அ.முத்துலிங்கம்
அமைதியாக இருந்த எங்கள் கிராமத்தை கெடுக்கும் விதமாக ஒரு நாள் புகைப்படக்காரர் ஒருவர் அங்கே நுழைந்தார். எதோ தும்பு மிட்டாய் விற்க வந்தவரைப்போல சிறுவர்கள் அவரை சூழ்ந்துகொண்டார்கள். மூன்று கால்கள் வைத்த பெட்டியை தூக்கிக்கொண்டு, தலையோடு ஒட்டிய ஒரு தொப்பியை அணிந்த அந்த புகைப்படக்காரர், ஒரு பறவை நடப்பதுபோல மெதுவாக வழி விசாரித்துக்கொண்டு எங்கள் பக்கத்து வீட்டிற்குள் புகுந்தார். எல்லோரும் அவர் பின்னால் போனார்கள். எனக்கு அப்போது மூன்று வயதுகூட நிரம்பவில்லை. ஆனாலும் நான் நுழையவில்லை. ஏனென்றால் அந்தச் சிறுவயதிலேயே அந்த வீட்டுக்காரர் எங்கள் எதிரி என்ற விஷயம் எனக்கு எப்படியோ அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நான் அவர்கள் வீட்டு படலைக்கு வெளியே நின்று ஏக்கத்துடன் பார்த்தேன். எனக்கு ஒரு அண்ணன் இருந்தான். ஒரு கம்பு எழுந்து நடப்பதுபோல நடப்பான். முழங்காலில் இருந்து பாதம்வரை ஒரு இடம் மிச்சமில்லாமல் சிரங்கு போட்டிருக்கும். அதன் காரணமாக கொஞ்சம் நொண்டுவான். என்னிலும் ஐந்து வயது மூத்தவன். ஆர்வமும் ஐந்து மடங்கு அதிகம். ஆசையை கட்டுப்படுத்தி அவனும் எனக்கு துணையாக வெளியே நின்றுவிட்டான்.
எங்கள் கிராமத்துக்கு வந்த முதல் புகைப்படக்காரர் அவர்தான். பக்கத்து வீட்டு கிட்ணனைப் படம் பிடிப்பதற்காக வந்திருந்தார். கிட்ணனுக்கும் என்னளவு வயதுதான். இந்தப் படம் எடுக்கும் வைபவத்தைப் பார்ப்பதற்காக சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் அந்த வீட்டில் குழுமிவிட்டார்கள்.
சமயங்களில் என் அண்ணனின் மூளை அசத்தலாக வேலை செய்யும். எங்கள் வீட்டு வேலியிலே பெரிய ஓட்டை போட்டு கிட்ணன் படம் பிடிக்கப்படுவதை பார்ப்பதற்கு வசதி செய்து தந்தான். கிட்ணன் மேல் சூரியனின் சதுரமான கட்டங்கள் விழுந்தன. ஒரு கொலர் வைத்த மேல் சட்டையும், வார் வைத்த கால் சட்டையும் அணிந்திருந்தான். அவன் தலை எண்ணெய் வைத்து இழுத்து கறுப்பு ஒளி வீசியது. புகைப்படக்காரர் வெகு நேரம் காமிரா ஓட்டை வழியாகப் பார்த்தார். பிறகு சூரியனை அதிருப்தியாக நிமிர்ந்து நோக்கினார். இன்னும் பல நிமிடங்கள் அப்படி வளைந்தபடியே இருந்தார். படம் எடுப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பது எல்லோருக்கும் உறைக்கும்வரை அவர் நிமிரவில்லை. கடைசியில் பெரும் ஆரவாரம் கிளம்பியபோது படம் எடுத்து முடிந்துவிட்டது என்று தெரிந்தது.
நானும் அண்ணனும் புகைப்படச் சம்பவத்தை வீட்டிலே வந்து வர்ணித்தபோது அதே கதை இன்னும் பல ரூபங்களில் எங்கள் வீட்டை ஏற்கனவே அடைந்துவிட்டது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அதைத் தாங்க முடியவில்லை என்பது பள்ளிக்கூடம் போகும் வயதை எட்டாத எனக்குக்கூட அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால் அதிர்ஷ்டம் கிட்ணனுடைய வயதில் நான் வீட்டில் இருந்ததுதான். எப்படியும் என்னை நிற்க வைத்து அதேமாதிரி ஒரு படம் எடுத்து ஊரிலே சரிந்திருந்த மதிப்பை திரும்பவும் நிறுத்திவிட வேண்டும் என்று அப்பா தீர்மானித்தார்.
எங்கள் வீட்டுக்கும், அயல் வீட்டுக்கும் சண்டை ஒரு சாதாரணமான விவகாரத்தில்தான் ஆரம்பித்தது. காரணம் ஒரு புளியமரம். எங்கள் வீட்டிலே மரம் நின்றாலும் அதன் பெரிய கொப்புகள் பக்கத்து வீட்டிலே போய் காய்த்துக் கொட்டின. எங்கள் பக்கமிருந்த கொப்புகளோ காய்க்க மறுத்தன. அப்பாவுக்கு கிரமமாக புத்திமதி வழங்கும் சொந்தக்காரர்கள் அடுத்த வீட்டுக் கொப்புகளை வெட்டிவிட்டால் எங்கள் பக்கம் காய்க்கும் என்று கூறினார்கள். அப்பா மனதிலே ஏற்கனவே சிந்தித்து வைத்திருந்ததைத்தான் அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அன்றே அப்பா கோபம் மிகுதியாகி இரண்டு கொப்புகளை வெட்டிவிட்டார். தீராத பகையும் அன்றுதான் ஆரம்பித்தது. மூன்று கால் காமிராவினால் கிட்ணனைப் படம் பிடித்தபோது ஊர் முழுக்க அதை ஒரு விழாபோல கண்டு களித்தது. அந்தக் காட்சி எங்களுக்கு மறுக்கப்பட்டதும் அதனால்தான்.
அப்பாவுக்கு இந்த புகைப்படச் சம்பவம் பொறுக்க முடியாமல் போனதில் ஆச்சரியமில்லை. அம்மாவுக்கும் முதன்முதலாக ஒரு புகைப்படக்காரரை எங்கள் வீட்டுக்கு அழைத்து படம் எடுக்கும் சந்தர்ப்பம் தவறிப் போனதில் நிரம்பவும் துயரம் இருந்தது. என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க நான் மறக்க முடியாத ஒரு காட்சி எனக்கு அப்போதுதான் கிடைத்தது. அம்மாவின் மூக்கு நுனியில் ஒரு துளி கண்இர் தொங்கியது. ஆனால் அது எப்படி அங்கே உண்டாகியது என்பது ஒருவருக்கும் தெரியவில்லை.
ஒரு சனிக்கிழமை பின்மதியம் மூன்று மணிக்கு புகைப்படக்கார் வருவதாக ஏற்பாடு. அப்பா போய் சொல்லிவைத்து அச்சாரமும் கொடுத்திருந்தார். எங்களுக்கு நேர்ந்த அவமானத்தை நேராக்குவதற்கு நான் தயாராக இருந்தேன். என்னுடைய புகைப்படம் பக்கத்து வீட்டில் எடுத்ததிலும் பார்க்க ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பதில் முடிவாக இருந்தார்கள்.
எங்களுடைய இந்த தீவிரமான ஏற்பாடுகளுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து இடைஞ்சல் ஒன்று வந்தது.
என்னுடைய அண்ணனுக்கு எட்டு வயது. வழக்கமாக பத்து மணிவரை தூங்குபவன் அந்தப் பிரதானமான சனிக்கிழமை அதிகாலையிலேயே எழும்பிவிட்டான். தனக்கு என்ன சட்டை அணிவது என்று அம்மாவைத் தொந்திரவு பண்ணத் தொடங்கினான். போட்டி எனக்கும் கிட்ணனுக்கும் இடையில்தான். அது அண்ணனுக்கு நல்லாகத் தெரியும். ஆனால் அவனும் படத்தில் இருக்கவேண்டும் என்று அடம் பிடித்தான்.
அம்மா அவனை சட்டை செய்யவில்லை. என்னை குளிக்க வார்ப்பதிலேயே கவனமாக இருந்தாள். பிறகு தலையை அழுத்தி வாரி இழுத்து ஒரு இடத்தில் என்னை பேசாமல் உட்காரவைத்தாள். அண்ணன் விடுவதாயில்லை. அம்மாவையே சுற்றி சுற்றி வந்து தனக்கும் தலையை இழுத்துவிடச் சொல்லி கெஞ்சினான். அம்மாவின் முந்தானையை விரல்களால் இறுக்கப் பிடித்தபடியே இழுபட்டான். இந்த விவகாரத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை என் இடத்தில் இருந்தபடியே நான் அசையாமல் அவதானித்தேன்.
ஒரு சமயத்தில் பொறுக்காமல்போய் அம்மா முந்தானையை பறித்துக்கொண்டு ‘என்ன இளவுக்கு அழுறாய். உன்ரை தம்பியைதான் போட்டோக்காரன் படம் எடுக்க வாறான். நீ ஏன் அவதிப்படுகிறாய் ‘ என்றாள். அண்ணன் அப்படியே நின்றான். அவன் வாய் திறந்து கிடந்தது. நான் ஏதோ பாடப்போகிறான் என்று முதலில் நினைத்தேன். அவன் ஓவென்று அழத்தொடங்கினான். அவனுடைய திறந்த வாயில் குடத்தில் நீர் நிறைவதுபோல கண்இர் நிறைந்துகொண்டு வந்தது.
திடாரென்று அண்ணன் தன் யுக்தியை மாற்றினான். குருடர்கள் செய்வதுபோல தன் இரண்டு கைகளையும் நீட்டிப் பிடித்து அதற்கு மேலே சலவை செய்து வந்த தன் வெள்ளை சேர்ட்டையும், நீலக் கால்சட்டையையும் வைத்துக் கொண்டான். அம்மா போகும் இடமெல்லாம் அவனுக்கும் ஏதோ வேலை அங்கே இருப்பதுபோல போனான். அம்மா திரும்பியும் பார்க்கவில்லை.
அப்பா வந்தபோது அவர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தால் அவர் தன் பங்குக்கு அவன் வயிற்றுடன் சேர்த்து சட்டையைப் பிடித்துக்கொண்டு ஒரு அடி கொடுத்தார். அண்ணன் நிலத்திலே விழுந்து கழுத்தை முறிப்பதுபோல உருளத் தொடங்கினான். புழுதியை எல்லாம் பூசிக்கொண்டு பெரிதாகக் கத்தினான். அப்படி அலறியபோதெல்லாம் தன்னையும் படம் எடுக்க வேண்டும் என்பதை ஞாபகமாக சொல்லிச் சொல்லி வந்தான். அப்பா என்ன நினைத்தாரோ சரி சரி நிறுத்து, உன்னையும் சேர்த்து எடுப்பம் என்று கடைசியில் சொல்லிவிட்டார். ஒரு சுவிட்ச் போட்டதுபோல அவன் அழுகை நின்றது. சிரித்துக்கொண்டே எழும்பினான். சேர்ட் கொலரை கைகளால் இழுத்து கண்ணைத் துடைத்துக் கொண்டான். அப்படியும் கண் இமைகள் நனைந்து கிடந்தன. நிமிடத்திலே அழவும், அழுகையை நிற்பாட்டவும், உடனேயே சிரிக்கவும் அவன் தன்னுடைய முகத்து தசைகளைப் பழக்கியிருந்தான்.
அண்ணனுடைய சந்தோசம் சொல்லமுடியாது. வதவதவென்று குளித்தான். அம்மா, அவன் சொக்கையை அமத்திப் பிடித்தபடி தலையை வாரி விட்டாள். குட்டிக்கூரா பவுடரை கையிலே கொட்டி கன்னத்தில் நிறைய பூசினான். அவ்வளவு நேரமும் காவித் திரிந்த பொத்தான் வைத்த நீலக் கால்சட்டையை ஒருவர் உதவியில்லாமல் தானாகவே அணிந்துகொண்டான். சலவை வெள்ளை சேர்ட்டை விரித்து இரண்டு பெருவிரல்களாலும் தூக்கிப் பிடித்தான். அது கஞ்சிபோட்டு மொரமொரவென்று, சிரட்டைக் கரியால் நெருப்பு மூட்டி சூடாக்கிய பெட்டியால் இஸ்திரி செய்யப்பட்டிருந்தது. சேர்ட்டின் முன் பக்கமும் பின் பக்கமும் ஒட்டிப்போயிருந்தது. அதைப் பிரித்தபோது நல்ல வாசனையும், ஒரு பேப்பரைக் கிழிக்கும் ஓசையும் எழுந்தது. அப்படியும் அதன் மடிப்புகள் முழுவதும் குலையாமல் கவனமாக அதை அணிந்தான். சேர்ட்டின் கைகளை வேண்டிய அளவுக்கு மட்டுமே பிரித்து தன் கைகளை உள்ளே நுழைத்தான். கையிலே செட்டை முளைத்ததுபோல மீதி மடிப்பு ஒட்டுப்பட்டுப்போய் விறைப்பாகவே நின்றது. இந்த சேர்ட்டின் அடிப்பாகத்தை கால்சட்டைக்குள் சுருக்கிவிட்டுக் கொண்டான். அத்துடன் முடியவில்லை. அரைத்த சந்தனத்தை உருட்டி எடுத்து நடு நெற்றியில் அமத்தினான். இப்பொழுது அலங்காரம் பூர்த்தியாகிவிட்டது. ஏதோ தான்தான் பிரதானமான ஆள் என்பது போன்ற பாவனையுடன் எனக்குப் பக்கத்தில் தூணைப் பிடித்துக்கொண்டு ஆடாமல் அசையாமல் புகைப்படக்காரருக்கு காத்திருக்க தொடங்கினான்.
சொன்ன நேரத்துக்கு புகைப்படக்காரர் வரவில்லை. ஒரு மணிநேரம் தாமதமாகிவிட்டது. அவரோடு சேர்ந்து முன்னும் பின்னுமாக சிறுவர்களும் வந்தார்கள். சூரியனுடைய வெளிச்சம் நல்லாகப் படும் விதமாக ஒரு சுவருக்கு முன்னால் என்னை நிற்பாட்டினார்கள். ஒரு பக்கத்தில் செம்பருத்தி மரமும், மறுபக்கத்தில் அண்ணனுமாக நான் சரி நடுவில் அசைவில்லாமல் நின்றேன். நாலு மணித்தியாலமாக வெளிக் குந்தில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமைதியாக காத்திருந்த அண்ணன், காமிரா முன்னாலும் அதைத் தொடர்ந்தான். அசைவின்மை அவனுக்கு என்னிலும் பார்க்க நல்லாக வந்தது.
புகைப்படக்காரர் காமிராவை மூன்று காலில் நிற்பாட்டினார். பிறகு முன்னுக்கு பின்னுக்கு என்று அதை நகர்த்தி ஒரு இடத்தை தேர்வு செய்தார். ஒரு பெரும் கறுப்பு போர்வையால் தன்னையும் காமிராவையும் சேர்த்து மூடிக்கொண்டார். துணிக் கூடாரத்திற்குள் தலையை நுழைத்து வெகு நேரம் பார்த்தார். நாங்கள் எல்லாம் முடிந்துவிட்டது என்று எங்களை தளர்த்திய நேரம் கறுப்பு துணியை விலக்கிக்கொண்டு வெளியே வந்தார். ஒரு வார்த்தை பேசாமல் காமிராவுக்குள் பிலிம்மை போட்டு, மரச்சட்டத்தை ஓசையுடன் மூடினார். சட்டையின் மடிப்பு கலையாமல் இருப்பதற்காக கைகளை அகலித்து விறைப்பாக வைத்திருந்த எங்களுக்கு நோவு எடுத்தது.
புகைப்படக்காரர் இறுதிச் சரிபார்த்தலில் அண்ணனை சற்று விலத்தி நிற்கச் சொன்னார். அவனும் எங்கள் இடைவெளியை அதிகமாக்கினான். காமிராக்காரர் இன்னும் கொஞ்சம் என்றார். மீண்டும் தள்ளி நின்றான். சரி ரெடி என்றார். நாங்கள் வயிறுகளை எங்களால் முடிந்தமட்டும் எக்கிக்கொண்டு, என்ன நடக்கப்போகிறது என்ற ஊகம் சிறிதும் இல்லாமல் நின்றோம். கறுப்பு போர்வைக்குள் இருந்து மெதுவாக ஒரு கை பாம்புபோல வெளியே வந்தது. அந்தக் கையையே பார்த்தோம். அது சடக்கென்று காமிரா மூடியை அகற்றி அதே வேகத்தில் திரும்பவும் மூடியது. படம் எடுத்து முடிந்தது என்றார்கள்.
என்னுடைய அண்ணனுக்கு சின்ன மூளை; அப்பாவுக்கு பெரிய மூளை. அந்தப் பெரிய மூளை பெரிய வேலை செய்யும் என்பது புகைப்படம் வந்தபோதுதான் தெரிந்தது. அதிலே நான் நடுவில் கண்களைச் சற்று கூசிக்கொண்டு காமிராவுக்கு பக்கத்தில் இருந்த ஏதோ ஒன்றை கொஞ்சம் பீதியுடன் பார்த்தபடி நின்றேன். என் மூக்கிலே இருந்து விழுந்த நிழல் என் சொண்டுக்கு மேலே சிறு கறுப்பாக தெரிந்தது. சற்று பழுதுபட்ட பின் சுவர் தெரிந்தது. செம்பருத்தி தெரிந்தது. கால்சட்டை பொத்தான்கூட தெரிந்தது. அண்ணனைக் காணவில்லை. பதிலாக அண்ணனின் இடது முழங்கையும், விறைப்பாக நின்ற சேர்ட் விளிம்பும் மட்டுமே படத்தில் பதிந்திருந்தது.
இரண்டு மணிநேரம் புழுதியில் புரண்டு, நாலு மணிநேரம் வெளித் திண்னையில் காத்திருந்து எடுத்த படம் இப்படி வந்ததில் அவனுக்கிருந்த மனவருத்தத்தை விவரிக்க முடியாது. ஒரு வாரம் கழித்து அப்பா அந்தப் படத்தை பிரேம் போடுவதற்காக தேடினார். எவ்வளவு தேடியும் படம் கிடைக்கவில்லை. எப்படியோ இந்தச் சம்பவத்தை நாளடைவில் வீட்டில் எல்லோரும் மறந்துவிட்டனர்.
எஸ்.எஸ்.சி சோதனைக்கு நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில், சில வருடங்களுக்கு முன் வீட்டைவிட்டு ஓடிப்போன அண்ணன் பாவித்த தைலாப் பெட்டி என் சொத்தாக மாறியிருந்தது. ஒரு நாள் அதைக் குடைந்து கொண்டிருந்தபோது, கள்ளறை ஒன்றில் பாதுகாப்பாக மறைத்துவைத்த ஒரு பழைய காலத்து அப்பியாசக் கொப்பி அகப்பட்டது. அதை இழுத்து எடுத்து திறந்து பார்த்தேன். சந்திரகுப்த மன்னனைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் அண்ணனுடைய சதுரமான கையெழுத்தில் இருந்தன.
சந்திரகுப்தன் மெளரிய வம்சத்தை சேர்ந்தவன். அவனுடைய மதி மந்திரியின் பெயர் கெளடில்யன். பல எதிரிகளைப் போரிலே தோற்கடித்து, பரந்த இந்திய தேசத்தை ஒரு குடைக்கீழ் கொண்டு வந்த முதல் அரசன் இவன். போரில் தோற்ற எதிரிக்கு 500 யானைகளைப் பரிசாக அளித்தான். தான் பாடுபட்டு கட்டி எழுப்பிய ராச்சியத்தை தன் மகன் பிந்துசாரனுக்கு தந்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினான். அப்படியே பட்டினி கிடந்து செத்துப்போனான்.
ஒவ்வொரு பக்கமாக புரட்டிக்கொண்டு வந்தால் பல வருடங்களுக்கு முன் தொலைந்துபோன என்னுடைய புகைப்படம் கடைசி அட்டையில் ஒட்டப்பட்டிருந்தது. ஒரு வித்தியாசம். என்னுடைய உருவம் அதிலே இல்லை. சரி பாதியாக அது வெட்டப்பட்டுவிட்டது. எஞ்சிய படத்தில் ஒரு சிறுவனின் முழங்கையும், விறைப்பாக நிற்கும் அரைக்கை சேர்ட்டும் மட்டுமே தெரிந்தன. வேறு ஒன்றுமே இல்லை.
அதைப்பார்த்ததும் எனக்கு பல வருடங்களுக்கு முந்திய அந்த சனிக்கிழமை மாலை ஞாபகம் வந்தது. சிரங்குக் காலும், பொத்தான் போட்ட கால் சட்டையும், நெற்றியிலே உருட்டி வைத்த சந்தனமும், கஞ்சிபோட்டு விறைப்பாக நிற்கும் அரைக்கை வெள்ளை சேர்ட்டுமாக வயிற்றை எக்கிக்கொண்டு நின்ற என் அண்ணனின் பயந்த முகம் உயிர் உள்ளவரை என் மனத்தில் நிற்கும்.
இந்த முகத்தை ஞாபகத்துக்கு கொண்டுவர எனக்கு மூன்றுகால் வைத்த காமிராப் பெட்டியோ, அதை மூடும் கறுப்பு போர்வையோ, கறுப்பு துணிக்கு உள்ளே இருந்து பாம்புபோல புறப்பட்டு வரும் கையோ தேவையாக இருக்காது.
முற்றும்
amuttu@rogers.com
- நைஜீரியா -2: கிரிஸ்துவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம்கள்
- கீழ்படிதல் குறித்த ஒரு உளவியல் பரிசோதனை
- ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து
- அமெரிக்கக் கூட்டு மாநிலங்களின் விடுதலைப் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய சுதந்திரச் சிலை [American War of Independence Centennial S
- சமீபத்தில் படித்தவை -3 : உமா மகேஸ்வரி , சுஜாதா, மனுஷ்ய புத்திரன் , யசுநாரி கவபத்தா, வெ சாமிநாதன் , நாஞ்சில் நாடன்
- தண்ணீர் தேடும் தமிழகம்
- மூங்கில் இலைப் படகுகள்
- பட தலைப்புகள்
- ‘ஒரு பொன்விழா கொண்டாட்டம் ‘ தொடர்ச்சி
- கடிதங்கள்- மே 20,2004
- தமிழ் இலக்கியக் கூட்டமும் புத்தகக் கண்காட்சியும்
- நைஜீரியா 1 : நைஜீரிய இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் மீது கிருஸ்துவர்கள் தாக்குதலைத் தொடர்ந்து யெல்வாவில் 50 கிருஸ்துவர்கள் கொலை
- ஓவிய ரசனை
- நைஜீரியா 3 : ஆப்ரிக்கா கிருஸ்துவர்-முஸ்லிம் கலவரம் : நைஜீரியா கானோ நகரத்தில் 500-600 கிரிஸ்தவர்கள் கொலை
- நைஜீரியா 4:நைஜீரியாவின் வன்முறைக்குப் பின்னே மதமல்ல , பொருளாதாரம் – ஒரு ஆராய்ச்சி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் — 6
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)
- புலம் பெயர்ந்த வாழ்வில் இனக் கலப்பு
- மாண்புமிகு தமிழக முதல்வருக்கு
- ஊழ்வினை
- ஆர்வம்
- நீர் வளர்ப்பீர்
- பிரிவினை
- தேர்தல்களும் முடிவுகளும் எண்ணங்களும்
- மஸ்னவி கதை – 08-கீரை வியாபாரியும் கிளியும்
- பழையன கழிதலும் புதியன புகுதலும்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-20
- உறவுக்காக ஏங்கும் இதயங்கள்….
- பிறந்த மண்ணுக்கு – 3
- என் அண்ணனின் புகைப்படம்
- வாரபலன் மே 20,2004 : தொண்டு கிழம் வயசாளி எம்பியாகித் தொண்டு செய்ய.. , அட்டப்பாடி அடாவடி, எருதந்துறையில் கவிதைத் துறை,
- அரசியல் கட்சிகள் வெற்றி, மக்கள் தோல்வி
- தேர்தல் 2004 (தொடர்ச்சி) – முதல் 3 தோல்விகள்
- ‘இண்டியாவின் ‘ இறக்குமதி பிரதமரின் திறமை
- வாழ்க மதச்சார்பின்மை
- கா ற் று த் த ட ம்
- பணம் – ஒரு பால பாடம்
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 2
- தமிழவன் கவிதைகள்-ஆறு
- நட்பாகுமா ?
- வாழ்க்கை
- தனிமை
- தலைகளே….
- கவிக்கட்டு – 7 -தெருப்பிச்சைக்காரன்
- அதி மேதாவிகள்
- அன்புடன் இதயம் – 18. நாணமே நீயிடும் அரிதாரம்