந்தேக வேண்டிய/பாம்புகளை உடல் குறுக்கி/கண்ணாடிப் பேழைக்குள்/ காட்சிப் படுத்த வேண்டிய/ கட்டாயம்தான் என்ன?/ஒவ்வொருமுறை நெருங்கும்போதும்/விடைத்த காதுகளுடன்/நீங்கள் பேசுவதை அந்த/மான்கள் ஏன் கவனிக்கின்றன? அவற்றின் விடுதலை குறித்த/ தகவல் ஏதாவது கிடைக்கும் என்பதாலா?/ விசாரணையின்றி/ எத்தனை நாட்கள் வைத்திருக்கப் போகிறீர்கள்/அந்த/மனிதக் குரங்கு தம்பதிகளை?/

என்றெல்லாமும் கோபிக்கிறது.

கல்விச் சுற்றுலாவாம்!/கைதிகளைக் காண்பிக்க/ குழந்தைகளைக் கூட்டிப் போவார்களா, யாராவது?/

என்று உயிரியல்பூங்காவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளிக் கூடங்களைக் கண்டிக்கிறது (பெற்றோரையும்!).

நடப்புலகின் பிரத்தியட்சங்களும் கவிஞரைத் துன்புறுத்தாமல் விடுவதில்லை. கருமேகம் எனும் கறுப்பு அங்கிக்காரனை அழைக்கிறார். வந்தெமது தேசத்தை அலம்பிவிடு என்கிறார். எத்தனை ரத்தக் கறைகள் பார்த்தாயா என்று கறுப்பு அங்கிக்காரனிடம் அங்கலாய்க்கிறார். பெரும்பாலும் குழந்தைகள், அபலைகள், மற்றும் அப்பாவி மனிதர்களுடையவை அவை என்று பதைபதைக்கிறார்.

கவிஞர் தமது கடவுளைப் பற்றிச் சொல்லும் கவிதையை முழுவதுமாகவே சொல்ல வேண்டும். ஏனென்றால் அது என் கடவுளும்கூட.

பத்திரமாக இருக்கிறர்/எனது கடவுள்/பக்தர்களின் தொந்தரவு/ஏதுமின்றி/எந்தக் கருவறைக்குள்ளும்/ அவரைச் சிறைவைக்கவில்லை/ நான்/ இங்கே என்னோடுதான்/ வசிக்கிறார்/தற்சமயம் திண்ணையில்/உட்கார்ந்துகொண்டு/ காப்பி குடித்துக் கொண்டி
ருக்கிறார்/மாடுமயில் வாகனங்கள்/ஏதுமின்றி/நிராயுதபாணியாக/என்னைப்போல/ சட்டை போட்டுக் கொண்டு/ என்னோடு இருக்கிறார் கடவுள்/தூப தீபங்களால்/மூச்சுத் திணறவைப்பதில்லை/நான் அவரை/அவர்பாட்டுக்கு/வருகிறார், போகிறார்/குழந்தைகளைப் பார்த்துக்/கொள்கிறார்/கொடுத்ததைச் சாப்பிடுகிறார்/அதிசயமோ அற்புதமோ/ நிகழ்த்தாமல்/ சமர்த்தாக இருக்கிறார்/என் கடவுள்.

தொகுப்பில் உள்ள எல்லாக் கவிதைகளையுமே பகிர்ந்துகொள்ள வேண்டும்போலத்தான் தோன்றுகிறது. சில கவிதைகள் முற்றுப் பெற்றுவிட்ட பிறகும் நீள்கின்றன என்றாலும்.

கவிதையானது மொழியிலும் யாப்பிலும் இல்லை. அது தருமு சிவராமின் பாஷையில் வானில் பறந்து செல்லும் பட்சியிடமிருந்து உதிரும் ஒற்றைச் சிறகு அசைந்தசைந்து காற்றில் இறங்கி அருவமாய் எழுதிச் செல்வதிலிருக்கிறதுஎனக்குத் தெரிந்தவரை.

(எழுத்துக்காரத் தெருதஞ்சாவூர்க் கவிராயர்வெளியிட்டோர்: அனன்யா, 8/37, பி.ஏ.ஒய். நகர், குழந்தை ஏசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்613 005. விலை: ரூ. 60/)


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்