எஸ்.அர்ஷியா
மேற்கு வானின் கீழ்புறத்தில், சூரியன் செங்குழம்பைக் கொட்டிவிட்டிருந்தான். வெம்மைத் தணிந்து, இதமானக் காற்று வீசத் துவங்கியிருந்தது. பகல் தொழுகையைத் தொடர்ந்து நடந்த உணவுக்குப் பின் புறப்பட்ட படை, வழியில் எங்கும் இளைப்பாறவில்லை. நீண்ட பயணம் தான். என்றபோதும், அவர்களில் யாரும் சலித்துக் கொள்ளவில்லை. கனத்துக் கொழுத்தப் பாம்பாய், படை வளைந்து நெளிந்து, அம்மலைப்பாதையில் போய்க் கொண்டிருந்தது.
தளபதி மீர் அஸ்காரி, தலைநிமிர்த்தியக் குதிரை ஒன்றின்மீது ஆரோகணித்து, படையை முதல் ஆளாய் வழி நடத்திக் கொண்டிருந்தார். தொடர்ந்து நாலாயிரத்துக்கும் அதிகமான வீரர்களுடன் தரைப்படை. அடுத்தது, குதிரைப்படை. அதில், ஆயிரத்துக்கும் மேலான வீரர்கள். அதற்குப் பின்னால், முந்நூறு யானைகளைக் கொண்ட பெரும்படை. மொகலாயச் சக்கரவர்த்திக்கு எதிராகப் போர்க்கொடித் து¡க்கிய சிற்றரசன் பிடிய நாயக்கரை அடக்கி ஒடுக்கி, நாட்டில் அமைதியை நிலை நாட்டிவிட்டு, வெற்றியுடன் தலைநகர்த் திரும்பிக் கொண்டிருக்கிறது.
படையின் நடுவே மொகலாயச் சக்கரவர்த்தி திறந்த பல்லக்கில் அமர்ந்து, பக்கவாட்டுக் காட்சிகளை ரசித்துக் கொண்டு வருகிறார்.
இதுபோன்ற வாய்ப்பு, எப்போதாவது தான் கிடைக்கும். நாடு, மக்கள், பரிபாலனம், எதிரிநாட்டு மன்னன், உள்நாட்டுக் கலகம், உடன்பிறந்தோரின் சதி, இத்தனையையும் சமாளித்து ஆட்சிசெய்து கொண்டிருக்கும்போது, இதுபோன்ற தருணத்தில் இயற்கையை ரசித்துக்கொண்டால் தான் உண்டு.
உயர்ந்து நிற்கும் குன்றுகளும், அருகிலேயே சரிந்து கிடக்கும் பாறைகளும், அதனிடையே ஓடை போல் செல்லும் பாதையும், யாரோ கையிலெடுத்து ‘பளபள’ப்பாக்கிப் போட்டுவிட்டுப் போனதுபோல சிதறியிருக்கும் சிறுகற்களும், வைரத்திலும் பவளத்திலும் முத்திலுமாய் உழலும் அவருக்கு உவப்பை யே தந்தன.
தூக்கிகள், தொங்கு ஓட்டத்தில் அவரைச் சுமந்துசென்றாலும் பல்லக்கு எந்த ஒரு குலுங்கலுமின்றி, சிறு தேர்போலவே இருந்தது. அந்தக் கற்பாதையினிடையேயும், தூக்கிகளின் பாதங்கள் ஒரே தாள லயத்தில் இயங்கின.
பகலைக்காட்டிலும் இரவுகளின் நீளம் அதிகமாய் இருக்கும் காலம். பகலின் வெளிச்சம் குறைந்து, லேசான இருட்டு மெல்லியப் போர்வையாய் விரியத் துவங்கியது.
தளபதி மீர் அஸ்காரி, தனது குதிரையைத் திருப்பி சக்கரவர்த்தி பயணிக்கும் பல்லக்கை நோக்கி வருகிறார். அவரைக் கவலை ஆக்கிரமித்திருந்தது. பயணம் போய்க் கொண்டிருக்கும் பாதை, பரம எதிரிகளான மராட்டியர்கள் வாழும் மலைப்பகுதி. சக்ரவர்த்திக்கு எதிராக, அம்மக்கள் ஆத்திரம் கொண்டிருக்கிறார்கள். படை திரும்பிக் கொண்டிருப்பது தொ¢ந்தால், எதுவும் நடக்கலாம்!
தளபதி வீரத்தின் விளைநிலம் தான். படை வீரர்கள் அசகாய சூரர்கள். எத்தனை போர்கள்? என்றாலும் அவருக்குள் பயம் இருந்தது. அடுத்தடுத்து போர் என்றால், படை தயங்கத்தானே செய்யும்!
தளபதி, குதிரையில் தன்னை நோக்கி வருவதை, சக்கரவர்த்தி தூரத்திலிருந்தே பார்த்துவிட்டார்.
குதிரையிலிருந்தபடியே தலைவணங்கிய தளபதி, “ஆலம்கீர்… பொழுது சாய்ந்து விட்டது என்றாலும் நமதுபடையினர் இன்னும் சோர்ந்து போகவில்லை. தேவ் பூர் கோட்டை இங்கிருந்து இருபது கல் தொலைவுதான். நாம் அங்கு போய்விடலாம். ஏற்கனவே நமதுபடையின் ஒரு பிரிவும் தங்கியிருக் கிறது. பாதுகாப்பாக இருக்கும். படையின் வேகத்தைத் துரிதப்படுத்திவிட்டால் போதும். முன்னிரவு முடிவதற்குள் போய்ச் சேர்ந்து விடலாம்!” என்றார்.
குதிரை மீது அமர்ந்து அவர் வந்திருந்தாலும், நீண்ட தூரம் ஓடிவந்தவன் மூச்சு வாங்குவது போல, பேசினார். அவர் நெஞ்சுக்கூடு, தேவைக்கு அதிகமாக ஏறியிறங்கியது. அதில், அவருக்குள் இருந்த பயம் அப்பட்டமாகத் தொ¢ந்தது.
தளபதியின் பேச்சைக் காதுகள் கேட்டாலும், சக்ரவர்த்தியின் பார்வை முழுவதும் மலைக்குன்று களின் மேலேயே இருந்தன. இருள் சூழும்நேரத்தில், அவை பெருத்த கரும்யானைகளைப் போல தோற்றம் தந்தன. பல்லக்குத் தூக்கிகளுக்கு சமிக்சை தந்த சக்ரவர்த்தி, படையையும் நிறுத்தச் சொன்னார்.
“ஆலம்கீர்!” என்றார், தளபதி.
“இன்றிரவு, நாம் இங்கேயே தங்குகிறோம்!” சொல்லிக்கொண்டே பல்லக்கிலிருந்து கீழே இறங்கி யவர், மெய்க்காப்பாளன் நீட்டிய குடுவைத் தண்ணீரில் ஒலு செய்தார். பின்பு, முஸல்லாவை விரித்து, மக்¡£ப் தொழுகையைத் தொழத் துவங்கி விட்டார்.
படை அப்படியப்படியே நின்றது. மலைப்பாதையின் தட்டையான பகுதியிலும் சற்று மேடான இடங் களிலும் ‘மளமள’வென்று கூடாரங்கள் எழுந்தன. இரவு உணவுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந் தன. ஆலம்கீர் தங்குவதற்கும் அழகான கூடாரம் அமைக்கப்பட்டது.
தளபதி மீர் அஸ்காரிக்கு குடலுக்குள் உதறலெடுத்தது. சக்கரவர்த்திக்கு சற்று… சற்று என்ன ரொம்ப வே முரண்டுபிடிக்கும் குணம்தான். இனி அவரது முடிவை, அந்த அல்லா சொன்னால் தான் மாற்றிக் கொள்வார்.
தொழுது முடித்துவிட்டு, தூரத்தில் தொ¢ந்த மலைக்குன்றை இருட்டிலும் ரசித்துக் கொண்டிருந்த சக்கரவர்த்தி, தன் அருகில் வந்துநின்ற தளபதி மீர் அஸ்காரியைத் திரும்பிப் பார்க்காமலேயே சொன்னார். “அல்லாஹ் மிகப் பெரியவன். அவனது கருணை நம் பக்கம் இருக்கிறது. அவனைத் தாண்டி எதுவும் நடந்து விடமுடியாது. இன்று இரவு நாம் இங்கே தங்குவது அவன் சித்தம். மற்ற தளபதிகளையும் ஒற்றர்களையும் வரச்சொல்லுங்கள். நாளைக்கானப் பணிகளைத் திட்டமிடுவோம்!”
சக்கரவர்த்தியின் மனத்திடம் தளபதி அறிந்தது தான். இப்போதும் அதைக்கண்டு வியந்து போன அவர், ‘கெழவனுக்கு தொண்ணூறு வயசுலயும் வேகத்தைப் பாரு!’ என்று முனகிக்கொண்டே போனார்.
தென்றலாய் வீசிய மென்காற்றுடன், உணவின் மணமும் கலந்திருந்தது.
·
இருட்டும் குளிர்க்காற்றும் சக்கரவர்த்திக்குப் புதியதில்லை. வறண்ட ஆப்கன் மலைகளிலும் வளமை நிரம்பிய இமயமலைகளிலும் அவர் பாதம் படாத இடமில்லை. எதிரிகளை விரட்டி விரட்டியடித்திருக் கிறார். சிலமுறை பின்வாங்க வேண்டியும் இருந்தது. பகலின் வலி இரவில் முடிந்து. மறுநாள் புத்தம் புதுநாளாகவே விடியும். என்றாலும், இன்றிரவு அவருக்குத் தூக்கம் வரவில்லை. விரித்து வைக்கப்பட் டிருந்த படுக்கையில் சாய்ந்து கிடந்தார். நினைவுகள் அலையாடின. யாருமற்ற சமயந்தான் அவை திறந்து கொள்வதற்கான திறவுகோல்களோ?… சாதாரண மனிதனுக்கும் சக்கரவர்த்திக்கும் அவை ஒரே அளவுகோலைத் தான் வைத்திருக்கின்றன.
சாம்ராஜ்ஜியத்துக்கு சக்கரவர்த்தியாக நாற்பதாவது வயதில் பதவியேற்று, ஐம்பது ஆண்டுகள் ஓடிப் போய்விட்டன. பாட்டனார் அக்பர் சக்கரவர்த்தியை மிஞ்சிவிட்ட நில வேட்டை. மேற்கே காபூல். கிழக்கே சிட்டகாங். வடக்கே இமயமலை. தெற்கே காவிரிநதி. எத்தனைப் பெரியபரப்பு? எத்தனை மன்னர்கள் தாழ்பணிந்து தண்டனிட்டார்கள். எத்தனை சிற்றரசர்கள் மண்டியிட்டார்கள். கப்பமாய் வந்து குவிந்த தங்கமும் வைரமும் எவ்வளவு? கையில் வாள்பிடிக்காத நாளே இல்லையென்று ஆகி விட்டது. இந்தவயதில் கூட வாளேந்த வேண்டியிருக்கிறது. மனதிற்கு வேகம் குறையாவிட்டாலும்… உடம்புக்கு? இப்போதெல்லாம், அது ஒத்துழைக்க மறுக்கிறது!
சாய்ந்து, வாகாக உட்கார்ந்து கொண்டார்.
கூடாரத்தின் ஒருபுறத்துணி, காற்றுக்காகச் சற்று உயர்த்திவிடப்பட்டிருந்தது. அதன் வழியே, கருத்த வானத்தில் ஆங்காங்கே வெள்ளிக்காசுகளாய் நட்சத்திரங்கள். அவற்றை எண்ண முடியுமா? கூடாரத் திலிருந்து தொ¢ந்த வானப்பகுதிக்குள், கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தார். நட்சத்திரங்கள், அவரைப் பார்த்துக் கைக்கொட்டிச் சிரிப்பது போலிருந்தது.
‘அவற்றின் சிரிப்புக்குக் காரணம் என்னவாக இருக்கும்?’ தன்னைத்தானே கேட்டுக்கொண்டவர், அதை உணரத் தலைப்பட்டபோது, சகோதரர்களை ஏமாற்றித் தலை கொய்ததை, தந்தையைச் சிறைப்படுத்தி மனங் குன்றச்செய்ததை, அன்பு, பாசம் எல்லாவற்றையும் தொலைத்து, தனது ஆட்சியை நிலைபெற வைத்ததை, அவை நினைவூட்டுவதாகப் பட்டது. மனதின் ஆழத்தை ஊடுருவும் நினைவுகள்!
அவர் உதட்டில் புன்னகை அரும்பியது. அர்த்தங்கள் நிரம்பிய புன்னகை. அப்பாவும் அதைத் தான் செய்தார். தாதாவும் அதைத்தானே செய்தார். ஏன் பாட்டன் கூட அதைச் செய்துதானே அரியணை யைக் கைப்பற்றினார். அரசியலில் இதுதான், வழிமுறை! நான் விதிவிலக்கா என்ன? தவறுகள், நியாயங்கள், மறுபரிசீலனை என்று நீர்க்குமிழிகளாய் மேலெழும்பிவந்த நினைவுகள், விதவிதமாய் வடிவெடுத்து உடைந்து சிதறின.
புன்னகை இன்னும் அவர் உதட்டில் தொங்கிக் கொண்டிருந்தது.
இதுபோன்ற புன்னகை அவருக்குள் எப்போதாவதுதான் மிளிரும். ஒன்று, அப்போது ஸயினாபதியை நினைத்துக் கொண்டிருப்பார். அல்லது மூன்றாவது மகன் ஆஸாம் வயிற்றுப்பிள்ளை, பேரன் பகதூரை மடியில் இருத்தி, அவன் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பார். இப்போது ஸயினாபதியின் நினைவு அவரைப் பின்னியது. தலை சாய்த்து வானத்தை ஏறிட்டார்.
அப்போது அவர், இளவரசர். ஸயினாபதியை முதன்முதலாகப் பார்த்த மாமரம் கண்ணுக்குள்ளிருந்து குடையாய் விரிந்து வந்தது. அந்தமரத்தில் சற்றே கைக்கெட்டும் தூரத்தில் இருந்த கனி ஒன்றைப் பறிக்க, ஒய்யாரமாகத் தாவிக்குதிக்கிறாள், அவள். அவள் அணிந்திருந்த பட்டுப்பாவாடை குதியாட் டம் போடுகிறது. அத்தையைச் சந்திக்க வந்திருந்த இளவரசர், அந்தப்பெண் போடும் குதியாட்டத் தில் லயித்துப்போகிறார். வந்தவேலையை மறந்து, அந்தப்பெண்ணின் பின்னழகிலும் முன்னழகிலும் மயங்கி, அவர் இதயத்தில் இன்ப பூகம்பம் ஏற்படுகிறது. பூகம்பத்தில் நிலை தடுமாறாதவர் யாராக இருக்க முடியும்? பதிமூன்று வயதில் மதங்கொண்ட யானையை ஒரு குத்தீட்டியால் ஒரே குத்தில் சாய்த்தவர், இப்போது அந்தப்பெண்ணின் அழகில் சரிந்து போனார். அப்போது அவருக்கு, முறை யாக நிக்காஹ் செய்திருந்த மனைவிகளின் மூலமாக, ஆறு குழந்தைகள் இருந்தன!
அது ஓர் இனிய அனுபவம். இசையிலும் நடனத்திலும் நல்ல தேர்ச்சிப் பெற்றிருந்த ஸயினாபதியின் அன்பு, அவருக்கு இன்னொரு சொர்க்கம் இருக்கிறது என்பதைத்தான் காட்டியது. ஆனால் என்ன செய்வது? கேட்டபோதும்… கேட்காதபோதும்… அன்பையும் வனப்பையும் அள்ளி அள்ளி வழங்கிய ஸயினாபதி, ஓரிரண்டு ஆண்டுகளில் நோய்வாய்ப்பட்டு போயே போய்விட்டாள்.
‘அவளது அன்பு தொடர்ந்து கிடைத்திருந்தால்… ஒருவேளை…நானும் என் முன்னோர்கள் போலவே மதி மயங்கிக் கிடந்திருப்பேனோ?’ தன்னை நினைத்து, இப்போது வெட்கப்பட்டுக் கொண்டார். புன்னகையைத் துடைத்துக் கொண்டவரின் நுண்ணுணர்வு, அவரை எச்சரித்தது. யாரோ பார்ப்பது போல உணர்ந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார்.
மெய்க்காவலன் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.
‘எனது சிரிப்பை, அவன் பார்த்திருப்பானோ? அதை அவன் என்னவாக நினைத்திருப்பான்?’
நீண்டகாலமாக மெய்க்காப்பாளனாக இருப்பவன். அவனது தந்தையும் மெய்க்காப்பாளனாக இருந்த வர் தான். அவனை அருகில் அழைத்தார்.
வந்தவன், குனிந்து வாய்ப்பொத்தி, ”ஆலம்கீர்?” என்றான்.
“நான் சிரித்ததைப் பார்த்தாயா?”
“ஆம். பார்த்தேன். எங்கள் ஆலம்பனா மனம் லயித்துச் சிரிப்பதைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன்!”
அவனது பேச்சு அவருக்குப் பிடித்திருந்தது. நேர்மையானவனாக இருக்கிறான். அவனிடம் மனம்விட்டுப் பேசலாம். “நான் முதலில் சிரித்தது, இன்னும் என் நெஞ்சத்தின் கரைகளை நினைவு களால் தொட்டுத் தொட்டுத் திரும்பும் என் இதயராணியை நினைத்து! அவளை நீ அறிவாயோ?”
“இல்லை, பாதுஷா!”
“சரிவிடு! இனிநான் சிரிக்கப்போவது, என் பேரன் பகதூரை நினைத்து. சொல்கிறேன். கேட்கிறாயா?”
“கேட்பேன். ஹ¥ஜூர்!”
“அப்போது அவனுக்கு வயது, ம்ம்ம்… இரண்டு அல்லது இரண்டே கால் இருக்கும். நன்றாகப் பேசத் துவங்கியிருந்தான். அவனைப்பெற்ற தாயார் என்னைக்காட்டி, ‘தாதா’ என்று அறிமுகம் செய்கிறார். என் குலவாரிசு அல்லவா? கைநீட்டித் தாவிக்கொண்டு வந்துவிட்டான். எனக்கு மகிழ்ச்சிப் பிடிபட வில்லை. அவனை மடியில் இருத்திக்கொண்டேன். எத்தனை சுகம் தொ¢யுமா? அந்தசுகத்தை, அதற்குமுன் நான் தவறவிட்டவனாகவே இருந்திருக்கிறேன். மடியிலிருந்துகொண்டு, என் தாடிக் குள் விரல்களை அலையவிட்டவன், ஏதோ ஞாபகம் வந்தவன்போல என்னிடமே கேட்கிறான், ‘நீங்கள் யார்?’ என்று. ஆமாம்…நான் யார்? நான், இந்நாட்டின் சக்கரவர்த்தி. அதனால், நான், ‘சக்கரவர்த்தி’ என்கிறேன். ‘அப்படியானால்?’… என்று திருப்பிக் கேட்கிறான். சக்கரவர்த்திக்கு விளக்கம் சொன்னால், அவனால் புரிந்து கொள்ள முடியுமா?. என்றபோதும், நான் அவனுக்கு பதில் சொன்னேன். படுவாப் பயல். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ‘உங்கள் பெயரைச் சொல்லவில்லையே?’ என்கிறான். என்னபேச்சு பேசினான் என்கிறாய். என் உள்ளம் பூரித்துப் போனது. ‘என் பெயர் ஒளரங்கசீப். எங்கே திருப்பிச்சொல்!’ என்கிறேன். பெயர்ச் சொல்லத்தானே பிள்ளைகள். பேரன்கள்? பேரன் வாயால் என் பெயரைக் கேட்க வேண்டும் என்று மனம் பரிதவித்துக் கொண்டிருந்தபோது, அவன் என்ன சொன்னான் தொ¢யுமா?… ‘ஒளரங்கசீப்…, நாளைக்கு நானும் ஆலம்கீர் ஆவேன்!’
“தாத்தாவுக்கேற்ற பேரன்!”
“ஆமாம். நெகிழ்ந்து போனேன். வாட்களை இறுக்கிப்பிடித்துச் சுழற்றிய என் கைவிரல்கள், அந்தப் பேச்சில் தாமரைப்பூவின் தண்டுகளாய் மென்மையாகிவிட்டன. அந்தவிரல்களால், அவன் கன்னத் தை வருடினேன். அந்தசுகம், இன்னும் என் விரல்களில் அப்படியே இருக்கிறது!”
பேரன் எப்போதோ சொன்னதை நினைத்து நினைத்துச் சிலிர்க்கிறார். கண்களில் நீர்கட்டிக் கொள் கிறது. அதைத் துடைக்க மறந்தவரின் முகம் எதையோ நினைத்து, மெல்ல மெல்ல மாறுகிறது.
கருத்தறிந்து, மெய்க்காவலன் விலகிக் கொள்கிறான்.
பெற்றபிள்ளைகள் யாருமே சரியில்லை! வம்ச பலனோ? முதலாமவன் என்னையே எதிர்க்கிறான். இரண்டாமவன்… ம்ஹ¥ம். சொல்லவே வேண்டாம். மூன்றாமவன், பரவாயில்லை. ஆனால் விஷய ஞானமில்லையே! நான்கும் ஐந்தும், நான்பெற்ற பிள்ளைகள் தானா எனும் அளவில் நடந்துகொள் கின்றன. ‘எப்போது சாவேன்…?’ என்று ஆருடம் பார்த்தார்களாமே! ம்… நான் உயிருடன் இருக்கும் போதே, ஆளுக்கொரு படையுடன் அரியணையேறத் தயாராக இருக்கிறார்கள். நம்மூச்சு நின்றுவிட் டால் ரத்தக்களறி தான்!
அதற்கு முன்பே ஒரு வழிவகை செய்துவிட வேண்டும். ‘அவரவர் பொறுப்பிலிருக்கும் பகுதியை, அவர்களே ஆண்டு கொள்ளலாம்’ என்று பிள்ளைகளிடம் சொல்ல வேண்டும். அது குறித்து பிள்ளை களுக்குக் கடிதம் எழுத வேண்டும்!
·
“நேரமாகிவிட்டது. சாப்பிட்டுவிட்டுப் படுங்கள் அப்பா!” என்கிறாள், மூத்தமகள் ஜீனத்துன்னிஸா.
முன்பு உள்ளே வந்தவர்களையெல்லாம் விரட்டியடித்து தனிமைப்படுத்தப்பட்ட சக்கரவர்த்தியின் அறைக்கு, இப்போது வலிந்து அழைத்தாலும் யாரும் வருவதில்லை. அழைக்காமலேயே வருபவர் களாக இருப்பது, மகளும் மனைவி உதய்பூரி பேகமும் தான்!
“உன் சகோதரர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தலையணைக்குக் கீழே வைத்திருக்கிறேன். நாளை கடிதந்தாங்கிகளின் கையில்கொடுத்து, அனுப்பிவிடு. அதன் பிறகாவது அவர்கள், ஒருவரையொரு வர் அனுசரித்துக் கொள்ளட்டும். இன்னும் ஆஸாமுக்கு மட்டும் ஒரு கடிதம் எழுத வேண்டியுள்ளது.”
“எழுதலாம் அப்பா. இன்னும் யார் யாருக்கு எழுதவேண்டுமோ, அவர்களுக்கெல்லாம் பட்டியலிட்டு எழுதலாம். இப்போது சாப்பிடுங்கள். நாளைக்காலை அந்தவேலையைத் தொடரலாம்!”
“சரியம்மா!”
மகள் எடுத்து வைத்த உணவு வகைகளை, ரசித்து உண்ணத் துவங்குகிறார்.
அவர் உண்டு முடித்ததும், மனைவியும் மகளும் அவரவர் அறைகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
இப்போதும் நீண்ட இரவுதான். தனிமை ஆட்கொள்வதை அவர் அனுமதிக்கவில்லை. நாளை, மூன்றாவது மகன் ஆஸாமுக்கு எழுதவேண்டிய கடிதத்தின் வாக்கியங்களை அசை போடுகிறார்.
‘அன்புள்ள ஆஸாம்,
அமைதி நிலவுக. என் கடைசி காலம் நெருங்கிவிட்டது. தள்ளாமை வாட்டுகிறது. என் கைகளிலும் கால்களிலும் சக்தி அகன்றுவிட்டது. இனி முடியாது. இறைவன் போதும் என்று நினைத்துவிட்டான். தன்னந்தனியனாக இந்த உலகுக்கு வந்தேன். தனியாகவே நான் திரும்பிச் செல்லப்போகிறேன். என்னுடன் வரப்போவது யாரும் இலர். நான் யார் என்பதோ… எதற்காகப் பிறந்தேன் என்பதோ… எனக்குப் புரியாதப் புதிராக இருக்கிறது.
இறைவனிடம் அழைத்துச்செல்ல அவர்கள் வந்துகொண்டிருப்பது எனக்குத் தொ¢கிறது.
உலகுக்கு நான் எதையும் கொண்டு வரவில்லை. ஆனால் திரும்பும்போது என் பாவங்கள் மூட்டை மூட்டையாகச் சுமந்து கொண்டுசெல்லப் போகிறேன். எனக்கு என்ன தண்டனை கிடைக்கும்? அல்லாஹ் மட்டுமே அதை அறிவான். வேறு யாருக்குத் தொ¢யும்!’
தனியறைக்குள் நடந்தபடி அசைபோட்டவர், பஞ்சணையில் சாய்ந்தார்.
சோர்வு கண்இமைகளின் மேல் அமர்ந்து கொண்டு அழுத்தியது. மெல்ல மெல்லத் தூங்கிப் போனார்.
·
மறுநாள் காலை சுபுஹ¥த் தொழுகைக்கான பாங்கொலி கேட்டவர், தொழுகை செய்ய எழ முயலும் போது, பலவீனமாக உணர்ந்தார். தொழாமல் விட்டுவிடலாமே என்றுகூட நினைத்தார். கூடாது. கடமைகளில் முக்கியமானது, தொழுகை. போர்க்களத்திலேயே எதிரிப்படைகள் சூழ்ந்துநிற்க தொழ முடிந்தபோது, இப்போது என்ன வந்தது? தொழுகையைத் துவங்கினார். தொழச் சிரமமாகவே இருந்தது. இருந்தும் விடவில்லை. தொழுது முடித்துவிட்டு திருப்தியுடன் மெல்ல நடந்து பஞ்சணைக்கு வந்தவர், அதில் ஒருபக்கமாய் சாய்ந்து கொண்டார்.
மனசு நேற்றிரவுக்குப் போனது. விட்ட இடத்திலிருந்து, கடிதத்தை மனதுக்குள் அசைபோடத் துவங் கினார்.
‘அவர்கள் நெருங்கி வந்துவிட்டார்கள். என்னை அழைத்துச்சென்று விடுவார்கள். என் நீண்ட பயணத்தைத் துவங்கக் கிளம்புகிறேன். உங்கள் கடமைகளை மறக்காதீர்கள். கடவுளின் குழந்தை களான மக்களைக் காப்பாற்றுங்கள். பேரன் பகதூருக்கு என் ஆசிகள். நான் இறப்பதற்கு முன் அவனைப் பார்க்கவேண்டும் என்ற என் ஆசை நிறைவேறவில்லை. பரவாயில்லை. அவனைப் பார்க் காமல் இயக்குபவனும் இறைவன்தான். நல்லது!’
அதற்குமேல் அவரால் அசைபோட முடியவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. வண்ணத் துப்பூச்சிகள் தன்னைச்சுற்றிப் பறப்பதுபோல பிரமையாக இருந்தது. மெல்ல மெல்ல எங்கும் இருள் சூழ்கிறது. பஞ்சணையில் தன்னைச்சரியாகப் பொருத்திக்கொள்ள முயன்று, முடியாமல் தடுமாறு கிறார். பஞ்சணையில் உடம்பும் தரையில் கால்களுமாய் இருக்க துவண்டுபோன அவர் நெஞ்சுக்கூடு, பெரிதாய் ஒருமுறை ஏறி இறங்குகிறது. கடிதம் எழுதுவதற்குத் தாளையும் பேனாவையும் தேட… கைகள் திணறிச் சரிய…
மகனுக்கு எழுதவேண்டுமென்று அவர் நினைத்திருந்தக் கடித வரிகள், எழுதப்படாமலேயே அவருடன் கரைந்து போகின்றன.
arshiyaas@rediffmail.com
- தாகூரின் கீதங்கள் – 51 மீண்டும் உனக்கு அழைப்பு !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -6
- ஒளியூட்டுவிழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 11 (இறுதிக் காட்சி)
- பெண் படைப்புலகம் – இன்று – விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் நடத்தும் கருத்தரங்கம்
- எம்.எஸ்.வெங்கடாசலம் அவர்கள் எழுதிய “நான் கண்ட அண்ணா “
- கிராமியப் பாடல்களில் கட்டபொம்மன்
- இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும்
- நீர் வளையங்கள்
- அண்டவெளியில் நீந்திய முதல் ஆசிய விண்வெளித் தீரர் !
- “கிளர்ச்சி”
- வேதவனம் -விருட்சம் 6
- வனாந்திரத்தின் நடுவே..
- கடவுளானேன்.
- அண்ணலே நீக்குவாய் இன்னலே
- பிம்பங்கள்.
- இசைபட…!
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 4
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 3
- நவராத்திரி – பசுமையான நினைவுகள்
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 2
- நினைவுகளின் தடத்தில் – (20)
- அப்பாச்சி -2
- அப்பாச்சி
- என் பெயர் ஒளரங்கசீப்!
- உதவி
- சுமை
- விஸ்வரூபம் – அத்தியாயம் பத்து
- மனிதமென்னும் மந்திரம்