எரிந்த ஊர்களின் அழகி

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

சந்துஷ்


எரிந்த ஊர்களின் அழகி
நேற்றிங்கு வந்திருந்தாள்

எரிந்த ஊர்களைப் பற்றித்
தனக்கெதுவுமே தெரியாதென்றாள்

வியப்புடன் கோணிய என் முகத்தில் தொங்கிக் கொண்டு
நெடு நேரஞ் சிரித்தாள்.

வழியும் அவள் குழற்கற்றைகளிலிருந்து
தெலைந்து போன தெருக்களை இணைக்கும்
கிளைப்பாதைகள் நீண்டு விரிகின்றன

அவள் பேசி நிறுத்தும் இடைவெளிகளில்
போரின் இரைச்சல் காதைப் பிளக்கிறது

கத்திக் கத்தி அவள் பேசுகையில்
எனதூரின் மெளனம் முகத்திலறைகிறது

நேற்றவள் சிரிக்கையில்
ஊர் எரிந்த வாசம் வந்தது

எரிந்த ஊர்களின் மீதமோ
நீயென்றேன்

காதுகள் இருநததாய்
அவள் காட்டிக் கொள்ளவில்லை.

அவள் சொன்ன கதைகளில்
தனித்து ஓயும் ஓர் பறவையின் ஓசையும்
தூரத்தே மறையும் ரயிலின் கூவலும்
நிலவில் நனையும் ஓசை கேட்டது.

இறுகப் பற்றுமவள் கைகளின் பிணைப்பில்;
ஊரின் வேரொன்று தட்டுப்பட்டது.

எனினும் எரிந்த ஊர்களைப் பற்றித்
தனக்கெதுவுமே தெரியாதென்றாள்
எரிந்த ஊர்களின் அழகி.

சந்துஷ்
நன்றி உயிர்மை

Santhushkumar@aol.com

Series Navigation

சந்துஷ்

சந்துஷ்