வ.ஐ.ச.ஜெயபாலன்
பாலைநடுவினிலே மனம் வற்றி- உயிர்ப்
பம்பரம்ஓய்கையிலே
வாழும்கனவு என கண்முன்னே
வளர்ந்தசிறு நதியே
தோழமையின் பெருக்கில் எனது
துயர்கள்கரைந்ததடி
வாழத்துடிக்குதடி கண்ணம்மா
என் வார்த்தைகள் காவியமாய்
கூதிர் இருட்போர்வை விலக்கிக்
குவலயம் கண் விழிக்க
போதியோ டிலையுதிர்த்த இருப்பும்
புன்னகைத்தே துளிர்க்க
வீதியில் நாணமின்றிச் சுடரோன்
மேதினியைப் புணர்ந்தான்
மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா
முத்தங்கள் கேட்குதோடி
கடைசித் துளியும் நக்கி
மது காலியெனஆவி
உடைய எழுகையிலே கள்நதி
என்னத் தழுவுகிறாய்
மடை திறந்தனையோ தமிழின்
வயலில் நீர் ஓதையடி
படை திரண்டனையோ கண்ணம்மா
பாரின் விலங் கொடிய
திண்ணையில் பூத்த மலர்- நீ
செகத்தையே கனியும் மலர்
மண்ணிற் பெருந்தக்க விடுதலைத்
திண்மை யுண்டான மலர்
பெண்களே பூமியர்கள் ஆண்கள்நாம்
பிற கோளால் வந்தவர்கள்
உன்னைப் புரியாமல் கண்ணம்மா-இந்த
உலகம் புரிவதில்லை
திண்ணை
|