எரிகிறதாம் அங்கு. ஈரமில்லை இங்கு.எம்மவர்க்கே அழுதழுது இதய ரத்தம் தீர்ந்து போச்சு.

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

அனல் தூங்கும் கண்ணன்


அண்மையில் படிக்க நேர்ந்த மிக துரதிர்ஷ்டவசமான கட்டுரைகளில் ஒன்று திருவாளர். சின்ன கருப்பன் நேசகுமாருக்கு எழுதிய பதில். மற்றொன்று கவர்ச்சிகர பின்-நவீனத்துவ வார்த்தை ஜாலங்களால் மறைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டிருந்த திரு. பீர் முகமதுவின் கட்டுரை. இரண்டு கட்டுரைகளும் ஒன்றோடொன்று கருத்தியல் ரீதியாக தொடர்புடையவை. எனினும் சின்னகருப்பன் எழுதியுள்ள கட்டுரை இரண்டில் அதிக ஆபத்தானது என தோன்றுகிறது.

வெட்டப்படப்போகும் ஆடுகளுக்கு
பாடப்பட்டுள்ள
நேர்த்தியான
தாலாட்டு பாடல்
சின்னகருப்பனின் கட்டுரை.

அக்கட்டுரை ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியின் வலைப்பதிவில் ஏற்றப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். உண்மை என்றால் திரு.சின்னகருப்பனின் கருத்தியல் மனிதத்துவ ரீதியில் பெற்றிருக்கும் ஆபத்தான சரிவுக்கு இது மற்றொமொரு ஆணித்தரமான ஆதாரம்.

நாமதாரி தலித் மக்களை காட்டுமிராண்டிகள் என மத போதை தலைக்கேற வர்ணித்த ஒரு அடிப்படைவாதி,
யூத இன ஒழிப்பை கூசாமல் பூசி மொழுகிய ஒரு மானுடகுல துவேஷி,
யூத வெறுப்பை திண்ணையில் வெளிப்படையாக அரங்கேற்றிய மத வெறியர்:
இத்தகைய தகுதிகளைப் பெற்ற ஒரு ‘மனிதரின்’ வலைப்பதிவில் தமது கட்டுரை உள்ளேறியதென்றால் நிச்சயமாக சின்னகருப்பனின் கருத்தியல் பார்வையில் அடிப்படை பிரச்சனை இருக்கிறது.

ஒருவேளை ‘எப்படிப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதியை அவருடைய வலைப்பதிவில் இராமனை புகழும் என் கட்டுரையை போட வைத்துவிட்டேன் பார்த்தாயா?’ என்கிற ரீதியில் திரு.சின்னகருப்பனின் எண்ணம் இருக்கலாம். இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் ஏதோ தத்துவார்த்த நிலையில் அதிஉயர் பீடத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு சமரசங்களில் இறங்கிய இந்து தலைவர்கள் பலர் கண்ட பலன் இலட்சக்கணக்கானநிந்து குடும்பங்களை வேரறுத்ததுதான். ‘இமாலய தவறென’ கண் கட்ட பின் புலம்பி நின்றார்கள் மகாத்மாக்களே என்றால் சின்னகருப்பன் எம்மாத்திரம்.

நஞ்சோடு உணவு செய்திடும் சமரசத்தில் வெல்வது என்னவோ என்றென்றைக்கும் மரணம்தான் எனும் சார்பறு அறிவியக்கவாத (objective epistemologist) அடிப்படை நியதியை சின்னகருப்பன் உணர்வது நல்லது.

சிமியில் என்ன தவறு என்கிறார் சின்னகருப்பன்.
மாணவர் அமைப்பாக இருப்பதில் தவறில்லை.
அது மாணவர் அமைப்பு என்பதற்காகவோ அல்லது
அது இஸ்லாமிய மாணவர்களின் அமைப்பு என்பதற்காகவோ
யாரும் அதனை எதிர்த்திடவில்லை.
அத்தகைய ஒரு தோற்றத்தை தமது வார்த்தைகளால் ஏற்படுத்துகிறார் சின்னகருப்பன்.

சிமி ஜமாயத்-இ-இஸ்லாமி அமைப்பின் மாணவர் அமைப்பாக தொடங்கப்பட்ட நாள்களில் யாரும் அதனை தடை செய்திடக் கோரிடவில்லை.
ஒருவேளை நேசகுமார் போன்ற ஒருவர் அன்று அதன் கருத்தியல் அடிப்படைகளை கொண்டு அதன் வருங்காலத்தை கணித்திருந்தால் இன்றைய பயங்கரவாதத்தின் தொட்டில் இயக்கம் அது என அன்றே கூறியிருந்திருக்கக் கூடும். ஒருவேளை மதச்சார்பற்ற அரசியல்வாதிகளால் அமுக்கப்பட்ட உளவுத்துறை அறிக்கைகளிலும் அது இருந்திருக்கக் கூடும்,
ஆனால் தொடர்ந்து அந்த அமைப்பினைச் சார்ந்தவர்களே பயங்கரவாத இயக்கங்களில் கைது செய்யப்படும் போது, பாரதம் முழுவதும் உளவுத்துறை அறிக்கைகள் அந்த அமைப்பின்/அதின் நிழல் அமைப்புகளின் செயல்பாடுகளைக் குறித்து ஒரே விதமாக எச்சரிக்கைகளை எழுப்பும் போது, ஜனநாயகத்தை, சமயப்பன்மையை , அறிவியலை எதிர்க்கும் ஒரு கருத்தியலை வளர்க்கும் அமைப்பாக சிமி திகழும்போது அது தடைபடுத்தப்பட வேண்டிய நிலை வருகிறது.

இன்னமும் சொல்ல போனால் ஓட்டுவங்கி அரசியலுக்காக ஒவ்வொரு அரசியல் கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு சிமியை ஆதரித்துள்ளன/ஆதரிக்கின்றன.
முலாயம் சிங் யாதவ் நற்சான்றிதழ் வழங்க,
காங்கிரஸின் உத்தரபிரதேச தலைவர் சல்மான் குர்ஷித் சிமியின் வழக்கறினராக செயல்பட்டிட,
உளவுத்துறையின் ஒரே கட்டாயத்தின் பெயரில் வேறு வழியில்லாமல் அரசு அமுல்படுத்த வேண்டியிருக்கிற தடை இது.

ஆனால் அப்பாவித்தனமாக குழந்தை முகத்தோடு சின்னகருப்பன் கேட்கிறார், ‘சிமி மாணவர் இயக்கம் தானுங்களே’

· ரோட்டரி கிளப் போலத்தானே கு-க்ளஸ்-கான் என அப்பாவித்தனமாகக் கேட்கிற ஆசாமியின் அப்பாவித்தனத்துக்கு கீழே எரியும் சிலுவையும், இரும்புச்சிலுவையும் இருப்பது போல, சின்னகருப்பனின் அப்பாவித்தனத்துக்கு அடிநாதமாக விளங்குகிறது போலி மதச்சார்பின்மை எனும் ஹிந்து மக்கள் துவேஷம்.
· விக்கிர ஆராதனை செய்யும் இறுதி ஹிந்து குழந்தையும் கொலை செய்யப்படும் வரை ஓயாது எரியும் விஷம் அது.
· தன் தாய் மார் பிளந்து இரத்தம் குடிக்கும் ஜிகாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் வக்கிரம் அது.

சின்னகருப்பனுக்கு புராண இதிகாச எடுத்துக்காட்டுகள் மேல் பிரியம் போலும். இன்று போய் நாளை வா என்ற இராமனே வீழ்ந்திட்ட துரியோதனனை நாபியில் அடித்துக் கொன்றிடத் தூண்டினான் கிருஷ்ணனாய். சீதையை சிறையெடுத்தான் இராவணன். தொட்டிடத் துணியாத அளவு பண்பு பெற்றிருந்தான். ஆனால் சபையில் திரௌபதி துகிலுரிந்தான் துரியோதனன். காஷ்மீர பண்டிட்களின் பெண்களைக் கேளுங்கள் அல்லது சிந்து மாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட பெண்களை…அல்லது வங்கத்து இந்து தலித்துகளை கேளுங்கள் அல்லது சிங்களவர் சூறையாடிய தமிழச்சிகளை. அவர்கள் கூந்தலை முடிந்திட தேவை எதுவென கூறுவார்கள்.

அடுத்ததாக சின்ன கருப்பனின் இதயம் பீர் முகமதுவின் இதயத்துடன் இணைந்து இரத்தம் வடிக்கிறது ஹிஸ்புல்லாக்களுக்காக.

நிச்சயமாக ஒரு எழுத்தாளனை ‘நீ இவர்களுக்காக எழுதினாயே ஆனால் இவர்களுக்காக எழுதினாயா?’ என கேட்க முடியாது. அது அந்தந்த எழுத்தாளரின் உரிமை. எனவே ஹிஸ்புல்லாக்களுக்காகவும் லெபனானுக்காகவும் இரத்தம் கசியும் சின்னகருப்பனின் இதயம் பங்களாதேஷ் வாழும் நிலம் இழக்கவைக்கப்பட்ட இந்துக்களை அணுவளவும் சிந்தியாமல் லெபனானுக்காகவும் ஈராக்குக்காகவும் கடை அடைத்து தலை உடைக்கும் இந்திய இஸ்லாமிய சகோதரர்களின் முரண் நிலையை பேசிட முன்வராததில் கேள்வி கேட்டிட ஏதுமில்லை.

மனித குல விரோத சட்டங்கள் இயற்றப்பட்டு வாழ் நிலங்கள் பறிக்கப்பட்டு மிருகங்களிலும் கேவலமாக நடத்தப்பட்டு ஓடிய வங்க தேச இந்து தலித்துகளிடம் யாரும் கூறவில்லை:
“வருடங்கள் வருடங்களாக நாம் இங்கு இணைந்து வாழ்ந்தோம்…எனவே உங்கள் இல்லங்களை நீங்கள் விட்டுச் செல்லத் தேவையில்லை. இந்த பிரதேசத்தின் கதவுகள் உங்களுக்காக என்றும் திறந்திருக்கும்.” என எவரும் துரத்தப்பட்ட வங்கத்து இந்து தலித்துகளுக்கு சொல்லிடவில்லை. ஆனால் இந்த வார்த்தைகள் பாலஸ்தீனிய அகதிகள் என அழைக்கும் இஸ்ரேலிய அரபுகளுக்கு சொல்லப்பட்டது யூதர் அமைப்புகளால்.

ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாத அரசுகளால் ‘எதிரி சொத்து’ என அறிவிக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்ட ஏழை இந்துக்களின் விவசாய நிலங்களைப் போலவா ‘பாலஸ்தீனிய’ நிலம் யூதர்களால் வாங்கப்பட்டது? ஏக்கருக்கு 1000 அமெரிக்க டாலர்களை யூதர்களிடம் வாங்கிவிட்டு யூதர்களுக்கு நிலத்தை விற்றவர்கள்தாம் ‘பாலஸ்தீனிய அகதிகள்’ என்றால் அது சுவாரசியமாக இருக்காதுதான். எனவே பின்நவீனத்துவ அறிவுஜீவிகளின் கண்களூக்கு இந்த விஷயங்கள் தெரியாமல்தான் போய்விடும்.

இன்று
லெபனான் எரிகிறதாம்.
ஈராக் எரிகிறதாம்.
வங்க தேச இந்து தலித்தின் வயிறு எரிவதைப் போலவா?
அல்லது
ஜிகாதிகளால் கொல்லப்பட்ட
தன் தாயின் சிதை எரிய
அழும் ஆறுவயது பூர்ணிமாவின் கண்ணீர் எரிவதைப் போலவா?
ஆனால் எரிந்த காஷ்மீர இந்துக்களின் சிதைகளுக்காக
தெரு வந்து யாரும் ஆடவில்லை.
ஆர்ப்பரிக்கவில்லை.
லெபனானுக்காக வருந்தவா?
சதாமுக்காக ஆர்ப்பாட்டம் செய்யவா?
அல்லது
ஒசாமாவுக்காக ஒப்பாரி வைக்கவா?

இனி
ஆர்ப்பாட்டம் செய்வதென்றால்
இலங்கை தமிழருக்காக
வங்கத்து தலித்துகளுக்காக
காஷ்மீர அகதிகளுக்காக
மிஸோ ரியாங்குகளுக்காக
திரிபுராவின் ஜமாத்தியாக்களுக்காக
திபெத்தின் மடாலயங்களின்
மார்க்ஸிய சீனத்தால் சூறையாடப்படும்
பௌத்த துறவிகளுக்காக
ஒட்டுமொத்த விராட இந்து குடும்பத்துக்காக
இதய ரத்தம் வடித்து வருந்துவோம்.
மௌனத்தில் அழும் அந்த கண்ணீர் துளிகள்
ஒருங்கிணைந்து ஒரு பிரளயம்
எழும்பும் வரை.

மதவியல் அடிப்படையில் இஸ்ரேலை ஏற்காத பயங்கரவாத இனவெறிக்கு பின்-நவீனத்துவ பூச்சும், தத்துவார்த்த விளக்கமும் அளிப்பவர்களின் வார்த்தை ஜாலங்களுக்கு அப்பால் ஒரு வரலாற்று நியாயத்தை நிகழ்த்துகிறது இஸ்ரேல்….

கரத்தின் சுருங்கிய தோலில்
என்றென்றும் காய்ந்திடாத
எண்களை நோக்கியபடி
எங்கோ ஒரு யூத குரு
ஷெவா பாடுகிறார்.
ஷமா இஸ்ரேல்
எலோகிம்…
கேட்பாய் இஸ்ரேலிய தேசமே
உன் தேவன் தேவர்களெக்கெல்லாம் தேவன்

இஸ்ரேலே…
வாழ்க நீ இஸ்ரேல்
இந்த வையத்து மாந்தருக்காக
போராடிடும் தெய்வ சக்தி

உன் அரண்களுக்குள் சமாதானம் ஓங்கட்டும்
உன் வீடுகளில் வளம் பொங்கட்டும்.
யூதர்கள் வணங்கும்
இறைவனின் மணவாட்டி
இறைத் தேவி நீ
என பாடும்
யூதத்திருமறை.

இறை சக்தியின் வெற்றி
மனித குலத்தையே
ஏக இறைவாதப்
பொய்மைக்கு
இரையாக்கத் துடிக்கும்
அரக்க சக்திகளின் அழிவில்
அரங்கேறட்டும்.

வாழ்க நீ இஸ்ரேல்
இந்த வையத்து மாந்தருக்காக
போராடிடும் தெய்வ சக்தி!

Series Navigation

அனல் தூங்கும் கண்ணன்

அனல் தூங்கும் கண்ணன்