என் பொழுதுகளில் இதுவும்..

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

சுமதி ரூபன் , கனடா


நான் அங்கு சென்றபோது எல்லோருமே இருந்தார்கள்.. சிறிது தாமதமாகிவிட்டது என்ற படியே இணைந்து கொண்டேன். ‘என்ன குடிக்கின்றீர்கள் ? ‘ தண்ணீர் தொடக்கம் தண்ணி வகைகள் சிற்றுண்டிகள் பரவிக்கிடந்தன. தண்ணியில் என் கண்கள் பதிய ‘நானே எடுக்கிறேனே ‘ என்றேன். அதிகரித்த ஆண்கள் மத்தியில் என்னோடு சேர்த்து மூன்று பெண்கள். ‘இந்தப் பாளாய் போன தயக்கம் ஏன் வரவேண்டும் ‘ தண்ணிப்போதலை எடுத்தபடியே ‘விஸ்கி குடிக்கலாம் தானே ‘ என்றேன் மெதுவாக. ‘அதற்கென்ன ‘ என்றார் சிரித்தபடியே அவர். (இல்லை என்றால் குடிக்காமலா விடப்போகிறேன்). பேச்சுக்கள் அங்கு தொட்டு இங்கு தொட்டுப் பரவலாய் வழிந்தது.. இலக்கியக் கூட்டம் அனுபவம் மிக்க இலக்கியவாதிகள் பலர்.. அவர்கள் பேசுவதில் வேண்டியதைக் மெளனமாகக் கிரகிக்கலாம் என்ற வழமையான ஆவலுடன் அமர்ந்திருந்தேன். நான் எதிர்பார்த்த அலசல் இல்லாது பலதும் பத்துமாக உயர்ந்த குரலோடு நேரம் நகர்ந்தது..

சிறிது நேரத்தின் பின்னர் வழமை போல் முற்போக்குச் சிந்தனைவாதிகள் என்று தம்மைப்பிரகடனப்படுத்தும் பலரின் வாயோர எள்ளல் சிரிப்போடு பேச்சு பெண்ணியத்திற்குத் தாவியது.. ‘உதெல்லாம் தங்களைப் பிரபல்யப்டுத்திக்கொள்ள பெண்கள் போடும் வேசம் வேண்டாத வேலை ‘ என்பதாய் மதுவற்ற போதையில் குரல் ஒன்று உயர இப்போதெல்லாம் இதற்காக எனது இரத்தம் சூடேறும் விகிதம் குறைந்திருந்தது எனக்குள் வியப்பைத் தந்தது.. சினிமா உலகு அரசியல் உலகு என்பது போல் பெண்ணியமும் அதன்கென்ற உலகு என்று ஒன்றைத் தமக்குள் சமைத்து பலர் கூடும் போது குடித்தபடியே எள்ளலாக வாதிடும் ஒரு வீணாக கருவாக ஒரு பொழுது போக்கு அம்சமாக மாறிவருகிறது. தடுக்க முடியாது. இப்படியான வாதங்களைத் தவிர்க்கலாம் இப்படியானவர்களைத் தவிர்க்கலாம் என்பது இன்னும் அதிக விகிதத்தில் இரத்தச்சு+டு கொள்ளும் பெண்களின் கருத்து. உண்மை. இருந்தும் எதிர்கொள்ளும் திராணியுள்ள பெண்கள்> ஆண்களின் எண்ணங்களை கருத்துக்களை அவர்களின் கப்பாசிட்டியைப் புரிந்து கொள்ளும் ஒரு களமாகவும் இவ்விடங்களைக் கொள்ளலாம் என்பது எனது கருத்து.

தற்போது அதிக வாதத்திற்குள்ளாகி வரும் ‘பெண்களின் எழுத்தில் ஆபாசம் ‘ என்பது பற்றிய அவர்களது கருத்து என்ன என்பதாய் நான் வேண்டு மென்றே தொடக்கி வைக்க உணர்ச்சிவசப்பட்ட ஆண்கள் பலர் (ஆழமான இலக்கிய முற்போக்கு வாதிகள் மெளனமாய்) ‘தேவையில்லாதது.. சல்மாவும், மாலதி மைத்ரியும், ‘கோணேஸ்வரி ‘ கவிதை எழுதிய கலாவும் பெண்களின் உறுப்புக்களைக் கவிதைக்குள் புகுத்தி கவிதையை பேச வைக்கின்றார்கள் எல்லாமே பிரபல்யம் ஆவதற்கான முயற்சி ‘ மீண்டும் மீண்டும் பெண்கள் பிரபல்யமாவதற்கான முயற்சியில் என்னவெல்லாம் செய்கின்றார்கள் என்பதாய்ப் பலரின் ஆமதிப்போடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெண்ணியம் என்பதே வெறும் பசப்பு. மேற்கத்தைய நாடுகளிலும் பார்க்க ஆசியநாட்டுப் பெண்கள் தான் அதிகம் சுதந்திரத்துடன் இருக்கின்றார்கள்..அதற்கான உதாரணம் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை பெண்கள் ஆட்சி செய்கின்றார்கள் என்று மேற்கோள் காட்டப் பட்டது. பெண்ணிம் பேசும் பெண்களுக்கே அது பற்றிய தெளிவு இல்லை என்றும்.. ஒரு மூத்த எழுத்தாளர் கை கூப்பி வணங்க பதிலுக்கு கை கூப்ப மறுத்த பெண்ணையும் நுாறு பேர் கொண்ட இலக்கியக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்காக மூன்று ஆண்கள் மேடையில் அமர்ந்திருந்த போது ‘ஏன் ஒரு பெண்ணைக் கூட பேச அழைக்கப்படவில்லை ‘ என்று; கேட்ட பெண்ணையும் உதாரணம் காட்டி இதுவா ‘பெண்ணியம் ‘ என்று எனைப்பார்த்துக் குரல் கொடுத்தார்கள்.. பெண்ணியத்தின் பிரதிநிதி நான் என்பதாயும் உலகில் வாழும் அத்தனை பெண்ணியவாதிகளின் போக்கிற்கும் நான் தான் பதில் சொல்ல வேண்டும் என்பது போலும். (இவர்கள் சாணக்கியாவையும், தேவதேவனையும், சூத்ரதாரியையும். சேரனையும் இன்னும் சாருநிவேதிதாவையும் படித்ததில்லை.) இல்லையில்லை. பெண்ணின் உறுப்புக்களையோ, இல்லையேல் ஆணின் உறுப்புக்களையோ எழுதுவதற்கு ஆண்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. பெண்கள் பேசாமல் ரமணிச்சந்திரன் போல் கதைகளைக் கொடுத்துக்கொண்டிருத்தல் வேண்டும். பெண்களின் எழுத்தில் பெண் உறுப்புக்களைக் காணும் போது கதை கவிதைகளின் கருக்களை விடுத்து அந்த சொற்களில் இவர்கள் கிளுகிளுப்பு அடைகின்றார்களோ என்ற சந்தேகம் எனக்குள். எதற்காகப் பெண்கள் எழுதும் போது மட்டும் ஆர்வமாக விமர்சிக்கின்றார்கள்.

நுாறு பேர் கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டது மொத்தம் எட்டுப் பெண்கள்.. அதில் ஒருவர் பேச்சாளராக இருக்கவேண்டும் என்று பெண்கள் நினைப்பின் அது யதார்த்தமற்றது. இருந்தும் ஏன் மிகக்குறைவான அளவில் பெண்கள் கலந்து கொள்கின்றார்கள்.. உங்களுக்கு இலக்கியத்தில் இருக்கும் ஆர்வம் ஏன் உங்கள் மனைவியருக்கு இல்லாமல் போயிற்று என்றால்.. அவர்களுக்கு அதில் நாட்டமில்லை என்று கேள்வியை வெட்டி விடுகின்றார்கள். அது எப்படி ஒட்டு மொத்தமாக ஆசியப் பெண்களிற்கு சமைப்பதும், துவைப்பதும், கழுவுவதும், நாடகங்கள் பார்த்து அழுவதும், குழந்தைகளைப் பராமரிப்பதுவும் தான் பிடித்திருக்கின்றன.

உண்மையான காரணம் குடும்பத்தில் ஆண், பெண் இருவருமே இலக்கியம் அதுஇது என்று வெளிக்கிட்டு விட்டால்! யார் சமைப்பது, யார் துவைப்பது. யார் கழுவுவது, யார் குழந்தைகளைப் பராமரிப்பது.. எனவே மொத்தமாகத் தமது பெண்கள் படி தாண்டாமல் இருந்து விட்டால் முற்போக்கு ஆண்களிற்குக் கொண்டாட்டம். படி தாண்டிய பெண்களோடு சேர்ந்து குடித்து பெண்ணியம் பற்றி சிவந்த கண்களோடு வாதிடலாம்.

அது சரி எதற்காக உங்கள் படைப்புக்கள் அனைத்தும் பெண்ணியம் சார்ந்ததாக இருக்கிறன. சிறுவயதில் ஆணினால் பாலியல்வல்லுறவிற்கு ஆளாவது சிறுமிகள் மட்டும்தானா ? எத்தனை சிறுவர்கள் பெண்களால் பாலியல் வல்லுறவிற்க ஆளாகின்றார்கள் அவற்றை நீங்கள் ஏன் எழுதவில்லை.. உங்களது பார்வை மிகவும் ஒடுக்கமானது.. இது இன்னுமொரு குற்றச்சாட்டு.. இனிமேல் பெண்கள் எது பற்றி எழுதவேண்டும் எப்படியான வார்த்தைகளைப் பாவிக்கவேண்டும் என்பதை ஆண்கள் முன்பே தெரிவித்து விட்டால் பெண்களுக்கு இலகுவாக இருக்கும். ஆண்களின் விருப்பம் போல் பெண்கள் படைப்புக்களைத் தந்து அவர்களை மேலும் திருப்திப்படுத்தலாம். இதற்காகத் தானே ஆண்டவன் பெண்களைப் படைத்துள்ளான்.

ஒட்டு மொத்தமாக அன்று பெண்கள் ஒடுக்கப்படவில்லை.. எல்லாம் வெறும் பசப்பு என்பதாய் ஆண்களின் சம்மதத்துடன் அன்றைய எனது இரவு உணவு முடிந்தது. ‘அதிகம் குடிக்காதீர்கள் கார் ஓட்ட வேண்டும் ‘ என்றார் ஒருவர் நட்போடு. இது வெறும் நட்பான உரையாடல் கோவிக்காதீர்கள் என்று கை குலுக்கி விடைகொடுத்தார்கள்.

வீட்டிற்கு வந்து கட்டிலில் விழுந்து தொலைக்காட்சியைப் போட்டேன். ரொறொண்டோவில் பாலியல்வல்லுறவிற்குள்ளாகிக் கொலை செய்யப்படும் சிறுமிகளின் தொகை அதிகரித்து வருவதாகவும் ‘அமெரிக்கா மோஸ்ட் வோட்டடன் ‘ எனும் நிகழ்ச்சியை கனேடியத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பி குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கும் முயற்சியைப் புதிதாக ஆரம்பித்துள்ளதாகவும் அறிவித்தல் நகர்ந்தது.

மின்கணணிக்குள் புகுந்து கொண்டேன்.. அம்பையில் ‘மலட்டு அரசியலின் சாயைகள் ‘ கண்ணில் பட்டது படித்து முடித்தேன்.

இருந்தும் ஒரு நம்பிக்கை ஆண்களில் அதிகபட்ச உச்சக்கட்ட ஆயதமான பெண்மையைக் களங்கப்படுத்தும் ஆயுதத்தை எமது முற்போக்கு இலக்கியவாதிகள் எடுக்கமாட்டார்கள் என்பதாய்.

—-

ssmith@ieccan.com

Series Navigation

சுமதி ரூபன்

சுமதி ரூபன்